‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கோட்பாட்டோடு இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் நடத்தும்
1. நான்காம் ஆண்டு துவக்க விழா
2. நூல்கள் வெளியீட்டு விழா
3. விருதுகள் வழங்கும் விழா
4. மரக்கன்றுகள் நடும் விழா
5. கவியரங்க விழா
என்ற ஐம்பெரும் விழாவிற்கு வருகை தந்துள்ள அனைத்து சான்றோர் பெருமக்களுக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் துவங்கப்பட்டு நான்காம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இத்தருனத்தில், அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் தலைவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தர பழனியப்பன் ஐயா அவர்களின் தாய்மொழியைச் சிறப்பிக்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியுள்ளது.
அதாவது, உலகில் உள்ள பல்வேறு கவிஞர்களைத் திரட்டி, தாய்மொழி குறித்து கவிதைகள் எழுதச் செய்து மாபெரும் உலகச் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், 2024 ஆண்டான இவ்வாண்டில் 2024 கவிஞர்களிடம் இருந்து பெறப்பட்ட 2024 கவிதைகளைத் திரட்டி, ‘தாய்மொழி’ என்னும் தலைப்பில் 1100 பக்கங்கள் கொண்ட மாபெரும் நூல் இன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட உள்ளது.
அமரிக்கா, இலங்கை, கத்தார், ரஷ்யா முதலான நாடுகளில் இருந்தும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கேரளம் முதலான பல மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டக் கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இவ்விழாவிற்கு வருகைத் தந்து ஆசியுரை வழங்க உள்ள திருமடங்கள் அமைத்து, தமிழைத் தரணியெங்கும் கொண்டு செல்வதற்காக, புலமை மிக்க மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இருபெரும் இமயங்களான,
திருப்பேரூர் ஆதினம் இருபத்தைந்தாம் குருமகா சந்நிதானங்கள் கயிலைப் புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கௌரவத் தலைவர் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் ஐயா அவர்களையும்
திருக்கயிலாயப் பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட குருமகா சந்நிதானங்கள் திருப்பெருந்திரு ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஐயா அவர்களையும் முதற்கண் வருக வருக என வரவேற்று வணங்கி மகிழ்கிறேன்.