.jpeg)
காப்பு
ஆறு படைவீடு கொண்ட இருவருள்
ஆறணிவோன் மைந்தன் இளையோன் – போற்றிப்
புகழ்பாட மோகினியாய் வந்துசிவன் காத்தோன்
மகிழ்ந்து காப்பான் எனை
வெண்பா
மதிசூடி சக்தி மணக்கோலம் காண
மதிப்புமிகு தேவர் முனிவர் – பதிநோக்கிச்
செல்லதாழ் வெற்பு சமன்செய்ய மாமுனி
செல்லப் பணிந்தார் மகிழ்ந்து 01
மண்டில ஆசிரியப்பா
மகிழ்ந்து சிவன்சொல்லை தலைமேல் கொண்டு
பொதிகை மலைசெல்லும் வழியில் பரணி
நதிஆடி யோக நிலை இருக்க
ஞான அறிவினால் சோதி கண்டு
தேனும் பாலும் கலந்த இனிமையாய்
அதிச யத்தில் ஆழ்ந்தார் அங்கு
முதல்படை வீடு கொண்ட அய்யன்
மகாலிங்கம் நாமம் கொண்ட பரம்பொருளை
தியானத்து வழிபடும் காட்சி கண்டாரே 02
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
கண்டநாள் ஆடிமாத அமாவாசை யாதலால்
அந்தநாளே சிறப்புடை நாளெனக் கருதுவர்
இந்தநாளில் மதுமாது புலால்நீக்கி தூய்மையாய்
ஐயனை வணங்கிட ஆசிகள் வழங்கிநல்
வரங்களைத் தந்துநம் இன்னல்கள் போக்குவரே
அகத்தியர் அகக்கண்ணில் தேவர்கள் வானிருந்து
நகைப்புடன் ஐயன்மேல் பூமாரி சொரிந்ததால்
திகைப்பூட் டும்பெயராம் சொரிமுத்து என்றாரே
மழைபெய்யாக் காலத்து கிராமத்து மக்களெல்லாம்
பிழையாமல் படையலிட்டு அருள்வேண்டி நின்றபோது
மழைபெய்ய வைத்ததினால் சொரிமுத்து என்றனரே
தன்துன்பம் போக்கிடவே பதிவந்து குடும்பமாய்
எனைகாக்க உனையன்றி யாருமில்லை எனவணங்க
பனித்துன்பம் தீர்த்தருளை சொரிவதால் பெயர்கொண்டார்
ஐயனே
பதிவந்து உன்னை வேண்டி நிற்கின்றோம்
விதிமாய்த்து துன்பம் போக்கவேண்டும்
நதிக்கரை அமர்ந்தவனே வணங்கினேன் உனையே 03
சிந்தடி வஞ்சிப்பா
உன்னருளால் சலசலக்கும் நீரோடை
தென்றல்தரும் மரச்சோலை அடர்ந்த
காட்டுப் பகுதியில் கொலைமிருகம்
ஓடிவரும் சாலையில் வருகின்றோம்
அவையாவும் ஒன்றும் செய்யவில்லை
ஐயனே
அலைபாயும் மனம்காத்து எங்கள்
நிலைமாற்றி வாழ்வுயரச் செய்திடு வாயே 04
நேரிசை வெண்பா
வாய்திறந்து கேட்கின்றோம் காரையாற்று ஐயனாரே
நோய்நொடிகள் இல்லாமல் நல்லமனம் – தோயாமல்
கல்வியோடு வேலைவாய்பும் தந்துஎங்கள் வாழ்வுயர
நல்முறையில் செய்திடுவாய் நீ 05
நேரிசை ஆசிரியப்பா
நீயுரைம் ஆலயம் மகாலிங்கம் சங்கிலி
பூதத்தார் காத்தவ ராயன் பூதம்
விநாயகர் தெட்சணா மூர்த்திகும்ப மாமுனி
பெரியசாமி பாதாள பூதம் உக்கிர
காளி கரடி மாடன் பிரும்ம
ராட்சசி பேச்சி சுடலை மாடன்
கருப்பன் கருப்பி தளவாய் மாடன்
தூண்டில் மாடன் பொம்மக்கா திம்மக்கா
பட்டவ ராயர்
தோன்றி அருள்வ ழங்கி
பக்தர் உள்ளம் மகிழும் இடமே 06
பெரிய தளவாய் மாட சுவாமி
கரடி மாடன் தூசி மாடன்
கசமாடன் கசமா டத்தி அம்மன்
பலாவடி சன்னதி
மணி முழுங்கி மரத்தடி சன்னதி
பிரம்மராட்சி அம்மன், பேச்சி அம்மன், சுடலை மாட சுவாமி.
