குறள்வெண்செந்துறை
இரண்டடியாய் தம்முள் அளவொத்து விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் பெற்றுவருவது குறள்வெண்செந்துறை ஆகும். சீர் வரையறை இன்றி எனைத்துச் சீரானும் வரும்.
கண்கள் காணும் காட்சி எல்லாம் கண்கள் தேடிக் காண்ப தில்லை
கண்கள் மட்டும் ஊமை என்றால் காணும் இன்பம் ஏதும் இல்லை . (பா. 1)
இது நேரொன்றிய ஆசிரியத்தளையால் வந்த குறள்வெண்செந்துறை.
கனவுகள் விழித்தெழ கடுமையாய் உழைத்திடு
தினந்தினம் மனதினைத் திடமுடன் நடந்திடு. (பா. 2)
இது நிரையொன்றிய ஆசிரியத்தளையால் வந்த குறள்வெண்செந்துறை.
இறைவன் வணங்கிப் பணியைத் துவங்கு
சிறப்பாய் அமையும் உனது செயல்கள். (பா. 3)
இது இயற்சீர் வெண்டளையால் வந்த குறள்வெண்செந்துறை.
வள்ளுவரின் பாடலினை நாள்தோறும் கற்றுவரும்
பிள்ளைகளின் நல்வாழ்வு பூமியிலே மேலோங்கும் (பா.4)
இது வெண்சீர் வெண்டளையால் வந்த குறள்வெண்செந்துறை.
கலங்கமுள்ள நிலவுகூட பளபளன்னு ஒளிவீசும்
கலங்கமில்லா மலரினமே கலங்காதே விடிவுவரும். (பா. 5)
இது கலித்தளையால் வந்த குறள்வெண்செந்துறை.
நிலம்விழும்மழை பலன்தந்திடும் கடல்விழும்துளி பலன்தருகுமோ
உலகுளவரை உனைப்புகழ்ந்திடும் இருக்கிறபொருள் கொடுத்துதவிடு. (பா . 6)
இது ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறள்வெண்செந்துறை.
நெல்லின்மணி மண்பார்த்திடும் நெஞ்சம்அதை எண்ணிபார்த்திடு
கல்விகற்றதும் தாழ்ந்துவாழணும் என்றஉண்மையைக் கண்டுணர்ந்திடு. (பா. 7)
இது ஒன்றாத வஞ்சித்தளையால் வந்த குறள்வெண்செந்துறை.