முத்தப் பருவம்
பன்னிருசீர் விருத்தம் ( விளம் மா காய் )
துருபத மன்னன் ஆணையுடன்
யாசரு பயாசர் வேள்வியிலே
சூரிய ஒளியை மிஞ்சுகின்ற
கருநிறம் உடைய தோற்றத்தில்
சுருண்டிரும் கரிய கூந்தலையும்
தாமரை போன்ற கண்களையும்
கண்டவர் மயங்கும் அழகோடு
திருமகள்போன்ற சாயலுடன்
கிருட்டிணை என்ற பெயரோடு
புன்னகை தவழும் சிரிப்போடு
நறுமணம் வீசும் உடலோடு
இரட்டணை என்ற ஊரினிலே
விருப்புடன் அமைந்த யாகசேனி
நெருங்கியே முத்தம் நீதருக.
எங்களின் குலத்தைக் காக்கின்ற
திரௌபதி முத்தம் நீதருக. 41
துருபதனின் ஆணையை ஏற்று யாசர், உபயாசர் என்ற இருபெரும் முனிவர்கள் செய்த வேள்வியில், சூரிய ஒளியை மிஞ்சுகின்ற அளவிற்கும் மிகுந்த ஒளியுடனும் கருத்தநிறமும் சுருண்டு இருக்கும் கரிய கூந்தலுடனும் தாமரைப்போன்ற கண்களையும் கண்டவர் மயக்கம் கொள்ளும் அழகையும் திருமகளின் வடிவத்தையும் பெற்று, கிருட்டிணை என்ற பெயருடன் நறுமணம் கமழும் உடலும் புன்னகைத் ததும்பும் முகமும் கொண்டு இரட்டணை என்ற ஊரில் விருப்பத்துடன் கோவில் கொண்டுள்ள யாகசேனி நீ அருகில் வந்து முத்தம் தருக. எங்களின் குலத்தைக் காக்கின்ற திரௌபதி நீ முத்தம் தருக.
பன்னிருசீர் விருத்தம் (விளம் மா காய் மா மா காய்)
சிறியஆ றுகள்வ ளப்படுத்த
பசுமை யாக காட்சிதரும்
மாடுக ளோடு உழைக்கின்ற
உழவர் வாழும் பூமியிது
அறுவடை செய்யும் காலத்தில்
எறும்பாய் வயலில் உலவிடுவர்
நெல்லினை அறுத்து மலைபோல
களத்தில் சேர்த்து வைத்திடுவர்
அறுவடை செய்த சிலநாளில்
வயல்கள் மீண்டும் பயிர்துளிர்க்கும்
ஓய்வுஇல் லாமல் உழவுசெய்யும்
உழைக்கும் மக்கள் நிறைந்தஊரில்
சிறப்புடன் உறையும் பாஞ்சாலி
நெருங்கி முத்தம் நீதருக.
எங்களின் குலத்தைக் காக்கின்ற
திரௌப திமுத்தம் நீதருக. 42
சங்கராபரணி, தொண்டி என்ற இரண்டு சிற்றாறுகள் ஊரின் இரண்டு பக்கமும் அமைந்து வளப்படுத்த, ஊர் முழுவதும் பசுமையாகக் காட்சி தரும். மாடுகளோடு இணைந்து உழைக்கின்ற உழவர்கள் வாழும் பூமி இது. அறுவடைகள் செய்கின்ற காலத்தில் எறும்புகளைப்போல் வயல் வெளிகளில் சுறுசுறுப்பாக இயங்கி, நெல்மணிகளை அறுத்து, களம் நிறைய சேர்த்து வைப்பர். அறுவடை செய்த சில நாட்களிலேயே வயல்களில் மீண்டும் பயிர்கள் துளிர்க்கும் அளவிற்கு ஓய்வு இல்லாமல் உழைக்கும் மக்கள் மிகுதியாக வாழும் இரட்டணையில் சிறப்பாக கோவில் கொண்டுள்ள பாஞ்சாலியே! அருகில் வந்து முத்தம் தருக. எங்களின் குலத்தைக் காக்கின்ற திரௌபதி முத்தம் தருக.
