Monday, February 17, 2025

கல்லாமல் பாகம் படும்

ஒன்று முதலாய் ஆறறிவு
பெற்ற உயிர்கள் யாவையுமே 
நன்றாக செய்யும் தொழில்யாவும்
கற்ற பிறகு செய்தனவே
சின்ன சின்ன எறும்புமுதல் 
மனிதர்க் கூட்டம் எனபலவும் 
முன்னோர் செய்த முறைபடியே 
கண்டு கேட்டு நிகழ்த்தினவே

உண்ணும் உணவு எதுவென்று 
ஆய்ந்து முன்னோர் சொன்னபடி 
உண்டு பசியை தீர்க்கின்றார் 
தாகம் தீர குடிக்கின்றார் 
மண்ணில் நச்சு உயிரினங்கள் 
கடித்தால் கூட மருந்துவகை 
கண்டு நோயை தீர்க்கின்றார் 
பாட்டன் பூட்டன் சொன்னபடி

எல்லாம் முன்னோர் வழிகாட்ட 
யாரும் செய்ய பழகிவிட்டோம் 
எல்லா உயிரும் புணர்ச்சிதனை 
எங்கு கற்றுக் கொண்டனவோ? 
எல்லா உயிரும் இனவிருத்தி
ஒன்றை எண்ணி கலவிகொள்ளும்
கலவிக் காக மனிதஇனம்
கூடி கொச்சை படுத்தியதே