Friday, February 25, 2022

திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ் - தாலப் பருவம்


தாலப் பருவம்

அறுசீர் விருத்தம் (மா மா காய்)

வண்ண வண்ண சேலையாலே
அந்த ரத்தில் தூளிகட்டி
வண்ணப் பூக்கள் ஒன்றுசேர்த்து
மாலை யாக்கித் தொங்கவிட்டு
கொண்டல் காற்றைப் பக்குவமாய்
மேனி யெங்கும் படரசெய்தேன்
கண்ணன் தங்கை தாலேலோ!
யாக சேனி தாலேலோ! 21

பல வண்ணங்களைக் கொண்ட சேலையினால் ஆகாயத்தில் தூளிகட்டி, அதில் வண்ணப் பூக்களைக் கொண்டு மாலை செய்து தொங்கவிட்டு, கிழக்கில் இருந்து வீசும் காற்றை உடலெங்கும் படரச் செய்தேன். கண்ணனின் தங்கையே! தாலேலோ. யாகத்தில் தோன்றியவளே! தாலேலோ.

குணமும் கொடையும் குறைந்துபோக
வஞ்சம் சூது பேராசை
பணம்தீ சூழ்ச்சி கொலைகாமம்
பொறாமை யாவும் தலைதூக்க
மண்ணின் தருமம் காத்திடவே
இனிமேல் கல்கி வடிவெடுக்கும்
கண்ணன் தங்கை தாலேலோ!
யாக சேனி தாலேலோ! 22

நல்ல குணங்களும் பிறருக்கு உதவும் தன்மையும் குறைந்து வரும் காலத்தில், வஞ்சம், சூது, பேராசை, பணத்திற்கு முதன்மை, சூழ்ச்சி, கொலை, காமம், பொறாமை இவைகள் அனைத்தும் மிகுதியாக நிலவும் காலத்தில், பூமியில் தருமத்தை நிலைநாட்ட கல்கி அவதாரம் எடுக்க உள்ள கண்ணனின் தங்கையே! தாலேலோ. யாகசேனி! தாலேலோ.

எண்சீர் விருத்தம் (காய் காய் காய் காய்)

உலகநிலை அறியாமல் தரணியிலே நீபிறந்தாய்!
அறிவுநிலை பெறுவதற்குக் காலமின்னும் இருக்குதம்மா!
நல்லநிலை உளநலமும் உடல்நலமும் இருந்துவிட்டால்
அறிவோடு பிறநலங்கள் தானாக வந்துசேரும்
விலையில்லாச் செல்வமான கல்வியினை நன்குகற்றால்
மாற்றங்கள் பூமியிலே விரைவாக நிகழ்ந்தேறும்
நிலையறிந்து கண்ணுறங்கு திரௌபதியே! தாலேலோ!
பாண்டுகுந்தி மருமகளே! பாஞ்சாலி தாலேலோ! 23

குழந்தையாக இந்த உலகின் எந்த ஒரு நல்லது கெட்டதும் அறியாமல் பிறந்திருக்கிறாய். நீ அறிவு பெறுவதற்கான காலம் இன்னும் இருக்கிறது. நல்ல உடல்நலமும் மனநலமும் அமைந்துவிட்டால் அறிவும் பிற நலங்களும் தானாக உன்னை வந்து சேர்ந்துவிடும். விலை கொடுத்து வாங்கமுடியாத, விலைமதிக்க முடியாத கல்வியை நன்றாகக் கற்றறிந்தால், இந்த மண்ணுலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இந்த நிலையினை அறிந்து திரௌபதியே! கண்ணுறங்கு தாலேலோ. பாண்டு குந்தியின் மருமகளே! பாஞ்சாலி தாலேலோ.

