Saturday, December 14, 2019

தொகாநிலைத்தொடர்

தொடர்
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாக நின்று பொருள் தருவது தொடர் எனப்படும்.  இதனைச் சொற்றொடர் என்றும் கூறுவர்.
தொடர் வகைகள்
இத்தொடர் இரண்டு வகைப்படும். அவை, தொகாநிலைத்தொடர், தொகைநிலைத் தொடர் என்பனவாகும்.
தொகா          -           மறையாத
தொகை        -           மறைதல்
தொகாநிலைத் தொடர்
ஒரு தொடரில் இரு சொற்களுக்கிடையில் சொல்லோ, உருபோ இல்லாமல் (அ) மறையாமல் வரும் தொடர் தொகாநிலைத் தொடர் எனப்படும்.
தொகாநிலைத்தொடர் வகைகள் (9)
1.   எழுவாய்த் தொடர்
2.   வினைமுற்றுத் தொடர்
3.   விளித் தொடர்
4.   பெயரெச்சத் தொடர்
5.   வினையெச்சத் தொடர்
6.   வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
7.   இடைச் சொற்றொடர்
8.   உரிச் சொற்றொடர்
9.    அடுக்குத் தொடர்

நன்னூல் நூற்பா      "முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை
எழுவாய்த் தொடர்
Ø  எழுவாயுடன் பெயர், வினை, வினா, பண்பு , வியங்கோள் ஆகிய பயனிலைகள் தொடர்ந்து வருவது எழுவாய்த் தொடர் எனப்படும்.
Ø  விதி: எழுவாய் + பயனிலை = எழுவாய்த்தொடர்
எழுவாய் + பெயர்             =        பாரதி கவிஞர்
எழுவாய் + வினை            =        காவிரி பாய்ந்தது
எழுவாய் + வினா             =        பேருந்து வருமா?
எழுவாய் + பண்பு             =        முருகன் இனியன்
எழுவாய் + வியங்கோள்   =        அரசர் வாழ்க
எழுவாய், பெயர்ச்சொல்
ஒரு பெயர்ச்சொல் செயலைச் செய்யும்போது எழுவாயாகவும் பெயரைக் குறித்து வரும்போது பெயராகவும் அமையும்.
எழுவாய்                   -           ஒரு செயலைச் செய்பவன்.
பெயர்ச்சொல்          -           பெயரைக் குறிப்பது.
வினைமுற்றுத்தொடர்
Ø  வினைமுற்று முன்னும் பெயர்ச்சொல் பின்னுமாக அமையும் தொடர்  வினைமுற்றுத்தொடர் எனப்படும்
Ø  விதி: வினைமுற்று + எழுவாய் = வினைமுற்றுத் தொடர்
Ø  சான்று: 'பாடினான் பாரதி'
Ø  இத்தொடரில் 'பாடினான்' என்ற வினைமுற்று முதலில்வந்து 'பாரதி' என்ற பெயர் தொடர்கிறது
Ø  தொல்காப்பியர் காலங்களில் மிகுதியாக பயன்படுத்தப்பட்டத் தொடர் வினைமுற்றுத் தொடர்.
Ø  சான்று: என்மனார் புலவர், மொழிமனார் புலவர்
எழுவாய், வினைமுற்றுத் தொடர் வேறுபாடு
பெயர் + வினை         =        எழுவாய்த் தொடர்                   =        கண்ணன் பேசினான்
வினை + பெயர்         =        வினைமுற்றுத் தொடர்    =        பேசினான் கண்ணன்
விளித் தொடர்
Ø  ஒருவரை அழைக்கும் பொருட்டு விளிக்கும் தொடர் விளித்தொடர் எனப்படும்.
Ø  அவ்வாறு விளிக்கும் போது பெயர்ச்சொல்லின் ஈற்று மெய் கெட்டு, இறுதியில் நின்ற எழுத்து நீண்டு ஒலிக்கும்.
Ø  சான்று: முருகா வா (முருகன் + வா)
Ø  விதி: விளிப்பெயர் + வினைச்சொல் = எழுவாய்த்தொடர்
வேற்றுமைத்தொடர்
வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் வெளிப்படையாக வந்து, பெயர்களையோ வினைகளையோ கொண்டு முடிவது வேற்றுமைத் தொடர் எனப்படும்
சான்று: வீட்டைக் கட்டினான்
விதி:   பெயர்(வேற்றுமை உருவு) + பெயர்              =        கண்ணனின் புத்தகம்
பெயர்(வேற்றுமை உருவு) + வினை              =        புத்தகத்தைக் கண்டேன்
வேற்றுமைத்தொடர் வகைகள் ( 6 )
வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்)
இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்          =          மரத்தை நட்டான்
மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்             =          மரத்தால் மழை கிடைக்கும்
நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்             =          மரத்திற்கு தண்ணீர் ஊற்று.
ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்                =          மரத்தின் நிழல்
ஆறாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்                 =          மரத்தது கிளை
ஏழாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்                   =          மரத்தின்கண் கூடு
பெயரெச்சத்தொடர்
ஒர் எச்சவினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
விதி:   எச்சவினை + பெயர்
சான்று: 'பாடிய பாட்டு'
இத்தொடரில் 'பாடிய' என்ற எச்சவினை 'பாட்டு' என்ற பெயரைக்கொண்டு முடிந்தது.
