Wednesday, July 19, 2023

திரௌபதி உற்பவ மாலை

காப்பு

நேரிசை வெண்பா

உலகினைக் காக்கும் தொழில்செய் கடவுள்
பலவாய் எடுத்த அவதாரம் - சொல்லும்
உற்பவ மாலையைப் பாண்டவர் இல்லாள்
திரௌபதி காப்பாள் மகிந்து

உலகத்தில் காக்கும் தொழிலைச் சிறப்பாகச் செய்கின்ற திருமால் எடுத்த பல அவதாரங்களைக் கூறும் உற்பவ மாலை என்னும் நூலினைப் பாண்டவர்களின் இல்லத்தரசியான திரௌபதி அம்மன் மகிழ்ந்து காப்பாளாக.

ஆசிரிய விருத்தம் (விளம் மா தேமா)

மச்ச அவதாரம்
சத்திய விரதன் என்னும் 
          மன்னவன் துணையாக் கொண்டு
வித்தொடு பலவும் காத்து 
          மீண்டுமாய் படைக்கச் செய்தோன்
நித்தமும் படைக்கும் தெய்வ
          நான்மறை கவர்ந்தோன் மாய்த்தோன்
இதடியில் நீந்தும் மீனே
          திரௌபதி அம்மன் காக்க    01

இதடி - நீர்

திருமால் தன் பக்தனான சத்தியவிரதன் என்னும் மன்னனின் துணையோடு, உலக அழிவின்போது, பல்வகை வித்துக்கள், பறவைகள், விலங்குகள், முனிவர்கள் என பல்வேறு உயிரினங்களைக் காத்து மீண்டும் படைக்கக் காரணமாய் இருந்தார். மேலும், சோமுகன் என்னும் அரக்கன், பிரம்மன் உறங்கிய நேரத்தில்  வேதங்களைத் திருடிச் சென்று கடலுக்கடியில் மறைந்து கொண்டான். அவ்வரக்கனோடு போராடி, அவனிடத்தில் இருந்து வேதங்களை மீட்டுத் தந்தார். இவ்விரு செயலுக்காக அவதாரம் கொண்ட மீனே திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

கூர்ம அவதாரம்
மேருவை மத்தாய் வைத்து
          வாசுகி கயிறாய் மாற்றி
போரிடும் அசுரர் தேவர்
          ஆழியைக் கடைந்தெ டுக்க
கூர்மமாய் அவத ரித்து
          அமுதமும் பெற்றுத் தந்தாய்
தேரினைச் செலுத்தும் தேவா
          திரௌபதி அம்மன் காக்க    02

மேரு மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பை கயிறாக்கி, எப்பொழுதும் போரிட்டுக் கொண்டிருக்கும் தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைவதற்கு ஆமையாக அவதரித்து உதவியதோடு மட்டுமல்லாமல், அசுரர்களிடம் இருந்த அமுத கலசத்தைத் தேவர்கள் உண்பதற்குக் காரணமாகவனும் பாரதப்போரில் சாரதிக்குத் தேரோட்டியாக இருந்தவனுமான தேவனே  திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

வராக அவதாரம்
பிரம்மனின் நாசி தோன்றி
          பூமியைத் தேடிச் சென்று
இரணியன் இளைய னோடு
          உரமொடு போரில் வென்று
தரணியை மீட்டு வந்து
          உயிர்வகை வாழத் தந்தோய்
நெருப்பிலே வந்த நங்கை
          திரௌபதி அம்மன் காக்க    03

பிரம்மனின் நாசி துவராத்தில் இருந்து சிறிய பன்றிக் குட்டி வடிவில் தோன்றி, சிறிது நேரத்தில் பெரிய மதயானை அளவு வளர்ந்து, பூமி மறைந்திருக்கும் இடத்தைத் தன் மூக்கின் நுகரும் தன்மையால் தேடிச் சென்று, பாதாளத்தில் இருந்த பூமியைத் தன் கூர்மையான கொம்புகளுக்கிடையே தாங்கிக் கொண்டு சமுத்திரத்தில் இருந்து வெளியே வர, இரணியகசிபின் தம்பி இரணியாட்சன் எதிரே கதாயுதத்துடன் நிற்க, அவனோடு போரிட்டு வென்று பூமியை மீட்டுவந்து தந்த வராக மூர்த்தியே, நெருப்பில் தோன்றியவளான திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

நரசிம்ம அவதாரம்

நாரண மந்தி ரத்தை
         அனுதினம் உச்ச ரித்த
சூரனின் மைந்த னான
         பாலகன் உயிரைக் காக்க
போரிடும் அசுரன் மாய்க்க
         நரஅரி யாக வந்தோய்
சீர்வளர் திறத்து நங்கை
          திரௌபதி அம்மன் காக்க    04

நாராயணா என்னும் மந்திரத்தை ஒவ்வொரு நாளும் உச்சரித்துக் கொண்டிருந்த பிரகலாதனைக் காப்பதற்காகவும் தன்னை எதிர்த்துப் போரிடத் தயாராக இருந்த இரணியகசிபை அழிப்பதற்காகவும் நரசிங்கமாய் அவதரித்தவனே, அழகும் திறமையும் கொண்ட நங்கையான திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

வாமன அவதாரம்

அதிதியின் மகனாய்த் தோன்றி
          சோதரன் முதலா னோர்க்காய்
பதியினை மீட்க எண்ணி
          பலியிடம் சாலை சென்று
புதுமையாய் வரங்கள் பெற்று
          வானொடு அளந்தாய் மண்ணை
சதியினை வென்று வந்த
          திரௌபதி அம்மன் காக்க    05

