செந்தூர் முருகன் செந்தமிழ் மாலை
காப்பு
அலைவருடும் செம்பாதம் கொண்டவனாம் செந்தூர்
கலாப மயிலோன் புகழ்பாட - வல்விலங்கு
காத்து வளர்த்த மகள்தந்தை பொன்மகள்
நாதனென் நூலுக்குக் காப்பு
கடலலைகள் கரைமேல் உள்ள முருகனின் பாதங்களை வருடுவதால் அவன் பாதம் சிவந்தன. அத்தகைய சிவந்த பாதங்களை உடைய தோகை விரித்தாடும் மயிலை உடைய செந்தூர் முருகன்மேல் நான்பாடு செந்தூர் முருகன் செந்தமிழ் மாலை என்ற நூலுக்கு, யானை வளர்த்து காத்தமகள் தெய்வானையின் தந்தையும் செல்வத்திற்கு அதிபதியான இலட்சுமியின் கணவனுமான திருமாலே காப்பு.
பிரம்மரின் இளைய மைந்தர் காசிபர் பெற்றெ டுத்தார்
நரன்கரி சிங்கம் ஆடு தலையுடை பிள்ளை நால்வர்
திரிசடை கடவுள் நோக்கி தவத்தினால் வரங்கள் பெற்று
விரும்பிய வாழ்வு தன்னைப் பெற்றநீர் வாழ்க என்றார் 01
பிரம்மாவின் இளைய மகனான காசிபர் மாயை பெற்றெடுத்த பிள்ளைகள் மனித முகமுடைய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர். இந்நால்வரிடம் காசிபர், சிவபெருமானை னோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று விரும்பிய வாழ்க்கையை வாழுங்கள் என்றார்.
தந்தையின் சொல்லை ஏற்று திகம்பரன் மனத்துள் எண்ணி
முந்திடும் ஆசை நீக்கி முனிவனாய் மாறும் நேரம்
சிந்தையை மயக்கும் வண்ணம் சுக்கிரன் ஆசை ஊட்ட
மந்திரம் செய்தாற் போல சூரனும் ஆட லானான். 02
சூரபத்மன், தன் தந்தை காசிபரின் சொல்லை ஏற்று சிவனை மனத்துள் எண்ணி தங்களுடைய ஆசைகளை எல்லாம் நீக்கி முனிவனாக மாறும் நேரத்தில், அசுரர்களின் குலகுருவான சுக்லாச்சாரியார் அங்கு வந்து அவனுக்குப் பலவிதமான ஆசை வார்த்தைகளை ஊட்ட, மந்திரம் போட்டார்போல, அவர் சொற்படி ஆடினான்.
பலயுகம் அண்டத் தோடு தேவரை அடக்கி ஆள
விலையிலா உயிரைக் காக்க வேண்டிய வரங்கள் பெற்று
நிலையினை உயர்த்து என்ற குருவது சொல்லை ஏற்று
மலைமகள் துணையை நோக்கி கடுந்தவம் செய்ய லுற்றான் 03
பல யுகங்களில் பல அண்டங்களை ஆள, இந்திரஞாலம் என்னும் தேரைப் பெற, விலையில்லாத இந்த உரைக் காத்துக்கொள்ள எனப் பலவிதமான வரங்களைப் பெற்று உன்னுடைய தரத்தினை உயர்த்திக் கொள் என்ற சுக்ராச்சாரியாரின் சொல்லை ஏற்று, மலைமகளின் துணைவனான சிவனை நோக்கி கடும் தவம் செய்யலானான்.
சூரனின் தவத்தைக் கண்டு ஐஞ்சிரன் நேரில் வந்து
சூரனே வரங்கள் கேட்பாய் மகிழ்வுடன் தருவோம் என்றார்.
காரிகை வயிற்றில் தோன்றா பிள்ளையால் மரணம் வேண்டும்
தேருடன் யுகங்கள் ஆளும் வரங்களைக் கேட்டுப் பெற்றான் 04
சூரபத்மனின் தவத்தை வியந்து சிவபெருமான் நேரில் தோன்றி, உனக்கு என்ன வரவேண்டும் கேள் நான் மகிழ்ச்சியுடன் தருகிறேன் என்றார். அப்போது அவன், 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும், இந்திரஞாலம் எனும் தேரையும், பெண் வயிற்றில் உருவாகாத பிள்ளையார் எனக்கு மரணம் நேரவேண்டும் என்ற வரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான்.
