Monday, October 14, 2019

மனமிருந்தால்…

செத்துச் செத்துப் பிழைக்கின்றேன்

சோறு தண்ணி இல்லாமல்

பித்துப் பிடித்து அலைகின்றேன்

பாவை உன்னைக் காணாமல்



நெருப்பைச் சுருட்டி இதயத்துள்

மறைத்து வைத்த வலியைப்போல்

நெருங்கி என்னைச் சுடுகிறதே

உனது நினைவு தினம்வந்து



அழகு வண்ண தேவதையே

அழியா திருக்கும் முழுநிலவே

விழிகள் தேடி அலையுதடி

விழிக்கு விருந்து தருவாயோ



தொலைந்த பிள்ளை அலைவதுபோல்

தொடர்ந்து உன்னைத் தேடுகின்றேன்

தொலைவில் இல்லை அருகில்தான்

இருந்தும் காண மறுக்கின்றாய்



உன்னைக் கண்டு பேசிடவே

விரும்பி வந்தேன் உன்னருகில்

கண்டும் என்னைக் காணாமல்

விலகிச் செல்வது ஏன்தோழி?



இடியைத் தாங்கும் என்இதயம்

மெளனம் தாங்க மறுக்கிறது

கொடியே என்னிடம் பேசிவிடு

மௌனம் என்னைக் கொல்கிறது



வாய்ப்பேச் சில்லா நிலைகண்டு

வாய்மூ டியேநான் அழுகையிலே

ஆயத்தோடு நீசேர்ந்து

அரட்டை அடித்து சிரிக்கின்றாய்



கொஞ்சம் கூட உன்மனதுள்

இரக்கம் என்பது உனக்கிலையோ?

நெஞ்சம் உன்பால் வைத்ததற்கு

கொடுக்கும் தண்டனை இதுதானோ?