Monday, November 8, 2021

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

அரும்பாகி மொட்டாகி மலர்ந்திருக்கும் மழலைகள்
எதிர்கால உலகினை ஆளவரும் தலைவர்கள்
நேருமாமா என்பவர் நெருங்கிவந்து அவர்களை
அன்புபாசப் பரிவுடன் பற்றுகொண்டு பழகினார்.

முன்னாளின் பிரதமர் முடிசூடா மன்னவர்
மன்னுலகம் போற்றிடும் மகத்தான தலைவராம்,
அன்னவரின் பிறந்தநாள் குழந்தைகளின் தினமென
நாட்டிலுள்ளோh அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம்.

வறுமைகள் எனச்சொல்லி பெற்றெடுத்த மகவினை
வற்புறுத்தி வேலைக்கு அனுப்புகிறார் பெற்றவர்.
குறைவான ஊதியம் நிறைவான பணியென
குழந்தைகளை அமர்த்தியே துன்பங்கள் செய்கிறார்.

ஏழ்மையில் வாடிடும் எண்ணற்ற குழந்தைகள்
பிச்சையினை ஏற்றுத்தன் வாழ்க்கையை நடத்துது.
பாழ்படும் உடல்சுகம் கண்டவர் சிசுக்கொலை
செய்கிறார்பெற் றெடுத்தவர் குப்பையில் வீசினார்.

பால்மணம் மாறிய பருவத்துக் குழந்தையை
பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி மகிழ்கிறார்.
பள்ளிக்குச் சென்றிடாத எண்ணற்ற குழந்தைகள்
தவறான பாதையில் செல்வதையும் காணலாம்.

எண்ணிய கல்வியைக் கற்றுத்தன் வாழ்விலே
ஏற்றங்கள் பெற்று உயர்ந்திட நினைக்கையில்
மண்ணிலே காலூன்றி துளிர்க்கின்ற செடியினை
முனைகிள்ளி வளர்ச்சியைக் குறைப்பதாய் அமையுது.

சத்தில்லாக் குழந்தைகள் இந்தியாவில் மட்டுமே
மிகுதியாக இருப்பதாய் ஆய்வுநிலை பகருது.
இத்தனைக் கொடுமைகள் குழந்தைக்கு இருக்கையில்
தினங்களைக் கொண்டாடி மகிழ்வது சரிதானோ?