
பகவதி அம்மனைப் பணிவோம்......
நேரிசை ஆசிரியப்பா
உலகம் அமைதி கொள்வதற் காக
பலவாய் இறைகள் பல்லுரு கொள்வர்
பார்வதி அன்னை தோன்றிய உருவில்
பகவதி அம்மன் தோற்றமும் ஒன்று
பகவான் என்ற பெண்பாற் சொல்லே
பகவதி என்றோர் படிமம் கொள்ளும்
பச்சைப் பாவாடை பகட்டாய் உடுத்தி
பருவப் பெண்ணாய் தாவணி அணிந்து
கண்டார் மயங்கும் அழகிய உருவாய்
அழகிய கால்களில் தண்டைகள் அணிந்து
இடையில் ஒட்டி யாணமும் கட்டி
வலக்கை செபமாலை அழகுற ஏந்த
இடக்கை திருமால் முத்திரைத் தாங்க
சங்குக் கழுத்தில் ஆரமும் மாலையும்
சங்கமம் செய்து அழகு தந்திட
காதில் குண்டலம் ஊஞ்சல் ஆடிட
கொவ்வை இதழ்கள் புன்னகை செய்திட
கெண்டை மீனாய் கண்களும் அமைய
எட்டாம் பிறையில் குங்குமம் மணக்க
கீற்றுப்பிறைதலை கவசமும் அணிந்து
போற்றும் பதுமைபோல் பகட்டாய் அமைந்தாள்
பாணா சூரன் அழிக்க வந்த
தேனார் குழலி அழகிய நங்கை
கீழ்எடை யாள வந்து கோவில் கொண்டாள்
அவளை நெஞ்சில் நிறுத்தி
பாற்குடம் எடுத்துப் பணிந்திடு வோமே.
இரட்டணை நாராயணகவி
150, கிழக்குத் தெரு, இரட்டணை அஞ்சல்
திண்டிவனம் வட்டம் – 604 306