பெண்ணினால் அன்றி யாவும் தோன்றிட மாட்டா தென்றே
எண்ணிய சூரன் தன்னை மாய்ப்பவர் இல்லை என்றே
திண்மையும் இழந்த தோடு கொடுமைகள் பலவும் செய்து
விண்ணிலே உள்ள தேவர் யாவரும் சிறையில் வைத்தான் 05
திண்மை - நிதானம்
பெண்ணால் அன்றி, எந்த உயிரும் தோற்றம் கொள்ளாது என்று நினைத்த சூரபத்மன், தன்னை அழிப்பதற்கு யாரும் இல்லை என்ற ஆணவத்தில் நிதாணம் இழந்தவனாய் தேவர்களுக்குப் பலவிதமான கொடுமைகள் செய்தான். அவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தான்.
கொடுமைகள் தாங்கா தேவர் கூத்தனை நோக்கி சொல்ல
விடுதலைக் கொடுப்பேன் என்ற உறுதியை அவர்க்க ளித்து
மடந்தையின் துணையில் லாமல் நெருப்புமிழ் நுதற்கண் கொண்டு
மடுநிறை குளத்துப் பூவில் குழந்தையாய்த் தவழுச் செய்தார். 06
சூரபத்மனின் கொடுமைகள் தாங்காத தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காப்பாற்றும்படி முறையிட்டனர். சிவபெருமான், கவலைப் படாதீர்கள் நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று கூறி, நெருப்பை உமிழும் தன்மையுடைய தனது நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த ஆறு தாமரை மலர்கள் மீது வந்துசேர்ந்து குழந்தையாய்த் தவழத் தொடங்கியது.
அதோமுகத் தோடு ஆறு முகங்களை உடைய பிள்ளை
நிதர்த்தனி முதலா ஆறு கார்த்திகை வளர்த்த பிள்ளை
சதியவள் அணைத்துச் சேர்க்க ஒருதிரு மேனி கொண்டு
வதனமா றுகரம் பன்னி ரண்டொடு காட்சி தந்தார் 07
சிவனின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுடன், "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் சேர்ந்து ஆறு குழந்தைகளாயின. இந்த ஆறு குழந்தைகளையும் நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு கார்த்திகை பெண்கள் எடுத்து வளர்த்து வந்தனர். இவ்வறுவரையும் பார்வதிதேவி சேர்த்து அணைக்க, அழகிய ஒரு உடலையும் ஆறு தலைகளையும் பன்னிரண்டு கரங்களையும் கொண்டு ஆறுமுகனாகக் காட்சி அளித்தார்.
ஒளிப்பிழம் பாறு சேர்ந்து ஓருரு வான பிள்ளை
இளநிலை ஞானம் பெற்று இருந்திடும் அன்பு சேயோன்
விளைநிலம் அன்றி வேறு துணையிலா நாற்றாய் போல
உளமரை தாங்கி ஏத்தி வழிபடு வோரைக் காப்பான் 08
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஒளிப்பிழம்புபோல வெளிப்பட்டு பார்வதி தேவியால் ஓர் உடலாக மாற்றப்பட்ட குழந்தையான முருகன், சிறிய வயதிலேயே அதீத அறிவும் அன்பும் கொண்டவன். விளைநிலம் அன்றி வேறு வாழிடம் இல்லாத நாற்றுபோல, தன் உள்ளமாகிய தாமரையில் தாங்கி வழிபடுபோரைக் காக்கும் இயல்பு கொண்டவனாவான்.
