கண்ணனின் சக்கரம் விழுங்கிய ஐங்கரன்
மணம்மிகு மலர்களைத் தூவியே வணங்கிநான்
இரட்டணை ஊர்உறை கடவுளர் புகழினைச்
விருப்புடன் கலம்பகம் படைத்திட விழைகிறேன்.
நாச்சுவைக்கும் மண்ணெடுத்து வாய்மறைத்து உண்ணுகையில்
பலராமன் கண்டதனை யசோதையிடம் புகார்கூற
பலராமன் சொன்னதனை முற்றிலுமாய் நம்பாமல்
வாய்திறந்து காட்டுஎன தன்மகனை ஆணையிட்டாள்
தாய்சொல்லைத் தட்டாமல் கிருட்டிணன் வாய்திறந்தான்
மண்ணுண்ட வாயுள்ளே பிரபஞ்சம் முழுவதுமாய்
கண்டதுடன் தனுமதில் இருக்ககண்டு வியந்துபார்த்தாள் தரவு
குழல்ஊதி மாடோம்பி நண்பருடன் விளையாடி
மழைகாத்து குறும்புசெய்து பால்வெண்ணை திருடிதின்றான்
மாயங்கள் தான்செய்து கோபியர்கள் உளம்கவர்ந்து
தாய்மாமன் அனுப்பிய கொலைமாந்தர் தானழித்தான்
அடங்காத khatid அடக்கிவைக்க உரல்கட்ட
கட்டிவைத்த கயிறோடு மரம்சாய்த்து உயிர்ப்பித்தான்
தாய்முலையில் அமிழ்திருக்க அதைவிடுத்து மாயம்செய்
பேய்முலையில் பாலுண்டு அரக்கிதனை கொன்றழித்தான்
நடனமாட இடமின்றி பாம்புதலை மீதேறி
விடமிகுந்த காளியன் பெயர்கொண்ட பாம்பழித்தான்
உடல்உலகப் பற்றுகளை துறந்தவரே எனையடைவார்
திடமாக ஆடைமறைத்து கோபியர்க்கு உணர்த்திநின்றான் (தாழிசை)
தந்தையுடன் உடன்பிறந்த தங்கையான குந்திதேவி
மைந்தர்களின் தோழனாகி பாண்டவர்கள் துணைநின்றான்
தங்கையான திரௌபதியின் உளம்புரிந்து பகைவெல்ல
தந்திரங்கள் பலசெய்து பாண்டவர்க்கு வெற்றிதந்தான் பேரெண்
அத்தையின் மைந்தர்களை அரவணைத்தான் காத்தான்
பற்குணனின் தோழனாகி சாரதியாய் நின்றான்
அவைநடுவே துகில்தந்து தங்கைமானம் காத்தான்
புவிமீது தர்மத்தை நிலைநாட்டி வந்தான் அளவெண்
தங்கையின் பக்கம் நின்றானை
பங்காளி சண்டை தீர்த்தானை
அர்ச்சுனன் தோழன் ஆனவனை
கௌரவர் வீழ்த்த வந்தானை இடையெண்
அன்பில் கலந்தானை
துன்பம் தீர்த்தானை
எங்கும் நிறைந்தானை
திங்கள் விழியானை
யாதவ குலத்தானை
பாதகம் தீர்த்தானை
அசுரர் அழித்தானை
விசம குணத்தானை சிற்றெண்
வணங்கிடுவோம் தனிச்சொல்
ஆறுகள்சூழ் ஊர்உறையும் அழகான இரட்டணையின்
மேற்கே கோவில் கொண்ட
அழகிய வரதராசா வணங்குவோர் காக்கவே 01
தொய்வு இலாத மனிதர்கள் சேர்ந்துடன் வாழ்ந்திடுவர்
மையல் மகளிர் துணையுடன் சேர்ந்து உழைத்திடுவர்
துய்த்தல் இலாது பெரும்பொருள் சேர்க்கும் இரட்டணையே 03
இரட்டணையில் உறைகின்ற வரதராசர்
பெண்ணாக மாறினார் அம்மானை
உருவாக்கும் பெண்ணாக மாறினார் எனில்
யாரோடு கூடினார் அம்மானை
வரம்கொடுத்து துன்பத்தில் தவிக்கின்ற
சிவன்காத்து அவருடன் இனிதுகூடி
அரக்கன்ம கிசாசுரனை அழிப்பதற்கு
மணிகண்டன் படைத்தனர் அம்மானை 04
பெண்ணும் கிடைக்கவில்லை என்று - நின்பக்கம்
அத்தை தமக்கையை வைத்தீரே நின்செயல்
பித்தன்தான் செய்வானோ சொல்? 05
சோறுபோடும் விவசாயம் அழிந்து போனால்
நெல்லறுத்து நாடுகாத்த மக்க ளெல்லாம்
நொந்துதொழில் வேண்டாமென்று விட்டு சென்றார்
சொல்விளக்கி கற்பிக்கும் குருவின் சொல்லை
அவமதிக்கும் மாணவர்கள் வெல்வ தில்லை
நல்நெஞ்சே இறைவன்பால் பக்தி வைத்தால்
நல்வாழ்வு பெற்றிடலாம் மாற்றம் இல்லை 06
இல்லையென்று வருபவர்க்கு இருப்பவற்றைத் தந்து
