செங்கீரைப் பருவம்
எண்சீர் விருத்தம் (விளம் விளம் விளம் விளம்)
கண்டவர் மயங்கிடும் தண்முகப் பொலிவுடன்
பொன்மகள் தவழ்ந்திட கொலுசொலி செவிதொட
விண்ணவர் அழகினை விழிகளில் பருகிட
உன்மொழி ஒலிகளும் இனிதுடன் செவிதொட
மண்ணவர் புகழ்ந்துடன் வணங்கிடும் இறைவியே!
எம்குலம் வழிபடும் அழகுடை தலைவியே!
கண்ணனின் தமக்கைசெங் கீரைஆ டியருளே!
துருபதன் மகவுசெங் கீரைஆ டியருளே! 11
கண்களில் கண்டவர்கள் உன்னுடைய குளிர்ச்சி பொருந்திய முகப்பொலிவு கண்டு மயங்கிட, பொன்நிற தோற்றம்கொண்டு தவழ்ந்திட, அதனால் உண்டான கொலுசொலி ஓசை செவிகளில் இனிமையை உண்டாக்க, இந்த அழகினை வானத்துத் தேவர்களும் விழிகளால் உண்டபடி, கீர் கீர் என்னும் உன்னுடைய செங்கீரை மொழிகள் காதுக்கு இனிமைத் தந்திட, மண்ணில் வாழும் மக்கள் அனைவரும் உனைப்புகழ்ந்து வணங்கத்தக்க இறைவியே! எம்முடைய முன்னோர்களும் வழித் தோன்றல்களும் வழிபடும் தலைவியே! கண்ணனின் தமக்கையான திரௌபதியே! செங்கீரை ஆடுவாயாக. துருபதனின் மகளே! செங்கீரை ஆடுவாயாக.
உன்னெழில் முகத்தினில் சந்தனம் பூசிட
செந்நிற மேனியில் வாசமும் வீசிட
உன்விழி அழகினைக் கண்டவர் வீழ்ந்திட
மண்தொடும் கைகளும் மணிமுடி சூடிட
உன்னுடை பொருளிலா மொழிகளும் இனித்திட
நகர்ந்திடும் பொழுதிலே பாதமும் தேய்ந்திட
என்குல விளக்குசெங் கீரைஆ டியருளே!
துருபதன் மகவுசெங் கீரைஆ டியருளே! 12
சந்தனம் பூசிய அழகிய முகம், மணம்வீசும் சிவந்த மேனி, கண்டவர்களை மயக்கம் செய்யும் விழிகள், மணிமுடியாக மண்ணைப் பூசிக் கொண்ட கைகள், பொருள் இல்லாத இனிய மொழிகள், முட்டிப்போட்டு நகரும் பொழுது தரையில் தேயும் பாதம் இவற்றை உடைய என் குலவிளக்கான திரௌபதியே! செங்கீரை ஆடுவாயாக. துருபதன் மகளே செங்கீரை ஆடுவாயாக.
திருவடி அணிந்திடும் கொலுசுகள் ஒலியிட
கரங்களில் அணிந்திடும் காப்புகள் மிளிர்ந்திட
இருவிழி சுழன்றிடும் நயங்களும் எழிலுற
மொழிவழி வருகிற ஓசையும் இனித்திட
சிரித்ததும் குழிவிழும் அழகிலே மயங்கிட
கழுத்திலே இருக்கிற பொன்மணி அசைந்திட
திரௌபதி அம்மைசெங் கீரைஆ டியருளே!