சரவணப் பெய்கை யோரம் பார்வதி அமுது ஊட்ட
சரவணன் உண்ட மீதி குளத்துள நீரில் வீழ
சரவணப் பொய்கை மீனாய் உலவியோர் உண்டு நீங்கி
சரவணன் ஆசி யோடு சுயஉரு பெற்றுச் சென்றார். 09
தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என்ற ஆறு பேரும் பராசர முனிவரின் புதல்வர்கள். இவர்கள் தந்தையின் சொல்லைக் கேளாமல் முறை தவறி நடந்த காரணத்தால் தம் பிள்ளைகள் மீனாய் மாறும்படி சாபம் கொடுத்து விட்டார். இவர்கள் அனைவரும் சரவணப் பொய்கையில் மீனாய் வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள் சரவணப் பொய்கைக் கரையில் அமர்ந்து பார்வதிதேவி தம் மகன் சரவணனுக்குப் பால் ஊட்டிக் கொண்டிருந்தபோது சிறிது பால் சரவணப் பொய்கையில் விழுந்தது. இப்பால் பட்ட பராசர முனிவரின் மகன்கள் சாபம் நீங்கி பழைய உருவம் பெற்றனர். பின்னர், முருகனையும் பார்வதி தேவியையும் வணங்கி சென்றனர்.
பாலொடு அன்னம் சேர்த்து உணவினை அன்னை ஊட்ட
வேலவன் அகப்ப டாமல் வேடிகை அவனும் காட்ட
கால்களில் சதங்கை ஆட கழுத்தினில் ஆரம் ஆட
வேல்விழி நடனம் ஆட காண்பவர் வியந்து நின்றார் 10
வேடிகை - வேடிக்கை (தொகுத்தல் விகாரம்)
பார்வதி தேவியானவள் தனது கைகளில் அன்னமும் பாலும் கலந்த உணவினை வேலவனுக்கு ஊட்டுவதற்காக எடுத்துவர, அன்னையிடம் அகப்படாதவனாய் பலவிதமான வேடிக்கைகளைக் காட்டினார். அப்போது கால்கலில் இருந்த சதங்கைகளும் கழுத்தில் இருந்த ஆரமும் வேல்போன்ற விழிகளும் ஆடின. அவற்றைக் கண்டவர்கள் வியப்புடன் பார்த்து நின்றனர்.
மந்திர பொருளு ரைக்க விரிசடை மண்டி யிட்டு
சிந்தையை செவிபால் வைத்து கூர்ந்ததை கேட்க லானார்
தந்தையின் குருவாய் மாறி குமரனும் சொல்லச் சொல்ல
மந்திரம் யாவும் கேட்டு மீண்டுமாய் தெரிந்து கொண்டார் 11
முன்னொரு காலத்தில் பிருகு முனிவர் கடுந்தவம் புரிந்து வருகிறார். அவரது தவத்தின் எண்ண அலைகள் தேவலோகத்தையும் எட்டி விட்டது. அவரது தவ அலைகளைத் தடுப்பவர் எவராயினும் தன் அறிவு முழுவதையும் இழந்துவிட வேண்டும் என்று வரமும் பெற்றிருக்கிறார். இதனால் யாதும் அவரின் தவத்தைத் தடுக்கவில்லை.
எனினும் அவரின் எண்ண அலைகளால் தேவர்களின் நிதானம் குலையத் தொடங்கிற்று இதனை எப்படியாவது தடுக்கவேண்டும் என்று நினைத்த இந்திரன் சிவனால் மட்டுமே இக்காரியத்தைச் செய்ய முடியும் என்று கைலாய நாதரை அனுகினான்.
பிருகு முனிவர் தான் தவம் செய்யும்போது எவரேனும் தடுத்தால் அவர் தன் அறிவு முழுவதையும் இழந்துவிட வேண்டும் என்று வரமும் பெற்றிருக்கிறார். இதனை அறிந்திருந்த சிவன், தேவர்களைக் காக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் புன்னகைத்தவாறே, தன் இரு கரங்களையும் நீ்ட்டி முனிவரின் சிரசை மூடினார்.
முனிவரின் எண்ண அலைகள் தடை பட்டதன் காரணமாக, சிவன் தன் நினைவிலிருந்த வேத மந்திரங்கள் அனைத்தையும் மறந்தார். பிருகு முனிவர் கண் விழித்தார். கைலாயபதியைக் கண்டதும் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து வருந்தினார். “பரமேஸ்வரா... தாங்களே ஆனாலும் நான் பெற்ற வரத்திற்கு விதிவிலக்கல்ல. என் தவத்தைக் கெடுத்ததின் விளைவை அனுப வித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், உங்களின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றும் புதல்வனிடம் நீங்கள் பிரணவ மந்திரத்தைக் கேட்டறிந்தால் இழந்ததை திரும்பப் பெறுவீர்கள்’’ என்றார் கூறினார்.
