Wednesday, June 23, 2021

கலிப்பா வகைகளில் பாவினத் தோற்ற ஆதாரங்கள்

தமிழிலக்கிய வரலாற்றில் சங்க காலம்தொட்டு நால்வகைப் பாக்களின் வளர்ச்சியை இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. ஆனால் பாவினங்களின் வளர்ச்சியை இவ்வாறு காணுதற்கில்லை. தொல்காப்பியரும் அகவல், வஞ்சி, வெண்பா, கலிப்பா, பரிபாடல், மருட்பா என்ற பாவகைகளைச் சுட்டுகிறாரே தவிர, பாவினங்கள் பற்றிய குறிப்புகளைத் தரவில்லை. "இப்பாவினங்கள் எல்லாம் சில குறிப்பிட்ட மூலங்களில் இருந்து தோன்றின என்று கூறுவதற்கு இயலாது. இவை யாவும், பல்வேறு வேர்களினின்றும் முளைத்தனவாதல் வேண்டும்.”1 இப்பாவினங்கள் கலிப்பா வகைகள், பண்ணத்தி, சிலப்பதிகார வரிப்பாடல்கள் என்பனவற்றில் இருந்து தோற்றம் பெற்றன என்று கருத இடமளிக்கிறது. இதற்கான ஆதாரங்கள் கலித்தொகை, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் பயின்றுவரும் கலிப்பா வகைகள், வரிப்பாடல்கள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்றன.

கலிப்பா வகைகள்

கலிப்பா வகைகளாகத் தொல்காப்பியர் தொகுத்துக் கூறிய ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக் கலி, உறழ்கலி என்ற நான்கு வகைகளில்2 உறழ்கலி தவிர ஏனைய மூன்றும் இடைக்கால ஆசிரியர்களால் எடுத்தியம்பப்படுகின்றன.3 தொல்காப்பியர் ஒத்தாழிசைக் கலிப்பாவை, நேரிசை ஒத்தாழிசைக்கலி, தேவர்ப் பராஅய ஒத்தாழிசைக்கலி என இரண்டாகப் பகுத்து,4 தேவர்ப் பராஅய ஒத்தாழிசைக் கலியை வண்ணக ஒத்தாழிசைக்கலி, ஒருபோகு ஒத்தாழிசைக்கலி என்றும் வகைப்படுத்துவார்.5

மேலும், ஒருபோகு ஒத்தாழிசைக் கலிப்பாவினை இரண்டாக்கி, கொச்சக ஒருபோகு, அம்போதரங்க ஒருபோகு என்றும் கூறுவார்.6 ஒத்தாழிசைக்கலிப்பாவின் வகைகளாகத் தொல்காப்பியர் பகுத்துக் கூறிய, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, தேவர்ப் பாராஅய ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, ஒருபோகு கலிப்பா, கொச்சக ஒருபோகு கலிப்பா, அம்போதரங்க ஒருபோகுக் கலிப்பா எனத் தொல்காப்பியர் வகைப்படுத்திக் கூறிய கலிப்பாவினைப் பிற்காலத்தார், நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என வகைப்படுத்தியுள்ளனர். கலிவெண்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும், தரவு தனித்து வருதல், தாழிசை தனித்து வருதல், வண்ணக ஒத்தாழிசைக்குச் சொல்லப்பட்ட எண்ணாகிய உறுப்புகளை இடையிட்டுத் தனிச்சொல் இன்றி வருதல், சில இடங்களில் எண்ணும் தனிச்சொல்லும் இன்றி வருதல், சுரிதக உறுப்பு இன்றி ஏனைய தரவு, தாழிசைகள் நாற்சீரடியினும் மிக்கும் வருதல், கலிப்பாவிற்குக் கூறிய யாப்பினின்றும் பொருளினின்றும் வேறுபட்டு வருதல் எனத் தொல்காப்பியர் கூறிய, கொச்சக ஒரு போகின் இலக்கணத்தை உள்வாங்கிய இடைக்கால ஆசிரியர்கள், கொச்சகக் கலிப்பாவின் வகைகளாக, தரவுக் கொச்சகம், தரவிணைக் கொச்சகம், சிஃறாழிசைக் கொச்சகம், பஃறாழிசைக் கொச்சகம், மயங்கிசைக் கொச்சகம் என ஐந்தாக வகைப்படுத்திக் கூறுகின்றனர்.

அவ்வாறாயின், தொல்காப்பியர் கூறும் கொச்சகக் கலிப்பா என்பதில் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு கொச்சக ஒருபோகின் இலக்கணத்தைச் சுட்டிச் செல்கின்றனர் என்றும், கொச்சகக் கலிப்பா, உறழ்கலிப்பா ஆகியவற்றின் இலக்கணங்களை இவர்கள் குறிப்பிடவில்லை என்றும் கொள்ளலாம். கொச்சகக் கலிப்பா, உறழ்கலிப்பா போலவே பரிபாடலுக்கும் இலக்கணம் கூறப்படவில்லை. ஆகவே இப்பாக்களில் இருந்து பாவினங்கள் தோன்றினவாக எண்ண இடமளிக்கிறது அவற்றை இனி ஆராய்வோம்.

குறள் வெண்செந்துறை

அளவொத்த இரண்டடியால் பாடப்படுவது குறள் வெண்செந்துறையின் இலக்கணமாகும். இதற்குச் சீர் வரையறை இல்லை . ஓரடியில் எத்தனைச் சீர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆயினும், “நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே” என்ற தொல்காப்பியர்7 கூற்றிற்கிணங்க, நாற்சீரடி முதலாக பல சீரால் படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இரண்டடியால் அமைந்த பாடல்கள் கலித்தொகை, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களில் பயின்று வரும் கலிப்பாவின் உறுப்புகளில் காணக்கிடைக்கின்றன. இப்பாடல்களை ஆராய்ந்தால் செந்துறையின் தோற்றத்தை அறியலாம். இப்பாடல்கள் மூன்றடுக்கி வருதல், தனித்து வருதல் என்ற நிலைகளில் அமைந்துள்ளன.

