Sunday, November 6, 2022

முத்தமிழ் பல்சந்தமாலை

அன்னைத் தந்த ஒருமொழி
          அன்பு வளர்க்கும் தனிமொழி
பின்னை நாளில் பலமொழி
          தோன்ற வைத்த பெருமொழி
முன்னை மனிதன் நாவினில்
          முதலாய்ப் புகுந்த தீம்மொழி
என்றும் நிலையாய் இருந்திடும்
          எங்கள் மொழியே தமிழ்மொழி          01
 
அன்னையால் கற்பிக்கப்பட்ட மொழி. அன்பினை வளர்க்கும் தனித்துவமன மொழி. பலமொழிகள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த பெருமை வாய்ந்த மொழி. முதன் முதலாய்த் தோன்றிய மனிதன் நாவில் புகுந்த இனியமொழி. என்றும் நிலைத்திருக்கும் எங்கள் மொழி தமிழ்மொழி.
 
தமிழ்நில மான நிலப்பரப்பில்
          லெமூரியா என்னும் கண்டத்தில்
அமிழ்தென உதித்த முதல்மாந்தர்
          புலம்பெயர்ந் துலகின் பலதிசைக்கு
அம்பணம் போல பரவியெங்கும்
          அமைவிடம் தேடி அலைந்திட்டு
தமக்கென இடத்தைத் தெரிவுசெய்து
          தமிழுடன் வாழத் தொடங்கினரே          02
 
தமிழர் நிலமான லெமூரியா கண்ட நிலப்பரப்பில் அமிழ்தமாய் உதித்த முதல் மனித இனம் பல்வேறு திசையில் உள்ள நிலப்பரப்பிற்கு குடி பெயர்ந்தி தண்ணிர்போல பரவி அலைந்து திரிந்து பின்னர்த் தனக்கென ஒரு அமைவிடத்தைத் தேர்ந்தெடுத்து தமிழ் மொழியோடு வாழத் தொடங்கினா்.

வாய்மொழி யாக தாம்செய் 
          தொழிலில் சோம்பல் ஓட்ட
தாய்மொழி யாலே பாடல் 
          பாடிட செவிவாய் உண்டு
சேய்முதல் இறுதி காலம் 
          வரையிலும் இசையால் வாழ்ந்து
காயிதம் இன்றி நல்ல இலக்கியம் 
          படைத்தார் முன்னோர்           03 
 
நம் முன்னோர்கள் தாய்மொழியிலே தாம் செய்யும் தொழிலின் சோம்பலை விரட்டிடவும் குழந்தை பிறந்தது முதலாக இறப்புவரை உள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏடெடுத்து எழுதி வைக்காமால் வாய்மொழியாகப் பாடல்கள் பாடி செவி என்னும் வாயால் பருகி ஏட்டில் எழுதாக் கவிதையாய் நல் இலக்கியம் படைத்தனர்.

முன்னோர் ஓலைச் சுவடியிலே 
          எழுதி வைத்த இலக்கியங்கள்
பின்னால் சாமி நாதஐயர் 
          தேடி நூலாய் தந்திட்டார்
அன்னார் செய்த செயலாலே 
          நமது மொழியும் துளிர்த்தெழுந்து
மன்னாப் புகழை பெற்றதுடன் 
          தரணி எங்கும் பரவியதே           04 
 
வாய்மொழி இலக்கியங்களுக்கு பின்னர் நம்முடைய முன்னோர்கள் ஓலைச் சுவடியில் இலக்கியங்களை எழுதி வைத்தனா். பின்னாலில் வந்த உ. வே. சாமிநாத ஐயா் அவர்கள் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் அனைத்தையும் தேடித் தேடி நூலாக்கம் செய்தார். அவர் செய்த செயலால் நம்முடைய தமிழ்மொழி துளிர்விட்டு தழைத்து அழியாதப் புகழைப் பெற்று உலகமெங்கும் பரவியது.

பரவிபுகழ் தேடி தந்த 
          தொகைபாட்டு நீதி நூல்கள்
அரசபுகழ் பாட்டில் சொல்லும் 
          காப்பியங்கள் பக்தி நூல்கள்
பெருமைமிக தலைவன் தன்னைப் 
          பாடும்சிற் றிலக்கி யங்கள்
கருப்பொருளாய் ஒன்றை வைத்த
          குறுங்காவியம் பலவும் உண்டு           05
 
தமிழ் உலகமெங்கும் பரவி
 
உலகிலுள்ள படைப்புவகை இங்கு
          இருப்பவரால் உருவாக்கம் பெற்று
பலகால மரபுகளை உடைத்து
          புதுவடிவாய்ப் புதுக்கருவை ஏற்று
சொல்புதிதாய்ப் பொருள்புதிதாய்த் தந்து
          சமுதாயச் சிக்கல்கள் பகரும்
பல்வேறு வட்டார வழக்கு
          படைப்புகளில் மிளிர்வதையும் காணீர்          06

கானாற்று நீரோடை சங்கீதம்
          பாடி கரைபுரண்டு ஓடும்
தேனெடுக்கும் சுறும்பினங்கள் 
          ரீங்கார மிட்டு பூவகைகள் தேடும்
வானத்துக் கருமேகம் இடிமுழக்கம் 
          கொட்டி பெருமழையைத் தூவும்
தான்கூடு கட்டாது இனவிருத்தி 
          செய்யும் குயிலினங்கள் பாடும்         07
 
பாட்டிசைத்து பாடுதற்கு இயற்கைதரும் 
          சந்தங்கள் காதில் வாங்கி
நாட்டுமக்கள் மெட்டுகட்டி அனுபவத்தை 
          உடன்சேர்த்து பாடி வந்தார்
ஏடெடுத்து எழுதிவைத்தோர் ஏழுவகை
          இசையோடிந் தளம்காந் தாரம்
பாடைதாணு குறிஞ்சிஎனப் பண்ணமைத்து
          பாடுமுறை சொல்லி வைத்தார்         08
 
வையத்து மக்கள் கண்டு
          களிக்க ஒன்பான் சுவையை
நயமாய் உடலில் வழியே 
         காட்டும் கூத்தின் கதையை
பொய்யாய் மெய்யாய் கட்டி
         தெருவில் அவையில் ஆட
வியப்பில் உண்மை மாந்தர்
         வந்தார் என்றே நினைப்போம்        09
 
நிகழும் நாடகம் ஒன்று
          நேரில் காண்பது போல
தகவல் தொடர்பினால் நமது
          வீட்டில் காண்பது வளர்ச்சி
தகுந்த சூழலை உணர்த்த
          இசையின் அதிா்வுகள் மாற்றி
மக்கள் சிந்தையைக் கவரும்
          சிறந்த உத்தியும் உண்டு          10