Saturday, August 3, 2024

கொடை

குறள்வெண் செந்துறை

வறுமையின் வகைகள் கண்டு 
வழங்கிடும் வள்ளல் உண்டு
உறுப்புடன் உடம்பும் ஆவி 
கொடுப்பதும் கொடைதான் என்பார்

விருப்புடன் கொடுப்ப தெல்லாம் 
பெற்றவர் மகிழத் தானே
தருமமும் கொடையாய் பெற்றார் 
தரணியில் கண்ணன் அன்றே

இயற்கையின் சீற்றத் தாலே 
இருப்பதை இழந்து விட்டு
தயங்கியே வாழ்வோர்க் கொல்லாம் 
கொடுப்பதும் கொடைதா னன்றோ?

வாணிப நோக்க மின்றி 
இருப்பதை விரும்பி தந்து
ஏணியாய் உதவும் தன்மை 
அறங்களில் சிறந்த தாகும்

ஈதலில் முதன்மை யாக 
உணவினை கொடுத்தல் நன்று
பேதமும் இல்லாக் கல்வி 
கொடுத்தலும் சிறப்பு என்பேன்.

முனைவர் க. அரிகிருஷ்ணன்
பொருளாளர், அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்
150, கிழக்குத் தெரு, இரட்டணை அஞ்சல்
திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம் - 604 306.