Friday, May 6, 2022

ஊர் வெண்பா - இரட்டணை

ஊர் வெண்பா

தொண்டூர் முதலாகத் தோன்றிய ஆற்றினை
தொண்டியாறு என்றனர் நீர்வரும் – இந்த
நதியின் குறுக்கே இரண்டணை கண்டார்
இரட்டணை என்றார் பெயர். 01

வேற்றுமையின் ஒற்றுமையாய் வாழ்ந்திடும் இந்தியர்போல்
வேறுபட்ட மக்கள் இனத்தவர் – சேர்ந்து
உறவினர் போல தமதுதொழில் செய்து
சிறப்புடன் வாழும்நல் ஊர் 02

கிழக்கிலும் மேற்கிலும் ஆறுகள் இங்கு
உழவுத் தொழிலே முதன்மை – கழனி
முழுதும் பயிர்வகை நல்ல பசுமை
செழிக்கும் வயல்கள் உள 03

தெருக்கள் முழுவதும் ஓரின மக்கள்
நிறைந்துடன் வாழ்ந்ததால் அந்த – தெருக்கள்
பெயரும் இனத்தின் பெயரில் அமைந்து
நயமாய் இருப்பது காண் 04

வெண்ணியங்கா ளம்மன் திரௌபதி மாரிகங்கை
கன்னிமார் பச்சைவாழி அம்மன் – அனுமன்
பெருமாள் முருகன் சிவன்ஐயனார் ஐங்கரன்
வள்ளலார் கோவில்கள் உண்டு 05

அறிவு புகட்டும் நிறுவனங்கள் கூடி
பெருமைசேர்க்கும் கல்வியைத் தந்திடும் – கற்றோர்
நிறைந்த கவின்மிகு ஊரில் தனியார்
அரசுபணி செய்வோர் மிகை. 06

உற்றார் உறவினர் கூடிவாழ்வர் கோவில்
திருவிழா என்றால் பகிர்ந்துசெய்வர் – உறவாய்
பலஆயி ரம்பேர் இருப்பினும் தத்தம்
தலைவர்கள் செல்கேட்பார் நன்று. 07

தினக்கூலி பல்வியா பாரம் நெசவாசான்
பண்டை குலசுய கைத்தொழில்கள் – முன்னோர்
மரத்தொழில் ஓட்டுநர் ஓதுவா ரோடு
அரசியல் மாந்தர் உளர் 08

கொய்யாமாந் தோப்புகளில் புள்ளினங் கள்வாழும்
தென்னை பனைவாழை தன்னில் - அணில்களோடி
ஆடும் சவுக்கு மரத்தோப்பில் சிட்டினங்கள்
கூடும்பல் தோப்புகள் உண்டு. 09

காந்திய கொள்கையைப் பாட்டிலே வைத்தவர்
காந்தி புராணத்தைப் பாடிய – ஏந்தல்
விடுதலை பெண்கல்வி கொள்கையாய் கொண்ட
அசலாம் பிகைபிறந்த ஊர் 10