அறுசீர் விருத்தம் (மா மா காய்)

அன்னை வயிற்றில் இனிதிருந்து
அமைதி யாக ஓய்வுகொண்டாய்
மண்ணில் பிறந்து தாய்மடியில்
பொறுப்பாய் காக்க கண்வளர்ந்தாய்
பின்னை நாளில் ஓய்வில்லை
பணிகள் உனக்காய் காத்திருக்கு
அன்னை தாலே தாலேலோ!
யாச சேனி தாலேலோ! 24

அன்னை வயிற்றில் பத்து மாத காலங்களாக இனிமையாகவும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் ஓய்வு கொண்டாய். பூமியில் பிறந்தபின்னர் அன்னை மடியில் அவள் பொறுப்புடன் பாதுகாக்க நன்றாக உறக்கம் கொண்டாய். இனிவரும் காலங்களில் உனக்கு ஓய்வு என்பது இல்லை. ஏனென்றால் பணிகள் உனக்காகக் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஆகவே அன்னையே! தாலேலோ. யாகசேனியே! தாலேலோ.

பெண்ணாய் மண்ணில் பிறந்திடவே
பெருமை கொள்ள வேணுமம்மா
கண்ணாய் மதித்து அவர்களைநாம்
காத்து வளர்க்க வேணுமம்மா
பெண்ணே உன்னைத் தொழுகின்றேன்
குலத்தைக் காக்க வேணுமம்மா
கண்ணன் தங்கை தாலேலோ!
மகிழ்வாய் நீயும் தாலேலோ! 25

அன்னையே, பெண்ணாக இந்த பூமியில் பிறப்பதற்கு நீ பெருமை கொள்ள வேண்டும். அவ்வாறு பிறந்த பெண்களை நாம் நம் கண்களைப் போல மதித்து பாதுகாத்து வளர்க்க வேண்டும். திரௌபதி அம்மையே உன்னை நான் தொழுகிறேன் எங்கள் குலத்தைக் காக்க வேண்டும். கண்ணன் தங்கையே! தாலேலோ. மகிழ்ந்து நீயும் தாலேலோ.

அறுசீர் விருத்தம் ( காய் காய் காய் )

அருவிகளின் ஓசையும்நற் காட்சிகளும்
பசுமையினம் பரப்புகின்ற பாய்விரிப்பும்
விரிந்திருக்கும் மயிலினத்தின் தோகைகளும்
காலைமாலை எழுந்துவிழும் சூரியனும்
கரைநெருங்கி ஓடிவரும் கடலலையும்
பள்ளம்நோக் கிஓடுகின்ற ஓடைநீரும்
விரும்புமுளக் காட்சிதாலே தாலேலோ!
வாமனனின் தங்கைதாலே தாலேலோ! 26

மலையில் இருந்து விழுகின்ற அருவிகளின் இனிய ஓசையும் அவற்றின் காட்சிகளும், மண்ணில் எங்கும் பாய்போல விரிந்திருக்கும் பசுமையும், மயில்கள் தோகை விரித்தாடும் காட்சியும், காலை மாலை என இரண்டு வேளைகளிலும் எழுந்து மறையும் சூரியனின் நற்காட்சிகளும், கரை நோக்கி ஓடிவரும் அலையும், பள்ளம் நோக்கி ஓடுகின்ற ஓடை நீரும் மனதுக்கு இனிமை தரும். அத்தகைய மனம் விரும்பும் காட்சிகளைக் காணும் திரௌபதி அம்மா! தாலேலோ. வாமனனின் தங்கையே! தாலேலோ.

தம்வேலை தாமுண்டு இருக்கவேண்டும்
பிறர்மீது புறம்சொல்லி திரியவேண்டாம்
தமதுபணி சிறந்திடவே உழைக்கவேண்டும்
பிறர்பணியை ஏளனமாய் நினைக்கவேண்டாம்
தம்தொழிலில் வளம்கொண்டு செழிக்கவேண்டும்
பிறர்வளர்ச்சி தனைக்கண்டு பொறாமைவேண்டாம்
எமதுமொழி செவிமடுப்பாய் தாலேலோ!
பாண்டவரின் குலவிளக்கே தாலேலோ ! 27

நாமுண்டு. நம்முடைய வேலையுண்டு என இருக்கவேண்டும். பிறர்மீது பழி கூறுதலும் அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுதலும் கூடாது. நம்முடைய வேலை சிறப்படைய நல்முறையில் உழைக்கவேண்டும். பிறர்செய்யும் வேலைகளில் குறை கூறுதல் கூடாது. நாம் செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடையும் வழிமுறைகளைச் செய்து வளம்பெறவேண்டும். பிறரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைகொள்ளுதல் கூடாது. இவ்வாறு நான் சொல்லும் இம்மொழிகளைக் கேட்பாய் தாலேலோ. பாண்டவரின் குலவிளக்கே தாலேலோ.

