Monday, May 1, 2023

திருவரங்கத் திருப்பதிகம்


பழமொன்றைப் பெறுவ தற்கு 
          தாய்தந்தை சுற்றி வந்தோன் 
அழகுமிகு ஆற்றின் ஓரம் 
          சிலைவைத்து மறைந்து போனார்
எழில்வேந்தன் இராமன் தந்த 
          சிலைஎடுக்க முடியா மன்னன்
மழைகண்ணீர் வடிந்து நிற்க 
          பரந்தாமன் இங்கி ருந்து 01

இராமர் தன் முடிசூட்டு விழாவின்போது தனக்குத் தந்த சிலையை விபீடணன் தனது தலையில் சுமந்து வந்து, காவிரிக் கரையை அடைந்தான். சாயங்கால நேரம் என்பதால் சந்தியா வந்தனம் செய்வதற்காக அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஓர் சிறுவனிடம் கொடுத்து இதனைக் கீழே வைக்காதே விரைவில் நீராடி விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி, ஆற்றில் நீராடச் சென்றான். ஞானப் பழத்தைப் பெறுவதற்காகத் தனது தாய்த்தந்தையைச் சுற்றி வந்த வினாயகப் பெருமான், சிறுவனாக இருந்து அதனைப் பெற்று சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அழகு மிகுந்த காவிரி ஆற்றின் நடுவில் வைத்துவிட்டு மறைந்துவிட்டார். இதனைக் கண்ட விபீடன் விரைந்து வந்து அந்தச் சிலையை எடுக்க முயன்றான் முடியாமல் போகவே, கண்ணீர் விட்டு அழுதான். 

அருள்வழங்க ஆசை கொண்டு 
          விபீடனனை அனுப்பி வைத்தார்
சிரம்வலக்கை தாங்க பார்வை 
          இலங்கைநோக்க பாம்பின் மேலே
சிரம்மேற்கும் கிழக்கில் பாதம் 
          நீட்டிதெற்கு நோக்கி நின்றார்
அருளாசி கிடைப்ப தற்கு 
          அரங்கனைநாம் வணங்கி நிற்போம். 02

அப்போது, பரம்பொருளான திருமால் விபீடனன் முன் தோன்றி, தான் இங்கேயே இருந்து அருள்புரியவதாகக் கூறி அனுப்பி வைத்தார். அதனால்தான், பாம்பணையில் வலக்கையை தலையில் தாங்கி, மேற்கே தலைவைத்து கிழக்கே கால் நீட்டிப்படுத்து, தனது பார்வையை இலங்கை நோக்கி இருக்குமாறு காட்சி அளிக்கிறார். அத்தகைய அரங்கனின் அருளாசி கிடைப்பதற்கு நாம் வணங்கி மகிழ்வோம்.

திருக்குறளில் ஏழு சீர்போல் 
          ஏழென்ற சிறப்பு உண்டு
பிரகாரம் மதில்கள் தாயர் 
          உற்சவம்தி ருவடி சேவை
அரங்கத்தில் காணு கின்ற 
          இடமென்று பலவும் உண்டு
திருவரங்கம் சென்று வந்தால் 
          இத்தனையும் கண்டி டுங்கள் 03

திருக்குறளில் அமைந்துள்ள ஏழு சீர்களைப் போல, திருவரங்கத்திலும் ஏழு என்ற சிறப்புகள் உண்டு. ஏழு பிரகாரம், ஏழு மதில்கள். ஸ்ரீதேவி, பூதேவி, துலக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார்  என ஏழு தாயார்கள், ஏழு திருவடிச் சேவை, ஏழு கண்டுகளிக்கும் சேவை, வளரும் நெற்குதிர்கள், அசையும் கொடிமரம், ஸ்ரீராமாநுசரின் திருமேனி, தேயும் அரங்களின் செருப்புகள், அரங்கனின் சொலிக்கும் கண்கள்,  ஐந்து குழி, மூன்று வாசல், ரங்க விமானம் என ஏழு அதிசயங்கள் இங்கு உணடு. இவற்றை திருவரங்கம் சென்றால் காணலாம்.

ஓடிவரும் ஆற்றின் மையம் 
          ஒய்யார மாயி ருந்து
தேடிவரும் பக்த ருக்கு 
          எழில்காட்டும் அரங்க நாதா!
கோடிகோடி புண்ணி யங்கள் 
          கண்ணார காணும் போது
பாடுகளை தான றிந்து 
          நித்தமெனைக் காத்தி டப்பா. 04

மலையில் இருந்து ஓடிவருகின்ற காவிரி ஆற்றின் இடையில் அழகான தோற்றத்துடன் இருந்து, தன்னைத் தேடி வருகின்ற பக்தர்களுக்கு தன்னுடைய அழகிய உருவத்தைக் காட்டி நிற்கும் அரங்கநாதனே. உன்னைக் காணும்போது எங்களுக்கு கோடி கோடி புண்ணியங்கள் வந்து சேர்கின்றன. வந்தோம் உன்னைக் கண்ணாரக்கண்டோம். எங்களின் துன்பங்களை நீயாகவே அறிந்து ஒவ்வொரு நாளும் எங்களைக் காத்திட வேண்டுமப்பா.

