திருமால் அவதாரமும் உயிரின் பரிணாம வளர்ச்சியும்
முனைவர் க. அரிகிருஷ்ணன்
பொருளாளர்,
தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம், இரட்டணை
உலகில்
அதர்மம் அதிகமாகும் பொழுது, அதனைத் தடுப்பதற்காகவும் தர்மத்தை நிலைநாட்டவும்
திருமால் அவதாரம் எடுப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அவ்வகையில் திருமால்
எடுத்ததாகக் கூறப்படும் அவதாரங்கள் இருபத்தி நான்காகும். அவற்றுள்
முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுவது, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம்,
வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம்,
பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற பத்து அவதாரங்கள் மட்டுமே.
இந்தப் பத்து அவதாரத்திற்கும் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு
உண்டு. அவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
உயிரின்
பரிணாம வளர்ச்சி ஆய்வு
சார்லஸ்
ராபர்ட் டார்வின் என்பவர் கடல் வழியே, உலகில் பல இடங்களுக்கும் சென்று,
உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆராய்ந்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகியவற்றின் பல
எலும்புகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்ட போது, அவைகளுக்குள் சில ஒற்றுமைகள் இருப்பதை
அறிந்தார். அவைகளைக் கொண்டு உயிரினங்களின் தோற்றம் எனும் நூலில் விவரித்துள்ளார்.
இந்த டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
பூமியில்
நீர் மட்டுமே சூழ்ந்திருந்த காலத்தில் நீர்வாழ்பவன தோன்றின. பின் நாட்களில் நீர்
வற்றி, நிலம் தென்பட்ட போது, நீரில் வாழும் உயிர்களில் சில நீர் நில வாழ்பவனவாக
மாற்றம் அடைந்தன. அவற்றிலிருந்து ஊர்வன உயிரினங்கள் தோன்றின. பின் பாலூட்டிகளாக
அவை மாற்றம் அடைந்தன. பாலூட்டிகளில் ஒன்றான குரங்கினம் சிந்தனை செய்ய தொடங்கிது.
அதனால் ஆறறிவு பெற்ற மனிதன் தோன்றினான். மற்ற பாலூட்டிகள் போல் அல்லாமல் இரண்டு
கால்களால் மனிதன் நடந்தான். மூர்கமாக வேட்டையாடும் குணம் அவனுக்குள் இருந்தது.
அதனால் வேட்டையாடி மிருகங்களை கொன்று உண்டான். தனித்தனியாக இருந்த மனிதன் குழுவாக
இணைந்தார்கள். தங்களுக்குள் தலைவன் ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் பின் மற்றவர்கள்
சென்றார்கள். அவன் சொல்படி நடந்தார்கள். நதிப்பகுதியில் விவசாயம் செய்து நாகரீக
மனிதனாக மாறினான். கால்நடைகளை விவசாயத்திற்கு பயன்படுத்தினான். அவைகளை காடுகளில்
மேய்ச்சல் செய்து பிழைத்தான். பின் தன்னுடைய அறிவினைப் பயன்படுத்தி தற்போதுள்ள
விஞ்ஞான மனிதனாக மாறிவருகிறான் என்பது பரிணாம வளர்ச்சி வரலாறாகும்.
