அன்னையவள் எனக்களித்த மொழியாம் - புவி
முழுவதுமே ஆளுகின்ற மொழியாம்
முன்னைமாந்தர் நாவுதித்த மொழியாம் - பல
மொழிகளுக்குத் தாயான மொழியாம்.
வாய்மொழியில் கவியுருவம் பெற்று - பல
இலக்கியங்கள் இலக்கணங்கள் கண்டு
தேயாத புகழோடு விளங்கும் - முத்
தமிழ்மொழியை வளர்த்தெடுக்க வந்த
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் - தமிழ்
அமைப்புகளில் முன்னணியில் செல்லும்முனைப்புடனே எடுத்தசெயல் செய்து - அதை
முடித்திடுவோம் எல்லோரும் சேர்ந்து
கவியரங்கம் கருத்தரங்கம் என்றும் - உடன்
பேச்சரங்கம் நூலரங்கம் என்றும்
புவியரங்கில் இணையவழி யாக - பன்
நாட்டிளவில் நடத்திடுவோம் காணீர்
பயனுள்ளத் தலைப்புகள் கொண்டு - அந்த
துறைசார்ந்த வல்லுநர்கள் கண்டு
பயிலரங்கம் பலவிதமாய் நடத்தி - அதை
உரியவர்கள் பயனடையச் செய்வோம்.
ஆய்தெடுத்த கட்டுரையும் கவிஞர் - பலர்
படைத்திட்ட கவிதையையும் தொகுத்து
தேயத்தோர் பயன்பெறவே நூலாய் - நல்ல
கட்டமைப்பில் ஆக்கிதந்தோம் நாங்கள்
எங்களது நிகழ்ச்சிகள் அனைத்தும் - உலக
மக்களெல்லாம் காணவகை செய்தோம்.
பொங்கிவரும் படைப்புகளை தொகுத்து - சிறு
இதழ்வடிவில் நறுமலரைத் தந்தோம்
பிறசங்கம் செய்யாத பணியை - எங்கள்
அமைப்பினர்கள் செய்கின்றோம் நன்று
உறவாக உலகெங்கும் உள்ள - நம்
தமிழர்கள் சேர்கின்றார் இன்று
எங்களது சங்கத்தில் இணைந்து - நல்ல
தமிழ்ப்பணியைச் செய்திடலாம் வாங்க.
திங்களைப்போல் ஒளிவீசி உங்கள் - புகழ்
உலகெங்கும் பரவிடுமே நன்று
முனைவர் க. அரிகிருஷ்ணன்
இரட்டணை அஞ்சல்,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - 604306