ஆற்றிடைக் குறையி லுன்னை 
          வைத்ததை எண்ணித் தான்நீ
ஆறுமு கவேலன் மூத்தோன் 
          கணபதி அருகில் வைத்தாய்
போற்றிடும் மாரி யம்மன் 
          எதற்கென பக்கம் வைத்தாய்
பாற்கடல் வாசம் கொள்ளும் 
          பாம்பணை அரங்க நாதா! 05

பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளதுபோல் பாம்பின்மேல் இருந்து காட்சி தரும் அரங்க நாதனே! விபீடணன் கொண்டு வந்த உன்னை ஆற்றின் இடையில் உள்ள மணல் மேட்டில், ஆறுமுகனின் மூத்தவனான விநாயக பெருமான் வைத்தார் என்பதை மனதில் நினைத்துதான் உன்னருகில் (மலைக்கோட்டை) கோவில் கொள்ள வைத்தாய். அப்படி இருக்க, வழிபடுவதற்குரிய மாரியம்மனை எதற்காகப் பக்கத்தில் கோவில் (சமயபுரம்) கொள்ள வைத்தாய்.

ஆர்த்தெழும் அலைகள் கொண்ட 
          யமுனையைக் கடக்கும் போது
நீரலைக் கண்டு உள்ளம் 
          பயந்தது இல்லை என்றே
நீர்வரும் மையம் தன்னில் 
          வந்துநீ இருந்தாய் போலும்
கார்முகில் வண்ணா! என்னைக் 
          காத்திடு அச்சம் நீக்கி 06

கருநிற மேனி கொண்ட  திருமாலே! உன் குழந்தைப் பருவத்தில் உன்னுடைய தந்தை வசுதேவர், ஆர்ப்பரித்து எழுகின்ற பெரிய அலைகளை உடைய யமுனை ஆற்றைக் கடக்கும் போது, அதன் நீரலையைக் கண்டு உன் உள்ளம் பயந்தது இல்லை என்பதால், காவிரி ஆற்றின் தண்ணீர் வருகின்ற மையப் பகுதியில் வந்து இருந்தாயோ? என்னுடைய அச்சத்தையும் நீக்கி காத்திட வேண்டும்.

பாலகன் நெருங்கி வந்து 
          கோபமும் தணிக்கச் செய்யப்
பாலகன் பரிவு கொண்டு 
          ஆசிகள் வழங்கி நின்றாய்
பாலகன் உள்ளம் போல 
          நான்உனை வணங்கி நின்றேன்
பாலகன் குற்றம் போல 
          என்குறை நீக்கி காப்பாய் 07

நரசிங்க மூர்த்தியே! குழந்தையான பிரகலாதர் உன்னை நெருங்கி வந்து உன் கோபத்தைத் தணிக்கத் தணிந்தாய். பிறகு அவருக்கு ஆசிகளையும் வழங்கினாய். பிரகலாதர் எப்போதும் தன் உள்ளத்தில் உன்னை நினைத்திருப்பதுபோல நானும் உன்னை நினைந்து வணங்கி நிற்கிறேன். பிரகலாதரின் குற்றம் நீக்கி அவரைக் காத்ததுபோல், என் குற்றம் குறைகளையும் நீக்கி காத்திட வேண்டும்.

காசிபர் அதிதி மைந்தன் 
          வாமன ராக வந்து
காசினி அளந்து மீட்டாய் 
          கல்வியும் வேலை வாய்ப்பும்
காசுடன் ஒன்றிப் போச்சு 
          ஏழைகள் பெறுவ தற்கு
யோசனை ஒன்று சொல்வாய் 
          புனல்நடு உறைந்த ரங்கா! 08

தண்ணீர் வரும் வழியில் கோவில் கொண்ட அரங்கநாதா! காசிப முனிவர் அதிதியின் பிள்ளை வாமனனாக அவதரித்து, இவ்வுலகினை இரண்டடியால் அளந்து, அசுரர்களிடம் இருந்து வானையும் மண்ணையும் மீட்டு தேவர்களுக்கு அளித்தவனே! இன்று கல்வியும் வேலையும் காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்றாகி விட்டது. இவ்விரண்டையும் ஏழை மக்கள் பெறுவதற்கு ஏற்றதொரு யோசனையைச் சொல்வாய்.

பூமகள் மார்பில் வைத்து 
          பாற்கடல் இருந்த தேவா!
கோமகள் இலங்கை மீட்டு 
          ஆண்டிடும் சீதா ராமா!
தூமலர்த் தூவி உன்னை 
          தொழுதுநான் பணிந்து நின்றேன்
தாமதம் இன்றி வந்து 
          தேவைய றிந்து காப்பாய் 09

செந்தாமரைப் பூவில் அமர்ந்த திருமகளை தன் மார்பில் வைத்துப் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் தேவனே! சனகனின் மகளான சீதையை இலங்கையில் இருந்து மீட்டு வந்து அயோத்தியில் முடிசூடி ஆளுகின்ற சீத்தாராமானே! தூய்மையான மலர்களைத் தூவி உன்னைத் தொழுது நான் வணங்கி நிற்கின்றேன். தாமதம் ஏதும் செய்யாமல் விரைந்து வந்து என் தேவையறிந்து காப்பாய்.

பெண்உரு கொண்டு தேவர்க் 
          கமிழ்தினைத் தந்த ரங்கா!
எண்ணிய செயல்கள் எல்லாம் 
          செய்திடும் ஆற்ற லோடு
திண்ணிய நெஞ்சம் தந்து 
          நீள்புகழ் அடையச் செய்வாய்
பண்ணிய பாவம் எல்லாம் 
          சூரிய பனிநீர் மாய்ப்பாய் 10

மோகினி அவதாரம் எடுத்துத் தேவர்களுக்கு அமிழ்தம் படைத்த அரங்க நாதனே! நான் எண்ணிய செயல்கள் எல்லாம் செய்வதற்கான ஆற்றலையும் உறுதியான மனதினையும் தந்து, நீண்ட புகழ் அடையச் செய்வாய். மேலும் நான் பண்ணிய பாவங்கள் எல்லாம் சூரியனின் முன் உள்ள பனித்துளிபோல் போக்கிக் காப்பாய்.