சப்பாணிப் பருவம்
பன்னிருசீர் விருத்தம் ( காய் மா மா )
பரவைதனைக் கடைவ தற்குப்
பெருந்துணையாய் அசுரர் சேர்த்து
மோர்கடையும் செயலைப் போல
வாசுகியைக் கயிறாய்க் கொண்டு
பெருமலையை மத்தாய் நிறுத்தி
துரிதமாய் கடைந்தெ டுக்க
பெருகிவந்த அமுதம் தன்னை
தன்னுடைய தந்தி ரத்தால்
அருந்துணை அசுரர்க் கருளா
பாவத்தைத் தீர்ப்ப தற்குத்
தாய்முலையில் அமுதி ருக்க
பேய்முலையில் நஞ்சை உண்ட
திருமாலின் அன்புத் தங்கை!
சப்பாணி கொட்டி யருளே!
துருபதனின் செல்ல மகளே!
சப்பாணி கொட்டி யருளே! 31
பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் எடுக்க எண்ணிய தேவர்கள் கூட்டம், கடைவதற்கு துணையாக அசுரர்களையும் சேர்த்துக்கொண்டு, மேருமலையை மத்தாக நிறுத்தி விரைவாக கடைய, பெருகிவந்த அமிழ்தத்தைத் திருமால், தன்னுடைய தந்திரத்தினால் தேவர்கள் மட்டும் உண்ணும்படியாகச் செய்து அசுரர்களுக்குக் கிடைக்காமல் செய்துவிட்டார். இந்தப் பாவத்தைத் தீர்ப்பதற்காக உயிர்வளர்க்கும் அமிழ்தம் தாயிடம் இருக்க, இதை உண்ணாமல், பேயான பூதகியிடம் நஞ்சை உண்ட திருமாலின் அன்புத் தங்கையே! சப்பாணிக் கொட்டுவாயாக. துருபதனின் செல்ல மகளே! சப்பாணிக் கொட்டுவாயாக.
நீர்மிதக்கும் அரவப் படுக்கை
குடைபிடிக்கும் அதனின் படங்கள்
உடல்வருடும் குளிர்ந்தக் காற்று
கதைபேச அன்பு மனைவி
சூரியனை மறைக்கும் மேகம்
சூழ்ந்திருக்கும் இயற்கை நேசம்
அலையடுக்கு அசைவைக் கூட்டி
தாலாட்டு இனிதாய் பாடும்
யாராக இருந்தா லும்இச்
சூழ்நிலையில் உறங்கத் தோன்றும்
இவ்வாறு இருந்த போதும்
தப்பாமல் உலகம் காக்கும்
சாரதியின் அன்புத் தங்கை!
சப்பாணி கொட்டி யருளே!
துருபதனின் செல்ல மகளே!
சப்பாணி கொட்டி யருளே! 32
தண்ணீரில் மிதக்கின்ற பாம்புப் படுக்கை, சூரிய ஒளி விழாமல் தடுக்கும் பாம்பின் படங்கள், உடலை வருடிச் செல்லும் குளிர்ந்த கடற்காற்று, கதைபேசிக் கொண்டிருக்க அன்பு மனைவி, சூரியனை மறைக்கும் மேகம், இயற்கையான சூழல், அசைவைக் கூட்டித் தாலாட்டு பாடும் அலையடுக்குகள் இவை அனைத்தும் ஓரிடத்தில் இருந்தால், எத்தன்மையுடையவராக இருந்தாலும் உறக்கம் கொள்ளச் செய்யும். அத்தகைய சூழல் அமைந்தும், காக்கும் தொழிலைத் தவறாமல் செய்யும் சாரதியின் அன்புத் தங்கையே! சப்பாணிக் கொட்டுவாயாக. துருபதனின் செல்ல மகளே! சப்பாணிக் கொட்டுவாயாக.
அறுசீர் விருத்தம் ( காய் மா மா )
ஒருபொருளை விளக்கு தற்கு
குறள்பத்து படைத்துத் தந்தார்
உருபத்து எடுத்து வந்து
பரம்பொருளே நான்தான் என்ற
திருமாலின் அன்புத் தங்கை
சப்பாணி கொட்டி யருளே!
துருபதனின் பாச மகளே!