தரவுக் கொச்சகம்
இடம்தேடி வருபவர்க்கு இன்னல்கள் தீர்த்தருளி
திடமான மனம்தந்து தெகிட்டாத அன்புகாட்டி
நடமாடும் விலங்காலும் மறைந்திருக்கும் பகையாலும்
தடையேதும் வாராமல் பிள்ளையாய் காத்தருளி
மடைதிறந்த வெள்ளம்போல் இன்பங்கள் அள்ளிதந்து
குடையாகக் காக்கின்றாய் சொரிமுத்து ஐயனாரே 07
குறளடி வஞ்சிப்பா
ஐயனை வணங்கிட
பழவினை துளையுமே
மையிருள் துன்பமும்
ஒளிவர விலகுமே
என்னிய சிந்தனை
கண்முனே நடக்குமே
மனிதர்காள்
நம்பிக்கை வைத்துஅவன் தாள்வணங்க
தும்பிக்கை பலமும் தந்தருள் வானே 08
நேரிசை வெண்பா
கோவில்மண் மூடி மறைந்ததால் - கோவில்
இருந்தஇடம் சந்தைமே டானது பண்டப்
பொருட்களை விற்றனர் அங்கு 09
நேரிசை ஆசிரியப்பா
அங்கு வணிகர் பொதியை ஏற்றி
வந்த மாட்டின் காலடி பட்டு
ஓரி டத்தில் இரத்தம் பெருக
யாவரும் வியப்பில் சூழ்ந்து ஆழ
வானில் இருந்து அசரீரி ஒன்று
நீங்கள் குருதி காணும் இடத்தில்
மகாலிங்கம் சொரிமுத் தையனார் போன்றோர்
புதையுன்டு போயினர் கண்டறிந்து
கோவில் கட்டி வழிபடு வீரே 10
பண்ட மாற்று முறையில் வணிகம் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. எனவே வணிக சந்தையின் முக்கிய இடமாக திகழ்ந்த இங்கு வணிகர்கள் குவிவார்களாம். அப்படி ஒருமுறை வணிகத்திற்காக கொண்டு வரப்பட்ட பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகி வருகிறது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு திகைத்து நின்றனர்.
அந்த சமயம் வானில் இருந்து ஒரு அசரீரி, குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகா லிங்க சுவாமி., இங்கு அவருடன் சொரி முத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் உட்பட்ட பரிவார தேவதைகளும் புதையுண்டு இருக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து இங்கு கோவில் கட்டி வழிபடுவீர்களாக என்று ஒலித்தது
அந்த சமயம் வானில் இருந்து ஒரு அசரீரி, குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகா லிங்க சுவாமி., இங்கு அவருடன் சொரி முத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் உட்பட்ட பரிவார தேவதைகளும் புதையுண்டு இருக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து இங்கு கோவில் கட்டி வழிபடுவீர்களாக என்று ஒலித்தது
இன்னிசைக் கலிவெண்பா
வழிபடும் நோக்கில் வணிகர் இணைந்து
தொழிலும் திருப்பணி என்றிரு கண்ணாய்
நினைத்து பரணி நதியின் கரைமேல்
மகாலிங்கம் சங்கிலி பூதத்தார் என்று
சகலப் பரிவார தெய்வங்கள் சூழ
திருக்கோவில் ஆக்கி மறையோர் மொழிந்த
வரன்முறை யோடுகுட முழுக்கு நிகழ்த்தி
மலரொடு பொன்னினால் அலங்காரம் செய்து
உறவினர் ஊரார் தினம்தினம் வணங்கி
சொரிமுத்து ஐய்யனார் பூரணை புட்கலை
திருவருள் பெற்று குடும்ப வளர்ச்சி
தொழிலின் வளர்ச்சி ஒருங்கே கிடைத்திட
யாவரும் வாழ்ந்தார் மகிழ்த்து 11
அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பரிவார தேவதைகளுக்கும் சன்னதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இக் கோவில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் வரப் பெற்று தற்போது வரை நிர்வகிக்கப் படுகிறது.
