Tuesday, November 15, 2022

பாவினச் செய்யுட்கோவை - சிறப்புடை குறட்டாழிசை

குறட்டாழிசை

இரண்டடியாய் ஈற்றடி குறைந்து வருவது குறட்டாழிசையாகும். சீர் வரையறை இன்றி எனைத்துச் சீரானும் வரும்.

வண்ண வண்ண ஆடை கட்டி 
          வாசல் வந்து போகும் பெண்ணே!
வண்ண ஆடை காண்ப தில்லை 
          அங்கம் தேடிப் பார்க்கும். (பா. 8)

இது நேரொன்றிய ஆசிரியத்தளையால் வந்த குறட்டாழிசை

கருவிலே உருவரும் கடமைகள் உடன்வரும் 
          அவரவர் விதிப்பயன் அதனுடன் கலந்திடும்
பெருமைகள் வருவது பிறப்பினால் இலையடா
          செயல்களே புகழினைப் பறையிடும். (பா. 9)

இது நிரையொன்றிய ஆசிரியத்தளையால் வந்த குறட்டாழிசை

பெண்ணியம் என்பது பெண்மையைப் போற்றுதல்
பெண்மையைப் போற்றிநீ வாழ்ந்திடு. பா. 10


இது இயற்சீர் வெண்டளையால் வந்த குறட்டாழிசை

வண்ணபூக்கள் ஒன்றுசேர்ந்து ஆக்கிவைத்த மாலைபோல
          சின்னநூல்கள் ஒன்றுசோந்து நெய்தெடுத்த ஆடைபோல
மண்ணுலகில் வந்துதித்தோம் மானிடர்கள் ஆகிவிட்டோம்
          சாதிமத பேதமின்றி வாழ்ந்திடுவோம். (பா. 11)


இது வெண்சீர் வெண்டளையால் வந்த குறட்டாழிசை.

சுயநலத்தின் உருவாகி பொறாமைஅதன் உடன்சேர்த்து
          தனிமையாகப் பயனின்றி உயிர்வாழும் மனிதகூட்டம்
பயன்பாட்டுக் கருவிகளை மனிதனுக்குக் கொடுத்துதவி
          பலவிதமாய் அழியுதடா பசுமைகூட்டம்.
(பா. 12)

இது கலித்தளையால் வந்த குறட்டாழிசை

ஒருக்காலிலே அசைந்தாடிடும் கவர்ச்சிதரும்
          பலநிறங்களில் பிறப்பெடுத்திடும்
திருவிழாக்களோ திருமணங்களோ
          பலமேடையை அலங்கரித்திடும்
(பா. 13)

இது ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறட்டாழிசை

கற்பென்பது ஆண்பெண்என எல்லோர்க்குமே ஒன்றானது
கற்போடுநீ வாழ்ந்துகாட்டடா வாழ்நாள்வரை.
(பா. 14)

இது ஒன்றாத வஞ்சித்தளையால் வந்த குறட்டாழிசை