பாட்டிசொன்ன கதைகளிலும் மாந்தர் உண்டு
பட்டிதொட்டி உள்ளோரும் கேட்ட துண்டு
தொகைபாட்டு இலக்கியங்கள் படித்துப் பார்த்தால்
வகைவகையாய் கூற்றுகளில் காண்போம் நன்று
நீதிநூல்கள் காப்பியங்கள் பக்தி நூல்கள்
மதிநிறைந்த சிற்றிலக்கிய வகைகள் என்றும்
மரபுவழிப் படைப்பாளர் மட்டு மன்றி
மரபுடைத்த வடிவமென பின்னர் வந்த
வசனமொடு புதுக்கவிதை மேலை நாட்டு
திசைஉதித்த கவிதையோடு கதையும் நாவல்
என்றுபல படைப்பிலுமே மாந்தர் உண்டு
தான்நினைத்த கருத்துகளைச் சொல்வ தற்கும்
தன்னுடைய கதைசெம்மை பெறுவ தற்கும்
மெய்ப்பாடு குறிப்பேற்றம் செய்தி எல்லாம்
மெய்யான மாந்தர்க்குச் சொல்வ தற்கும்
தலைமாந்தர் துணைமாந்தர் பிறவும் என்று
பலமாந்தர் கதைப்போக்கில் இணைப்ப துண்டு
வாழ்கின்ற மாந்தர்கள் மாய்த போதும்
வாழ்ந்திடுவர் எந்நாளும் கதையின் மாந்தர்.
காவியங்கள் உலவிவரும் மாந்தர் கண்டு
கவின்மிகுந்த ஆய்வாளர் அறிந்து தந்து
அனைத்துலக பொங்குதமிழ் அமைப்பில் உள்ளோர்
அனைவருமே ஒன்றுகூடி ஆய்ந்தெ டுத்த
நல்காப்பி யமாந்தரெனும் ஆய்வு நூலை
தொல்காப்பி யமாய்தமிழ்ச் சான்றோர் போற்றி
பயன்கொள்ள தந்தவர்க்கு வாழ்த்து சொல்வோம்!
பயனுடைய அமைப்பிற்கும் வாழ்த்து சொல்வோம்!
Wednesday, November 3, 2021
Tags
# கவிதைகள்

About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்