மச்ச அவதாரம்
பரிமாணவியல்
கொள்கையின்படி நீரில் வாழும் உயிரமான மீனிலிருந்தே உயிரங்களின் தோற்றம் ஆரமித்ததை
குறிக்கிறது. திருமாலின் முதல் அவதாரமும் மீன் அவதாரமாகவே அமைகிறது. இதன்
அடிப்படையில் மனித உயிர்கள் தற்போது, அன்னையின் வயிற்றில் பனிக்குடத்து நீரில்
சிறு அணுவாக நுழைந்து நீந்தி வளர்வதைக் காணலாம்
மீனாய் உருவெடுத்து மண்ணில்
உயிரினங்கள்
தண்ணீரில் தோன்றின என்றுரைக்க –
மானிடர்கள்
அன்னை வயிற்றில் பனிக்குட
நீர்நீந்தி
வந்தார் எனவுரைக்க ஒன்று. திருமால் இருபா இருபது
கூர்ம
அவதாரம்
பரிணாமக் கொள்கையைப்படி இரண்டாம்
படிநிலை, நீர் வாழும் உயிர் நீர் நில வாழும் உயிராக மாற்றம் அடைந்ததாக
கூறப்படுகிறது. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் போது, மேரு மலையை
தாங்கிபிடிக்க திருமால் எடுத்த அவதாரம் ஆமை அவதாரம். இந்த ஆமை நீரிலும்
நிலத்திலும் வாழும் உயிரினம். அது மட்டுமல்லாமல் தலையைத் தூக்கி நான்கு காலில்
நடக்கும் உயிரினம். மனித உயிரும் பனிக்குடத்து நீரில் இருந்து பிரிந்து மண்ணில்
வந்து குழந்தையாக சில திங்கள் இருந்து பின்னர் கவிழ்ந்து நான்கு காலில் தலையைத்
தூக்கி நகரும்.
பிறந்த குழந்தை சிலதிங்கள் செல்ல
புரண்டு கவிழும் நிலையுரைக்க –
நீர்வாழ்
உயிர்கள் நிலம்நோக்கி வந்து
இரண்டிலும்
வாழ்ந்தநிலை சுட்ட இரண்டு திருமால் இருபா இருபது
வராக
அவதாரம்
பரிணாமிவியல் கொள்கைபடி மூன்றாம்
படிநிலை, நீர் நில வாழ்பவையாக இருந்தவை முழுவதும் நில வாழ்பவையாக மாறியதை
குறிக்கிறது. இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த
மூன்றாம் அவதாமான வராக (பன்றி) அவதாரமும் முழுமையாக நிலத்தில் மட்டும் வாழும்
உயிரினமாக விளங்குகிறது. இதுமட்டுமல்லாமல் பன்றி பாலூட்டும் இனத்தைச் சார்ந்தது.
மனிதனும் தன் குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கிறான்.
கவிழ்ந்த குழந்தை கைகாலூன்றி மெல்ல
தவழ்ந்து நகரும் நிலையும் – புவிஉயிர்
நீர்நிலை விட்டுநிலம் வாழ்உயிராய் மாறும்
நிலையும் சொல்ல மூன்று
நரசிம்ம
அவதாரம்
பரிணாமிவியல் கொள்கைபடி நான்காம் படிநிலையில்,
மிருகமாய் இருந்த மனிதன் சிந்தனை திறன் பெற்று, மனிதன் பாதி, மிருகம் பாதியாக
இருந்த தொடக்க நிலையைச் சுட்டுகிறது. இரணியனை அழிக்க திருமால் எடுத்த, தலை
மிருகமாகவும் உடல் மனிதனாகவும் கொண்ட நரசிங்க அவதாரம் இதனை உறுதிப்படுத்துகிறது.
மனித குணமும் மிருக குணமும்
இணைந்து இருப்பதைச் சொல்ல -
உருவில்
விலங்கி லிருந்து மனிதஇனம்
தோற்றினது
சொல்ல எடுத்தது நான்கு
வாமண
அவதாரம் – (மனித
தோற்றம்)
பரிணாமிவியல் படிநிலைகளின் படி, நான்கு காலில் நடந்த
மனிதன் இரண்டு காலில் நடந்தான் என்றும் அவன் ஆரம்பத்தில் குள்ள வடிவத்தில்
இருந்தான் என்றும் அவனிடம் இருந்த மிருக குணம் மறைந்து அறிவுடன் கூடிய மனித குணம்
வளர்ந்தது என்றும் கூறப்படுகிறது. இதனை. திருமால் எடுத்த வாமண அவதாரம்
உணர்த்துகிறது.
நரனாய்நாற் கால்களிலி ருந்திரண்டு
கால்களில்
நேர்நின்ற குள்ள மனிதன் – அறிவுத்
திறனாற்றல் பெற்று வளர்ந்த நிலையை
யுரைக்க எடுத்தது ஐந்து
பரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)
மனிதனாக மாற்றம் அடைந்த பின்பு, ஆயுதங்களைப்
பயன்படுத்தி மிருகங்களை மூர்க்கதனமாக வேட்டையாடி தன்னுடைய தேவையைப்
பூர்த்தி செய்து காட்டிலும் மேட்டிலும் உலவி மகிழ்ச்சியாக வாழ்ந்தான் என்பதை
பரசுராம அவதாரம் குறிக்கிறது.
