Thursday, September 15, 2022

வேண்டும் வரம் இசைப்பாய்

குறள்வெண் செந்துறை ( காய் காய் காய் மா)

முண்டாசுக் கட்டிய முறுக்குமீசைக் காரன்
மரபுபுதுக் கவிதைதந்த தமிழ்த்தாயின் பேரன்
கனல்பறக்கும் கவிதைகளால் வீறுகொள்ள வைத்தாய்
காவியங்கள் பலபடைத்து தமிழ்வளர்த்து நின்றாய்
கண்ணனவன் பேர்ச்சொல்லி கவிபாடித் தந்தாய்
பறவைக்கும் காதலுண்டு குயில்பாட்டில் சொன்னாய்
விலையில்லாக் கவிதைகளை விதைநெல்லாய்த் தூவி
விளைநிலமாம் கவிநெஞ்சில் அறுவடையும் கண்டாய்
கலைகளிலே ஒருகலையாம் கவிதையோடு பாட்டு
படைக்கின்ற பரம்பரையும் உருவான துன்னால்
தலைப்பாகை பெரியமீசை வரைந்துவைத்தால் போதும்
கவிஞர்கள் தலைமகனாம் உன்னுருவம் காட்டும்.
காணிநிலம் வேண்டுமென்றாய் காணநிலம் இல்லை
வெள்ளையரை விரட்டிவைத்தாய் கொள்ளையரால் தொல்லை
நானறிந்த மொழிகளிலே தமிழ்ச்சிறப்பு என்றாய்
நாணமின்றி பேசுகின்றார் வேற்றுமொழி நன்றாய்.
நேர்கொண்ட பார்வையோடு பாராள வேண்டும்
அச்சமின்றி பூமிதனில் உலவிவர வேண்டும்.
பார்போற்றும் பெண்களுக்கு புதுவலிமை தந்தாய்
வீடுவிட்டு வீதிவந்தால் பாதுகாப்பு இல்லை.
தர்மத்தின் வாழ்வுதனை சூதுசூழ்ந்த போதும்
தர்மம்தான் மறுபடியும் வெல்லுமெனச் சொன்னாய்
தர்மத்தை வீழ்த்திவிட்டு வன்கொடுமை செய்யும்
தரமற்ற சிலமனிதர் வாழ்கின்றார் நாட்டில்
பாட்டுக்கு அதிபதியாம் பாரதிஎன் நண்பா
நான்வேண்டும் வரம்இசைப்பாய் பூமிதனில் தெம்பா.
பாட்டினிலே பகைவிரட்டும் கவிபுலமை வேண்டும்
ஏடெடுத்து குறைகளைய புதுஉணர்வு வேண்டும்.