Saturday, December 14, 2019

திருமுறைகளில் இந்தளப் பண் யாப்பியல்

திருமுறைகளில் இந்தளப் பண் யாப்பியல்
தொல்காப்பியர் குறிஞ்சிப்பண், முல்லைப்பண், மருதப்பண், செவ்வழிப்பண், பாலைப்பண் என ஐந்து நிலங்களுக்கு உரியதாக ஐந்து பண்களைக் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியங்களிலும் பண்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையிலும் பிற பகுதிகளிலும் இசை பற்றிய குறிப்புகள் இருப்பதாக உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
பண்ணிசைக்கேற்ப தாளம் அமைத்து பொருள் பொதிந்த பாடல்களை மக்களிடையே பரப்பியவர்கள் பக்தி இலக்கியத்தினர். இவர்கள் 103 பண் வகைகளுள் 24 வகைகளை தாம் பாடிய பாடல்களில் கையாளப்பட்டுள்ளனர். அவற்றுள் இந்தளம் பண்ணும் ஒன்று. இது தொல்காப்பியர் குறிப்பிடும் செவ்வழி என்ற தாய்ப் பண்ணில் பிறந்ததால் செவ்வழிப்பாணி. என்ற பெயரும் இதற்குண்டு
இந்தளப் பண்ணின் வேறு பெயர்கள்
தேவாரத்திலும், ஆழ்வார் பாசுரங்களிலும் பெருவழக்குப் பெற்ற இந்தளம் பண். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இன்றளவும் பாடப்பட்டுவரும் ஒரு பண்ணாக விளங்குகிறது. இப்பண்ணின் வேறு பெயர்களாக, மருள், தடவு, நெய்தற்பாணி, செவ்வழிப் பாணி, நோதிறம், துக்கராகம், வடுகு, பண்நீர், கானல் பாணி, நெய்தல் குழல், கைக்கிளைப் பாணி, மருள் இந்தளம், இந்தளம், இந்தோளம் எனப் பதினான்கு பெயர்கள் உள்ளன.
பக்தி இலக்கியங்களில் இந்தளம் பண்
மென்மையான சுரங்மான இவ்விந்தளம் பண், ஒர் அவலச்சுவைப் பண்ணாகவும், மாலை நேரப் பண்ணாகவும், நெய்தற் பண்ணாகவும் விளங்குகிறது. இப்பண்ணில் நயன்மார்களில் மூத்தவரான காரைக்கால் அம்மையார் இயற்றிய பதினோராம் திருமுறையில் அமைந்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் (எட்டி இலவம்) பதினொரு பாடலும், திருஞான சம்பந்தர் இயற்றிய இரண்டாம் திருமுறையில் அமைந்த 1 முதல் 39 பதிகங்கள் வரை அமைந்த 39 பதிகங்களில் 430 பாடல்களும் திருநாவுக்கரசர் இயற்றிய நான்காம் திருமுறையில் 16 முதல் 18 பதிகங்கள் வரை அமைந்த மூன்று பதிகங்களில் 31 பாடல்களும் சுந்தரர் இயற்றிய ஏழாம் திருமுறையில் அமைந்த 1 முதல் 12 வரை உள்ள பதிகங்களில் 134 பாடல்களும் ஒன்பதாம் திருமுறையில் அமைந்த திருவாலி அமுதனார் பாடிய திருவிசைப்பாவில் (அல்லாய் பகலாய்)  பதினொரு பாடல்கள் என மொத்தம் 617 பாடல்கள் அமைந்துள்ளன.
இந்தளம் பண்ணில் அமைந்த யாப்பு வகைகள்
பன்னிரு திருமுறைகளில் காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், திருவாலி அமுதனார் ஆகிய ஐவர் மட்டுமே இந்தளம் பண்ணில் பாடல்கள் பாடியுள்ளனர். இப்பாடல்கள் அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், கலித்துறை, கலிவிருத்தம் ஆகிய பாவினங்களில் அமைந்துள்ளன.
அறுசீர் விருத்தம்(43)
அறுசீரடி நான்காய் அமைந்த ஆசிரிய விருத்தத்தில் நாற்பத்து மூன்று பாடல்கள் இந்தளம் பண்ணில் அமைந்துள்ளன. இப்படல்களை சுந்தரர், காரைக்கால் அம்மையார், திருவாலி அமுதனார்  ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இப்பாடல்கள் இரண்டு வகை வாய்பாடுகளில் அமைகின்றன. முதல் வகை, மா மா மா மா மா காய் என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது.
இன்பம் உண்டேல் துன்பம்
உண்டு ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்ன மோழை
மையான் முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள்
கொன்றை அடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள்
பாடி என்ப தடைவோமே.(7.7.08)

