Friday, February 11, 2022

திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ் - காப்புப் பருவம்


திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ்
விநாயகர்த் துதி
நேரிசை வெண்பா

வியாசர் மொழிந்த கருத்தை விரைந்து
நயமாய் தொகுத்து உலகோர் - பயன்பெற
தந்த விநாயகா! கண்ணன் மருமகனே!
எந்தன் கவிக்குத் துணை!

மகாபாரதக் கதைகளை வியாச முனிவர் சொல்லச் சொல்ல அவற்றை விரைவாகவும் நயமாகவும் எழுதி தொகுத்து, இந்த உலகத்தினர் பயன்பெறுவதற்காகக் கொடுத்த விநாயகக் கடவுளே! கண்ணனின் மருமகனே! என்னுடைய கவிதைக்கு நீயே துணை.

காப்புப் பருவம்

அறுசீர் விருத்தம் ( விளம் மா காய் )

மீனென மண்ணில் உருவெடுத்து
மீண்டுமாய் உயிர்கள் படைத்திடவே
கோன்மனு துணையால் பல்லுயிரைப்
படகினில் வைத்துக் காத்தவனே!
நான்முகன் உறங்கும் நேரத்தில்
சோமுகா சூரன் கவர்ந்துசென்ற
நான்மறை மீட்டுத் தந்தவனே!
திரௌபதி அம்ம னைக்காக்க. 1

மண்ணுலகில் மச்ச அவதாரம் கொண்டு, மனு என்ற அரசனின் உதவியால் வித்துகள், சப்தரிசிகள், பறவை, விலங்குகள் முதலானவற்றைப் படகில் வைத்து பிரளயம் முடியும் வரை காத்தவனே! படைப்புக் கடவுளாகிய நான்முகன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபொழுது குதிரை வடிவம் கொண்ட சோமுகா சூரன் வேதங்களைக் கவர்ந்து சென்று கடலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்தான். அவனைக் கொன்று வேதத்தை மீட்டுத் தந்த தேவனே! திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

அறுசீர் விருத்தம் ( விளம் விளம் விளம் )

நல்லவர் வாழ்க்கையில் தீயவர்
வந்துளம் வதைப்பது போலவே
பல்வகை துன்பமும் தந்திடும்
பாதக அசுரரை வீழ்த்திட
வல்லவன் ஆனஉன் சூழ்ச்சியால்
தேவரே அமிர்தமும் உண்டிட
கல்லுடல் ஆமையாய் வந்தவா!
திரௌபதி அம்மனைக் காக்கவே. 2

நல்லவர்கள் உள்ளம் நோகும்படியாகத் தீயவர்கள் நடந்து கொள்வதைப் போல, தம்முடைய பாதகமான செயல்களால் தேவர்களுக்கு, பலவகைகளிலும் துன்பங்களைத் தந்த அசுரர்களை அழிக்க, அவர்களைக் கொண்டே அமிழ்தம் கடைந்தெடுத்து அவர்களுக்குக் கிடைக்காமல் தேவர்கள் மட்டும் உண்ணும் படியாகப் பலவகையில் சூழ்ச்சிகள் செய்து ஆமையாக அவதாரம் செய்த தேவனே! திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

அறுசீர் விருத்தம் ( விளம் விளம் மா )

இரவியின் பிழம்பிலி ருந்து
சூட்டுடன் பட்டென பிரிந்து
நெருப்புகு ளிர்ந்ததும் சிதைந்து
அரிதென பலஉயிர் வளர்ந்து
பெரும்புகழ் பொறுமையின் சிகரம்
தரணியைக் கொம்பிலே சுமந்து
வராகனாய் தோன்றிய இறைவா!
திரௌபதி அம்மனைக் காக்க. 3