மூன்றடுக்கி வருதல்

கலிப்பா உறுப்புகளுள் மூன்றடுக்கி வரும் இயல்புடையது தாழிசையாகும். இத்தாழிசைகளாக வரும் பல பாடல்கள் குறள் வெண்செந்துறை அமைப்பில் உள்ளன.8

உதாரணமாக,

தோணல் முண்டு துறக்கப் பட்டோர்

வேணீ ருண்ட குடையோ ரன்னர்,

நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர்

அல்குநர் போகிய வூரோ ரன்னர்,

கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்

சூடின ரிட்ட பூவோ ரன்னர்,                                கலி பா.23: 7-12

என்ற கலித்தொகைப் பாடலைக் காணலாம். இது, மூன்றடுக்கி குறள் வெண்செந்துறைக்குச் சொல்லப்பட்ட இலக்கணங்களோடு பொருந்தி வந்துள்ளது. இவ்வாறு மூன்றடுக்கி வரும் பாடல்கள் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.

அம்மனை தங்கையில் கொண்டங்கு அணியிழையார்,

தம்மனையில் பாடும் தகையேலோர் அம்மானை!

தம்மனையில் பாடும் தகையெலாம் தார்வேந்தன்

கொம்மை வரிமுலைமேல் கூடவே அம்மானை!

கொம்மை வரிமுலைமேல் கூடின், குலவேந்தன்,

அம்மென் புகார்நகரம் பாடேலோர், அம்மானை!                சிலம்பு 29: 149 - 154

இவ்வாறு மூன்றடுக்கி வரும் பாடல்கள் தனித்துவரின் குறள் வெண் செந்துறைகளாகும் என ஏ.சி. செட்டியார் அவர்கள் கருதுவார்.9

தனித்து வருதல்

மூன்றடுக்கி மட்டுமல்லாது சில உறுப்புகளில் அமைந்த பாடல்கள் இரண்டடியாய் தனித்தும் அமைந்துள்ளன. இப்பாடல்களும் செந்துறையை ஒத்துள்ளன.

முத்தேர் முறுவலாய் நம் வலைப் பட்டதோர்

புத்தியானை வந்தது காண்பான்யான் தங்கினேன்                        கலி பா. 97:6-7

பேரேமுற்றார் போல முன்னின்று விலக்குவாய்

யாரெல்லா நின்னை யறிந்ததூஉ மில்வழி;

தளரியால் என்னறிதல் வேண்டின் பகையஞ்சாப்

புல்லினத் தாயர் மகனேன் மற்றியான்;                                      கலி பா. 113:4-7

நின்குண மெதிர்கொண்டோ ரறங்கொண்டோ ரல்லதை

மன்குண முடையோர்மா தவர்வணங்கியோ ரல்லதை                    பரி. பா. 5:71-72

கேள்வியு மறிவு மறத்தொடு நுண்ணிய

வேள்வியு மறனும் விருப்பொடு வெய்யை                         பரி. பா. 13: 55-56

கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு

கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரோ! ஈதொன்று;    சிலம்பு 19:7-8

இவை நாற்சீரடியால் அளவொத்து ஓரெதுகை பெற்று வெண்டளைகளால் அமைந்துள்ளன.

மேனிலை மிகலிகலின் மிடைகழி பிழிவு மேற்சென்று

வேனுதி புரைவிறற் றிறனுதி மருப்பின் மாறஞ்சான் கலி பா. 104: 33-34

கள்வனோ அல்லன் கருங்க யற்கண் மாதராய்!

ஒள்எரி உண்ணும் இவ்ஊர் என்றது ஒருகுரல்! சிலம்பு 18: 52 - 53

எனவரும் பாடல்கள் பலதளைகள் விரவி ஐஞ்சீரடியாய் அமைந்துள்ளன.

முரசு இயம்பின முருடதிர்ந்தன முறை எழுந்தன பணிலம் வெண்குடை

அரசு எழுந்ததோர் படி எழுந்தன அகலுள் மங்கல அணி எழுந்தது.    சிலம்பு 1:46 - 47

இப்பாடல் அறுசீரடியாய் அமைந்து 1, 4 சீர்களில் மோனை ஒன்றி, அறுசீர் விருத்தத்தின் ஒருபாதிபோல் அமைந்துள்ளது.

மாயவன்தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்

கோவலர்தம் சிறுமியர்கள் குழல் கோதை புறஞ்சோர

ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத்

தாதொருமன் றத்தாடும் குரவையோ தகவுடைத்தே!   சிலம்பு 17: 114 - 117

எனவரும் பாடல் எண்சீர்களைப் பெற்று அளவொத்து அமைந்துள்ளது. மேற்கண்ட பாடல்கள் அனைத்தும் ஓர் எதுகைபெற்று இரண்டடியாய் அளவொத்து வந்தவை. இவ்வாறு நாற்சீரடி முதலாகப் பல சீரால் அளவொத்து இரண்டடியால் அமைந்த பாடல்கள் குறள் வெண்செந்துறையின் தோற்றத்திற்கு வித்திட்டன எனலாம்.

குறட்டாழிசை

இரண்டடியாய் முதலடியை நோக்க இரண்டாம் அடி சிலசீர்கள் குறைந்து வருவதும்; குறள் வெண்பாவில் சிறிது செப்பலோசை சிதைந்து வருவதும்; குறட்டாழிசை எனப்படும். இவ்வாறு அமைந்த பாடல்கள் கொச்சகக் கலிப்பாவின் தாழிசைகளில்

அமைந்துள்ளன.10 சான்றாக,

பெண்ணன்று புனையிழாய் எனக்கூறித் தொழூஉந் தொழுதே

கண்ணுநீ ராக நடுங்கினன் இன்நகாய்                                      கலி பா. 60:7-8

தெருவின்கண் காரண மின்றிக் கலங்குவார்க் கண்டு நீ

வாரண வாசிப் பதம்பெயர்த்தல் ஏதில                                      கலி பா. 60: 12-13

என்ற இப்பாடல்கள் அமைகின்றன. இதனை ஐஞ்சீரடுக்கிய குறுவெண்பாட்டு என்று

கூறுவார் தொல்காப்பியர்.11

வெண்பாவில் வேற்றுத்தளை விரவிவரின் அவற்றை வெண்பா எனக் கூறும் வழக்கு இல்லை. ஏனெனின் வெண்பாவில் வேற்றுத்தளை வாரா. ஆயினும் வேற்றுத்தளை விரவி வந்த பாடல்கள் கலிப்பா, பரிபாடல்களில் மிகுதியாகக் காணக் கிடைக்கின்றன.12  உதாரணமாக,

பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்குமற் றியான்நோக்கின்

மெல்ல இறைஞ்சுந் தலை                                            கலி பா. 61:5-6

தந்தை இறைத்தொடி மற்றிவன் தன்கைக்கண்

தந்தாரியார் எல்லாஅ இது                                           கலி பா. 84: 31-32

பாராட் டுவந்தோய் குடியுண் டீத்தையென்

பாராட்டைப் பாலோ சில                                            கலி. பா. 85:32-33

தூர்பெழு துதைபுதை துகள் விசும் புறவெய்த

வார்புடன் பாய்ந்தா ரகத்து                                          கலி பா. 105: 28-29

என்ற பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்களில் ஆசிரியத்தளை, கலித்தளை விரவி வருகின்றன. கொச்சகக் கலிப்பாவின் உறுப்புகளாக அமைந்த இவற்றைக் குறள் வெண்பா சிதைவு குறட்டாழிசை என்றும் கூறலாம். இவ்வாறு சீர்கள் மிக்கும் குறைந்தும் அமைந்த பாடல்களும் வேற்றுத்தளை விரவிய பாடல்களுமே பிற்காலத்தில் குறட்டாழிசைகளாகப் பரிணாமம் பெற்றுள்ளன.

வெண்டாழிசை

சிந்தியல் வெண்பா மூன்றடுக்கி வருவதும்; சிந்தியல் வெண்பாவில் வேற்றுத்தளை விரவி, செப்பலோசை சிதைந்து தனித்து வருவதும் வெண்டாழிசை எனப்படும். கலிப்பா உறுப்புகளுள் மூன்றடுக்கி வருவது தாழிசைகளாகும். கலித்தொகை, பரிபாடல் ஆகிய இலக்கியங்களில் அமைந்த தாழிசைகள் சிந்தியல் வெண்பா மூன்றடுக்கி அமைந்தாற்போல் உள்ளன. உதாரணமாக,

இளமழை யாடும் இளமழை யாடும்

இளமழை வைகலும் ஆடுமென் முன்கை

வளைநெகிழ வாராதோன் குன்று;

வாரா தமைகுவா னல்லன் மலைநாடன்

ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கயத்துள்

நீருட் குவளைவெந் தற்று;

மணிபோலத் தோன்றும் மணிபோலத்

தோன்றும் மண்ணா மணிபோலத் தோன்றுமென் மேனியைத்

துன்னான் துறந்தான் மலை;                                         கலி. பா. 41: 25-34

என்ற பாடலைக் காணலாம். மூன்றடியாய் வெண்டளைகளைப் பெற்றுச் சிந்தியல் வெண்பாவைப்போல் அமைந்துள்ளது இப்பாடல். இது, தனித்து வந்திருப்பின் சிந்தியல் வெண்பாவாகக் கருதப்படும். சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரவேண்டும் என்பது விதி இன்மையால், இவ்வாறு மூன்றடுக்கி வந்த இப்பாடல்களை சிந்தியல் வெண்பாவாகக் கொள்ளாமல் அவற்றின் இனமாகக் கொண்டனர். இக்கலித்தொகைப் பாடல் போல் சிலப்பதிகாரத்திலும் மூன்றடுக்கிய பாடல்கள் அமைந்துள்ளன.

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!!

கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்

அங்கண் உலகளித்த லான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!!

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலம்திரித லான்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!!

நாமநீர் வேலி உலகிற் கவன் அளிபோல்,

மேல் நின்று தான் சுரத்த லான்.                                              சிலம்பு 1:1-9

எனவரும் சிலப்பதிகார வாழ்த்துப் பாடலும் வெண்டளைகள் பெற்று மூன்றடுக்கி வந்துள்ளது. இவை மட்டுமல்லாது, கலித்தொகையில் பயின்றுவரும் 140 ஆவது பாடலும், பரிபாடலில்

தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்

நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது

குன்றுத லுண்டோ மதுரை கொடித்தேரான்

குன்றமுண் டாகு மளவு

செய்யாட் கிழைத்த திலகம் போற் சீர்க்கொப்ப

வையம் விளங்கிப் புகழ்பூத்த லல்லது

பொய்யாத லுண்டோ மதுரை புனைதேரான்

வையையுண் டாகு மளவு

கார்த்திகை காதிற் கனமகர குண்டலம்

போற்சீர்த்து விளங்கித் திருப்பூத்த லல்லது

கோர்த்தையுண் டாமோ மதுரை கொடித்தேரான்

வார்த்தையுண் டாகு மளவு                                           பரி மதுரை

என்ற பாடலும் நான்கடியாய் அமைந்து மூன்றடுக்கி வந்துள்ளன. செப்பலோசை சிதைந்த நேரிசை, இன்னிசை வெண்பாக்களை வெண்டுறையாகக் கொள்வது போல், மூன்றடுக்கி வந்த நேரிசை, இன்னிசை வெண்பாக்களையும் வெண்டாழிசைகளாகக் கொள்ளுதல் வேண்டும்.

கொச்சகக் கலிப்பாக்களின் தாழிசைகள் அயல்தளை விரவி, செப்பலோசை தழுவாது தனித்து வந்த சிந்தியல் வெண்பாக்களைப்போல் அமைந்துள்ளன. இப்பாடல்கள் கலித்தொகையிலும் பரிபாடலிலும் காணக்கிடைக்கின்றன.13

பிறைபுரை யேர்நுதால் தாமெண்ணி யவையெல்லாந்

துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே

அறைபோகு நெஞ்சுடை யார்க்கு                                             கலி. பா. 67: 19-21

சிந்தியல் வெண்பாவைப்போல் அமைந்த இப்பாடலில், ‘தாமெண்ணி யவையெல்லாந் துறைபோத’ என்ற சீர்களில் கலித்தளை பயின்று வந்துள்ளது. வெண்பாவில் வேற்றுத்தளை வாரா என்ற கொள்கையில் இப்பாடல் சிந்தியல் வெண்பா ஆகாதாயிற்று. இதைப் போல,

