Monday, October 14, 2019

தீவிரவாதம் ஒழியட்டும்

அரும்பி வளரும் பருவத்தில்

வாழ்க்கைத் துவங்கும் நேரத்தில்

விரும்பி வந்து அறிவுதனைப்

பெருக்கிக் கொள்ளும் தருணத்தில்


பள்ளிக் கூட வாசலிலே

பாடம் படிக்க வந்தவரை

கொல்லும் நோக்கில் உள்நுழைந்து

கொன்று குவித்து விட்டனரே.


ஒன்றா இரண்டா ஒருகூட்டம்

ஓல மிட்டு மாய்கின்றோம்

ஏனோ? இப்படிச் செய்கின்றீர்

எங்க ளைஏன் மாய்க்கின்றீர்.


குழந்தை என்று சொன்னாலே

குதூக ளிக்கும் உள்மனது

குழந்தை தூக்கி கொஞ்சிடவே

ஆவல் கொள்ளும் நம்மனது


எங்கள் மொழியைக் கேட்டாலே

கோபம் கூட பறந்துவிடும்

எங்கள் அழகைக் கண்டாலே

கல்லும் உருகி கறைந்துவிடும்


குழந்தை என்று பாராமல்

கொன்று குவித்த மிருகங்களே

அழதும் உள்ளம் கரையாத

ரத்த வெறிக்கூட் டங்களே


உங்கள் வீட்டுப் பிள்ளைகளை

இப்படிக் கொன்ற மாய்ப்பீரோ?

தங்கள் கையால் கல்லறைகள்

கட்டி அங்கு ரசிப்பீரோ?


மனிதன் என்ற போர்வையிலே

மிருக மாக வாழுகின்றீர்

மனமி ருந்தால் மாறிடுவீர்

மனம்தி ருந்தி வாழ்ந்திடுநீர்


தீவிர வாத செயல்களினால்

நன்மை எங்கும் விளைவதில்லை

தீவிர வாதம் என்றாலே

எவரும் துள்ளி மகிழ்வதில்லை


எங்கள் உடலைக் கண்டவுடன்

உங்கள் மனது மாறட்டும்

எங்கள் இறப்பே இறுதியென

இருந்து புரட்சி மலரட்டும்.


மீண்டும் பூமியில் பிறக்கையிலே

அமைதி உலகம் நிலவட்டும்

கண்ணில் கண்ட காட்சியெல்லாம்

பசுமை யாக சிரிக்கட்டும்.

பாக்கிஸ்தான்(பெஷாவர்) பள்ளிக்கூடத்தில் பள்ளிக் குழந்தைகளை தீவிர வாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்ட (16,12,2014) தினத்தன்று எழுதப்பட்டது.