இதன் காரணமாக மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்ள விரும்பிய சிவன் தன் மகனைக் குருவாக ஏற்று அவன் முன் மண்டியிட்டு, சிந்தனை ஒருமுகப் படுத்தி கூர்ந்து முருகன் மந்திரத்தையும் மந்திரத்தின் பொருளையும் முழுமையாகச் சொல்லச் சொல்லக் கேட்டு மீண்டும் அறிந்து கொண்டார்.
தேவரின் துன்பம் தீர திருவடி வாக வந்தோன்
ஆவுடை யப்பன் பெற்ற செஞ்சுடர் நிறத்தை ஒத்தோன்
தேவகி பெற்ற பிள்ளை கண்ணணின் தந்கை மைந்தன்
பாவிகள் அழிக்க நாளும் திறம்பட வளர்ந்து வந்தார். 12
தேவர்களின் துன்பத்தை நீக்குவதற்காக, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய முருக பெருமான், சிவந்த நிறத்தை உடையவராய், தேவகி பெற்றெடுத்த கண்ணனின் அன்புத் தங்கை பார்வதியின் மகனாய், பாவிகளை (அசுரர்களை) அழிக்க திறமையுடன் வளர்ந்து வந்தார்.
படைத்தலை வரான வீர பாகுவை தூத னுப்பி
விட்டிடு கொடுமை யாவும் என்றிட, அஞ்சா சூரன்,
பொடியனால் என்னை மாய்க்க இயலுமோ? காப்பா ருண்டோ?
முடிவினை அறியா சூரன் ஏளன மாக சிரித்தான். 13
தனது படைத்தலைவரான வீரபாகுவைத் சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். இறுதி முடிவை அறியாத சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! சிறியப் பையனால் என்னை அழிக்க இயலுமோ? யார் வந்தாலும் தேவர்களைக் காக்க முடியாது என்று வீராவேசமாகக் கூறி ஏளனமாகச் சிரித்தான்.
அசுரரை அழிக்க எண்ணி படையினைத் திரட்டி மற்ற
அசுரராம் சிங்கன் தார காசுரன் முதலாய் எட்டு
திசைகளில் உள்ள ஏனை அசுரசே னைகளை மாய்க்க
விசும்பென மாரி அம்பு பொழிந்திட செய்து வென்றார் 14
தேவர்களைக் காக்க அசுரர்களை அழிக்க நினைத்த முருக பெருமான், தன்னுடைய படைகளைத் திரட்டி, முதல் ஐந்து நாட்களில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எட்டு திசைகளிலும் உள்ள அனைத்து அசுர படைகளையும் மேகம்போல நின்று மழைபோல அம்புகளை ஏய்து, எல்லா சேனைகளையும் அழித்தார்.
திருமுகம் ஆறு கொண்ட முருகனும் தாய்வேல் வாங்கி
கரைதொடும் கடலுள் சென்று மாமர மாகி நின்றோன்
இரண்டென பிளந்த வற்றை மயிலொடு சேவ லாக்கி
விரைந்திடும் ஊர்தி கையில் தாங்கிடும் கொடியாய் கொண்டார். 15
முகங்கள் ஆறு கொண்ட முருகன் தாய் பார்வதியிடம் வெற்றிதரும் வேலை வாங்கி, கடலுக்குள் மாமரமாய் இருந்த சூரபதுமனின் மேல் வீச, அவன் உடல் இரண்டு கூறுகளாகப் பிளந்தது. ஒரு பாதியை விரைந்து செல்லும் மயிலாகவும் மற்றொரு பாதியை சேவலாகவும் மாற்றி, ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்டார்.
உலகையே ஆட்டி வைத்த சூரனும் மாய்தான் என்று
பலதிசை தேவர் பூக்கள் மழையன பொழிந்து செந்தில்
பலபெயர் சொல்லி வாழ்த்தி மகிழ்வினில் கண்ணீர் சிந்தி
பலஇசைப் பாடல் பாடி வெற்றியை ஆர்ப்ப ரித்தார் 16
பல அண்டங்களை ஆண்டு, தேவர்களை கொடுமைப்படுத்தி, சிறையிலிட்டு, கொடுமைகள் செய்த சூரபதுமன் மாண்டுவிட்டான் என்று, பல திசைகளில் உள்ள தேவர்களும் பலவிதப் பூக்களை எடுத்து செயந்திஎ(செந்தில்) நாதனின் பல பெயர்களைச் சொல்லி வாழ்த்தியும் பல இசைப்பாடல்களைப் பாடியும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தும் வெற்றியை ஆரவாரமிட்டு கொண்டாடினர்.