அறுசீர் விருத்தம் ( மா காய் காய் )

துன்பம் வரும்வேளை யிலும்நீயே
இன்பம் வரும்வேளை யிலும்நீயே
என்னுள் ளம்கவர்ந்த வளும்நீயே
எமது குலம்காப்ப வளும்நீயே
என்து ணையாய்நிற்ப வளும்நீயே
நான்சொல் லும்மந்தி ரமும்நீயே
எனது வழித்துணையே! தாலேலோ!
பாண்டு மருமகளே! தாலேலோ! 28

எனக்கு துன்பம் வரும் நேரத்திலும் இன்பம் வரும் நேரத்திலும் நீயே துணை. என் உள்ளம் கவர்ந்தவளும் எங்கள் குலத்தைக் காப்பவளும் நீயே. எனக்குத் துணையாய் இருப்பவளும் நான் முனுமுனுக்கும் வார்த்தைகளும் நீயே. என் வழித் துணையாய் வருபவளே! தாலேலோ. பாண்டுவின் மருமகளே! தாலேலோ.

அறுசீர் விருத்தம் ( காய் காய் காய் )

பிறர்மனதை நோகடித்து பொருள்சேர்த்தல்
பிறரறிவை ஏமாற்றி புகழ்தேடல்
பிறர்பொருளை அறியாமல் தனதாக்கல்
பிறர்உணவை தானுண்டு உடல்வளர்த்தல்
மற்றவரின் பலவீனம் தானறிந்து
தன்தேவை நிறைவேற்ற எண்ணுவதும்
திறனில்லா செயலறிவாய் தாலேலோ!
இராமனின்நல் சகோதரியே தாலேலோ! 29

பிறரின் மனம் நோகும்படியான செயல்கள் செய்து பணம் ஈட்டுவதும், பிறரின் அறிவைத் தன் அறிவு என்று ஏமாற்றி புகழ் தேடுவதும், பிறரது பொருளை அவர் அறியாமல் சொந்தமாக்கிக் கொள்ளுதலும், பிறரின் உணவை தாம் உண்டு உடல் வளர்ப்பதும், மற்றவரின் பலவீனத்தை அறிந்து அதன்மூலம் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதலும் தகுதியற்ற செயல் என்று அறிவாய் திரௌபதியே! தாலேலோ. இராமனின் சகோதரியே! தாலேலோ.

உறவுகளின் கூட்டமைப்பில் குடிநடத்தி
பரம்பரைகள் பலகண்ட தமிழினத்தில்
உறவுநிலை படிப்படியாய் தேய்பிறைபோல்
குறைந்துவந்து தனிக்குடும்பம் என்றஇந்த
சிறப்பில்லா சூழ்நிலையில் விழித்துநீயும்
உறவுக்கு முதன்மைதந்து காக்கவேண்டும்
சிறப்புமிகு என்இறையே! தாலேலோ!
பாண்டுகுந்தி மருமகளே! தாலேலோ! 30

உறவு முறையினர் பலர் இணைந்து ஒரே குடும்பமாக (கூட்டுக் குடும்பமாக) வாழ்ந்து, பல பரம்பரைகளைக் கண்டவர்கள் தம் தமிழர்கள். இத்தமிழர்களிடம் இன்று, தேய்பிறைபோல உறவுகளின் நிலை படிப்படியாகக் குறைந்து கணவன், மனைவி, மக்கள் என்ற தனிக்குடும்ப நிலைக்கு வந்துவிட்டது. இந்தச் சிறப்பில்லாத சூழ்நிலையில் விழித்துக் கொண்டு, உறவுக்கு முதன்மைக் கொடுத்து காக்கவேண்டும். சிறப்பான என் இறைவியே! தாலேலோ.பாண்டுகுந்தி மருமகளே! தாலேலோ.