மகிழ்ச்சியாகக் காட்டில் உலவினான்
என்பதும்
நாகரீ கத்தின் முதற்படி – யாக
மனிதன்தன் தேவைக்கு ஆயுதம்
கைக்கொண்டான்
என்பதும் உரைத்திடும் ஆறு
ராம
அவதாரம்
தனி மனிதனாக காட்டில் வாழ்ந்த
மனிதன் குடும்ப அமைப்பில் நுழைந்து, குழுக்களாக இணைந்து, கடமைகளைச் செய்து, அதற்கொரு
தலைவனைத் தேர்ந்தெடுத்து, அத்தலைவன் சொற்படி நடந்த நிகழ்வை ராம அவதாரம்
உணர்த்துகிறது
காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்த
நிலையுரைக்க
வீடு குடும்பம் உறவு - கடமை
தலைவனைத் தேர்ந்தெடுத்தல் என்று
பலநிலை
சொல்ல எடுத்தது ஏழு
பலராம
அவதாரம்
–(விவசாயம் செய்யும் மனிதன்)
காட்டில் வாழ்ந்த மனிதன் காட்டை
அழித்து, நாட்டை உருவாக்கி, விவசாயம் செய்யும் நிகழ்வைக் காட்டுவனவாக திருமாலில்
எட்டாம் அவதாரம் உணர்த்துகிறது.
நாடு சமைதிட காடு திருத்தி
குடும்பம் அமைத்து பசிபோக்க -
கிட்டும்
உணவுவகை தேடி உழுது பயிர்செய்தும்
வந்த நிலையுரைக்கும் எட்டு
கிருஷ்ண
அவதாரம்
விவசாயம் செய்யும் மனிதன் ஆடு, மாடுகளான
கால்நடைகளை வளர்த்து. தங்களின் வேலைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தியும் அவற்றின்
பால் பொருட்களை உணவாக உட்கொண்ட மனிதர்களின் பரிணாமத்தினை கிருஷ்ண அவதாரம் குறிக்கிறது..
உழவுசெய்தும் கால்நடை ஓம்பியும்
வாழ்ந்தவன்
வாழும் முறைவகுத்த தன்படி –
வாழ்ந்ததும்
தான்சார்ந்த மக்களைப் பாதுகாத்து
வந்ததும்
சொல்ல எடுத்தது ஒன்பது
கல்கி அவதாரம்
நல்லொழுக்கம் கெட்டு பொறாமை, பேராசை, வன்மம், கொலை, காமம், சூழ்ச்சி,
பொறாமை, சுயநலம், நீதி நெறி தவறல், ஆணவம் ஆகியவற்றால் மனிதர்கள் தன்னிலை
மறந்து வாழும் காலத்தில் அக்கரமங்கள் மிக்கெழும் காலத்தில் அவற்றை அழிப்பதற்காக
எடுக்க இருக்கும் அவதாரம் கல்கி. இப்போது மேற்கண்ட அநீதிகள் அனைத்தும் மக்களிடையே
காணப்படுகிறது. இதனை அழிக்க திருமால் அவதாரம் செய்ய வேண்டியதில்லை. அவர்களாகவே
ஆயுதங்களையும் அணுகுண்டுகளையும் பயன்படுத்தி மாய்ந்து போவார்கள். இந்த ஆயுத,
அணுகுணடு அழிவையே கல்கி எனலாம்.
பேராசை வன்மம் கொலைகாமம் சூழ்ச்சி
பொறாமை சுயநலம் நீதி – நெறிதவறல்
என்பன மிக்கெழும் காலத் ததைமாய்க்க
எடுக்க இருப்பது பத்து
முடிவுரை
மேற்கண்ட பரிணாம வளர்ச்சிப்
படிநிலைகளின்படி திருமால் அவதாரங்களும் மனித வளர்ச்சி நிலைகளும் ஒத்துப் போவதை நன்கு
உணரலாம்.