துருபதன் மகவுசெங் கீரைஆ டியருளே! 13
உன் பாதங்களில் அணிந்துள்ள கொலுசுகள் ஒலியெழுப்ப, கைகளில் அணிந்துள்ள காப்புகள் ஒளிவிட, விழிகளைச் சுழற்றி பார்க்கும் தன்மை அழகாய் அமைய, மொழிந்திடும் பொருள் இல்லாத ஓசை இனிமையைத் தந்திட, சிரிக்கும் பொழுது விழுகின்ற கன்னக்குழி அழகு மயக்கத்தை உண்டாக்க, கழுத்தில் அணிந்துள்ள பொன்னால் செய்த மணிகள் அசையும் படியாக திரௌபதி அம்மையே! செங்கீரை ஆடுவாயாக. துருபதனின் மகளே! செங்கீரை ஆடுவாயாக.
எண்சீர் விருத்தம் (காய் காய் காய் காய்)
கண்ணேறு கழிவதற்கு கன்னத்தில் வைத்தமையும்
செல்கின்ற இடம்தெரிய காலணிந்த கொலுசுகளும்
மணிவயிற்றில் அணிந்துள்ள மணிவகையும் அரைஞாணும்
இருகரங்கள் சுற்றியுள்ள காப்போடு வளையல்கள்
விண்முகிலாய் அசைந்தாடும் தலைமுடியும் கருவிழியைத்
தோற்கடிக்கும் விழியோர மையழகும் காட்டிவரும்
கண்ணனவன் தமக்கையேநீ செங்கீரை ஆடுகவே!
பாஞ்சாலி அம்மையேநீ செங்கீரை ஆடுகவே! 14
உன் அழகினைக் கண்டவர்கள் கண்வைத்து விடுவார்கள் என்பதற்காகக் கண்திருட்டி கழிய கன்னத்தில் வைத்த மையும், நீ செல்லுகின்ற இடம் தெரிவதற்காகக் கால்களில் அணிவித்த கொலுசும், அழகிய வயிற்றில் அணியப்பட்ட பொன் ஆபரணங்களும் அரைஞாணும் இரண்டு கரங்களையும் பற்றிக் கொண்டிருக்கும் காப்பும் வளையல்களும், கருமேகம்போல் அசைந்தாடும் தலைமுடியும், கரிய விழியையே தோற்கடிக்கச் செய்யும் இமைகளில் தீட்டப்பட்ட மையும் காட்டி வரும் கண்ணனின் தங்கையே! செங்கீரை ஆடுவாயாக. பாஞ்சாலி அம்மையே! செங்கீரை ஆடுவாயாக.
எண்சீர் விருத்தம் (காய் காய் மா தேமா)
பாஞ்சால தேசத்து மன்ன னான
துருபதனைப் போரிட்டுப் பாதி நாட்டை
வாஞ்சையினால் வஞ்சகமாய் அபகரித்த
குருதுரோணர் பழிதீர்க்க உறுதி கொண்டு
பாஞ்சாலன் தனக்குஒரு பிள்ளை வேண்டி
யாகம்செய் வேள்வியிலே தோற்றம் கொண்ட
பாஞ்சாலி அம்மையேஆ டுகசெங் கீரை
துருபதன் மகளேஆ டுகசெங் கீரை 15
பாஞ்சால நாட்டை ஆண்டுவந்த துருபத மன்னனை எதிர்த்துப் போரிட்டு வென்று, ஆசையின் காரணமாக நாட்டில் பாதியை வஞ்சகமாய் அபகரித்துக் கொண்டார் துரோணாச்சாரியார். அவரோடு போரிட்டு வெற்றி பெற்று தான் இழந்த பாதிநாட்டை மீண்டும் கைப்பற்ற எண்ணிய பாஞ்சாலன், தனக்குத் துணையாய் ஒரு மகன் இருந்தால் இது சாத்தியமாகும் என்று நினைத்து, பிள்ளை வரம் வேண்டி யாகம் ஒன்றைச் செய்தான். அந்த யாகத்தில் திட்டத்துய்மன், திரௌபதி என்ற இருவர் தோன்றினர். அவ்வாறு யாகத்தில் தோன்றிய பாஞ்சாலி அம்மையே! ஆடுக செங்கீரை. துருபதன் மகளே! ஆடுக செங்கீரை.
