Wednesday, September 28, 2022

திரெளபதியம்மன் திரு அட்டமங்கலம்

சீர்மேவும் பூமி தன்னில்
          நெருப்பினிலே தோற்றம் கொண்டாய்;
கார்மேவும் வண்ணம் கொண்டு
          கார்மேகன் தங்கை யானாய்;
நீர்மேவும் பூவின் வாசம்
          கொண்டதொரு மேனி பெற்றாய்;
தேர்மேவி வீதி வந்து
          வணங்கிடுவோர் காப்பாய் நீயே! 

அழகு மிகுந்த இப்பூமியிலே நெருப்பில் இருந்து தோன்றி வந்தாய். கருமேகம் போன்ற நிறத்தைப் பெற்றாய். கார்மேக வண்ணனான திருமாலின் தங்கையானாய். நீர்நிலைகளில் அமைந்திருக்கும் தாமரையின் மணத்தினை மேனியிலே இயல்பாய்ப் பொற்றாய். தேரில் அமர்ந்து வீதி உலா வந்து உன்னை வணங்குவோரைக் காப்பாய் நீ.

போட்டியிலே வெற்றி பெற்றால்
          பெண்மகளை மணமு டிப்பேன்
போட்டியினை ஏற்ப டுத்தி
          துருபதன்உன் தந்தை சொன்னார்;
போட்டியிலே வெற்றி பெற்ற
          வில்லாளன் அர்ச்சு னன்போல்
போட்டிதேர்வில் வாகை சூட
          திரௌபதியே காத்த ருள்வாய். 02


வில்லெடுத்து அம்பெய்தி இலக்குதனைத் தாக்கி வீழ்த்தும் போட்டியிலே வெற்றி பெற்ற வீரனுக்கே என்மகள் திரௌபதியைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று உன் தந்தையான துருபதன் போட்டியினை அறிவித்தான். அப்போட்டியிலே வில்லாற்றலில் சிறந்தவனான அர்ச்சுனனே வெற்றி பெற்றான். அதுபோல, போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வாகை சூட, திரௌபதியே அருள்புரிந்து காப்பாயம்மா.

ஒருவ ரோடு ஓராண்டு
          வாழ்ந்து முடித்த பின்னாளின்
நெருப்பை மூட்டி அதில்மூழ்கி
          புதிதாய் தோற்றம் கொள்பவளே!
நெருங்கி உள்ளம் நோகடிக்கும்
          கவலை நோயைப் போக்கிடம்மா!
நெருப்பை மிதித்து வேண்டுகிறேன்
          நிம்மதியைத் தாரு மம்மா. 03


தருமன் முதலாக ஐந்து வீரர்களைத் திருமணம் செய்து, ஒருவரோடு ஓராண்டு என்ற கணக்கை வகுத்துக் கொண்டு, ஓராண்டு முடிந்தவுடன் நெருப்பை மூட்டி அதில் மூழ்கி கற்புடைய கன்னித்தன்மை மாறாத புதியவளாய் தோற்றம் கொள்வாய். தீ மிதித்து உன்னை வேண்டுகிறேன். என்னை நெருங்கி வந்து, என் உள்ளத்தை நோகடிக்கும் கவலை என்னும் நோயைப் போக்கி, நிம்மதியைத் தரவேண்டுமம்மா.

ஐவருக்கு மனைவி யாகி
          ஐந்துபிள்ளை பெற்றெ டுத்தாய்;
அவனியிலே உள்ள மக்கள்
          யாவரும்உன் பிள்ளை யன்றோ?
புவிமீது வாழு கின்ற
          மனிதரெல்லாம் மிருகம் போல
தவறான ஒழுக்கம் பெற்றார்
          நற்குணங்கள் தாரு மம்மா. 04


தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற ஐவரைத் திருமணம் செய்துகொண்டு முறையே, பிரிதி விந்தியன், சுதசோமன், சுருதகீர்த்தி, சதாநீகன், சுருதசேனன் என்ற ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தாய். இவர்களைப் போல இந்தப் பூமியில் வாழும் மக்கள் யாவருமே உன் பிள்ளைகள் தானே. இவர்கள் விலங்குகளைப் போல முறையற்ற வாழ்க்கையையும் தவறான ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழ்கின்றனர். இவர்களுக்கு நல்ல குணநலன்களைத் தந்துக் காப்பாயம்மா.