மொழிவது கண்டை இஃதொத்தன் தொய்யில்

எழுதி யிறுத்த பெரும்பொன் படுக

முழுவ துடையமோ யாம்                                                        கலி. பா. 64:8-10

எனவரும் பாடலும் கண்டை இஃதொத்தன்', 'பெரும்பொன் படுக' என்ற சீர்களில் ஒன்றிய ஆசிரியத்தளைகளும்,

திறுவரை புரையுமா றிருகரை யேமந்து

வரைபுரை யுருவினுரைபல சுமந்து

பூவேய்ந்து பொழில்பரந் து                                          பரி பா.7

என்ற பரிபாடலில் நிரையொன்றாசிரியத்தளையும் பயின்று செப்பலோசையிலிருந்து வழுவி வந்துள்ளன. மேலும், வேற்றுத்தளை விரவாது வெண்டளைகளால் அமைந்து, ஐஞ்சீரடுக்கிவரும் சிந்தியல் வெண்பாக்களும் கலித்தொகை, பரிபாடல்களில் மிகுதியாகக் காணக்கிடைக்கின்றன. உதாரணமாக,

சேறாடு மேனி திருநிலத் துய்ப்பச் சிரமித்துத்

தீர்வில் தாகச் செருவுற்றாள் செம்புன

லூருட னாடுங் கடை                                                   பரி. பா.7

என்ற பாடலைக் காணலாம். இவ்வாறு அமையும் பாடல்களும் சிந்தியல் வெண்பாவாகக் கொள்ள இயலாது. எனவே, சிந்தியல் வெண்பாவில் மூன்றடுக்கி வருவனவும்; சிந்தியல் வெண்பாவில் வேற்றுத்தளை விரவி, செப்பலோசை சிதைந்து வருவனவும்; ஐஞ்சீரடுக்கிய சிந்தியல் வெண்பாவும் பிற்காலத்தில் வெண்டாழிசைகளாகத் தோற்றம் பெற்றன என எண்ணலாம்.

வெண்டுறை

வெண்பாவின் துறையாகக் கருதப்படும் வெண்டுறை, மூன்றடி முதலாக ஏழடி வரை பாடப்படுவதாகும். மூன்றடி முதல் ஐந்தடி வரை வந்து ஈற்றில் ஓரடியும் ஈரடியும் ஒருசீரும் இருசீரும் குறைந்து ஓரிசையில் வருவது ஓரொலி வெண்டுறை என்றும்; ஐந்தடி முதல் ஏழடி வரை வந்து கடைக்கண் இரண்டடியும் பல அடியும் இருசீர் குறைந்து, முன்னர் ஓரோசையும் பின்னர் ஓரோசையும் பெற்று வருவது வேற்றொலி வெண்டுறை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. நேரிசை, இன்னிசை வெண்பாக்கள் வேற்றுத்தளை விரவிச் செப்பலோசையில் வழுவி வருவனவும் வெண்டுறையாகக் கொள்ளத்தக்கன. இவ்வெண்டுறைகளுக்குச் சான்றுகள் கிடைத்தில.

வெளிவிருத்தம்

மூன்றடியானும், நான்கடியானும் வந்து ஒவ்வோர் அடியின் ஈற்றிலும் ஐந்தாவது சீராய் ஒரே தனிச்சொல் பெற்றுவருவது வெளிவிருத்தமாகும். இவ்வமைப்பிலானப் பாடல்கள் கலிப்பாவின் உறுப்புகளான, தாழிசை, அம்போதரங்கத்தில் வரும் அளவெண், இடையெண், சிற்றெண் ஆகியவற்றில் காணமுடிகின்றன. அதற்குச் சான்றாகப் பின்வரும் பாடல்களைக் கொள்ளலாம்.

புள்ளணி பொலங்கொடியவை

வள்ளணி வளைநாஞ்சிலவை

சலம்புரி தண்டேந்தினவை

வலம்புரி வயநேமியவை                                                        பரி பா. 15:56-59

குறளடியாய் வந்த சிற்றெண்ணை ,

புள்ளணி பொலங்கொடிய - வை

வள்ளணி வளைநாஞ்சில - வை

சலம்புரி தண்டேந்தின - வை

வலம்புரி வயநேமிய - வை

என ஈற்று அசையைத் தனித்துப் பிரித்தால் ஈற்றில் ஒரே தனிச்சொல் வருகிறது. இதைப்போலவே,

புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ

இனத்துளா னென்னைக்குக் கலத்தொடு செல்வதோ

தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமெய்க் கிற்பதோ              பரி. பா. 13

எனவரும் சிந்தடிப்பாடலையும்,

தெய்வப் பிரமஞ் செய்கு வோரும்

கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரும்

யாழி னிளிகுரல் சமங்கொள் வோரும்

வேள்வியி னழகியல் விளம்பு வோரும்                              பரி பா. 19: 40-43

வேயமன் றன்று மலையு மன்று

பூவமன் றன்று சுனையு மன்று

மெல்ல இயலும் மயிலு மன்று

சொல்லத் தளருங் கிளியு மன்று                  `                            கலி பா. 55: 11-14

என்ற அளவடிப்பாடல்களையும்

புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்ப - தோ

இனத்துளா னென்னைக்குக் கலத்தொடு செல்வ - தோ

தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமெய்க் கிற்ப - தோ

தெய்வப் பிரமஞ் செய்கு - வோரும்

கைவைத் திமிர்புகுழல் காண்கு - வோரும்

யாழி னிளிகுரல் சமங்கொள் - வோரும்

வேள்வியி னழகியல் விளம்பு - வோரும்

வயமன் றன்று மலையு - மன்று

பூவமன் றன்று சுனையு - மன்று

மெல்ல இயலும் மயிலு - மன்று

சொல்லத் தளருங் கிளியு - மன்று

என ஈற்றுசீர் அல்லது அசையைப் பிரித்தால் ஈற்றில் ஒரே தனிச்சொல் வருவதைக் காணலாம். இப்பாடல்களில் அமைப்பைப் பின்பற்றி, பிற்காலத்தில் ஐஞ்சீரடியாய் வந்து, பின் ஐந்தாவது சீர் ஒரே தனிச்சொல் பெற்ற பாடல்களை வெளிவிருத்தம் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

ஆசிரியத்தாழிசை

மூன்றடியாய் அளவொத்துத் தனித்து வருவதும் மூன்றடுக்கி வருவதும் ஆசிரியத்தாழிசை என்பர். இவ்விரு வடிவங்களிலும் பாடல்கள் கிடைக்கின்றன.