எண்சீர் விருத்தம் (காய் காய் காய் காய்)
கணவன்மார் சூதாடி அடிமையாக்கி வைத்தபின்னே
பெண்ணியத்தை முன்னெடுத்த முதல்பெண்ணாய் நீயாகி
கணவன்மார் தனைவைத்து இழந்தபின்னே துணையாளை
அடிமையாக்க உரிமையுண்டோ! எனவிளித்து நின்றவளே!
பெண்ணடிமைக் கொண்டவர்க்கு அவளாலே அழிவென்ற
உண்மையினை உலகிற்கு எடுத்துரைத்த பெண்மகளே!
கண்ணனவன் சோதரியே! ஆடுகநீ செங்கீரை
துருபதனின் மணிவிளக்கே! ஆடுகநீ செங்கீரை 16
தன்னுடைய கணவன்மார்கள் சூதாட்டத்தில் தன்னை வைத்து இழந்து அடிமையான பின்னர், துணையாளாகிய என்னை வைத்து இழக்க அவர்களுக்கு உரிமை உண்டோ? என விளித்து, பெண்ணினத்திற்காக முதன்முதலாகக் குரல் கொடுத்தவளும் பெண்களை அடிமைப் படுத்தியவர் களுக்கு அந்தப் பெண்ணாலேயே அழிவு உண்டாகும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துரைத்தவளுமாகிய கண்ணணின் சகோதரியே! ஆடுக செங்கீரை. துருபதனின் அழகு மிகுந்த விளக்கு போன்றவளே! ஆடுக செங்கீரை.
துருபதனின் யாகத்தில் இளம்பெண்ணாய் வந்தவளே!
துன்பமான நேரத்தில் திருமாலை அழைத்தவளே!
குருவம்சம் தானழிக்க குலம்தேடி வந்தவளே!
உருமாறி காடலைந்து உரிமையினைப் பெற்றவளே!
இரட்டணையில் கோவில்கொண் டெம்குலத்தைக் காப்பவளே!
நிறம்மாறாக் குணங்கொண்டு நீதிவழி நின்றவளே!
திருமாலின் சோதரியே! ஆடுகநீ செங்கீரை.
துருபதனின் மணிவிளக்கே! ஆடுகநீ செங்கீரை. 17
பிள்ளை வரம்வேண்டி துருபதன் செய்த யாகத்தில் தோன்றியவளே! உனக்குத் துன்பம் வரும் நேரத்தில் துன்பம் காக்க திருமாலை அழைத்தவளே! பீசுமரின் வம்சமான குருவம்சம் அழிப்பதற்காக அவரின் தம்பி மகன் பாண்டுவின் மருமகளாக வந்தவளே! அரசியாக இருந்தும் அரச வாழ்க்கையைத் துறந்து காட்டில் மறைந்து வாழ்ந்து தனக்கு உரிமையான நாட்டினைப் பெற்றவளே! இரட்டணையில் கோவில் கொண்டு எம்குல மக்களைக் காப்பவளே! நல்லது எது கெட்டது எது என அறிந்து நீதியின் பக்கம் நின்றவளே! திருமாலின் சகோதரியே! ஆடுக செங்கீரை. துருபதனின் விளக்கு போன்றவளே! ஆடுக செங்கீரை.
பகையழித்து குறும்புசெய்து திருடிவெண்ணைத் தின்றவனின்
மலைதூக்கி ஆநிரையின் குறைதீர்த்து நின்றவனின்
அகலிகையின் உருமாற்றி பெண்ணாக்கி வைத்தவனின்
குரங்கான அனுமானை நண்பனாக்கிக் கொண்டவனின்
தகப்பன்சொல் தட்டாத தனையனாக இருந்தவனின்
கோடரியால் தாய்த்தலையைத் துண்டாக்கி வந்தவனின்
தகைசான்ற சோதரியே! ஆடுகநீ செங்கீரை.