சிந்தடி வஞ்சிப்பா
மகிழ்ந்து ஈசனின் பொறுப்பேற்று
மகேசன் மலையைக் காவல்காத்து
மகேசுவரி ஆணையால் தேடிவர
மகேசன் கண்டுபாம்பின் சட்டைபுக
மகேசன் ஞானத்தால் கண்டுஅவரின்
காவல் நிருவாகம் பூவுலகோர்
யாவரும் அறியவேண்டி பணித்தார்
பூதத்தார்
ஈசனின் சொல்ஏற்று வந்து
காவல் தெய்வமாய் நின்று காத்தாரே 12
சங்கி பூதத்தார்
நேரிசை வெண்பா
காக்கும் கடவுளின் மைந்தனாய் வந்துநீர்போகும் கரையோரம் ஆட்சிசெய்து - நோகும்
செயல்யாவும் நீக்கி குடும்பத்தார் காத்தாய்
நயமாய்த் தொழுவோம் உனை 13
மண்டில ஆசிரியப்பா
உயர்குடி பிறந்து செருப்பு தைக்கும்
குலத்து பெண்கள்மேல் காதல் கொண்டு
அவர்களின் தந்தை இடத்து தானும்
ஒருதொழி லாளி என்று சொல்லி
விருப்புடன் தொழிலைச் செய்துவரும் காலத்து
இவரின் நடத்தை கண்டு தமது
மகள்கள் இருவரையும் மணம்செய்து கொடுத்தார்
இல்லற வாழ்வை இனிதாய் கழிக்க
ஒருநாள் இவர்வாழும் பகுதி மாடுகளை
திருடர்கள் களவாடிச் செல்ல கண்டறிந்து
அவரிடம் இருந்து போராட மீட்டு
திரும்பும் வழியில் கள்வர்கள் கூடி
முத்துப் பட்டரின் முதுகில் குத்தினர்
மாடுகள் காத்து இல்லம் அனுப்பி
நீத்தார் அந்தக் காட்டின் நடுவே
செய்தி அறிந்த பொம்மக்கா திம்மக்கா
தனது உயிரை அவருடன் மாய்த்தனர்
ஊரார் இவரை ஐயனார் உடனே
நேர்த்தி கடனாய் செருப்பைச் செலுத்தி
வழிபடத் தோடங்கினர் கோவில் அமைத்தே 14
தரவுக்கொச்சகம்
அமைந்திருக்கும் கோவிலிலே இலுப்பைமரம் ஒன்றுண்டு
அம்மரமே சொரிமுத்து அய்யனார் தலவிருட்சம்
பக்தர்கள் யாவரும் அங்குவந்து மணிகட்டி
பக்தியை செலுத்தவர அதன்மீது கட்டிவைத்த
மணியெல்லாம் அம்மரம் தனக்குள்ளே பதித்துவைக்கும்
மணிபதித்து வைப்பதனால் மணிவிழுக்கி மரமென்பர்
மரத்தடியில் விநாயகர் பூதத்தார் மாடசாமி
பிரம்மராட்சி பட்டவ ராயர்அம்மை அருள்தருவார். 15
சிந்தடி வஞ்சிப்பா
அருள்வழங்கும் குலதெய்வம் எதுவென்று
தெரியாதவர் யாவரும் இங்குவந்து
சொரிமுத்து ஐயனாரை வணங்கிட
குறையெல்லாம் முழுமையாக நீங்கிவிடும்
வருமையின்றி பெருவாழ்வு வந்துசேரும்
மக்களே
ஐயனை முழுமையாய் நம்புங்கள்
அவன்நமக்குத் துணையாக வந்து நிற்பான் 16
நின்ற மரங்களை யாரும் களவாடிச்
சென்றதில்லை இங்கிருக்கும் சக்தியால் - சென்றுவரும்
பெண்களுக்கும் துன்பமில்லை ஐயன் அருளினால்
வானம் சொரியும் மழை 17
இங்கிருக்கும் மரங்களை யாரும் திருடிச் செல்வதில்லை, சொரிமுத்து அய்யனாரின் சக்தி எங்கும் இருப்பதால் பெண்களும் எவ்விதத் துன்பங்களும் அடையாமல் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மழைக்காக ஐயனை வேண்ட 24 மணிநேரத்தில் மழை பொழியும்.