உன்னைவிட துன்பம் கொண்ட
          பெண்ணொருத்தி மண்ணில் இல்லை
துன்பம்எத் தன்மைத் தென்று
          துன்புற்று அறிந்தாய் நீயே!
மனநோயை ஏற்ப டுத்தி
          உடல்நோயை உண்டு பண்ணும்
என்னுடைய துன்பம் நீக்கி
          காத்தருள வேண்டு மம்மா. 05


செல்வத்திற்கு அதிபதியாகப் பிறந்து, வீரம் மிகுந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு, தலைமறைவான வாழ்க்கையை வாழ்ந்து, காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, சோற்றுக்கே வழியில்லாமல் பிச்சையேற்று உண்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்தவள் நீ. இத்தகைய துன்பங்களை மண்ணுலகில் வேறு எந்தப் பெண்ணும் அனுபவித்திருக்க மாட்டாள். துன்பம் எப்படிப்பட்டது என்று நன்றாக அறிந்தவள் நீ. ஆகவே, மனநோயை உண்டாக்கி உடல் நோய்க்கு வழிவகை செய்கின்ற என்னுடைய துன்பங்களை நீக்கிக் காத்து அருள்புரிய வேண்டுமம்மா.

உலகில் சிறந்த கற்புடைய
          ஐந்து பெண்ணுள் நீயொருத்தி
இலகும் மனசு கொண்டவளாய்
          அசுவத் தாமன் மண்ணித்தாய்
இலகும் மனசு கொண்டவளாய்
          நாங்கள் செய்யும் பிழைபொறுத்து
இலக்கு அடைய அறிவுதந்து
          வெற்றி வாகைச் சூட்டிடம்மா. 06


உலகில் சிறந்த கற்புடையவர்களாகக் கருதப்படும் சீதை, மண்டோதரி, அகலிகை, திரௌபதி, தாரை ஆகிய ஐவருள் நீயும் ஒருத்தியாவாய். அசுவத்தாமன் உன்னுடைய ஐந்து மகன்களைக் கொன்றது அறிந்தும் இலகிய மனம் கொண்டு அவனை மண்ணித்தவள். அத்தகைய இரக்க குணம் கொண்டு நாங்கள் செய்யும் பிழைகளையும் பொறுத்து, நாங்கள் எண்ணிய இலக்கினை அடைய எங்களுக்குப் போதுமான அறிவைத் தந்து, வெற்றி வாகை சூட்டிட வேண்டுமம்மா.

மின்னல் கொண்ட கருமேகம்
          இடியைத் தந்து பொழிவதுபோல்
இன்னல் பலவும் உறவுகளாய்
          ஒன்று சேர்ந்து தாக்கிடுதே
துன்பம் கொண்ட மனிதவாழ்வு
          துவண்டு வதங்கி போகாமல்
இன்பம் தந்து காத்திடவே
          உந்தன் அருளைத் தாருமம்மா. 07


மழைபொழிவிற்குத் தயாராக இருக்கும் கருமேகம், இடி மின்னலுடன் மழைபொழியும். அதுபோல உறவுகளால் வரும் துன்பங்கள் பல என்னைத் தாக்குகின்றன. துன்பங்கள் நிறைந்த மனித வாழ்வு, அத்துன்பத்தால் துவண்டு சோர்ந்து விடாமல், உன் அருளைத் தந்து காத்து, இன்பத்துடன் வாழ வழிசெய்ய வேண்டுமம்மா.

கலைகள் கற்ற உன்துணைகள்
          பேறு பெற்று சிறந்ததுபோல்
விலையில் லாத கல்விதனைக்
          கற்று வாழ்வில் சிறந்திடவே
பலவாய்த் தாக்கும் புறச்சூழல்
          என்னை வந்துத் தாக்காமல்
நிலவாய் இருக்கும் திரௌபதியே
          நித்தம் நித்தம் காத்திடம்மா. 08


உலகிற்கு ஒளிகொடுக்கும் ஒற்றை நிலவாய், மக்களுக்கு அருள்வழங்கும் திரௌபதியே, பலவகையான கலைகளைக் கற்ற உன் கணவர்கள், அக்கலைகள் மூலம் புகழ்பெற்று விளங்குவதுபோல, விலைகொடுத்து வாங்க முடியாத கல்வியினைக் கற்று அதன்மூலம் நான் புகழடைய வேண்டும். ஆகவே, கல்வியினைக் கற்க விடாமல் தடுக்கும் புறச் சூழல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் என்னைக் காத்திட வேண்டுமம்மா.

முற்றும்