சிவனது நடனம் கண்டு பெருகிய துணிகள் ரெண்டு
சிவனது தங்கை சேர்க்க பெண்ணென உருவம் கொண்டு
சிவகுமார் மணக்க எண்ணி வரங்களை பெற்று வந்து
அவரவர் விருப்பிற் கேற்ப இருப்பிடம் சேர்ந்தார் வான்மண் 17
ஒருமுறை, சிவனாரின் ஆனந்த நடனத்தில் உருகி இன்புற்றிருந்த திருமாலின் கண்களில் ஆனந்த நீர் பெருகியது. அந்தக் கண்ணீர்த் துளிகளைத் திருமகள் இரண்டு பெண்களாக உருமாற்றினாள். விஷ்ணுவும் லட்சுமியும் அவர்களைத் தங்களின் மகள்களாக ஏற்று அமுதவல்லி, சுந்தரவல்லி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இம்மக்கள் இருவர் தம் தந்தை திருமாலின் மந்திர உபதேசப்படி, திருமுருகனை நோக்கித் தவம் செய்தனர். அதனால் மகிழ்ந்த முருகன், அவர்கள் முன் தோன்றி ஆசியளித்து, அவர்களது விருப்பப்படி அவர்களைத் திருமணம் செய்துகொள்வதாக வரம் அளித்தார். இதன் காரணமாக அமுதவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை மண்ணுலகிலும் பிறந்திருந்தனர்.
தேவரின் துயரம் நீக்கி மகிழ்ச்சியை மீட்டுத் தந்த
தேவசே னாப திக்கு மாலவன் மூத்த பிள்ளை
தேவரா சனது யானை ஐராவதம் வளர்த்த பிள்ளை
தேவசே னாவை கந்தன் திருமணம் செய்து வைத்தார் 18
தேவர்களின் துன்பங்களை நீக்கி மீண்டும் மகிழ்ச்சி ஏற்படக் காரணமாக இருந்த முருகனுக்கு, கைம் மாறாக, திருமாலின் மூத்த மகளும் இந்திரனின் வளர்ப்பு மகளுமான தெய்வானையைத் (இந்திரலோக யானை ஐராவதம் வளர்த்த மகள்) திருமணம் முடித்து வைத்தான் இந்திரன்.
சக்கரன் முனிவ னாகி திருமகள் மானை நோக்க
அக்கனம் கர்ப்பம் தாங்கி குழந்தையை பெற்றெ டுத்து
சிக்குடை வள்ளி மேலே இருந்திட செய்து ஓட
பக்கமாய் வந்த வேடர் குழந்தையைக் கண்டு தந்தார் 19
சக்கரத்தைக் கையில் தாங்கிய திருமால் முனிவராகி தியானத்தில் இருக்க, அங்கு திருமகள் மான் வடிவில் வருவதைக் கண்டு அந்த மானினை பார்க்க, பார்த்த பார்வையிலேயே மான் கருவுற்று ஒரு அழகிய பெண் குழந்தையை வள்ளிக் கொடியின்மேல் பெற்றெடுத்தது. பின்னர், அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டது. சிறிது நேரத்தில அங்க வள்ளிக் கிழங்கு பறிப்பதற்காக வந்த வேடர்கள் அக்குழந்தையை எடுத்துச் சொன்று தங்களின் தலைவனான நம்பியிடம் ஒப்படைத்தனர்.
