Saturday, June 25, 2022

திரௌபதியம்மன் நவமணிமாலை

    
நேரிசை வெண்பா

குருதுரோணர் போரிட்டு துருபதனை வென்று
ஒருபாதி நாட்டைக்கைப் பற்ற - வருந்திய
பாஞ்சாலன் வாரிசு வேண்டி ஒருபெரிய
யாகம் நடத்து கிறான்                                                                                                        01

எண்சீர் விருத்தம்
நடந்துவரும் யாகத்தில் திருஷ்டத் துய்மன்
        எனும்பெயரில் ஒருவீரன் தோற்றம் கொண்டான்
அடுத்ததாக யாகத்தீ வெண்ணை முட்ட
        மறுபடியும் ஓர்உருவம் தோற்றம் காண
விடைதெரியா யாவருமே ஆவ லோடு
        காத்திருக்க கருநிறத்தில் பெண்ணொ ருத்தி
உடல்முழுதும் மணம்கமழ கண்டோர் நெஞ்சை
        ஈர்க்கின்ற அழகோடு வெளியே வந்தாள்                                                                    02

மண்டில ஆசிரியப்பா

ஆள்கின்ற அரசர்க்குச் செய்தி சொல்லி
ஆளான திரௌபதிக்கு மணமு டிக்க
துருபதனும் நாள்குறித்து போட்டி வைத்தான்
சுற்றிவரும் இலக்கினிலே அம்பை ஏய்தி
வெற்றிபெற்ற வீரனுக்கே மனமு டித்து
தன்மகளைக் கொடுப்பதாக உறுதி செய்தான்
மன்னவர்கள் பலர்வந்து முயன்ற போதும்
முடியாமல் தோற்றேதான் போனார் அங்கு
முடிவினிலே பாஞ்சாலன் நினைத்தாற் போல
அர்சுனனே இலக்குதனை அம்பால் வீழ்த்தி
திரௌபதியை மணம்செய்து அழைத்துச் சென்றான்.                                            03

சிந்தடி வஞ்சிப்பா


சென்றவளின் கனவுகள் பலவாறிருக்க
கன்னியினை வெற்றிகொண்டு அழைத்துவந்தோம்
வந்துகாண வேண்டுமென்று வணங்கிநின்றார்
குந்தியவள் பெண்மகளைக் கானாது
ஐவருமேசம மாகப்பிரித்துக் கொள்என்றாள்

என்னசெய்ய

அன்னையவள் வார்த்தையை
த் தலைகொண்டு
ஐவருமே மனையாளாய் எற்றுக் கொண்டார்.                                                            04

குறளடி வஞ்சிப்பா

கொண்டாரெலாம் முற்பிறவியில்
எமன்வாயுஇந் திரன்அசுவினி
குமாரர்கள் ஆவார்கள்
திரௌபதியும் முற்பிறவியில்
இவ்வைவர்களின் மனைவியாவாள்

மேலும்

எனக்கு ஏற்றக் கணவரைத் தருகவென
ஐந்துமுறை சிவனிடம் வேண்ட
இப்பிறப்பில் ஆனார் கணவர் ஐவர்                                                                               05

குறட்டாழிசை

ஐவருக்கு மனைவியான பாஞ்சாலி கற்புநெறி மாறாத
ஐவர்களுள் ஒருத்தியாக மதிக்கப் பெற்றாள்                                                              06

கலிவிருத்தம்

பெண்மகளும் கொண்டாரை அல்லாமல் மாற்றாரை
எண்ணத்தில் ஒருபோதும் நினைத்தாளில் லைசூதில்
பெண்வைத்து இழந்தாரை விட்டுவிட்டு துரியோதனன்
பெண்மகளை துகிலுரிந்து அவமானப் படுத்தினானே.                                        07

ஆசிரியத்தாழிசை

படுதுயரம் அடைந்தவளாய் சபதம் ஏற்று
கொடியோரின் குருதியிலே தலைமு டித்து
விடைகொடுத்து வானுலகம் அனுப்பி வைத்தாள்                                                     08

கலித்தாழிசை

வையத்து மக்களெல்லாம் போற்றி வணங்கும்
கயல்விழியாள் பாஞ்சாலி நெஞ்சில் வைத்து
செய்துவரும் காரி யங்கள் வெற்றி யாகும்.                                                                 09