சப்பாணி கொட்டி யருளே! 33
ஒரு பொருளை விளக்குவதற்கு பத்து குறளைப் படைத்துத் தந்தார் வள்ளுவர். அதுபோல பரம்பொருள் நான்தான் என்பதை பத்து அவதாரம் எடுத்து உறுதிபடுத்திய திருமாலின் அன்புத் தங்கையே! சப்பாணிக் கொட்டுவாயாக. துருபதனின் பாச மகளே! சப்பாணிக் கொட்டுவாயாக.
வரங்களைக் கொடுத்து விட்டு
இன்னலிலே மாட்டிக் கொள்ளும்
விரிசடை கடவுள் காக்க
மோகினியின் உருவம் ஏற்ற
இராமனின் அன்புத் தங்கை
சப்பாணி கொட்டி யருளே!
இரட்டணை உறையும் அன்னை
சப்பாணி கொட்டி யருளே! 34
யார் என்ன வரங்களைக் கேட்டாலும் அதனை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு துன்பத்தில் மாட்டிக் கொள்ளும் சிவனைக் காப்பதற்காக மோகினியின் உருவம் கொண்டதிருமாலின் அன்புத் தங்கையே! சப்பாணிக் கொட்டுவாயாக. இரட்டணையில் கோவில் கொண்டுள்ள அன்னையே! சப்பாணிக் கொட்டுவாயாக.
பன்னிருசீர் விருத்தம் ( காய் மா மா )
பாண்டவரின் நாட்டை எல்லாம்
சூழ்ச்சியினால் அபக ரிக்க
சகுனிமாமன் சொல்லைக் கேட்டு
விருந்துண்ண அழைப்பு தந்தான்
பாண்டவரின் பெரிய தந்தை
மைந்தனான துரியோ தனனின்
அன்பான அழைப்பை ஏற்று
அனைவருமே அங்கு சென்றார்
உண்டசுவை மாறு முன்னே
விளையாட்டாய் சூதுக் கழைத்து
நாட்டோடு தம்பி தாரம்
இழக்கவைத்த அனைவ ரையும்
கூண்டோடு மாய்த்த அன்னை
சப்பாணி கொட்டி யருளே!
பாஞ்சால இளவ ரசியே!
சப்பாணி கொட்டி யருளே! 35
பாண்டவர்களின் பெரிய தந்தையின் மகனான துரியோதனன், அவர்களின் நாட்டை அபகரித்துக் கொள்ள எண்ணி, தன்னுடைய தாய்மாமன் சகுனியின் பேச்சைக் கேட்டு, விருந்து உண்பதற்காக அழைத்தான். அவனின் அழைப்பை ஏற்று வந்து, தருமர் முதலான பாண்டவர்கள் விருந்துண்டு களித்தனர். விருந்தின் சுவை மாறுவதற்கு முன்பாகவே, தருமனைப் பகடை விளையாட்டு விளையாடச் செய்து பொன், பொருள், பணியாட்கள், நாடு, தம்பிகள், தாரம் என அனைத்தையும் இழக்கும்படியாகச் செய்தனர். அவ்வாறு இழக்கவைத்த அனைவரையும் போரில் வெற்றி கொண்ட அன்னையே! சப்பாணி கொட்டுக. பாஞ்சால இளவரசியே! சப்பாணிக் கொட்டுவாயாக.
குன்றொன்றை முதுகில் தாங்கி
பெருங்கடலைக் கடையச் செய்தோன்
குன்றொன்றைக் கையில் தாங்கி
ஆநிரைகள் காத்து நின்றோன்
குன்றொன்றில் நின்று அங்கு
வருவோர்க்குக் காட்சி தந்தோன்
பாண்டவரின் பக்கம் நின்று
பாரதப்போர் நடத்தி வைத்தோன்
இன்சங்கு சக்க ரத்தை
கரங்களிலே தாங்கி நின்றோன்
அனுமன்தன் தூத னாக்கி
சீதைமனம் குளிரச் செய்தோன்
அன்புதங்கை யாக சேனி
சப்பாணி கொட்டி யருளே!
துருபதனின் குலவி ளக்கே!