இவ்வாய்பாட்டில் 33 பாடல்கள் அமைந்துள்ளன. இவ்வமைப்பில் சுந்தரர்(11), காரைக்கால் அம்மையார்(11), திருவாலி அமுதனார்(11) ஆகிய மூவரும் ஒவ்வொரு பதிகம் பாடியுள்ளனர்.
சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
ஆடப் பாவம் நாசமே.  (11.11)

இப்பாடல் மேற்கூறப்பட்ட வாய்பாட்டில் அமைந்திருப்பினும் ஈற்றடியின் ஈற்றுச் சீர் கூவிளம் என்ற வாய்பாட்டைப் பெற்று வந்துள்ளது. இவ்வமைப்பில், காரைக்கால் அம்மையார், திருவாலி அமுதனார் ஆகியோர் பாடல்கள் அமைகின்றன. இரண்டாவது வகைப் பாடல்கள், விளம் மா தேமா விளம் மா தேமா என்ற வாய்பாட்டில் அமைந்தவை,
இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.(7.8.1)
எழுசீர் விருத்தம்(21)
எழுசீரடி நான்காய் அமைந்த ஆசிரிய விருத்தத்தில் இருபத்தொரு பாடல்கள் அமைந்துள்ளன. இப்படல்களை சுந்தரர், காரைக்கால் அம்மையார், திருவாலி அமுதனார்  ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இப்பாடல்கள் இரண்டு வகை வாய்பாடுகளில் அமைகின்றன. முதல் வகை, மா மா மா மா மா காய் என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது. முதல் வகை,
கூறு நடைக்குழி கட்பகு வாயன
பேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
வாணநின் றாடவி ரும்புமிடம்
ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை
யோர்பெரு மான்உமை யாள்கணவன்
ஆறு சடைக்குடை அப்பனி டங்கலிக்
கச்சிய னேகதங் காவதமே.(7.10.2)
‘மா விளம் விளம் விளம் விளம் விளம் காய்என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது. இவ்வடிவத்தில் பத்து பாடல்கள் உள்ளன. இரண்டாவது வகை,
எண்சீர் விருத்தம் (72)
எண்சீரடி நான்காய் அமைந்த ஆசிரிய விருத்தத்தில் எழுபத்திரண்டு  பாடல்கள் காணக்கிடைக்கின்றன. இப்படல்களை திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய இருவரும் பாடியுள்ளனர். இப்பாடல்கள் முழுவதும் மாச்சீர்களில் அமைந்துள்ளன.
மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும்
மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்
இனவஞ் சொலிலா இடைமா மருதும்
இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங்
கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்
தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின்
தவமாம் மலமா யினதா னறுமே. (2.39.06)