சாயலின் மார்ப அடங்கினேன் ஏஎ

பேயும் பேயுந் துள்ள லுறுமெனக்

கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல்.    கலி பா. 94: 37-39

வறுவர் மற்றையோரு மந்நிலை யயின்றனர்

மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்

நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே பரி. பா. 5:45-47

என்றலுமி றைஞ்சியஞ்சி இணைவளைக்கை எதிர்கூப்பி

நின்ற எல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்ப்பொழிந்து

குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார்.       சிலம்பு 24:7-9

என்ற பாடல்கள் தனித்து மூன்றடியாய் அளவொத்து வந்ததற்குச் சான்றாக அமைகின்றன.

படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ

கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகல்குறிக்

கொடிபுரை நுசும்பினாள் கொண்டசீர் தருவாளோ;

மண்டமர் பல கடந்து மதுகையால் நீறணிந்து

பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள்

வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ;  

கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரளத்

தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்கால்

முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ; கலி. பா. 1: 5-13

ஒருதிறம் பாணர் யாழின் றீங்குரலெழ

ஒருதிறம் யாணர் வண்டி னிமிரிசையெழ

ஒருதிறம் கண்ணார் குழலின் கரைபெழ

ஒருதிறம் பண்ணார் தும்பிபரந் திசையூத

ஒருதிறம் மண்ணார் முழவி னிசையெழ

ஒருதிறம் அண்ணனெடு வரையருவி நீர்த்ததும்ப      

ஒருதிறம் பாடனல் விறலியரொல் குபுநுடங்க

ஒருதிறம் வாடை யுளர்வயிற்பூங் கொடி நுடங்க

ஒருதிறம் பாடினி முரலும் பாலையங் குரலி பரி. பா. 17: 9-17

கன்று குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்,

இன்று நம்ஆனுள் வருமேல் அவன் வாயில்

கொன்றை அம் தீங்குழல் கேளாமோ தோழீ!

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்,

ஈங்கு நம்ஆனுள் வருமேல் அவன் வாயில்

ஆம்பல்அம் தீங்குழல் கேளாமோ தோழீ!

கொல்லை அம் சாரல் குருந்தொசித்த மாயவன்,

எல்லை நம்ஆனுள் வருமேல் அவன்வாயில்

முல்லை அம் தீங்குழல் கேளாமோ தோழீ!     சிலம்பு 17:83 - 91

என்ற பாடல்கள் மூன்றடுக்கி வருவதற்குச் சான்றாக அமைகின்றன. இப்பாடல்கள், கலித்தொகை, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் பயின்று இடைநிலைப் பாட்டு எனப்படும் தாழிசைகளாக அமைந்தவை. இவை தாழம்பட்ட ஓசையில் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருகின்றன. இப்பாடல்கள் இடைக்கால ஆசிரியர்கள் கூறும் ஆசிரியத்தாழிசையின் வடிவத்தை ஒத்துள்ளன. இம்மாதிரியான பாடல்களே பிற்காலத்தில் தனித்து ஆசிரியத்தாழிசை ஆயின.

ஆசிரியத்துறை

நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவதும், ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவதும், இடையிடை குறைந்து வருவதும், இடையிடை குறைந்து இடைமடக்காய் வருவதும் என நான்கு நிலையில் ஆசிரியத்துறை அமையும். நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வரவேண்டும் என இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதே தவிர, ஓரடியில் எத்தனைச் சீர்கள் பயின்று வரவேண்டும் எனச் சுட்டப்படவில்லை. ஆகையால் இவ்வாசிரியத்துறையில் சீர்வரையறை இன்றி எத்தனைச் சீர்கள் வேண்டுமானாலும் வரலாம்.

இலங்கே ரெல்வளை யேர்தழை தைஇ

நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப்

புலந்தழப் புல்லாது விடுவாய்

இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண்நீ                                             கலி. பா. 125: 12-15

என்ற இப்பாடல் 1, 2, 4 ஆகிய அடிகள் நாற்சீராயும், ஈற்றயலடி முச்சீராயும் அமைந்துள்ளது. இக்கலித்தொகைப் பாடலைப் போலவே ஈற்றயலடி குறைந்து வந்த பாடல்கள் சிலப்பதிகாரத்திலும் காணக்கிடைக்கின்றன.

சித்திரப் படத்துள் புக்குச் செழுங்கோட்டின் மலர்பு னைந்து ,

மைத்தடங்கண் மணமகளிர் கோலம் போல் வனப்பு எய்திப்

பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று

இத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கி  சிலம்பு 7:1-4

முகமில் வரி

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான்

பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்த்து நுண்தாது போர்க்கும் கானல்

நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த

உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும்!      சிலம்பு 7:47-50

                                    கானல் வரி                            

நிணங்கொள் புலால் உணங்கல் நின்றுபுள் ஓப்புதல் தலைக்கீடு ஆகக்

கணங்கொள் வண்டார்த்து உலாம் கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி

மணங்கமழ் பூங்கானல் மன்னி மற்றாண்டோர்

அணங்குறை யுமென்பது அறியேன்; அறிவேனேல் அடையேன், மன்னோ ! சிலம்பு 7:5-54

வலைவாழ்நர் சேரி வலை உணங்கு முன்றில் மலர்க்கை ஏந்தி

விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுருவம் கொண்டு வேறோர்

கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது

அலைநீர்த் தண்கானல் அறியேன்; அறிவேனேல் அடையேன்; மன்னோ ! சிலம்பு 7:55-58

சிலப்பதிகாரக் கானல் வரிப்பாடல்களாக வரும் இப்பாடல்கள், முன் கூறினாற்போல அமையாமல் 1, 2, 4 ஆகிய அடிகள் அறுசீர்களையும் மூன்றாவது அடி நாற்சீர்களையும் கொண்டு அமைந்துள்ளன.

நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வரவேண்டுமெனக் காக்கைபாடினியர் இலக்கணம் கூறியிருப்பினும் யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், நான்கடியில் முதல், இடை, கடை என்ற எந்த அடி வேண்டுமானாலும் குறைந்து வரலாம் என்று கூறி, ஓரடி குறைந்து வருவதை ஆசிரிய நேர்த்துறை என்றும் இரண்டடி குறைந்து வருவதனை இணைக்குறட்டுறை என்றும் வகைப்படுத்துவார்.14

எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக்

கல்தீண்டி வந்த புதுப்புனல்;

கல்தீண்டி வந்த புதுப்புனல், மற்றையார்

உற்று ஆடின் நோம் தோழி! நெஞ்சன்றே!

என் ஒன்றும் காணேம் புலத்தல் அவர்மலைப்

பொன் ஆடி வந்த புதுப்புனல்;

பொன் ஆடி வந்த புதுப்புனல், மற்றையார்

முன் ஆடின் நோம் தோழி நெஞ்சன்றே!

யாதொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைப்

போதாடி வந்த புதுப்புனல்;

போதாடி வந்த புதுப்புனல், மற்றையார்

மீது ஆடின் நோம் தோழி! நெஞ்சன்றே!                                    சிலம்பு 24:31 - 42

என்ற பாடல்கள், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் கூறுவதுபோல மூன்றடுக்கி நான்கடியாய் முதல் அயலடி ஒருசீர் குறைந்து வந்துள்ளன. இம்மாதிரியான பாடல்களையே ஆசிரிய நேர்த்துறை என்பர். அடுத்து வரும்,

பிரிவுகொண் டிடைப்போக்கி யினத்தோடு புனத்தேற்றி

இருதிறனா நீக்கும் பொதுவர்

உருகெழு மாநில மியற்றுவான்

விரிதிரை நீக்குவான் வியன்குறிப் பொத்தனர்.                            கலி பா. 106: 16-19

என்ற கலித்தொகைப் பாடல் 1, 4 அடிகள் நாற்சீர்களையும் இடையடியான 2, 3 ஆகிய அடிகள் ஒருசீர் குறைந்து முச்சீர்களையும் கொண்டு அமைந்துள்ளது. யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் கூற்றுப்படி, இரண்டடி குறைந்து வரும் இப்பாடலை ஆசிரிய இணைக்குறட்டுறை என்று கூறலாம். மேற்கண்ட பாடல்களே ஆசிரியத்துறைக்கு வித்துக்களாக அமைந்துள்ளன.

ஆசிரிய விருத்தம்

கழிநெடிலடி நான்காய் வருவது ஆசிரிய விருத்தம். இவ்வாறு அமைந்த பாடல்கள் சிலப்பதிகாரத்தில் மிகுதியாகக் கிடைக்கின்றன.

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சிக்

கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!

கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய்

மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி!     சிலம்பு 7:21-24

என்ற பாடல் அறுசீர்க் கழிநெடிலடியாய் அமைந்து, 'மா மா காய்' என்ற சந்த அமைப்பைப் பெற்று வந்துள்ளது. இவ்வாறு அறுசீர் விருத்த அமைப்பிலான 18 பாடல்கள் சிலப்பதிகாரத்தில் கிடைக்கின்றன.15 இப்பாடல்களை ஆசிரியவிருத்ததின் முன்னோடியாகக் கொள்ளலாம்.

கலித்தாழிசை

இரண்டடி முதலாகப் பல அடியானும் அமைந்து, ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள் அளவொத்தும் ஒவ்வாதும் வருவது கலித்தாழிசையாகும்.

குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப்

பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு வெற்பனை     கலி பா. 41: 15-16

மாதிரை முதல்வனிற் கிளந்த

நாதர்பன் னொருவரு நன்றிசை காப்போரும். பரி. பா. 8:6-7

கொச்சகக் கலிப்பாவின் உறுப்பாக வரும் இப்பாடல்கள் இரண்டடியாய் ஈற்றடி மிக்கு வந்துள்ளன. இப்பாடல்களைப் போலவே, கலிப்பாவின் தாழிசைகளாக வரும் இரண்டடிப் பாடல்களும் இரண்டடியாய் ஈற்றடி மிக்கு மூன்றடுக்கி வருகின்றன. இதற்குச் சான்றாக,

ஒருத்தி செயலமை கோதைநகை

ஒருத்தி யியலார் செருவில் தொடியொடு தட்ப

ஒருத்தி தெரிமுத்தஞ் சேர்ந்த திலகம்

ஒருத்தி அரிமாண் அவிர்குழை ஆய்காது வாங்க

ஒருத்தி வரியார் அகலல்குற் காழகம்

ஒருத்தி அரியார் நெகிழத் தணிசுறாத் தட்ப   கலி பா. 92: 33-38

என்ற பாடலைக் கொள்ளலாம். இரண்டடிகள் மட்டுமல்லாது மூன்றடி, நான்கடியாய் அமைந்த பாடல்களும் உள்ளன.

வானாற்று மழைதலைஇ மரனாற்று மலர்நாற்றந்

தேனாற்று மலர்நாற்றஞ் செறுவெயி லுறுகால

கானாற்றுங் கார்நாற்றங் கொம்புதிர்ந்த கனிநாற்றந்

தானாற்றங் கலந்துடன் றழீ இவந்து தரூஉம் வையை பரி. பா. 20: 8-11

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு

போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்

மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்

ஈகைவான் கொடியன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்.      சிலம்பு 1:21- 24

போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்

தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலாள் பெயர்மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.        சிலம்பு 1 26-29

என்ற பரிபாடல், சிலப்பதிகாரத்தில் அமைந்த இப்பாடல்கள், நான்கடியாய் ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள் அளவொத்து வந்துள்ளன. இவ்வாறு தனித்து ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள் அளவொத்து வந்த கலித்தாழிசை அமைப்பில் 13 பாடல்கள் சிலம்பில் அமைந்துள்ளன.16

பொன்னிலங்கு பூங்கொடி! பொலஞ்செய் கொதைவில்லிட ,

மின்இலங்கு மேகலைகள் ஆர்ப்பார்ப்ப எங்கணும்

தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்தடித்துமே!

தேவர் ஆர மார்பன் வாழ்கவென்று பந்தடித்துமே!

