பொருள் இலக்கணம்
Ø பொருள்
இலக்கணம் என்பது தமிழ் மொழிக்கே சிறப்பாக
உரிய இலக்கணம் ஆகும். ஏனெனில், பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற
மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை.
Ø தமிழ்
மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களின் பாடுபொருளுக்கு எழுதப்பட்ட இலக்கணமே பொருள் இலக்கணம்
ஆகும்.
Ø பழங்காலத்தில்
தமிழகத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியம் என்ற இலக்கியத் தொகுப்புக்கு எழுதப்பட்டதே பொருள்
இலக்கணம் ஆகும்.
Ø ஓர்
ஆணும் ஒரு பெண்ணும் கொள்ளும் காதல் அகப்பொருள் எனப்பட்டது.
Ø போர்,
வீரம், இரக்கம், நிலையாமை, கொடை, கல்வி முதலியவை எல்லாம் புறப்பொருள் எனப்பட்டன.
புறப்பொருள்
ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச்
சுட்டி அவனுடைய வீரம், போர், தூது, வெற்றி,
கொடை முதலியவற்றைப் பாடுவது மரபு புறப்பொருள் ஆகும்.
அகத்திணை,
புறத்திணை ஒப்புமை
Ø அகப்பொருள்
பாடல் போலவே புறப்பொருள் பாடல்களும் திணை, துறை அடிப்படையில் அமைந்துள்ளன.
Ø எனினும்,
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
போன்ற இலக்கணங்கள் புறப்பொருளுக்கு இல்லை.
Ø புறப்பொருள்
திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை.
Ø போர்
செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து
சென்று போரிடுவர்.
Ø அவர்கள்அணிந்து
செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன.
பூக்களும்
திணைகளும்
திணைகளாகச் சொல்லப்படும் நிலத்தில் மிகுதியாக பூக்கின்ற
நிலப்பூவையே அத்திணைகளின் பெயர்களாக வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,
மலைகளில்
பூக்கின்ற - குறிஞ்சிப் பூவை - குறிஞ்சித்திணை எனவும்
காடுகளில்
பூக்கின்ற - முல்லைப் பூவை - முல்லைத்திணை எனவும்
வயல்களில்
பூக்கின்ற - மருதப் பூவை - மருதத்திணை எனவும்
நீர்நிலைகளில் பூக்கின்ற -
நெய்தல் பூவை - நெய்தல்திணை எனவும்
வரண்டநிலங்களில் பூக்கின்ற - பாலைப்
பூவை - பாலைத்திணை எனவும்
அகத்திணைகள் போலவே புறத்திணைகளும் பூக்களின் பெயர்களை
அடிப்படையாகக் கொண்டவையே.
புறத்திணைப்
பிரிவுகள்
புறத்திணையைத் தொல்காப்பியம் ஏழு என்றும் புறப்பொருள்
வெண்பாமாலை பன்னிரண்டு என்றும் வகைப்படுத்துகின்றன.
தொல்காப்பிய
நெறி
பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில்,
அகப்பொருளில் உள்ள திணைகளுக்கேற்ப, புறப்பொருளில் உள்ள திணைகளையும் ஏழு என வகைப்படுத்துகிறது.
1.
வெட்சித்
திணை
2.
வஞ்சித்
திணை
3.
உழிஞைத்
திணை
4.
தும்பைத்
திணை
5.
வாகைத்
திணை
6.
காஞ்சித்
திணை
7.
பாடாண்
திணை
புறப்பொருள்
வெண்பாமாலை நெறி
தொல்காப்பியத்திற்குப் பின்னர் வந்த புறப்பொருள்
வெண்பாமாலை, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண்,
பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என பன்னிரண்டு திணைகளாகப் பகுத்துகூறுகிறது.
வெட்சி நிரைகவர்தல்,
மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற்
செல்வது வஞ்சியாம் – உட்கார்
எதிரூன்றல்
காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த
லாகும் உழிஞை.
அதிரப் பொருவது
தும்பை ஆகும்
போர்க்களத்து
மிக்கார் செருவென்றது வாகையாம்
அத்திணைத்
தொழிலும் அத்திணைப் பூவும்
அப்பெயர் பெறுதல் அந்நிலத்து உரியவே- (திவாகர நிகண்டு)
புறப்பொருள்
திணைகள் - 12
1. வெட்சி - பகைவர்
பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர்
கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
3. வஞ்சி - பகைவன்
நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து
வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம்
எதிர்சென்று
தடுத்தல்.
5. நொச்சி - பகைவர்,
கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய
கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
7. தும்பை - இரு
திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர்
புரிதல்.