பன்னிருசீர் விருத்தம் ( மா மா காய் )
அறிவு ஒளியை நீயேற்றி
அறியா மைஎன்ற நோய்போக்கு
அருகில் உள்ள உறவுகளை
அரும ருந்தா கபோற்றிதொழு
வறுமை என்ற நிலைநீக்கி
வருவாய் பெருக்க வழிதேடு
இனிய மொழிகள் பலபேசி
இல்லத் தாரை மகிழ்ந்திடசெய்
சிறந்த உணவை தினமுண்டு
உடலை ஓம்பி வளர்த்துக்கொள்
நல்ல நூலைக் கற்றுணர்ந்து
நல்ல னவற்றை பிறர்க்குணர்த்து
சிறப்பாய் கேட்ட யாகசேனி
நெருங்கியே முத்தம் நீதருக.
எங்களின் குலத்தைக் காக்கின்ற
திரௌப திமுத்தம் நீதருக. 43
அறிவு என்னும் ஒளியை ஏற்றி அறியாமை நோயைப் போக்கு. உன் அருகில் உள்ள உறவினர்களைக் கிடைத்தற்கரியவர்களாக நினைத்து அவர்களோடு நெருங்கிப் பழகு. வறுமை என்ற நிலையை நீக்கி வருமானத்தைப் பெருக்கும் வழிவகை களைச்செய். வீட்டில் இருப்பவரோடு இனிமையான சொற்களால் பேசி, மகிழ்ச்சியடையச் செய். உடலுக்கு ஏற்ற உணவை உண்டு உடம்பினைப் பாதுகாத்துக்கொள். நல்ல நூல்களை உணர்ந்துக் கற்று மற்றவர்களுக்கும் அதன் கருத்துகளை எடுத்துச் சொல். நான் சொன்ன இவற்றையெல்லாம் நல்லமுறையில் கேட்ட யாகசேனியே அருகில் வந்து முத்தம் தருக. எங்களின் குலத்தைக் காக்கின்ற திரௌபதி முத்தம் தருக.
அறுசீர் விருத்தம் ( மா மா காய் )
துரோண ரிடத்தில் பணிவுகொண்டு
கலைகள் சிறப்பாய் கற்றதனால்
துரோணர் உள்ளம் மகிழ்வுகொண்டு
பிரம்மாஸ் திரத்தை அளித்திட்ட
அர்ச்சுன னில்லாள் பாஞ்சாலி
நெருங்கி முத்தம் நீதருக.
விரும்பி எங்கள் குலம்காக்கும்
அம்மா முத்தம் நீதருக. 44
துரோணர் என்ற முனிவரிடம் பணிவுடன் கலைகள் பலவற்றையும் சிறப்பாகக் கற்றதனால் உள்ளம் மகிழ்ந்த துரோணர் தன்னிடம் உள்ள பிரம்மாஸ்திரத்தை அர்ச்சுனனுக்கு வழங்கினார். அத்தகைய அர்ச்சுனனின் இல்லத் துணைவியான பாஞ்சாலியே! அருகில் வந்து முத்தம் தருக. எங்களின் குலத்தைக் காக்கின்ற திரௌபதி! முத்தம் தருக.
அறுசீர் விருத்தம் ( விளம் மா காய் )
பெண்ணினம் போற்றிக் காப்பவரைப்
பெருமைகள் செய்யத் தயங்காதே!
பெண்ணுயிர் தன்னை வதைக்கின்ற
பேடியைக் கண்டால் வணங்காதே!
மண்ணுயிர் காக்கும் பாஞ்சாலி
நெருங்கியே முத்தம் நீதருக.
பெண்ணின நல்லாள் திரௌபதியே
விரும்பியே முத்தம் நீதருக. 45
பெண்களைப் போற்றிக் காப்பவரைப் பெருமைப் படுத்த தயங்காதே. பெண்களின் உயிரைத் துன்பப் படுத்துகின்ற ஆண் தன்மையற்ற பாதகரைக் கண்டால் வணங்காதே. மண்ணில் உள்ள உயிர்களைக் காக்கின்ற பாஞ்சாலியே அருகில் வந்து முத்தம் தருக. பெண் குலத்தின் நல்லவளான திரௌபதி விருப்பத்துடன் முத்தம் தருக.
தீயவ ரிடத்தும் தீமைதரும்
திறமிலா சொல்லை பேசாதே!
தீயவர் உள்ளம் கவர்ந்திழுக்கும்
திறமுடைச் செயல்கள் செய்துவிடு
தீயினில் பிறந்த யாகசேனி!
நெருங்கியே முத்தம் நீதருக.
தீயது போக்கும் திரௌபதியே!
