Monday, November 8, 2021

கல்வி அரசர் காமராசர்

கண்ணே பாப்பா வாவா
காலத் தோடு வாவா
சின்னப் பாப்பா வாவா
சிரித்துக் கொண்டே வாவா.

அல்லிப் பூவே வாவா
பள்ளி செல்வோம் வாவா
பள்ளி சென்று நாமும்
பாடம் கற்போம் வாவா.

கல்வி தந்த ராசா
கருணை உள்ள ராசா
பள்ளி தந்த ராசா
நம்ம காம ராசா.

விருது நகரில் பிறந்தவர்
குமார சாமி மகனவர்
வறுமை வாட்டி வதைத்திட
பள்ளிப் படிப்பைத் துறந்தவர்.

தொழிலை மாமன் துணையுடன்
தொடர்ந்து நடத்தும் வேலையில்
அழகு மிகுந்த அரசியல்
தலைவர் பேச்சு கவர்ந்திட

சின்ன வயது தொண்டராய்
இணைந்து தொண்டு ஆற்றினார்
மண்ணின் மைந்தன் என்பதை
செயல்கள் தன்னில் காட்டினார்.

பதவி பலவும் வந்தன
பெருமை அவைகள் கொண்டன
மதிக்கத் தெரிந்த மனிதராய்
மாநி லங்கள் போற்றின.

காசு தந்தால் கல்வியை
கொடுத்த அந்த நாளிலே
காசில் லாதக் கல்வியை
கொடுத்தார் நம்ம ராசனே.

உணவில் லாமல் கல்வியை
கற்க முடியா தென்றவர்
உணவு தந்து கல்வியை
ஊட்டி வளர்க்க செய்தவர்.

அவரைப் போற்றி வணங்குவோம்
அவரைப் பின்பற்றி வாழுவோம்.