8. வாகை - பகைவரை
வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
9. பாடாண் - ஆண்மகனின்
கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை
முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி
முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின்
பொதுவானவற்றையும்
அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
11. கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும்
ஒருவரிடத்து
மட்டும் தோன்றும் அன்பு
12. பெருந்திணை
- பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும்
தலைவியும்
அல்லாதாரிடத்து உண்டாகும் அன்பு
புறத்திணைகளுக்குரிய
அகத்திணைகள்
அகத்திணைகள் ஏழற்கும் ஏழு புறத்திணைகளை இணைத்து இன்னின்ன
அகத்திணைகளுக்கு இன்னின்ன புறத்திணைகள் உரியனவாக
கூறப்படுகின்றன. அவ்வகையில்,
1.
வெட்சி,
குறிஞ்சித்திணையின் புறத்திணை
2.
வஞ்சி,
முல்லைத்திணையின் புறத்திணை
3.
உழிஞை,
மருதத்திணையின் புறத்திணை
4.
தும்பை,
நெய்தத்திணையின் புறத்திணை
5.
வாகை,
பாலைத்திணையின் புறத்திணை
6.
பாடாண்,
கைக்கிளையின் புறத்திணை
7.
காஞ்சி, பெருந்திணையின் புறத்திணை
வெட்சியும் குறிஞ்சியும்
Ø வெட்சியாகிய
புறத்திணைக்கு குறிஞ்சியாகியஅகத்திணை புறமாகும்.
Ø பகை
நாட்டு வீரர்கள் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும்போது குறிஞ்சி நிலமாகிய மலை மலைசார்ந்த பகுதியில் ஓட்டிச் செல்வர்.
Ø மேலும்
தலைவனும் தலைவியும் (யாமம்) நல்லிரவில் சந்தித்தல் குறிஞ்சித்திணை ஒழுக்கம் அதைப்போலவே
பகை ஆநிரைகளை நல்லிரவிலேயே கவர்ந்துச் செல்வர் ஆகவேதான் வெட்சி குறிஞ்சிக்குப் புறமாயிற்று.
Ø வெட்சி
தானே குறிஞ்சியது புறனே – (தொல். புறம். நூ. 1)
வஞ்சியும்
முல்லையும்
Ø வஞ்சியாகிய
புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறமாகும்.
Ø படையெடுத்துச்
செல்லும்போது படை இளைப்பாறவும் நீர் அருந்தி, உணவு சமைத்து உண்ணவும், நிழல் சூழ்ந்த
இடம் தேவைப்படும்.
Ø நிழல்
சூழ்ந்த காடும், கார் காலத்தில் வேண்டுமளவு நீரும் தேவைப்படுவதால் முல்லைக்கு வஞ்சி
புறத்திணையாயிற்று.
Ø மேலும்
தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் நிலையும் இங்குப் போர்க்களத்தில் வெற்றிக்காகக்
காத்திருக்கும் வீரனுக்குப் பொருந்தும்.
Ø வஞ்சி
தானே முல்லையது புறனே – (தொல். புறம். நூ. 6)
உழிஞையும்
மருதமும்
Ø உழிஞையாகிய
புறத்திணை மருதமாகிய அகத்திணைக்குப் புறமாகும்.
Ø வஞ்சியில்
போரிட்டுத் தோற்ற வேந்தன், தன் நாடு சென்று அரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டிருப்பான்.
Ø போரிட்டு
வென்ற வேந்தன், பகை நாட்டில் புகுந்து இரவில் முற்றுகையிடுவான். போரிடும் காலம் விடியற்காலமாகும்.
Ø மருதத்
திணையில் ஊடல் கொண்ட மகளிர், கணவன் மார்களுக்குக் கதவடைத்துத் தனிமையில் இருப்பர்.
Ø தலைவனும்
விடியற்காலையில் வந்து கதவினைத் திறந்து உள்புக நினைப்பது மருத ஒழுக்கமாகும். ஆகவேதான்,
உழிஞை மருதத்திற்கு புறமாயிற்று.
Ø உழிஞை
தானே மருதத்துப் புறனே – (தொல். புறம். நூ. 8)
தும்பையும் நெய்தலும்
Ø
தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறமாகும்.
Ø
இருபெரும் வேந்தரும் ஒரு களத்தில் போரிடுவர். அதற்கு, களரும் மணலும்
பரந்த நிலமே போரிடும் களமாக அமையும். அவ்வாறு போரிடுவதற்குப் போதிய இடம் கடலைச் சார்ந்த
மணல் பகுதியாக இருப்பது சிறப்புடையது
Ø
கதிரவன் மறையும் காலம் போர் முடியும் நேரமாகும். எனவே நெய்தலுக்கு உரிய
எற்பாடு நேரமே தும்பைக்கும் உரியதாயிற்று.