மண்டில ஆசிரியப்பா
மழைஅருள் சொரியும் சொரிமுத்து ஐயனே
அழையாமல் வரும்நோய் நொடியும் துன்பமும்
புறம்பேசி திரிகின்ற உறவும் ஊராரும்
திறமிருந்தும் கிடைக்காத கல்வி வேலையும்
சரிசெய்து ஒளிகி டைக்க செய்வாயே 18
செய்கின்ற தொழில்யாவும் பலன்கிடைக்கச் செய்திடுவாய்தரவுக்கொச்சகம்
பொய்யுறைக்கும் மானிடரை புறம்ஒதுக்கி வைத்திடுவாய்
தயக்கங்கள் இல்லாமல் நற்செயலைச் செய்விப்பாய்
மயங்காத உள்ளத்தை தந்தென்னைத் தெளிவிப்பாய் 19
தெளிந்த கல்வியும்
தெளிவான வேலையும்
நயந்த சுற்றமும்
நயமிகு பேச்சும்
குளிர்ந்த உள்ளமும்
வளம்மிகு இல்லமும்
அய்யனாரே
தந்து என்னை காத்திடுவாய்
உன்னை யன்றி துணைவேறு இல்லையே 20
.jpeg)
.jpeg)
முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போலவே சொரிமுத்து அய்யனாருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், குளத்துப்புழை, அச்சன்கோவில், பந்தளம், சபரிமலை, ஆரியங்காவு என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலை சாஸ்தா கோவில் உருவாவதற்கு முன்பாகவே இந்த சாஸ்தா கோவில் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது. இங்குள்ள சொரிமுத்து அய்யனார் சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, அமர்ந்த நிலையில் சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார்.
இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் குதிரை, நந்தி, யானை வாகனங்கள் அமைந்து இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் அமைந்து இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் அமைந்து இருப்பதும் விசேஷமான அம்சமாக சொல்லப்படுகிறது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த சாஸ்தாவை முழுமையான நம்பிக்கையோடு வழிபடுகிறார்கள்.
பிலாவடி இசக்கியம்மன்,
மேலவாசல் பூதத்தார்,
மணிமுழுங்கி மரத்தடி விநாயகர்,
மணிமுழுங்கி மரத்தடி பூதத்தார்,
மணிமுழுங்கி மரத்தடி பாதாளகண்டிகை,
மணிமுழுங்கி மரத்தடி கும்பாமணி,
கரடி மாடசாமி,
சுடலை மாடசாமி,
பேச்சியம்மன்,
பிரம்மராட்சி அம்மன்,
தூசி மாடசாமி,
தளவாய் மாடசாமி,
கச மாடன் - கச மாடத்தி,
பொம்மக்கா - திம்மக்கா உடனுறை பட்டவராயன் சுவாமி.
பைரவர்.
திருக்கோவில் விருட்சம்: மணிமுழுங்கி மரம் எனப்படும் இலுப்பை மரம்.
திருக்கோவில் தீர்த்தம்: தாமிரபரணி.