Tuesday, November 14, 2023

குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் 82வது நிகழ்வாக குழந்தைகள் தின நிகழ்வு இனிதான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கு நல்லாசி கூறி வழி நடத்தும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் கௌரவத் தலைவர் திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருப்பேரூர் ஆதினம் இருபத்தைந்தாம் குருமகா சந்நிதானங்கள் கயிலைப் புனிதர் திருப்பெருந்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் பொற்பாதங்களை தொழுது,

இவ்விழாவிற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் மற்றும் பண்ணுருட்டிச் செந்தமிழ்ச் சங்கங்களின் தலைவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களை முதற்கண் வணங்குகிறேன்.

இந்நிகழ்வில் முன்னைலை வகித்துவரும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளையும் வணங்கி மகிழ்கிறேன்.

இந்தக் குழந்தைகள் தின விழாக் கொண்டாட்டத்தை இனிமையான முறையில் துவங்கி வைக்க இருக்கின்ற பண்ணுருட்டியைச் சார்ந்த மாணவ கண்மணிகள் ச. பிரசன்ன சிவா மற்றும் ஸ்ரீகாந்த் சிவா ஆசியோருக்கும் என் வணக்கங்கள் உரித்தாகுக.

இந்நிகழ்விற்கு வாழ்த்துரை நல்க இசைவு தெரிவித்து நம்முடன் இணைந்துள்ள, எழுச்சிப் பாவலர், வழக்குரைஞர் சே. குணசேகரன், பொதுச்செயலாளர், உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப் பேரவை, பெங்களுரு அவர்களையும் வணங்கி மகிழ்கிறேன்.

குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

இப்பெயரைக் கேட்டாலே அனைவரின் நெஞ்சிலும் பேரானந்தம் துள்ளம். குழந்தைகளாய் இருந்த நாம் குழந்தைகளைக் கொண்டாடுவது சிறப்புடையதுதானே. 

உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு நாளைச் சிறப்பு நாளாகக் கொண்டாடி வருகிறது. அவ்வகையில், நவம்பர் 14ஆம் நாளான இன்று குழந்தைகள் கொண்டாடி வருகிறோம்.

பொதுவாக நவம்பர் மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது இரண்டு நிகழ்வுகள். ஒன்று தீபாவளி மற்றொன்று குழந்தைகள் தினம். தீபாவளி கூட சில ஆண்டு அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் எப்போதும் மாறாமல் வருவது குழந்தைகள் தினம்தான்.

ஏமாற்றத் தெரியாத

பொய் களவு தெரியாத

சாதி மதம் பாராத

அழகு, பொறாமை கொள்ளாத

உன்னத ஜீவன்கள் குழந்தைகள்

இக் குழந்தைகள் தினத்தை சர்வதேச அளவில் 1954 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 20 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வந்தாலும் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14 குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

இதற்குக் காரணம்,  முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியாவின் ஒளி விளக்காகத் திகழ்ந்த மாந்தருள் மாணிக்கமுமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 - யே குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.

ஏனென்றால் அவர் குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் என்பதால்...

இக்குழந்தைகள் தினம் நாட்டிற்கு நாடு வேறுபடும்.

"வருடம் தவறாமல்

குழந்தைகள் தினத்தைக்

கொண்டாடுகிறவர்களே…

தினங்கள் கொண்டாடுவதை

விட்டு விட்டு

குழந்தைகளை எப்போது

கொண்டாடப் போகின்றீர்கள்?" என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகளுக்கேற்ப, நாம் தினங்களை விட்டுவிட்டு குழந்தைகளைக் கொண்டாட வேண்டும்.

குழந்தைகளைப் பேணுவோம்

அன்னை தந்தை ஈன்றெடுத்த

அன்புச் செல்வம் குழந்தைகள்

மண்ணில் வந்து வாழுகின்ற

வானு றையும் தெய்வங்கள்

 

குரங்கு போல பெற்றவரைப்

பற்றிக் கொண்டு வாழுவர்

குறும்பு கோவம் கொண்டுநம்மை

குதூஉ கலத்தில் ஆழ்த்துவர்

 

வளர்ந்து வரும் பருவத்தில்

அறிவை நாமும் ஊட்டணும்

இளமைப் பருவம் வழிநடத்தி

இனிய கனவை வளர்க்கணும்

 

வறுமை எதுவும் தெரியாமல்

வளமை யோடு இருக்கணும்

பெருமை கொள்ளும் அளவிற்கு

பண்பு அவரைச் சூழணும்

 

பெற்ற வர்கள் குழந்தைகளை

பேணி நாளும் காப்பதால்

தரணி போற்றும் நல்லவராய்

தங்கள் பிள்ளை மாறுவர்.

 

வறுமைகள் எனச்சொல்லி பெற்றெடுத்த மகவினை

வற்புறுத்தி வேலைக்கு அனுப்புகிறார் பெற்றவர்.

குறைவான ஊதியம் நிறைவான பணியென

குழந்தைகளை அமர்த்தியே துன்பங்கள் செய்கிறார்.

 

ஏழ்மையில் வாடிடும் எண்ணற்ற குழந்தைகள்

பிச்சையினை ஏற்றுத்தன் வாழ்க்கையை நடத்துது.

பாழ்படும் உடல்சுகம் கண்டவர் சிசுக்கொலை

செய்கிறார்பெற் றெடுத்தவர் குப்பையில் வீசினார்.

 

பால்மணம் மாறிய பருவத்துக் குழந்தையை

பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி மகிழ்கிறார்.

பள்ளிக்குச் சென்றிடாத எண்ணற்ற குழந்தைகள்

தவறான பாதையில் செல்வதையும் காணலாம்.

 

எண்ணிய கல்வியைக் கற்றுத்தன் வாழ்விலே

ஏற்றங்கள் பெற்று உயர்ந்திட நினைக்கையில்

மண்ணிலே காலூன்றி துளிர்க்கின்ற செடியினை

முனைகிள்ளி வளர்ச்சியைக் குறைப்பதாய் அமையுது.

 

சத்தில்லாக் குழந்தைகள் இந்தியாவில் மட்டுமே

மிகுதியாக இருப்பதாய் ஆய்வுநிலை பகருது.

இத்தனைக் கொடுமைகள் குழந்தைக்கு இருக்கையில்

தினங்களைக் கொண்டாடி மகிழ்வது சரிதானோ?

 

கள்ளம் கபடம் இல்லா

வெள்ளை மனசு கொண்ட

பிள்ளை புன்சி ரிப்பில்

உள்ளம் மூழ்கு வோமே

என்று சொல்லி, வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.