Sunday, May 29, 2022

தாய்மொழி தினக் கவிதை

அன்னை தந்த ஒருமொழியாம் நாவில் உதித்த முதல்மொழியாம்
அன்னைக் கன்னை கற்பித்த அந்த மொழியே இம்மொழியாம்
அன்னை தொப்புள் கொடிவழியே வந்த மொழியும் இதுவேயாம்
பன்மொ ழிகற்ற அன்னையுமே தன்மொ ழிகற்றுத் தந்திடுவாள்

சின்னப் பிள்ளை காலூன்றி மெல்ல மெல்ல அடிவைத்து
பின்னர் விழுந்து மேலெழுந்து தானே நடக்கக் கற்பதுபோல்
சின்னச் சின்ன வார்த்தைகளை சிறுகச் சிறுகக் கற்றுணர்ந்து
பின்னை நாளில் வளர்ந்தவுடன் விரைவாய்ப் பேசி மகிழ்ந்திடுமே

அன்னை மொழியில் கல்விதனை கற்றால் கல்வி சிறப்பாகும்
தன்மொ ழியோடு பிறமொழியைக் கற்றால் திறமை வெளித்தோன்றும்
தனது மொழியில் பெருமைகொள் ஏனை மொழியைத் தாழ்த்தாதே
தனது மொழிபோல் பிறர்பேசும் எல்லா மொழியும் தாய்மொழியே

தமிழை வளர்க்க பாண்டியர்கள் சங்கம் வைத்து இருந்ததுபோல்
தமிழில் ஆர்வம் உள்ளவரை தமிழ்ப்ப ணிசெய்யும் நல்லவரை
தமிழ கமின்றி பலநாட்டில் இருந்து ஒன்றாய் இணைத்துவைத்து
தமிழை நாளும் வளர்க்கிறது நமது பொங்கு தமிழ்ச்சங்கம்