மூடாய முயலகன் மூக்கப் பாம்பு
முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய்
பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்
பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந்
துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. (7.2.03)
கலித்துறை (133)
ஐஞ்சீரடி நான்காய் அமைந்த கலித்துறையில் நூற்று முப்பத்து மூன்று  பாடல்கள் கிடைக்கின்றன. இப்படல்களை திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல்கள் இரண்டு வாய்பாடுகளில் அமைந்துள்ளன. முதல் வகை, “மா விளம் விளம் விளம் விளம் என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது.
கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.(2.4.1)
இவ்வாய்பாட்டமைப்பில் 122 பாடல்கள் உள்ளன. இரண்டாவது வகை, “மா விளம் விளம் விளம் தேமா என்ற வாய்பாட்டில் அமைந்தவை.
நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலைத்
தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே.(2.38.03)  
இவ்வாய்பாட்டில் 11 பாடல்கள் அமைந்துள்ளன.
கலிவிருத்தம் (348)
நாற்சீரடி நான்காய் அமைந்த கலிவிருத்தில் முந்நூற்று நாற்பத்தெட்டு  பாடல்கள் கிடைக்கின்றன. இப்படல்களை தேவார மூவரும் பாடியுள்ளனர். இப்பாடல்கள் எட்டு வாய்பாடுகளில் அமைகின்றன. முதல் வகை, “காய் விளம் விளம் விளம் என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது.
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே. 2.11.05  
இவ்வாய்பாட்டில் அறுபத்தாறு பாடல்கள் உள்ளன. இரண்டாவது வகை, மா புளிமா புளிமா புளிமா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது
நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.(2.17.01)      
காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய்
பாலோ டுநெய்யா டியபால் வணனே
வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே.(2.23.03) 
இவ்வாய்பாட்டில் எண்பத்தெட்டு பாடல்கள் கிடைக்கின்றன. இவ்வமைப்பில் வரும் பாடல்கள் நேரசையில் தொடங்கின் 11 எழுத்துகளையும் நிரையசையில் தொடங்கின் 12 எழுத்துகளையும் பெற்று அமைகின்றன. மூன்றாவது வகை, மா விளம் மா விளம் என்ற வாய்பாட்டில் உள்ளது.
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
திலகு மான்மழு வேந்தும் அங்கையன்
நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத்
துலவி னான்அடி யுள்க நல்குமே.(2.27.01)     
இவ்வாய்பாட்டில் நாற்பத்து நான்கு பாடல்கள் அமைந்துள்ளன. நான்காவது வகை, காய் காய் காய் மா என்ற வாய்பாட்டையுடையது.
வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
கண்டவனி ருப்பதுக ருப்பறிய லூரே.(2.31.02) 
இவ்வாய்பாட்டில் அறுபத்தாறு பாடல்கள் கிடைக்கின்றன. இப்பாடலமைப்பில் அமைந்தவை, நேரசையில் தொடங்கின் 14 எழுத்துகளையும் நிரையசையில் தொடங்கின் 15 எழுத்துகளையும் பெற்று வருகின்றன. ஐந்தாவது வகை, மா மா மா காய் என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது.
சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித் தகருத்தே.(2.37.02)      
இவ்வாய்பாட்டில் முப்பத்து மூன்று பாடல்கள் கிடைக்கின்றன. இவ்வாறு வரும் பாடல்கள் நேரசையில் தொடங்கி 12 எழுத்துகளையும் நிரையசையில் தொடங்கி 13 எழுத்துகளையும் பெற்றுள்ளன. ஆறாவது வகை, வெண்டளையில் அமைந்தவை.
முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்
பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே. 4.17.9
ஒன்றுகொ லாமவர் சிந்தையு யர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே. 4.18.1
மேற்கண்ட பாடல்களை மா, விளம், காய்ச்சீர்கள் விரவி வெண்டளைகள் பெற்று வந்துள்ளதைக் காணலாம். இவ்வமைப்பில் நாவுக்கரசர் பாடிய முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெணைத் தென்பால்வெணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 7.1.01
இப்பாடல், “கனி கனி கனி தேமா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது. இவ்வமைப்பில் சுந்தரர் பாடிய பத்து பாடல்கள் கிடைக்கின்றன.
மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ. 7.11.6
இப்பாடல், விளம் விளம் விளம் மா  என்ற அமைப்பில் உள்ளது. இவ்வமைப்பில் பத்து பாடல்கள் உள்ளன.
பட்டியல்

முடிவுரை
தொல்காப்பியர் குறிப்பிடும் நெய்தல் பண்ணான செவ்வழிப்பண்ணிலிருந்து தோன்றிய இந்தளம் பண்ணில், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், காரைக்கால் அம்மையார், திருவாலி அமுதனார் ஆகிய ஐவரும் பாடல்களைப் பாடியுள்ளனர். திருமுறையில் இவர்கள் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 617 ஆகும். இப்பாடல்கள், மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர்களை மிகுதியாகப் பெற்றும் கனிச்சீர் விரவியும் அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரியவிருத்தங்களிலும், கலித்துறை, கலிவிருத்தங்களிலும் அமைந்துள்ளன.

 முனைவர் க. அரிகிருஷ்ணன்,
8, கிழக்குத் தெரு,
இரட்டணை அஞ்சல்
திண்டிவனம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
9842036899
harigrettanai1977@gmail.com