பன்னிரு வயதைத் தாண்ட நாரதர் அழகைச் சொல்ல
தினைப்புனம் காக்கும் பெண்ணை ஒருக்கணம் பார்க்க வைக்க
முன்னவன் துணையால் சேர்ந்து தேனுடன் தினைமா வுண்டு
நினைத்ததை முடிக்க வந்த வள்ளியை மணந்து சென்றார் 20
வள்ளிக்குப் பன்னிரண்டு வயதைத் தாண்டியதும் அவரது தந்தை நம்பிராசன், தினைப்புனம் காவல் காக்க அனுப்பி வைத்தார். அங்கு வந்த நாரதர் அவளது அழகைக் கண்டு வியந்து, உடனே தணிகை மலைக்கு கிளம்பிச் சென்று முருகரிடம் அவள் அழகை பற்றி விவரித்தார். அது மட்டும் அல்ல வேடவ இனத்தினரும், வள்ளியும் அவர் மீது (முருகன் எனும் கடவுள் மீது) வைத்து இருந்த பக்தியைக் குறித்துப் பேசினார். அதைக் கேட்ட முருகன், தன் உருவை ஒரு வேடர் போலவும் கிழவன் போலவும் மாற்றி கொண்டும் அங்கு சென்று, விநாயகனின் துணையுடன் வள்ளியுடன் நட்புறவை ஏற்படுத்தி பின்னர் தான் யார் என்பதை உணர்த்தி வள்ளியைத் திருமணம் செய்து கொண்டார்
முருகனின் ஆறு வீட்டில் கடற்கரை அமைந்த வீடு
விரிசடை வணங்க கந்தன் வலக்கரம் மரைப்பூ கொண்டான்
திரைதிசை அமைந்து நோக்கும் திருவிழா கண்ட நாதன்.
கரையிரும் கிணற்று நீரில் உவர்ப்பிலை பருகிக் காண்க 21
முருகனின் ஆறு படைவீடுகளில் இரண்டாவதாக அமைந்த வீடு. மற்றைய படைவீடுகள் மலைகளில் அமைய, இது, கடற்கரையில் அமைந்துள்ளது. சூரபதுமனை வெற்றிகொண்ட செயந்திநாதர், தவமிருந்து சிவனை வணங்குவதற்காக வலக்கரத்தில் தாமரை மலருடன் காட்சி தருகிறார். கிழக்குத் திசையில் அமர்ந்து கடலலையின் அழகைக் காணுகின்றார். இவர் சூரசம்ஹர திருவிழாவின் நாயகர். கோவில் அருகில் கடற்கரைப் பக்கத்தில் உள்ள நாழிக் கிணற்று நீர் பருகுவதற்கு சுவையுடையதாகக் காணப்படுவது சிறப்பு இதனை உண்டு சுவைத்துப் காணுங்கள்.
கொறுக்கையில் மாய்த்துக் கொள்ள சென்றவர் தடுத்துக் காத்து
கற்றிட பள்ளி செல்லா மடையனை கவிஞ ராக்கி
அறிந்ததைப் புராண மாக படைத்திடு என்று
வெற்றிவேல் ஆணை இட்டு சடுதியில் மறைந்து போனார். 22
கொறுக்கை - கடல்
முருகபெருமான், கடலிலே தன்னை மாய்த்துக் கொள்வதற்காக சென்ற திருச்செந்தூர் மடப்பள்ளி சமையற்காரனைத் தடுத்து நிறுத்தி, கல்விக் கூடம் சென்று கற்றறியாத ஒருவரைக் கவிஞராக்கி, இன்று முதல் உன்பெயர் வென்றிமாலை கவிராசர் என்று பெயரிட்டு, உனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு இத்திருத்தலத்தில் தல வரலாறை எழுது என்று சொல்லி மறைந்தார்.
தாசியால் தொழுநோய் கொண்டு வாழ்வினைத் தொலைத்து நாதர்
காசிலை வாழ்வ தற்கே வாழ்வதால் பயனு மில்லை
ஏசிடும் ஊரார்க் கஞ்சி கோபுரம் ஏறி வீழ்ந்தார்
மாசிலா மணியாம் கந்தன் கரங்களில் தாங்கி காத்தார். 23
விளைமகளிரிடம் தன் வாழ்க்கையைத் தொலைத்த அருணகிரிநாதர். காசு இல்லாமல் இந்த உலகில் எதுவும் நடக்காது என்பதை உணர்ந்து, இனி நான் வாழ்வதால் எந்த பயனுமில்லை என்று கருதி, அப்படியே வாழ்ந்தாலும் இந்த ஊரார் என்னை ஏளனமாகப் பார்த்து சிரிப்பார் என்ற அச்சத்தில், திருவண்ணாமலை கோபுரத்தின் மேல் ஏறி தன்னை மாய்த்துக் கொள்ள கீழே குதித்தார். அந்த நேரம் தூய்மையான மணிபோன்ற கந்தன் அவரைத் தம் பன்னிரு கரங்களால் தாங்கி உயிரைக் காத்தார்.