பெயரெச்சத்தொடர் வகைகள்
பெயரெச்சத் தொடர், தெரிநிலை, குறிப்பு என இரண்டு வகைப்படும்.
தெரிநிலை               =          காலத்தை அடிப்படையாகக் கொண்டது.
குறிப்பு                      =          பண்பை அடிப்படையாகக் கொண்டது.
தெரிநிலைப் பெயரெச்சத் தொடர்
காலம், கருவி, எழுவாய், வினை,  இடம், செயப்படுபொருள் ஆகிய ஆறு வகையான பெயர்களைக் கொண்டு முடிவது தெரிநிலைப் பெயரெச்சத்தொடர் எனப்படும்.
துயிலும் + நேரம்       =          காலம்
வெட்டும் + வாள்      =          கருவி
வந்த + சாத்தன்         =          எழுவாய் (வினைமுதல்)
உண்ணும் + ஊண்    =          வினை
வாழும் + இல்லம்      =          இடம்
கற்கும் + நூல்கள்      =          செயப்படு பொருள்
குறிப்புப் பெயரெச்சத் தொடர்
குறிப்பு எச்ச வினையானது, ஒரு பெயரைக் கொண்டு முடிவது குறிப்புப் பெயரெச்சத் தொடர் எனப்படும். இதனை, பெயரடைத் தொடர் என்றும் கூறுவர்.
விதி:   குறிப்பு எச்சவினை + பெயர்
நல்ல + மக்கள், இனிய + புத்தகம்
வினையெச்சத் தொடர்
ஓர் எச்ச வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.
விதி:             எச்சவினை + வினை
சான்று:          உண்டு + வந்தான்
இத்தொடரில் 'உண்டு' என்ற எச்சவினை 'வந்தான்' என்ற வினையைக் கொண்டுள்ளது.
வினையெச்சத்தொடர் வகைகள்
வினையெச்சத்தொடர், தெரிநிலை வினையெச்சத் தொடர், குறிப்பு வினையெச்சத் தொடர் என இரண்டு வகைப்படும்.
தெரிநிலை வினையெச்சத் தொடர்
தெரிநிலை எச்ச வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது தெரிநிலை வினையெச்சத் தொடர் எனப்படும்.
சான்று: உண்ண + வந்தான்
குறிப்பு வினையெச்சத் தொடர்
குறிப்பு எச்ச வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது குறிப்பு வினையெச்சத் தொடர் எனப்படும். இதனை வினையடைத் தொடர் என்றும் கூறுவர்.
சான்று: நன்கு + பேசினான், மெல்ல + வந்தான்
பல வினையெச்சங்கள் அடுக்கி வரல்
வினையெச்சங்கள் ஒரு தொடரில் அடுக்கி வருவதும் தமிழில் உண்டு. அவ்வாறு வரினும் அவை ஒரு வினையைக் கொண்டே முடியும்.
சான்று: உண்டு, தின்று, ஆடி, பாடி, மகிழ்ந்து + வந்தான்
இடைச்சொற்றொடர்
தில், மன், மற்று, மற்றை, கொல், சோவென, பொள்ளென, திடுக்கென முதலிய இடைச்சொற்களுடன், பெயர் அல்லது வினை இவற்றில் ஏதேனும் ஒன்று வந்து இணைவது  இடைச்சொற்தொடர் எனப்படும்.
விதி:   இடைச்சொல் + பெயர்    =        மற்று + ஒன்று           = மற்றொன்று
          இடைச்சொல் + வினை   =        சோவென + பெய்தது = சோவெனப் பெய்தது
உரிச்சொற்றொடர்
சால, தவ, நனி, கூர் முதலிய உரிச்சொற்களுடன், பெயர் அல்லது வினை இவற்றில் ஏதேனும் ஒன்று வந்து இணைவது  உரிச்சொற்தொடர் எனப்படும்.
விதி:   உரிச்சொல் + பெயர்       =        மா + முனி      = மாமுனி
          உரிச்சொல் + வினை      =        இயம்பல் + உற்றேன் = இயம்பலுற்றேன்.
அடுக்குத்தொடர்
அச்சம், வெகுளி, உவகை, அவலம், விரைவு, அசைநிலை முதலிய காரணங்களால், ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
பேசுபவனுக்குத் திடீரென்று ஓர் உணர்ச்சி ஏற்பட, வாக்கியங்களின் முன்னும் பின்னும் வெவ்வேறு சொற்களை அமைக்காமல் ஒரே சொல்லை திரும்பத் திரும்பக் கூறுதல்.
சான்று:          அச்சம்                   =        பாம்பு பாம்பு
வெகுளி       =        விடு விடு
உவகை       =        வாருங்கள் வாருங்கள்
அவலம்       =        விழித்தேன் விழித்தேன்
விரைவு       =        போ போ
அசைநிலை  =        வாழ்த்துதுமே வாழ்த்துதுமே

தொகாநிலைத் தொடரின் பொது இலக்கணம்
ஒரு தொடர்,
எழுவாயில் தொடங்கினால் எழுவாய்த்தொடர்
வினைமுற்றில்  தொடங்கினால் வினைமுற்றுத்தொடர்
விளியைத் தொடங்கினால் விளித் தொடர்
பெயரெச்சத்தில்  தொடங்கினால் பெயரெச்சத் தொடர்
வினையெச்சத்தில் தொடங்கினால் வினையெச்சத் தொடர்
வேற்றுமையில் தொடங்கினால் வற்றுமைத்தொடர்.
இடைச்சொல்லில் தொடங்கினால் இடைச்சொல்தொடர்
            உரிச்சொல்லில் தொடங்கினால் உரிச்சொல் தொடர்
            அடுக்கி வந்தால் அடுக்குத்தொடர்





முனைவர் க. அரிகிருஷ்ணன்
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
அரசு மேல்நிலைப் பள்ளி,
இரட்டணை – 604 306
விழுப்புரம் மாவட்டம்
9842036899

harigrettanai1977@gmail.com