Monday, October 14, 2019

கலிவெண்பாகள்

பனிக்கட்டி இதயத்தை பார்வைதீயால் பற்றவைத்தாய்

கனிரசமும் இதழ்ததும்ப கள்ளுண்ண மயங்கிநின்றாய்

குறும்புசெய்யும் காற்றுதீண்டி தேவையென மூழ்கிவிட்டாய்

சுறும்பின்தேன் தெகுட்டுமோ சொல்




தொடர்வண்டி போலமனம் நினைவுகளைச் சுமந்தோட

தொடர்பில்லா மனிதரைப்போல் அன்புகாட்ட மறுக்கின்றாய்

கனவுகளாய்க் காலங்கள் கடந்துவிட மௌனங்கள்

மனசுக்குள் பெருஞ்சுமையாய் ஆனதடி உனைக்கண்டு

அசைகிறேன் மாநகரப் பேருந்தாய் உனக்குள்ளே

இசைவின்றி இயங்குதடி மனம்.



கீச்சென்ற பறவைகளின் ஓசையிலே உன்மௌனப்

பேச்சதனைக் கேட்கின்றேன் வார்த்தைகள் சொல்லாத

அர்த்தத்தை உன்கண்களில் புரிந்துகொண்டேன் மனசுக்குள்

போராட்டம் தொடர்ந்துவர குழந்தைபோல் வாய்மூடி

அழுகிறேன் புன்னகைத்துப் புறத்தார்க்குப் பொய்ச்சொல்லி

அழுகிறது தினமும் மனசு.



சங்கீன்ற முத்தினுக்கும் சிப்பியின்நல் முத்தினுக்கும்

யானைதரும் தந்தமெனும் முத்தினுக்கும் பாம்புமிழும்

முத்தினுக்கும் நெல்மணியின் முத்தினுக்கும் விலையுண்டு

இருட்டறையில் கள்ளூறும் இதழ்கொண்டு நீதந்த

முத்தத்திற்கு விலையுண்டோ? சொல்.



நீவரும் பாதைநோக்கி தினம்பார்வை வந்துபோகும்

நீபேசும் வார்த்தையிலே என்அர்த்தம் கலந்திருக்கும்

நீவளர்த்த செடிகூட என்பூவைப் பூத்திருக்கும்

நீயுண்ணும் வெற்றிலையில் என்நாக்கு சிவந்துவிடும்

நீவுரசிப் பூசுகின்ற மஞ்சளாக மாறிவிட்டேன்

ஏனிந்த மாற்றங்க ளோ?



கண்களினால் கத்திசண்டை செய்துஎன்தன் இதயத்தைப்

புண்ணாக்கிப் போனவளே உதட்டளவில் சிரிப்பைவைத்து

வார்த்தைகளில் நஞ்சைவைத்து தவணையிலே கொல்வதேனோ?

ஒருவரிடம் அன்புகாட்டும் மனமிருந்தால் அனைவருக்கும்

பிடித்துவிடும் இதில்சந்தே கமேன்?



வாத்தைகளைத் தேடித்தே டிஅலைகிறேன் உன்பார்வை

அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நீசொல்லும் மௌனங்களுக்கு

என்அகரா தியைப்புரட்டிப் பார்க்கின்றேன் அதுஆயிரம்

மௌனஅர்த்தங் களைச்சொல்கி றது.



மழைமேகம் கால்தூவ ஏழைமனம் நிறைவுகொள்ளும்

வாழுகின்ற உயிர்த்துளியைத் தொழில்செய்ய சேமித்து

உழைப்பினைத் தூசுதட்டி சோம்பலோட்டி பயிர்செய்வான்

ஏழையவன் தவங்கிடந்து விளைத்திட்ட பொன்மணிக்கு

விலைசொல்லும் உரிமைகூட இலாதவனாய் கைக்கட்டி

மலைபோல நம்பிடுவான் அதை.



அன்புகொண்ட உள்ளங்கள் இணைவதுதான் இல்வாழ்க்கை

அன்புகொண்டு இணைந்துவிட்டால் ஏசுதடீ சமூகமிதை

பணக்காரன் பார்ப்பதில்லை சாதிமதம் கிராமமோ

உயிரோடு கொள்ளுத டி.



இரவில்நீ சந்திரனாய் பகலில்நான் சூரியனாய்

வருகின்றோம் இருவரும் சந்தித்தால் அமாவாசை

நாம்தனிமை விரும்பிகளாய்த் தவிக்கின்றோம் சேர்வதற்கு

நமைச்சேர்க்க கிரகங்கள் வரும்.



ஏமனமே கலங்காதே சமூகமுனை ஏசினாலும்

நேசிப்பவர் மதியாமல் போனாலும் தேற்றிக்கொள்

நடப்பதெல்லாம் நன்மைக்கே வருந்தாதே கவலைக்கு

விடைகொடுத்து காத்திருந்தால் கவலைதீரும் நாள்விரைவில்

நீயெடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும்

நீசொல்லும் அறிவுரைகள் அலட்சியம் ஆனாலும்

கவலைவேண்டாம் உனைமதிக்கும் நாள்வரும் அன்றுஉந்தன்

வார்த்தைக்கும் மதிப்பு வரும்.



அலைபாயும் மனம்கொடுத்து அதற்குள்ஏன் அன்புவைத்தாய்

நிலையில்லாத் துன்பங்கள் நெஞ்சத்தைத் தாக்குதே

வேண்டாத சந்தேகம் தவறான புரிதல்கள்

உனக்குள்ளும் எனக்குள்ளும் போராட்டம் தொடர்ந்துவர

அலையலையாய் நினைவுகள்நம் தூக்கத்தைக் கெடுக்கிறது

கலங்காத நிலைவேண்டும் நமக்கு.



ஊர்க்கூடி அழுதிடுவார் உறவுசொல்லி நடித்திடுவார்

பாரிலில்லை உனைப்போல ஒருத்ததென்பார் மறுநொடியில்

பேர்நீக்கிப் பிணமென்பார் ஆகட்டும் வேலையென்பார்

துர்நாற்றம் வீசுமுன்னே கட்டையிலே தீமூட்டிச்

சுடுமென்பார் வேகுமுன்னே ஊர்த்திரும்பி நடந்திடுவார்

தடிகொண்டு அடித்திடுவார் நீர்மூழ்கி நினைப்பொழிப்பார்

மூச்சடங்கிப் போனபின்னே காண்.



பணக்காரன் சாப்பிடுற வெள்ளித்தட்டு விழாக்கால

தினத்தன்று நீலவான் சுட்டுவைத்த வெண்தோசை

குடிசைவாழ் மக்களேற்றா இருள்விலக்கி ஏழைகளின்

எட்டாத கொம்புத்தேன் வானமகள் அலங்கரித்த

நெற்றிப்பொட் டுஇரவினைக் காதலிக்கும் பருவப்பெண்

காதலரின் உல்லாசப் படகிரவு பயணத்து

வழித்துணைவன் கவிஞனின் கற்பனை நீரூற்று

ஏழுலகம் போற்றும் நிலவு.