அக்கினி யிலுரு வாகி காற்றிலே மிதந்து வந்து
தகடியில் குழந்தை யாகி நிலத்திலே தவழ்ந்து ஓடி
ககனமார் கமாக சென்று உலவிடும் செயந்தி நாதன்
அகக்குடில் வைத்த வர்கள் எமபயம் இன்றி வாழ்வர் 24
தகடி – நீர், ககனம் - ஆகாயம்
சிவனின் நெற்றி நெருப்பிலே உருவாக, காற்றில் மிதந்து வந்து, சரவணப் பொய்கை நீரில் குழந்தை உருவம் பெற்று, நிலத்தில் தவழ்ந்து ஓடி ஆடி விளையாடி, ஆகாயத்தில் வழியாகப் பறந்து சென்று உலவி வரும், ஐம்பூத நாயகனாம் வெற்றி (செயந்தி) நாதனை, உள்ளமாகிய வீட்டில் குடி வைத்து வழிபடுவோர்கள், எமனால் வரும் பயம் நீங்கி வாழ்வர்.
ஆண்மகன் பெற்றெ டுத்த சரவணன் பெயரை சொல்லி
எண்ணிய செயலைச் செய்யத் தொடங்குவீ ராயின் அந்த
விண்ணவர் மகளாம் யானை வேடவர் மகளாம் வள்ளி
திண்ணிய வெற்றி தந்து வாழ்வினை உயர்த்து வாரே 25
சிவனாகிய ஆண் பெற்றெடுத்த (ஆணுக்குப் பிறந்தவன் முருகன்) பிள்ளை சரவணனின் பெயரைச் சொல்லி, நாம் நினைத்த செயலைச் செய்யத் தொடங்கினால், தேவர் குலத் தலைவனாம் இந்திரனின் மகளான தெய்வானை, வேடனின் மகளான வள்ளி ஆகியோருடன் வந்து உறுதியான வெற்றியைத் தந்து நம் வாழ்வினை உயர்த்துவார்.
நீருள வீடு செந்தூர் ஆழியில் பாவம் போக்கி
நேர்ந்திட குறைகள் நீக்கி காத்திடும் இயல்பு டையோன்
பார்வதி தேவி தந்த வேலினால் கூறு ஆக்கி
பாரினை மீட்டு தேவர் இன்னலைத் தீர்த்து றைந்தோன் 26
தன்னில் ஒருபாதி சக்தி கொண்ட வேலினை பார்வதி தேவி முருகனுக்குக் கொடுத்து, சூரபதுமனையும் அவன் சேனைகளையும் வென்றுவா என்று ஆணையிட, சூரனை இரண்டு கூறாகப் பிறந்து அண்டங்களையும் உலகையும் மீட்டு, வாணவர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்த செயந்தி நாதன் கோவில் கொண்ட அறுபடை வீடுகளுள் நீர் வீடாக அமைந்த திருச்செந்தூர் கடலில் நீராட, நம்முடைய ஆணவம் மற்றும் பாவங்கள் எல்லாம் நீக்கி காத்திடுவான்.
சரவணன் தமிழ்வேல் சித்தன் சுதாகரன் கந்த சாமி
குருபரன் குமரன் கந்தன் கதிர்வேல் விசாகன் வேலன்
கிரிசலன் அழகன் செந்தில் சண்முகன் பழநி நாதன்
திருமுகன் கடம்பன் என்று போற்றியே வணங்கு வோமே 27
சரவணன், தமிழ்வேல், சித்தன், சுதாகரன், கந்தசாமி, குருபரன், குமரன், கந்தன், கதிர்வேல், விசாகன், வேலன், கிரிசலன், அழகன், செந்தில், சண்முகன், பழநிநாதன், திருமுகன், கடம்பன் என்று பலவாறு போற்றி திருசெந்தூர் உறையும் முருகனை வணங்கிடுவோம்.