சப்பாணி கொட்டி யருளே! 36
மேருமலையை முதுகில் தாங்கி பெரிய பாற்கடலைக் கடையச் செய்தவன். கோவர்த்தன மலையைக் கையில் தாங்கிப் பிடித்து பசுக்கூட்டத்தைக் காத்தவன். வேங்கடமலையில் நின்ற கோலத்துடன் தன்னைக் காண வருபவருக்குக் காட்சி தந்து ஆசி வழங்குபவன். பாண்டவர்களின் பக்கம் இருந்து பாரதப்போர் நடத்தி வைத்தவன். இனிய ஓசைதரும் சங்கு, சக்கரத்தைக் கைகளில் தாங்கியவன். அனுமனனைத் தூதனாக அனுப்பி சீதையின் உள்ளத்தை மகிழச்செய்தவன். இவ்வாறெல்லாம் உள்ள திருமாலின் அன்புத் தங்கையே! சப்பாணிக் கொட்டுவாயாக. துருபதனின் குலத்தைக் காக்கும் ஒளியே! சப்பாணிக் கொட்டுவாயாக.
பன்னிருசீர் விருத்தம் (காய் காய் காய் காய் மா மா)
தன்னுடைய குருவம்சம் தழைப்பதற்கு
வாரிசுகள் இல்லை என்று
பீசுமரின் இளையஅன்னை சத்யவதி
தம்மனதுள் ஏக்கம் கொண்டு
தன்னுடைய மூத்தமகன் வியாசரோடு
மருமகள்கள் இணங்க வைத்து
அம்பிகைஅம் பாலிகைப ணிப்பெண்ணாம்
மூவருக்கும் மூன்று பிள்ளை
நினைத்தபடி பிறக்கசெய்து திருதராட்டி
ரன்பாண்டு விதுரன் என்று
பெயருமிட்டாள் மூத்தவனின் சொற்படியே
நல்லாட்சி நடத்தி வந்த
மன்னனவன் மருமகளாம் திரௌபதியே!
சப்பாணி கொட்டி யருளே!
பாஞ்சால இளவரசி பாஞ்சாலி!
சப்பாணி கொட்டி யருளே! 37
பீசுமரின் இளைய அன்னை சத்தியாவதி தன்னுடைய குருவம்சம் தழைக்க வேண்டும் என்ற தனது மனக் கவலையினால் தன்னுடைய மூத்த மகனான வியாசரை, அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் என்ற மூவரோடும் இணையவைத்து, ஒவ்வொருவருக்கும் ஒருமகன் என்று பிறந்திட வழிவகை செய்தாள். இவ்வாறு பிறந்தவர்களுக்குத் திருதராட்டிரன், பாண்டு, விதுரன் என்று பெயரும் இட்டாள். இம்மூவருள் வயதில் மூத்த திருதராட்டிரன் வழிகாட்டுதலின் பேரில் நல்லாட்சி நடத்திய மன்னன் பாண்டுவின் மருமகளே! சப்பாணிக் கொட்டுவாயாக. பாஞ்சால நாட்டு இளவரசி பாஞ்சாலியே! சப்பாணிக் கொட்டுவாயாக.
பன்னிருசீர் விருத்தம் ( காய் மா மா )
சிறப்பான முறையில் குந்தி
துர்வாச முனிவ ருக்கு
பணிவிடைகள் செய்த தாலே
வரமைந்தைத் தந்து சொன்னார்
சிறந்தஇந்த மந்தி ரத்தை
மனத்துள்ளே உச்ச ரித்து
யார்நினைத்து வேண்டி னாலும்
அத்தகையோர் குணத்தைப் பெற்று
பிறந்திடுவான் குழந்தை யென்றார்
சோதிக்க எண்ணி யகுந்தி
சூரியனை நினைத்துச் சொல்ல
கர்ணனவன் பிறந்து வந்தான்
அறியாது செய்த குந்தி
மருமகளே! சப்பா ணிகொட்டு
பாஞ்சால இளவ ரசியே!
