எங்கே சென்றாய் நீஇன்று...
பட்டாம் பூச்சிப் பறவைகளாய்
பாடித் திரிந்தோம் புவியெங்கும்
சிட்டு இனத்தில் நாம்பிறந்து
சிரித்து மகிழ்ந்து உலவிவந்தோம்.
நல்லோர் இல்லில் குடிபுகுந்து
அவர்கள் அமைந்த கூட்டினிலே
பிள்ளை பெற்று வளர்க்கின்ற
பணியைச் செய்து வருகின்றோம்.
தண்ணீர் கம்பு நெல்லோடு
தானி யங்கள் நமக்களித்து
தனது வீட்டுப் பிள்ளைகளாய்
நம்மைக் காத்து வருகின்றார்.
காகம் கழுகு தாக்காமல்
வேலை அமைத்து காக்கின்றார்
பக்கம் சென்றால் அன்போடு
பார்த்து இரசித்து மகிழ்கின்றார்.
பிள்ளைக் கூட்டில் தனியிருக்க
பறந்து எங்குச் சென்றாயோ
தொல்லைத் தாரா உன்கணவன்
புலம்ப விட்டுப் போனாயோ
ஊஞ்சல் ஆடும் மின்கம்பம்
ஒளிந்து ஆடும் வேப்பமரம்
தஞ்சம் புகுந்த தாய்வீடு
தங்கி ஆடும் இடமென்று
எல்லா இடமும் தேடிவிட்டேன்
எல்லா ரிடத்தும் கேட்டுவிட்டேன்
பல்லோர் கூறும் கூற்றுஇது
யாரும் பார்க்க வில்லையென்று
உணவு உண்ண முடியவில்லை
உறக்கம் துளியும் எனக்கில்லை
எனது துன்பம் பாராமல்
தனியே விட்டு ஏன்சென்றாய்
பிள்ளை தனியே வளர்ப்பதற்கு
பாடு எனக்குத் தெரியலையே
பிள்ளைத் துன்பம் படுமென்று
கொஞ்சம் கூட நினையலையே
அன்னை யின்றி ஒருபிள்ளை
ஆளுமையோடு வளர்ந்திடுமா?
தென்னம் பிள்ளை குருதொடிந்தால்
தேர்ந்த பலனும் கிடைத்திடுமா?
பசியை அறிந்து உணவூட்ட
தண்ணீர் கொடுத்து சீராட்ட
பேசி சிரித்து விளையாட
பெருமை சொல்லி நிலைநாட்ட
சின்னச் சின்ன தவறுகளை
பொருத்து திருத்தி வழிகாட்ட
அன்னை இங்கு வேணுமடி
அறிந்து வந்து சேர்ந்திடடி
அன்புத் தோழி கவியமுது
எங்கே சென்றாய் நீஇன்று...
(எங்கள் வீட்டில், நாங்கள் கட்டிய கூட்டில் இரண்டு சிட்டுக்கள் வந்து குடியேறி முட்டையிட்டு ஒருமுறைக்கு இரண்டு வீதம் 16 குஞ்சுகள் பொறித்தெடுத்து அனுப்பியது. ஒன்பதாவது முறையாக அந்தச் சிட்டுக்கள் குஞ்சு பொறித்து வாழ்ந்த போது, தனிப் பாத்திரத்தில் கம்பு நெல் முதலான தானியங்கள் வைத்திருந்தபோதும், தாய்க்குருவி வாயிற்படியில் நாங்கள் கட்டி வைத்திருந்த நெல் எடுத்து தன் குஞ்சுக்குக் கொடுத்து வருவது வழக்கம். அவ்வாறு நேற்று 18.09.2021 இரவு தாய்குருவி நெல்லெடுத்து கூட்டிற்குப் பறந்தபோது எதிர்பாராத விதமாக மின் விசிறியில் பட்டு உயிரிழந்து விட்டது. அதனை நாங்கள் எடுத்து அந்த ஆண்குருவிக்குத் தெரியாமல் அடக்கம் செய்துவிட்டோம். பெண்குருவி இறந்தது தெரியாத அந்த ஆண்குருவி தன் துணையைக் காணமல் பட்ட அவத்தையை இக்கவிதை.)