அதிதி காசிபர் மகனாகப் பிறந்து, தன்னுடைய சகோதரன் இந்திரனுக்காகவும் மற்ற தேவர்களுக்காகவும் சொர்க்கத்தை மீட்டெடுப்பதற்காகவும் குள்ள வாமன வடிவத்தில், மகாபலிச் சக்கரவர்த்தி செய்கின்ற யாக சாலையை அடைந்து, தனக்கு மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டுப் பெற்று, வானுலகையும் மண்ணுலகையும் அளந்து தனதாக்கிக் கொண்ட வாமனனே. தனக்குச் செய்யப்பட்ட சதி(சூழ்ச்சி)களை எல்லாம் வென்று வந்த திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

பரசுராம அவதாரம்

தாயுடன் தமையர் வெட்டி
          தந்தையின் அன்பைப் பெற்றாய்
தாயுமா னவன்வ ணங்கி
          கோடரி பரிசாய் ஏற்றாய்
தாயென இருந்த ஆவை
          திரும்பவும் மீட்டுத் தந்தாய்
தாயென இருக்கு எங்கள்
          திரௌபதி அம்மன் காக்க    06

தாயான ரேணுகாதேவியின் தலையையும் உடன்பிறந்த தமையன்களின் தலையை வெட்டி, தந்தை ஜமதக்னியின் நற்பெயரைப் பெற்றவனே. தாயுமானவனான சிவனை நினைத்து தவமிருந்து கோடரியைப் பரிசாகப் பெற்றவனே. தனக்கும் தன் குடும்பத்தும் தாயாக இருந்து பசி போக்கிய காமதேனுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரியனோடு போரிட்டு வென்று மீட்டுத் தந்தவனே. எங்களின் தாயாக விளங்கும் திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

இராம அவதாரம்

ரகுகுலம் தழைக்க வந்த
          தசரதன் முதலாம் மைந்தா
தகப்பனின் சொல்லை ஏற்று
          மணிமுடி துறந்து சென்றாய்
அகமுடை யாளைத் தேட
          அனுமனை துணையாய் கொண்டு
பகைவரை வென்ற ராமா
        திரௌபதி அம்மன் காக்க    07

இரகுகுலம் தழைப்பதற்காகத் தசரதனின் முதல் மைந்தனாக வந்த ராமா, உன் தந்தையின் சொல்லை ஏற்று அரச பதவியைத் துறந்து காட்டிக்குச் சென்றாய். அங்கு, அகத்தில் குடிகொண்டிருக்கும் தன் மனைவியைத் தேடுவதற்கு அனுமனைத்  துணையாகக் கொண்டு, தன் பகைவனான இராவணனை வெற்றி கொண்டாய். நீ எங்கள் திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

பலராம அவதாரம்
 
வாடகைத் தாயாய் இருந்து
          ரோகிணி கர்ப்பம் தரிக்க
சேடனே மகனாய் பிறந்து
          கிருஷ்ணனின் தமைய னானார்
கூடியே சோத ரனோடு
          பகைபல அழித்து காத்தோன்
பகைவரை வென்ற ராமா
        திரௌபதி அம்மன் காக்க    08

வசுதேவரின் முதல் மனைவி ரோகிணி, வாடகைத் தாயாக இருந்து வசுதேவரின் இரண்டாம் மனைவி தேவகியின் கருவைத் தாங்கி கர்ப்பம் தரிக்க, ஆதிசேடனே மகனாகப் பிறந்து, கிருஷ்ணரின் அண்ணனாக வளர்ந்தார். சகோதரனோடு இணைந்து தன்னை எதிர்த்து வந்த பல அசுரர்களை அழித்து கோகுலத்து மக்களைக் காத்த பலராமனே. திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

கிருஷ்ண அவதாரம்

கம்சனை மாய்ப்ப தற்கு
          தேவகி கருவில் வந்தாய்
அம்சமும் அழகும் கொண்டு
          காண்பவர் உள்ளம் ஈர்த்தாய்
அம்பினால் வெற்றி கொண்ட
          பாண்டவர் பக்கம் நின்றாய்
தமக்கையாய் ஏற்றுக் கொண்ட
        திரௌபதி அம்மன் காக்க    09

கம்சனை அழிப்பதற்காக வசுதேவர் வாசுகியின் மகனாய் பிறந்தாய். அழகும் அம்சமும் கொண்டு காண்பவர்களின் உள்ளங்களை ஈர்த்தாய். அம்பைக் கொண்டு இலக்கை வீழ்த்தி திரௌபதியை மணந்த பாண்டவர்களின் பக்கம் நின்றாய். உன் உடன் பிறவாத போதும் திரௌபதியை தங்கையாக ஏற்றுக் கொண்டாய். கிருஷ்ணா, திரௌபதி அம்மனைக் காப்பாயாக.

கல்கி அவதாரம்

சொல்வழி நடந்த மக்கள்
          தன்வழி நடக்கும் போது
எல்லொளி மிகுதி யாகி
          நீர்நிலை வற்றிப் போகும்
கல்வியை கற்றி டாமல்
          கண்டதைக் குடித்து மாயும்
கலியுகம் தோன்றும் தேவா
        திரௌபதி அம்மன் காக்க    10

முன்னோர்கள் சொன்ன வழியைப் பின்பற்றிய மக்கள், தான் நினைத்த வழியில் செல்ல வேண்டும் என்று எண்ணும்போதே, சூரிய ஒளியில் மிகுதியால் நீர்நிலைகள் வற்றிப் போகும். பிள்ளைகள் கல்வியை கற்றிடாமல் போதைப் பொருட்களை உட்கொண்டு அழிந்துபோவர். இத்தகைய கலிகாலத்தில் அவதாரம் செய்ய இருக்கும் கல்கியே, திரௌபதி அம்மனைக் காப்பாயாக.