பின்னும் முன்னும் எங்கணும் பெயர்ந்து வந்து எழுந்துலாய்

மின்னுமின் இளங்கொடி வியன்நிலத்து இழிந்தெனத்

தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்தடித்துமே!

தேவர் ஆர மார்பன் வாழ்கவென்று பந்தடித்துமே!

துன்னிவந்து கைத்தலத்து இருந்ததில்லை நீணிலம்

தன்னில் நின்றும் அந்தரத் தெழுந்ததில்லை தான் எனத்

தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்தடித்துமே!

தேவரார மார்பன் வாழ்கவென்று பந்தடித்துமே!                 சிலம்பு 29: 155 - 166

சிலப்பதிகார வாழ்த்துக்காதையில் அமைந்த இப்பாடல்கள் மூன்றடியாய் ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள் அளவொத்து ஒருபொருள்மேல் மூன்றடுக்கி அமைந்துள்ளன. இப்பாடல்களைப் போலவே,

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து,

சோவரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே?

திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே?

பெரியவனை; மாயவனைப் பேருலகம் எல்லாம்

விரிகமல உந்தி உடை விண்ணவனைக் கண்ணும்,

திருவடியும் கையும் திருவாயும் செய்ய க

ரியவனைக் காணாத கண் என்ன கண்ணே ?

கண்இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே?

மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்

படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது

நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே?

நாராயணா! என்னா நா என்ன நாவே? சிலம்பு 17: 145 - 159

எனவரும் பாடல்களும் நான்கடியாய் ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள் அளவொத்து அமைந்துள்ளன. இவ்வாறு ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள் அளவொத்துத் தனித்து வருவனவற்றைச் சிறப்புடைக் கலித்தாழிசை என்றும்; மூன்றடுக்கி வருவனவற்றைச் சிறப்புடை கலியொத்தாழிசை என்றும் யாப்பியலார் பகுத்துக் காண்பர்.17 இப்பாடல்களிலிருந்தே கலித்தாழிசைகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

கலிவிருத்தம்

நாற்சீரடி நான்காய் வருவது கலிவிருத்தமாகும். இவ்வமைப்பிலான பாடல்கள் கலிப்பா உறுப்புகளாக வரும் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கத்தில் வரும் பேரெண், அளவெண், கொச்சக வகைகளான தரவுக் கொச்சகம், தரவிணைக் கொச்சகம் ஆகியவற்றில் அமைந்துள்ளன.

ஆற்றி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து

தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக்

கூறாமற் குறித்ததன் மேற் செல்லுங் கடுங்கூளி

மாறாப்போர் மணிமடற் றெண்கையாய் கேளினி;      கலி கட. 1: 1-4

இது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவாகும். இதுபோல, கலிப்பா வகைகளுள் நாற்சீரடி நான்காய் அமைந்த தரவுகள் கலிவிருத்தம்போல் காட்சி தருகின்றன.

பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத்

தொல்கவின் தொலைந்தவென் தடமென்றோள் உள்ளுவார்

ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி

வெல்புக ழுலகேத்த விருந்து நாட் டுறைபவர்,

திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை

வசைதீர்ந்த என்னலம் வாடுவ தருளுவார்

நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம்

இசைபரந் துலகேத்த ஏதில்நாட் டுறைபவர்;

அறல் சாஅய் பொழுதோடெம் அணிநுதல் வேறாகித்

திறல் சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவார்

உறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி

ஆறின்றிப் பொருள்வெஃகி அகன்றநாட் டுறைபவர்;           கலி பா. 26: 9-20

இப்பாடல் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின் தாழிசையாகும். ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வரும் இப்பாடலைப் போலவே சிலப்பதிகாரத்தில் ஏராளமான பாடல்கள் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி அமைந்துள்ளன.

என்உறு துயர்கண்டும் இடர்உறும் இவள் என்னீர்?

பொன்உறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ?

மன்உறு துயர்செய்த மறவினை அறியாதேற்

கென்உறு வினைகாண்ஆ! இதுவென உரையாரோ?

யாரும் இல் மருள்மாலை இடர்உறு தமியேன் முன்

தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ?

பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப

ஈர்வது ஓர் வினைகாண்ஆ! இதுவென உரையாரோ?

கண்பொழி புனல் சேரும் கடுவினை உடையேன்முன்

புண்பொழி குருதியராய்ப் பொடியாடிக் கிடப்பதோ?

மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப

உண்பதோர் வினைகாண்ஆ! இதுவென உரையாரோ?        சிலம்பு பா. 19:39 - 50

இவ்வாறு மூன்றடுக்கி வருவனவாகச் சிலம்பில் 18 பாடல்கள் அமைந்துள்ளன.18 இப்பாடல்கள் தனித்து வரின் கலிவிருத்தங்களாகக் கொள்ளத்தக்கன. மூன்றடுக்கி மட்டுமல்லாது இரண்டடுக்கி வரும் பாடல்களும் கிடைக்கின்றன.

புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில்

நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ

நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே

கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ

விண்டோய்கல் நாடனும் நீயும் வதுவையுட்

பண்டறியா தீர்போல் படர்கிற்பீர் மற்கொலோ,

பண்டறியா தீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை

கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ; கலி பா. 39:33-40

பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர்

பைத்தரவு அல்குல் நம் பைம்புனத்து உள்ளாளே

பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்

உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே!

வானக வாழ்க்கை அமரர் தொழுதேத்தக்

கான நறுவேங்கைக் கீழாள் ஓர் காரிகையே

கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்

வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே! சிலம்பு24: 116 - 123

மேற்கண்ட பாடல்கள் ஒருபொருள் மேல் இரண்டடுக்கி வருவதுடன், இடையடிகள் மடக்கியும் வருகின்றன. தனித்தும், இரண்டடுக்கியும், மூன்றடுக்கியும் வரும் கலிவிருத்த அமைப்பிலான பாடல்கள் சிலம்பதிகாரத்தில் 81 பாடல்கள் கிடைக்கின்றன.19 கலிவிருத்தத்திற்கு உரையாசிரியர்கள் காட்டப்பெறும் பாடல்கள் போலவே இப்பாடல்களும் ஆசிரியத்தளைகள் மிகுதியாகப் பெற்று அமைந்துள்ளன. இப்பாடல்களே பின்னர்க் கலிவிருத்தமாகத் தோற்றம் பெறுவதற்குக் காரணம் எனலாம்.

