Wednesday, September 14, 2022

புதிதினும் புதிது கேள்



எண்சீர் விருத்தம்

சின்னசாமி இலக்குமியின் தவப்பு தல்வன்
சுப்பிரம ணியனென்னும் பெயர்ப டைத்தோன்
தென்னாடு சிறப்புறவே கடவுள் தந்த
விளையில்லா மாணிக்கம் கவிபி ரம்மா
தன்னுடைய பதினோராம் வயதில் பள்ளி
படிப்போடு கவிஎழுதும் திறனும் பெற்று
துன்பங்கள் பலகண்டும் துவண்டி டாமல்
தன்பணியைச் சிறப்பாக ஏற்றுச் செய்தான்

முண்டாசுக் கட்டிய முருக்குமீசைக் காரன்
மரபுபுதுக் கவிதைதந்த தமிழ்த்தாயின் பேரன்
எண்ணங்கள் கவிதைகளால் வீறுகொள்ள வைத்தான்
காவியங்கள் பலபடைத்து தமிழ்வளர்த்து நின்றான்
கண்ணனவன் பேர்ச்சொல்லி கவிபாடித் தந்தான்
பறவைக்கும் காதலுண்டு குயில்பாட்டில் சொன்னான்
துணையாகச் செல்லம்மா கரம்பிடித்து ஏற்றான்
கவிதையிலே கண்ணம்மா பெயர்சொன்ன தேனோ?

பலநூறு ஆண்டுகளாய்க் கவிபாடி வந்த
மரபுமாற்றி கவிதைகளில் புதுமையினைச் செய்தான்
விலையில்லாக் கவிதைகளை விதைநெல்லாய்த் தூவி
விளைநிலமாம் கவிநெஞ்சில் அறுவடையும் கண்டான்
கலைகளிலே ஒருகலையாம் கவிதையோடு பாட்டு
படைக்கின்ற பரம்பரையும் உருவான துன்னால்
தலைப்பாகை பெரியமீசை வரைந்துவைத்தால் போதும்
கவிஞர்கள் தலைமகனாம் உன்னுருவம் காட்டும்.

அறநெறிகள் பரப்புகிற ஆத்திசூடி மாற்றி
உணர்வுகளைத் தூண்டுகிற ஆத்திசூடி தந்தான்
அறிந்திடாத வண்ணமாக உண்மைபெயர் மாற்றி
புனைபெயரைப் பயன்படுத்தும் புதுமரபைக் கொண்டான்
உறவுகளில் கடவுளரை வழிபடலாம் என்று
காதலனாய் காதலியாய் தோழனாக கண்டான்
திறம்மிகுந்த சொல்லாடல் தமிழ்மொழிக்குத் தந்து
கவிதைகலைக் களஞ்சியமாய் நிலைநிருத்தி வென்றான்

இதழ்களிலே முதல்முதலாய் மாதம் ஆண்டு
பக்கஎண்கள் தமிழ்மொழியில் அமையச் செய்தல்
எத்திசையும் உள்ளவற்றை மொழிபெ யர்த்தல்
கேலிக்கை சித்திரங்கள் பலப டைத்தல்
இதழுக்குச் செய்திதரும் நுகர்வோ ருக்கு
ஊக்குவிக்க பணம்தந்து ஆர்வ மூட்டல்
பத்திரிக்கை உலகினிலே புதுமை செய்து
வாசகர்கள் தேவையினைப் பூர்த்தி செய்தான்

வெள்ளையரின் உள்ளங்கை அடிமை மக்கள்
சுகமென்று எழுச்சியின்றி கிடந்த போது
ஒளிகொடுக்கும் சூரியனாய் மண்ணில் தோன்றி
அடிமையிருள் விரட்டுகின்ற கவிதை தந்தான்.
வெள்ளருவி புவிவந்து பயிர்வ ளர்க்கும்
மண்ணுலகில் அவன்வந்து கவிவ ளர்த்தான்
துள்ளிவரும் கவிதையிலே பொருண்மை மாற்றி
சொல்புதிதாய் பொருள்புதிதாய் படைக்கச் செய்தான்

பெண்ணியநல் சிந்தனையில் கவனம் கொண்டு
போற்றுகிற உணா்வெழுப்பி சக்தி ஊட்டி
பெண்ணடிமைப் போக்கிடவே விழிகொள் என்று
பேடிகளின் மத்தியிலே தெளிவாய்ச் சொன்னான்
எண்ணம்சொல் செயலெல்லாம் தமிழே யென்று
மொழிகாத்து யாவரையும் ஏற்கச் செய்தான்
எண்ணத்தை வெளிக்காட்டும் கடிதம் கூட
மொழிவளர்த்து விடுதலையை ஊட்டி நிற்கும்

பாரதியார் என்றதுமே நினைவில் தொன்றும்
விடுதலைவி டுதலைஎனும் முழக்கம் தானே
தேரோடு வருகின்ற தெய்வம் போல
மண்ணோடு பெண்ணினமும் சுதந்தி ரத்தை
பெற்றிடவே செய்வதுநம் கடமை என்றும்
கோழைகளாய் ஏழைகளாய் இருக்கும் மக்கள்
பாரினிலே உயர்ந்திடவே வேண்டும் என்றும்
மீசையினை முருக்கியவன் கனலாய்ச் சொன்னான்.

ஒன்றல்ல இரண்டல்ல புதுமை சொல்ல
ஓராயி ரம்உண்டு படைப்பி னுள்ளே
அனைத்தையுமே சொல்வதென்றால் ஒருநாள் போதா
ஒருசொட்டுத் தேன்துளியாய் அவையில் வைத்தேன்
மனத்தினிலே தோன்றியதை படைப்பில் வைத்தான்
மாற்றங்கள் காண்பதற்கு விழித்தி ருந்தான்
கனவுகளாய் அவன்சொன்ன புதுமை எல்லாம்
நனவாக்கி செயல்படுத்தி வெற்றி காண்போம்.

நாள் : 18.09.2022
இடம்: பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேனி, சென்னை – 05
தலைமை: பாவலர் சுந்தர பழனியப்பன்
தலைப்பு: பாரதி ஒரு சீறிய சிந்தனையாளன் (புதிதினும் புதிது கேள்)