பாஞ்சாலி சப்பா ணிகொட்டு. 38
துர்வாசர் என்னும் முனிவருக்குக் குந்திதேவி சிறப்பான முறையில் பணிவிடைகள் செய்ததால் உள்ளம் மகிழ்ந்த முனிவர், குந்திக்கு ஐந்து வரங்களைத் தந்து, இந்த சிறந்த மந்திரத்தை மனதில் உச்சரித்து யாரை நினைத்து வேண்டுகிறாயோ? அத்தகையோரின் குணங்களைப் பெற்ற குழந்தை உனக்கு பிறக்கும் என்று கூறினார். இந்த மந்திரத்தைச் சோதிக்க நினைத்த குந்திதேவி சூரியனை நினைத்து மந்திரத்தைச் சொல்ல சூரியனின் குணத்தோடு கர்ணன் பிறந்தான். தன்னுடைய அறியாமையினால் இவ்வாறு செய்த குந்தியின் மருமகளே! சப்பாணிக் கொட்டுவாயாக. பாஞ்சால இளவரசியே! சப்பாணிக் கொட்டுவாயாக.
சதசிருங்கம் மலையில் வாழ்ந்த
வில்லாளி சுகனி டத்தில்
பாண்டுமக்கள் ஐந்து பேரும்
கலைபலவும் கற்றுத் தேர்ந்தார்
யுதிட்டரவர் ஈட்டி எறியும்
பயிற்சியிலே திறமை கொண்டார்
தம்பியான வீமன் என்போன்
கதைப்போரில் தேர்ச்சி பெற்றான்
மதுசூத னனன்பன் பார்த்தன்
வில்லம்பில் தேர்ச்சி கொண்டான்
நகுலசகா தேவன் கத்தி
கேடயத்தில் தேர்ச்சி பெற்றார்
பதிவிரதை யான அம்மை
சப்பாணி கொட்டி யருளே!
பாஞ்சால இளவ ரசியே!
சப்பாணி கொட்டி யருளே! 39
சதசிருங்கம் என்னும் மலையில் வாழ்ந்த வில் வித்தையில் சிறந்த சுகன் என்ற முனிவரிடத்தில் பாண்டுவின் மக்கள் ஐந்துபேரும் கலைகள் பலவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெற்றனர். அவ்வகையில் தருமன் ஈட்டி எறியும் பயிற்சியிலும் வீமன் கதை சுழற்றும் பயிற்சியிலும் திருமாலின் அன்புத் தோழனான அர்ச்சுனன் வில் அம்பு பயிற்சியிலும் நகுலன் சகாதேவன் ஆகியோர் கத்தி, கேடய பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் பதிவிரதையான திரௌபதியே! சப்பாணிக் கொட்டுக. பாஞ்சால இளவரசி அம்மையே! சப்பாணிக் கொட்டுக.
குருதுரோணர் குருவாய் கொண்டு
ஏகலைவன் தானே கற்று
அர்ச்சுனனை மிஞ்சு கின்ற
வில்லாற்றல் பெற்றி ருந்தான்
குருதுரோணர் பார்த்த னுக்காய்
வலதுகையின் கட்டை விரலை
காணிக்கை பெற்று விட்டார்
தனக்காகச் செய்த செயலால்
அர்ச்சுனனும் உள்ளம் நெகிழ்ந்து
துரோணரின் ஆணை ஏற்று
துருபதனை எதிர்த்து வென்று
பாதிநாட்டைக் குருவிற் களித்தான்
அரசிழந்த துருபதன் மகளே!
சப்பாணி கொட்டி யருளே!
வென்றுதந்த பார்த்தன் மனைவி
சப்பாணி கொட்டி யருளே! 40
துரோணரைத் தனது குருவாகக் கொண்டு ஏகலைவன் என்னும் வேடன் அர்ச்சுனனை மிஞ்சும் அளவிற்கு வில் எய்யும் திறன் பெற்றிருந்தான். துரோணர் தன்னுடைய சிறந்த மாணவனான அர்ச்சுனனுக்காக ஏகலைவனின் வலது கைக் கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றுக் கொண்டார். குரு தனக்காக இத்தகைய அரியபெரிய செயலைச் செய்ததற்காக உள்ளம் உருகி, துரோணரின் ஏவுதலின்படி, பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை எதிர்த்துப் போரிட்டு நாட்டைக் கைப்பற்றி தனது குருவிற்கு காணிக்கையாகத் தந்தான் அர்சுனன். இவ்வாறு அரசாட்சியை இழந்த துருபதனின் மகளே சப்பாணிக் கொட்டுவாயாக. நாட்டை வென்று தந்த அர்சுனனின் மனைவியே சப்பாணிக் கொட்டுவாயாக.