சூரிய பிழம்பில் இருந்து பிய்த்துக் கொண்டு வந்த இந்தப் பூமி, சூடு தணிந்த நிலையில் மலை, கல், மணல், மண் எனப் பலவாறாக மாறுபட்டு, அரியவகை உயிரினங்கள் வளர்ந்து வருவதற்கு இடம் தருகிறது. அத்தகைய பெருமையும் புகழையும் தாங்கி, பொறுமைக்கு இலக்கணமாக விளங்கும், இந்த பூமியைத் தனது தந்தத்தினால் சுமந்து வெளியே கொண்டு வந்த வராக மூர்த்தியே! திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

அறுசீர் விருத்தம் ( மா மா காய் )

தன்னைக் கடவுள் எனச்சொன்ன
அசுரன் அகந்தை அழித்திடவே
முன்னை வரத்தின் முடிச்சுகளைத்
தந்தி ரத்தால் அவித்தவனே!
உன்பேர் சொன்ன பாலகனின்
இன்னல் தீர்க்க உருமாறி
நின்ற அண்ணல் நரசிம்மா!
திரௌப தியம்ம னைக்காக்க. 4

தான் மட்டுமே கடவுள் என்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று, தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களை அச்சுறுத்தி, ஏற்றுக் கொள்ளச் செய்த இரண்யனின் ஆணவத்தை அழிக்கவும் தனது பெயரை அனுதினமும் உச்சரித்த பாலகனான பிரகலாதனின் துன்பம் தீர்க்கவும் இரவிலோ பகலிலோ; பூமியிலோ ஆகாயத்திலோ; வீட்டிலோ வெளியிலோ; மனிதர், விலங்கு யாவராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என இரணியகசிபு பிரம்மதேவரிடம் வரங்களைப் பெற்றதனால் அவற்றின் முடிச்சுகளை எல்லாம் அவிழ்த்து, மனிதனும் விலங்கும் கலந்த உருவில், வாயிற்படியில் தன்மடியில் வைத்து, கை விரல் நகத்தாலேயே அழித்த நரசிங்க மூர்த்தியே! திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

அறுசீர் விருத்தம் (மா மா மா )

மூன்று உலகம் ஆள
வேண்டி வேள்வி செய்யும்
கோனின் யாக சாலை
மெல்ல நடந்து வந்து
மூன்று அடிமண் கேட்டு
குள்ள உருவம் கொண்டு
வானும் மண்ணும் அளந்தாய்!
திரௌப தியம்மன் காக்க. 5

வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்றையும் தான் ஒருவனாக ஆளவேண்டும் என்பதற்காக, விக்கிரசித் என்னும் பெரிய வேள்வியைச் செய்கின்ற மகாபலியின் யாக சாலைக்கு மூன்றடி உயரம் கொண்ட குள்ள அந்தண வடிவில் சென்று மூன்றடி மண்கேட்டுப் பெற்று வானையும் மண்ணையும் அளந்த வாமன தேவனே! திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

அறுசீர் விருத்தம் (விளம் மா மா )

சிந்தையில் சிவனை வைத்து
பரசுவைப் பரிசாய் பெற்றாய்!
தந்தையின் ஆணைக் கிணங்க
தாயினைக் கொலையும் செய்தாய்!
தந்தையார் அன்பாய் வளர்த்த
பசுவினை மீட்டுத் தந்தாய்!
எந்தனன் பைநீ ஏற்று
திரௌபதி அம்மன் காக்க. 6

சிவபெருமானை மனத்துள் நினைத்து தவமிருந்து, ‘பரசு’ என்னும் கோடரியைப் பரிசாகப் பெற்றவனும் தன்னுடைய தந்தையான சமதக்கினி சொல்லை ஏற்று, தன்னுடைய தாயான ரேணுகா தேவியின் தலையை வெட்டியவனும் தன் தந்தை அன்பாய் வளர்ந்து வந்த ‘காமதேனு’ என்னும் பசுவைக் கவர்ந்து சென்ற கார்த்தவீரியச்சுனனைக் கொன்று பசுவை மீட்டு வந்தவனுமாகிய பரசுராமா! என்னுடைய அன்பை நீ ஏற்று திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