விரும்பியே முத்தம் நீதருக. 46
பிறருக்கு நன்மையைச் செய்யாத தீய குணம் கொண்டவரிடத்திலும் தீமையை உண்டாக்கும் தகுதியற்ற சொற்களைப் பேசக் கூடாது. தீயவர்களின் உள்ளத்தையும் கவருகின்ற தகுதியான செயல்களைச் செய்யவேண்டும். யாசர், உபயாசர் நடத்திய வேள்வித் தீயில் தோன்றிய யாகசேனி அருகில் வந்து முத்தம் தருக. தீயனவற்றைப் போக்குகின்ற திரௌபதி விருப்பத்துடன் முத்தம் தருக.
நல்லவர் உள்ளம் நடுங்கிடவே
உன்னுடை செயலைச் செய்யாதே!
நல்லவர் வழியில் நீநடந்து
நல்லது செய்து புகழ்பெறுவாய்
நல்லவ ரான பாண்டவர்கள்
மனைவியே முத்தம் நீதருக.
நல்லது சொல்லும் திரௌபதியே!
நெருங்கியே முத்தம் நீதருக. 47
நல்லவர்கள் உள்ளம் நடுங்கும்படியான செயல்களைச் செய்யக் கூடாது. நல்லவர்கள் செல்லும் வழியில் சென்று பிறருக்கு நன்மை செய்து புகழைத் தேட வேண்டும். நல்லவரான பாண்டவர்களின் மனைவியே முத்தம் தருக. நல்லது சொல்லும் திரௌபதியே அருகில் வந்து முத்தம் தருக.
அறுசீர் விருத்தம் ( மா மா காய் )
கற்பு மகளிர் உள்ளத்தை
களங்கம் செய்யும் பாதகரை
கற்பாய் நட்பைக் காக்காத
தீய உள்ளம் கொண்டவரை
இறையாய் அழிக்கும் பாஞ்சாலி
நெருங்கி முத்தம் நீதருக.
சிறப்பாய் குலத்தைக் காக்கின்ற
அம்மா முத்தம் நீதருக. 48
கற்பு நெறி தவறாத பெண்களின் உள்ளத்தைக் கலங்கடிக்கும் பாதக செயல் செய்பவரை, நட்பையும் கற்பென்று போற்றிக் காக்காத தீய உள்ளம் படைத்தவரை, கடவுளாக இருந்து அழிக்கும் பாஞ்சாலியே! அருகில் வந்து முத்தம் தருக. சிறப்பாய் குலத்தைக் காக்கின்ற அம்மையே! முத்தம் தருக.
விருந்தெ னவந்தார் பசிபோக்கி
விருப்பத் தோடு பலகொடுத்து
விரும்பி யவார்த்தைப் பலபேசி
உள்ளம் மகிழச் செய்தவரை
நெருங்கிக் காக்கும் பாஞ்சாலி
விரும்பி முத்தம் நீதருக.
உரிமை யோடு காக்கின்ற
அம்மா முத்தம் நீதருக. 49
விருந்தினராக இல்லம் தேடி வந்தவரின் பசியைப் போக்கியும் அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகள் செய்தும் அவர்கள் மனம் விரும்பும் வார்த்தைகள் பல பேசியும் அவர்களின் உள்ளம் மகிழச் செய்தவரை, அவர்களின் இல்லம் சென்று காக்கின்ற பாஞ்சாலியே! விரும்பி வந்து முத்தம் தருக. உரிமையோடு காக்கின்ற அம்மா முத்தம் தருக.
அன்னைத் தந்தை உளம்நோக
விட்டி டாத நல்மக்கள்
தன்னைச் சார்ந்த உறவினரைப்
போற்றிக் காக்கும் நல்மனங்கள்
என்றும் காக்கும் பாஞ்சாலி
நெருங்கி முத்தம் நீதருக.
என்னுள் வாழும் யாகசேனி
அம்மா முத்தம் நீதருக. 50
நம்மைப் பெற்றெடுத்த தாய், தந்தை உள்ளம் நோகும்படி விட்டிடாத நல்ல பிள்ளைகளை, தன்னைச் சார்ந்த உறவினர்களை மதித்துக் காக்கும் நல்ல மனம் கொண்டவர்களை எல்லா நாட்களிலும் காக்கின்ற பாஞ்சாலியே அருகில் வந்து முத்தம் தருக. எனது மனத்துள்ளே வாழும் யாகசேனி அம்மா முத்தம் தருக.