துருபதனின் மணிவிளக்கே! ஆடுகநீ செங்கீரை. 18
பல்வேறு குறும்புகள் செய்து, தனக்குப் பகைவர்களாக வந்தவர்களை அழித்து, மலையைக் குடையாகப் பிடித்துப் பசுக்கூட்டத்தைக் காத்தவனின், கல்லாக இருந்த அகலிகையைத் தனது கால் தூசினால் பெண்ணாக்கி சாப நீக்கம் செய்தும் குரங்கு இனத்தைச் சார்ந்த அனுமானைத் தன்னுடைய நண்பனாக ஏற்றுக் கொண்டவனின், தன்னுடைய தந்தையின் சொல்லை ஏற்று தாயின் தலையைக் கோடரியால் வெட்டித் துண்டாக்கி வந்தவனின் அன்பு நிறைந்த தங்கையே! ஆடுக செங்கீரை. துருபதனின் விளக்கு போன்றவளே! ஆடுக செங்கீரை.
எண்சீர் விருத்தம் (மா காய் காய் காய்)
அன்னை முகம்கண்டு ஆசையோடு ஓடிவர
பிஞ்சுப் பாதங்கள் குங்குமமாய் சிவந்ததடி
சின்ன இதழ்கொண்டு நீசிரிக்கும் புன்சிரிப்பில்
உள்ளப் பெருஞ்சுமையும் காணாமல் போனதடி
உன்னை அடைவதற்கு என்னதவம் செய்தேனோ!
வண்ணப் பூச்சரமே வாசமிகு ரோசாவே!
என்னுள் இருப்பவளே! ஆடுகநீ செங்கீரை
எங்கள் குலவிளக்கே! ஆடுகநீ செங்கீரை 19
அன்னையின் முகம் கண்டவுடன் ஆசையினால் வேகமாகவும் அழுத்தமாகவும் குதித்தும் ஓடி வரும்போது, உன் பிஞ்சுப் பாதங்கள் குங்குமமாய்ச் சிவந்தது. உன் சிறிய இதழ்கொண்டு நீ சிரிக்கும் புன் சிரிப்பில் உள்ளத்தில் உள்ள பெரும் சுமையான கவலைகளும் காணாமல் போகும். அப்படிப்பட்ட உன்னை நான் பிள்ளையாக அடைவதற்கு என்ன தவம் செய்தேனோ? நீ எனக்கு மகளாகப் பிறந்திருக்கிறாய். அழகிய பூச்சரம் போன்றவளே! வாசம் மிகுந்த ரோசாவே! என்னுள்ளே இருப்பவளே! ஆடுக செங்கீரை. எம்குல மக்களைக் காக்கும் விளக்கு போன்றவளே! ஆடுக செங்கீரை.
அறுசீர் விருத்தம் (மா மா காய்)
ஒருதாய் வயிற்றில் உருவாகி
மறுதாய் வயிற்றில் பிறந்தவனும்
ஒருத்தி மகனாய் பிறந்துவந்து
ஒருத்தி மகனாய் வளர்ந்தவனும்
அரக்கர் பலரை சேர்ந்தழித்த
பலரா மகிருட் டிணன்தங்கை
திரௌப திஆடு கசெங்கீரை
கிருட்டி ணைஆடு கசெங்கீரை 20
ஒருதாயின் வயிற்றில் கருவாக உருவாகி, வேறொரு தாயின் வயிற்றில் வளர்ந்து பிள்ளையாகப் பிறந்த பலராமனும், ஒருதாய் வயிற்றில் பிறந்து வேறொரு தாயிடம் வளர்ந்த கிருட்டிணனும் சேர்ந்து அரக்கர்கள் பலரை அழித்தனர். இவர்களின் தங்கையான திரௌபதியே! ஆடுக செங்கீரை. கிருட்டிணை என்னும் பெயருடையவளே! ஆடுக செங்கீரை.