அறுசீர் விருத்தம் (விளம் மா தேமா )

அன்னையின் சொல்லை ஏற்று
தாரமும் தம்பி யோடும்
வனம்புகும் செயலைச் செய்தாய்!
அரசனாய் இருந்த போதும்
உன்னுடை தோழ னாக
அனுமனை மகிழ்ந்து ஏற்றாய்!
முனிவனாய் வாழ்ந்த ராமா!
திரௌபதி அம்மன் காக்க 7

தன்னுடைய சிற்றன்னையாகிய கைகேயியின் சொல்லை ஏற்று, மனைவி சீதையோடும் தம்பி இலக்குவனனோடும் காட்டிற்குச் சென்றவனும் அரச குலத்தில் பிறந்திருந்தும் குரங்கினத்தைச் சேர்ந்த அனுமனை நண்பனாக ஏற்றவனுமாகிய இராமபிரானே! திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

வெண்ணிற தோற்றம் கொண்ட
பெரும்பலம் உடைய தேவா!
பெண்ணின நல்லாள் தேவி
ரோகிணி மகவாய் வந்தாய்!
மண்ணிலே உழவு செய்ய
கலப்பையைக் கையில் கொண்டாய்
மண்புகழ் தங்கை யான
திரௌபதி யம்மன் காக்க 8

வெண்மை நிறமும் பெரும்பலமும் கொண்ட தேவனே! பெண்களில் சிறந்தவளாகிய ரோகிணியின் வயிற்றில் மகனாகப் பிறந்தவனே! மண்ணுலகில் உழவுத் தொழில் சிறக்கவேண்டும் என்பதற்காகக் கையில் கலப்பையைத் தாங்கியவனே பூமியில் பெரும்புகழை உடைய உன்னுடைய தமக்கையான திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

அறுசீர் விருத்தம் (மா மா மா )

ஒருத்தி மகனாய் பிறந்து
ஒருத்தி மகனாய் வளர்ந்தாய்!
விரும்பும் செயல்கள் செய்து
அரக்கர் பலரை அழித்தாய்!
தருமம் நிலைக்க வேண்டி
தருமர் துணையாய் நின்றாய்!
அருமைத் தமக்கை யான
திரௌப தியம்மன் காக்க. 9

ஒருத்தி மகனாகப் பிறந்து, வேறொருத்தியின் மகனாக வளர்ந்து வருபவனும் விரும்புகின்ற செயல்களைச் செய்து அரக்கர்கள் பலரை அழித்தவனும் மண்ணுலகில் தருமம் நிலைக்க வேண்டும் என்பதற்காகப் பாண்டவர்களின் பக்கம் நின்றவனுமாகிய கண்ணா! உன்னுடைய அருமைத் தங்கையாக விளங்கும் திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

அறுசீர் விருத்தம் (விளம் மா தேமா)

சத்தியம் தருமம் எல்லாம்
சதியினில் உழன்ற போது
பத்தியில் விருப்ப மின்றி
பாவமும் பழியும் செய்து
புத்தியில் தெளிவும் இன்றி
புதுவழி நடந்த போது
உதித்திடும் கல்கி தேவா!
திரௌபதி அம்மன் காக்க. 10

சத்தியம், தருமம் இவையாவும் சதியென்னும் சூழ்ச்சியில் பின்னால் சென்றபோது பக்தி, வழிபாடு இவற்றில் விருப்பம் இல்லாமல் பாவமும் பழியும் செய்தும் புத்தியில் தெளிவு இல்லாமல் அதர்மத்தின் வழியில் செல்லுகின்ற போதும் பூமியில் அவதாரம் எடுக்க இருக்கும் கல்கி தேவனே! திரௌபதி அம்மனைக் காப்பாயாக.