Thursday, August 11, 2022

வாழ்நெறி பதிற்றந்தாதி

ஓரறி வுமுதலா மண்ணில் பிறந்து மனிதரானோம்
பாரினில் தோன்றிய ஏனை உயிரின் வேறானோம்
சீரிய அறிவுடன் சிந்தித் தறிதல் பெற்றுள்ளோம்
தாரினில் நெருங்கிய வாழைப் பழம்போல் சேர்ந்திருப்போம்              01

சேர்ந்தா ரோடு உண்மை யாக பழகிடுவோம்
நேர்த்தி யாக உண்மை பேசி உயர்ந்திடுவோம்
கூர்சிந் தனையை நல்ல செயற்கு செலவழிப்போம்
ஏரை உழுது பயிர்கள் செய்து வளம்பெறுவோம்                                         02

வளம்தரும் கல்வி சிறப்புடன் கற்று பயன்பெறுவோம்
குளங்களைத் தோண்டி வரும்புனல் காத்து பருகிடுவோம்
களையென தீய ஒழுக்கமும் நீக்கி சிறந்திடுவோம்
இளமையில் நல்ல உடல்வளம் பெற்று மகிழ்ந்திடுவோம்                     03

மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை வாழ முயன்றிடுவோம்
நிகழ்ந்த வற்றை மறக்க நாளும் பழகிடுவோம்
முகத்திற் கெதிரே புகழ்வார் விட்டு ஒதுங்கிடுவோம்
அகத்தை பார்த்து பழகும் நண்பர் ஏற்றிடுவோம்                                      04

ஏற்றிவிட்ட ஏணிப் படியை மறவா திருப்போம்
போற்றுகின்ற உறவை விட்டு விலகா திருப்போம்
தூற்றுகின்ற மனித ரோடு சோரா திருப்போம்
நாற்றுபோல சேர்ந்தா ரிடத்தும் மகிழ்ந்து இருப்போம்                          05

இருப்பது போதும் என்ற மனதில் வாழ்ந்துவிடு
தருகிற எண்ணம் நாளும் வளர்க்கப் பழகிவிடு
உரிமைகள் இருந்தும் கிடைக்கா விட்டால் விட்டுவிடு
சரியென நினைத்தால் பயந்து விடாமல் செய்துவிடு                              06

செய்யும் தொழிலே தெய்வம் என்று மதித்துச்செய்
பொய்யும் ஏய்ப்பும் நீக்கி வாழ பழகிக்கொள்
மயக்கம் கொடுக்கும் வார்த்தை தெரிந்து ஒதுங்கிக்கொள்
நியாயச் செயலை கொள்கை யாக கடைபிடித்துவாழ்                          07

வாழ்தல் வேண்டி கொள்கை இலாமல் வாழாதே
ஏழ்மை உன்னை சூழ்ந்த போதும் நேர்மைகொள்
வீழ்த்த போது குழந்தை போல அழதுவிடாதே
வாழ்ந்த மனிதர் பாதை அறிந்து வழிநடத்து                                                08

வள்ளுவர் குறள்வழி வாழ்வை நடத்தி சிறந்திடுவோம்
வள்ளலார் நெறியினை பொன்னாய் மதித்து செயல்படுவோம்
பிள்ளைகள் மனதினை நன்றாய் புரித்து வளர்த்திடுவோம்
பிள்ளைகள் கல்வியை அச்ச மின்றி கற்கசெய்வோம்                             09

கல்வி ஒழுக்கம் நம்மிரு கண்கள் காத்திடணும்
சொல்லும் சொற்கள் நல்லவை யாக இருந்திடணும்
வல்லவ ரோடு நட்பென பழகி கற்றிடணும்
நல்லோர் செயலை நலமுடன் செய்து புகழ்பெறணும்                             10