வஞ்சித்துறை

இருசீரடி நான்காய் அமைந்து மூன்றடுக்கிவரும் வஞ்சித்தாழிசைப் பாடல்கள் காணக்கிடைக்கவில்லை. தனித்து வரும் வஞ்சித்துறைப் பாடல்கள் அரிதாகவே கிடைக்கின்றன. கலிப்பாக்களில் சிற்றெண்களாக வரும் பாடல்கள் இருசீரடி நான்காய் அமைகின்றன. இப்பாடல்கள் தனித்துவரின் வஞ்சித்துறைகளாக எண்ணத்தக்கன. உதாரணமாக, கலித்தொகையில் வரும்,

எழுந்த துதுகள்

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்புக்

கலங்கி னர்பலர்                                              கலி. பா. 102: 21 - 24

என்ற பாடல் இருசீரடி நான்காய் அமைந்திருப்பினும் எதுகை ஒத்து அமையவில்லை. பரிபாடலில் வரும்,

நீரணி காண்போர்

நிரைமாட மூர்குவோர்

பேரணி நிற்போர்

பெரும்பூச றாக்குவோர்                                                பரி. பா . 10:27-28

என்ற இப்பாடலில் எதுகை ஒத்து இருசீரடி நான்காய் அமைந்துள்ளது. இப்பாடலைப் போலவே இருசீரடி தரவுக் கொச்சகப் பாக்களும் வஞ்சித்துறை அமைப்பிலானவை. இப்பாடல்களில் இருந்தே வஞ்சித்துறை தோற்றம் பெற்றிருக்கிறது.

வஞ்சிவிருத்தம்

முச்சீரடி நான்காய் வருவது வஞ்சிவிருத்தமாகும். அம்போதரங்க இடையெண், தரவுக் கொச்சகம் ஆகிய உறுப்புகளில் காணப்படும் முச்சீரடி நான்காய் வரும் பாடல்கள் சில வஞ்சி விருத்தத்தின் அமைப்பைப் பெற்றுள்ளன.

வேயமன் றன்று மலையுமன்று

பூவமன் றன்று சுனையுமன்று

மெல்ல இயலும் மயிலுமன்று

சொல்லத் தளருங் கிளியுமன்று கலி பா. 55:11-14

புள்ளணி பொலங்கொடியவை

வள்ளணி வளைநாஞ் சிலவை

சலம்புரி தண்டேந் தினவை

வலம்புரி வயநே மியவை பரி. பா. 15:55-59

ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி

சூர்ததும்பு வரைய காவாற்

கார்ததும்பு நீர்ததும்பு வனசுனை

யேர்த்தும்பு வனபூவணிசெறிவு பரி. பா. 18: 30-33

கலிப்பா உறுப்புகளாகப் பயின்று வரும் இப்பாடல்கள் தனித்துவரின் வஞ்சி விருத்தங்களாக் கொள்ளுதற்குரியன.

சான்றெண் விளக்கம்

1.         சோ. ந. கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், முதற்பாகம் - இரண்டாம் பகுதி, ப. 75.

2.         தொல்காப்பியர், தொல்காப்பியம் செய்யுளியல் நூ. 130

3.         கா.பா. 68, அவி. 91, யா.க. 79, யா.கா. 30-32

4.         தொல்காப்பியர், தொல்காப்பியம் செய்யுளியல் நூ. 131

5.         மேற்படி நூல் நூ. 139 .

6.         மேற்படி நூல் நூ. 147

7.         மேற்படி நூல் நூ. 32

8.         கலித்தொகை பா.74, 78, 79, 128, 130

9.         A.C. Chettiar, Advanced Studies in Tamil Prosody pp. 102, 103

10.       கலிப்பா பா. 62, 63, 90, 91, 92, 93, 97, 104, 107, 113; பரிபாடல் பா.1,19,20,21

11.       தொல்காப்பியர், தொல்காப்பியம் செய்யுளியல் நூ.

12.       கலிப்பா பா. 96, 102, 103, 106

13.       கலிப்பா , பா. 89, 98, 105, 116, 138, 143, 144; பரிபாடல், பா. 6, 7, 10

14.       அமிதசாகரர், யாப்பருங்கல விருத்தி ப. 280

15.       சிலப்பு . 7:21 - 32; 7:33 - 46; 7: 111 - 128; 7: 129 - 140; 7: 165 - 176; 12: 116 - 119; 12: 120 - 123; 12: 124 - 127.

16.       சிலம்பு . 1: 21 - 24; 1: 26 - 29; 1: 31 - 34; 1: 36 - 39; 18:47 - 51; 24: 102 - 108; 29:67 - 71; 29:72 - 76; 29:77 - 81; 29: 82 - 86; 29: 87 - 91; 29:92 - 96; 29:97 - 101;

17.       யாப்பருங்கல விருத்தி ப. 347

18.       சிலம்பு . 7:71 - 82; 7: 83 - 94; 7: 95 - 106;7: 141 - 164; 7: 177 - 188; 7: 189 - 200; 12:87 - 98; 12: 99 - 110; 12: 128 -139; 12: 140 - 151; 17:94 - 105; 18:12 - 23; 18:34 - 45; 19:39 - 50; 24: 43 - 58; 24:59 - 74; 24:75 - 90;

19.       சிலம்பு . 7:71 - 82; 7: 83 - 94; 7: 95 - 106; 7: 107 - 110; 7: 141 - 164; 7: 177 - 188; 7:189 - 200; 7: 201 - 204; 7: 205 - 208; 7: 209 - 212; 7: 221 - 224; 12: 83 - 86; 12:87 - 98; 12: 99 - 110; 12: 128 -139; 12: 140 - 151; 12: 156 - 163; 17: 94 - 105; 17: 106 - 113; 17: 125 - 128; 18: 12 - 23; 18:25 - 28; 18: 30 - 33; 18:34 - 45; 19:39 - 50; 19:60 - 63; 19: 64 - 67; 19:68 - 75; 24: 43 - 58; 24: 59 - 74; 24: 75 - 90; 24:91 - 94; 24: 111 - 114; 24: 116 - 123; 29:102 - 109; 29: 115 - 118.