உளம்நொந்து வருபவர்க்கு ஆறுதல்கள் சொல்லி
பிள்ளைகளைக் காப்பதுபோல் பெற்றவரைக் காத்து
புள்ளினங்கள் விலங்கோடு பிறவுயிரும் போற்றி
நல்லெண்ணம் நற்செய்கை நல்லறிவு கொண்டால்
இல்லத்தில் வாழ்பவரும் இறைநிலையை அடைவர் 07
செருக்கின்றி யாரிடமும் பழக வேண்டும்
பார்போற்றும் மனிதனாக வாழ வேண்டும்
பாங்குடனே கல்விதனைக் கற்க வேண்டும்
ஊருக்கு பேர்வாங்கி தருதல் வேண்டும்
உறவினரை விழுதுகளாய் தாங்க வேண்டும்
மாரியம்மன் பெயராலே மரங்கள் நட்டு
மாய்க்காமல் அவற்றைநாம் காக்க வேண்டும் 09
வேண்டி வருபவர்க் குவேண்டிய வரமருள
வடக்கு நேக்கிநம் வரவுபார்த் தமர்ந்திருக்கும்
கண்ணன் ஆயுதம் கரங்களில் சுமந்தவளாம்
அன்னை காளியின் அழகிய மருவுருவாம்
தொண்டி நதிக்கரை கோவிலில் குடிகொண்டு
ஊரைக் காத்திடும் உலகினர் குலதெய்வம்
வெண்ணி அம்மனை மனதினில் நினைப்பவர்க்கு
வெற்றி மாலைகள் வந்துக ரம்குவியும் 10
அசுரன் வதம்செய் தசேவல் கொடியோன்
கரிவி ரட்டி காதல் செய்த
கடம்பன் சூரன் வதம்செய் மயிலோன்
திரும ணக்கோ லகாட்சி தந்து
வணங்கு வோரின் துன்பம் நீக்கி
பரிவு கொண்டு அன்னை போல
இல்லில் மகிழ்ச்சி பொங்க வைப்பான் 11
திருவருளைப் பெற்றால் கல்விசெல்வம் தந்து
வரும்துன்பம் போக்கி நோய்நொடிகள் நீக்கி
தைரியங்கள் தந்து திடமுடனே காப்பாள் 21
காற்றாய் நிலனராய் நெருப்பாய் வெளியொடு
ஊற்றாய் இருந்து உலகுயிர் - போற்றிநற்
காக்கும் தொழில்செய் பகைமை அழித்திடும்
கோகுலத்தான் தாள்பணிந்து வாழ் 22
வாலிட்ட தீஇலங்கை நாடு எரித்தது
மாலவன் நங்கைசாரா நின்றது - கோலம்காண்
பக்தருக்கு தீங்குகள் நேரா இராமனின்
பக்தன் வணங்கி மகிழ் 23
மகிழென் மனமே கொவ்வை இதழ்கள்
மிகுந்த வனப்பு தோகைக் கூந்தல்
தொகுத்த அழகு வஞ்சி கண்டாய் 24
கண்டார் மயக்கும் கவின்பெரு வனப்பும்
கொண்டார் வணங்கும் பெருந்தகை உணர்வும்
பெண்ணால் சிறக்கும் குடிநலப் பெருமை 25
புய வகுப்பு
கலித்துறை
பெருமழை
காக்க பெரிய மலையைத் தாங்கின
திருமகள் வடிவாம் கோதை மாலை சூடின
பெருவலி காட்ட மராம ரங்கள் துளைத்தன
இரட்டணை உறையும் வரதன் வெற்றிப் புயங்களே 26
பிரிவுத் துன்பம்
இரவில் நெருப்பாய் நிலவு எரிக்கும்
இரவும் நெடிய பொழுதாய் - இருக்கும்
மலையை சுமக்கும் வலியில் இதயம்
தலைவன் இலாத பொழுது
வஞ்சி விருத்தம்
தழை மடக்கு
பூந்தளிர் மேனி யாளுக்கு
பூந்தளி ரோடு பூவென்றான்
பூந்தளிர் மேனி கொண்டதோழி
பூந்தளி ரோடு ஆவிதந்தான்
உயிருக்கு உயிரான தம்பி காக்க
உணா்வுக்கு உரியவனாம் அனுமன் நோக்கி
உயிர்காக்கும் சஞ்சீவி னிகொண்ட வாவென்
றுரிமையோடு கேட்டதனால் விரைந்து சென்று
உயிர்காக்கும் மருந்ததனை தேட நேரம்
போதாது என்பதனால் கடுக வெற்பு
பெயர்த்தெடுத்து கொண்டுவந்த உயிரைக் காத்த
மாருதியை கரம்கூப்பி வணங்கு வேமே
சித்து
எண்சீர் விருத்தம்
பார்த்தன் உயிரைக் காக்க வேண்டி
பகலோன் ஒளியை ஆழி யாலே
நேர்த்தி யாக மறைத்துப் பின்னா்
ஆழி விலக்கி வெளிச்சம் தந்து
சேரார் தலையை கொய்வ தற்கு
சித்து வேலை பலவும் செய்தோன்
ஊரார் பேற்றி பணிந்து வணங்கும்
இரட்ட ணைஉறை வரத ராசன்