Monday, October 31, 2022

மீண்டும் பிறந்து வா! பாரதியே!

வெள்ளையர் பரங்கிக் கூட்டம் விரட்டிடும் கவிதை தந்தாய்
துள்ளிடும் பள்ளு பாடி வெற்றியைக் கணித்துச் சொன்றாய்

பூனையின் வண்ணம் சுட்டி ஒற்றுமை ஓங்கி சொன்னாய்
வீணையை உவமை காட்டி வேண்டுமோர் ஆற்றல் என்றாய்

பெண்ணினம்  நாட்டை ஆண்டால் பெருமைகள் வந்து சேரும்
மண்ணினைக் காத்து நல்ல பயிர்வகை செய்ய வேண்டும்

பாதியில் வந்த சாதி பாதையை மாற்ற வேண்டும்
சாதியை மைய மாக்கும் சலுகைகள் நீக்க வேண்டும்

இலவசம் என்ற பேரில் அரசியல் செய்யும் கூட்டம்
இலவசம் நீக்கி நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்

கல்வியைத் தந்து ஞானம் வளர்த்திடும் ஆசான் கைக்கு
வலிமைகள் சேர்த்துப் பிள்ளை ஒழுக்கமும் வளர்க்க வேண்டும்

இளைஞரைப் புதைக்குள் தள்ளும் மதுவினை ஒழிக்க வேண்டும்
முளைத்திடும் மரங்கள் காத்து காடுகள் சமைக்க வேண்டும்

பெண்ணினை மின்சா ரம்போல் தொட்டதும் மாய்க்கும் நல்ல
தண்டனைச் சட்ட செய்து காத்திடல் வேண்டு மிங்கு

பெற்றவர் பேச்சைக் கேட்டு பிள்ளைகள் நடக்க வேண்டும்
மற்றவர் சொல்லை நீக்கி நல்வழி செல்ல வேண்டும்

பலவித மாற்ற மிங்கு செய்திட வேண்டும் நண்பா!
நிலையினைப் புரிந்து கொண்டு பாரதி விரைந்து வா!வா!