Ø
மேலும் போர்க்களம் சென்ற காதலன் உயிருடன் திரும்பி வருதல் அவ்வளவு உறுதியில்லை.
எனவே நெய்தலின் உரிப்பொருளாகிய இரங்கலும் இரங்கல் நிமித்தமும் தும்பைக்குப் பொருந்துவதாயின.
Ø
தும்பை தானே நெய்தலது புறனே – (தொல். புறம். நூ. 8)
பாலையும் வாகையும்
Ø வாகை என்பது வெற்றியைக் குறிக்கும். ஆகவேதான், வாகைத் திணை வெற்றிக்கடவுளை உடைய பாலை என்னும் அகத்திணைக்குப்
புறமாகும்.
Ø பாலை தனக்கென ஒரு நிலமின்றி எல்லா நிலத்திலும் வறட்சிக் காலத்தில் உருவாகும்.
அதுபோல வாகையும் எல்லா நிலத்திலும் நிகழ்வது.
Ø காதலுற்ற தலைவனும் தலைவியும் புணர்ச்சியினின்று நீங்கி இல்லறம் நிகழ்த்தி,
பொருள் தேடுவதற்காகப் பிரிவது பாலைத் திணை யாகும். வாகையில் புகழ் எய்துவதற்காக, வெற்றி
பெற்ற வேந்தன் துறக்கம் (வீடுபேறு) பெறும் கருத்தினால் பிரிவான். எனவே இரண்டிலும் பிரிவு
உண்டு.
Ø பாலை அறக்காதலை வளர்த்து, மீண்டும் இன்பத்தை மிகுவிப்பது போல, வாகை
மறக் காதலை வளர்த்து வெற்றி இன்பம் விளைவிக்கிறது.
Ø பாலைக்குரிய பெரும்பொழுதும், சிறுபொழுதுமே போர் நிகழ்ச்சி முடிவு பெறுதற்குச்
சிறந்தனவாதலின் நிலம், பொழுது என்னும் இரண்டு முதற்பொருள்களால் வாகை பாலைக்குப் புறமாயிற்று.
Ø எத்துறையிலும் வெற்றி காண வேண்டுமாயின் தலைவியைப் பிரிந்தே ஆதல் வேண்டும்.
எனவே உரிப்பொருளாலும் புறமாயிற்று
Ø வாகை
தானே பாலையது புறனே – (தொல். புறம். நூ. 15)
பாடாண் திணையும் கைக்கிளையும்
Ø பாடாண் திணை, கைக்கிளையின்
புறத்திணையாகும்.
Ø கைக்கிளையாவது
ஒருப்பக்கமாக நிகழும் ஒழுக்கமாகும்.
Ø அதுபோல, பாடாண்திணையில்
அரசர், புலவர் செயல்பாடுகளும் ஒரு பக்கமாக நிகழ்கின்றன.
Ø ஒருவருக்கோ, ஒரு
நிலத்திற்கோ, ஒரு பொழுதுக்கோ உரியதாகாமல் எல்லா மக்களுக்கும் எல்லா நிலத்திற்கும்,
எல்லாப் பொழுதுக்கும் உரியது.
Ø பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
– (தொல். புறம். நூ. 20)
காஞ்சியும் பெருந்திணையும்
Ø காஞ்சித்திணை அகத்திணையாகிய
பெருந்திணைக்குப் புறத்திணையாகும்.
Ø பெருந்திணை என்பது
பொருந்தா ஒழுக்கமாகும்.
Ø காஞ்சி என்பது
நிலையாமையை உயைது.
Ø நன்றல்லாத சிறப்பாவது
செயலால் நன்றல்லாதது போல் தோன்றி, கொள்கையால் சிறந்திருத்தல். அன்பின் ஐந்திணைகளில்
பெருந்திணையாகிய மடல் ஏறுதல் போல்வன வரின் அவற்றிற்குப் புறமாக ஒதுக்கப்படுதல் போல,
வெட்சி முதலிய புறத்திணைகளில் நிலையாமை உணர்வு வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுதலின், காஞ்சி
பெருந்திணைப் புறமாயிற்று.
Ø காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
– (தொல். புறம். நூ. 20)
முனைவர்
க. அரிகிருஷ்ணன்
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
அரசு மேல்நிலைப் பள்ளி,
இரட்டணை – 604 306
விழுப்புரம் மாவட்டம்
9842036899
harigrettanai1977@gmail.com