
திருமால்பின் வலக்கரத்தில் இருக்கும் ஆழி
வாமனனின் தர்பையாகி கண்ணைக் குத்தும் நரசிம்மன் நகமாகி இரண்யன் மாய்த்தும்
சுமாலிமால் யவானென்போர் தலையைக் கொய்தும்
அர்சுனனின் உயிர்க்காக்க பரிதி மறைத்தும்
ஆழ்மடுவில் முதலைமாய்த்து யானை காத்தும்
தர்மம்காத் தும்அதர்மம் அழித்து நின்றும்
ஏவுகின்ற பணிசெய்து மீண்டும் சேரும் 01
காக்கும் கடவுளான திருமாலில்பின் வலக்கரத்தில் தாங்கி இருக்கும் சக்கரமானது, தர்மத்தைக் காக்கவும் அதர்மத்தை ஒடுக்கவும் வல்லது. மேலும் இச்சக்ராயுதம், வாமன அவதாரத்தில் திருமால் வாமனனாகச் சென்று மூன்றடி மண்கேட்க, அதைக் கொடுக்க எண்ணிய மகாபலி நீரை வார்த்த போது அதைத் தடுக்க எண்ணிய சுக்கிராச்சாரியார் வண்டாக உருவெடுத்து நீர் வரும் பாதையை அடைத்தார். இதனை அறிந்த வாமனன் அங்கிருந்த சிறு தர்ப்பையை எடுத்து நீர்வரும் பாதையில் குத்த அந்தத் தர்பத்தின் நுனியாய் மாறி சுக்கிரன் கண்ணைக் குத்திக் குருடாக்கியது. நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மர் நகமாக இருந்து இரணியனின் வயிற்றைக் கிழித்தது. இராவணனுடைய முன்னோரான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களின் தலையைக் கொய்து அழித்தது.
பாரதப்போரில் தன் மகனான அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனின் தலையினை மறுநாள் மாலை சூரிய மறைவதற்கு முன்பு அறுத்து தள்ளுவேன். இல்லாவிடில் தீக்குளிப்பேன் என அர்ச்சுனன் சபதம் செய்தான். ஆனால் துரியோதன் ஜயத்ரதனை மறைந்து வைத்து சூரியன் மறையும்வரை காப்பாற்ற எண்ணினான். இதனைப் புரிந்துகொண்ட கண்ணன் தன்னுடைய சக்ராயுதத்தால் சூரியனை மறைக்க மாலை வந்துவிட்டது இனிக் கவலையில்லை என்று அதுவரை மறைத்திருந்த ஜயத்ரதன், அர்ச்சுனன் தீக்குளிப்பதைக் கண்டுகளிக்க கௌரவர்களுடன் வந்து நின்றான். அதற்காகவே காத்திருந்த கண்ணன் சக்கரத்தை விலக்கி சூரியனை வெளிவரச்செய்தான். இதனைக் கண்ட அர்ச்சுனன் அம்பை எய்து ஜயத்ரன் தலையை அறுத்தான்.
வழிபாடு செய்வதற்குப் பூப்பறிக்க வந்த கஜேந்திரன் என்னும் யானையினை அந்தக் குளத்தின் ஆழ்மடுவில் இருந்த முதலை காலைப் பிடித்துக்கொண்டது. ஆயிரமாண்டுகள் முதலையுடன் கஜேந்திரன் போராடினான். இறுதியில் ‘நாராயணா! ஓ! மணிவண்ணா வாராய்! என் ஆரிடரை நீக்காய்’ என அழைத்ததும் ஆழியால் முதலையைக் கொன்று கஜேந்திர யானைக்கு மோட்சம் கொடுத்தார். இவ்வாறு, தர்மத்தைக் காத்தும் அதர்மத்தை அழிததும் திருமால் நினைத்த பணியினை முடித்துவிட்டு மீண்டும் அவர்கரத்திலேயே வந்து சேரும் தன்மை கொண்டது சக்கரம்.
பாற்கடலில் செல்வமகள் உடனாய் வந்து
திருமால்பின் இடக்கரத்தில் அமர்ந்த சங்கு
வீற்றிருக்கும் இடத்தினிலே வளங்கள் சேர்க்கும்
ஓமென்னும் மந்திரநல் ஒலியெ ழுப்பும்
ஏற்ற(ம்)தர வழிபாடு செய்வ தற்கும்
வெற்றியினை பறைசாற்றி வெல்வ தற்கும்
சோற்றுக்குப் பஞ்சமின்றி வாழ்வ தற்கும்
தீயசக்தி அண்டாமல் துணையாய் நிற்கும் 02
திருமால்பின் இடக்கரத்தில் அமர்ந்த சங்கு
வீற்றிருக்கும் இடத்தினிலே வளங்கள் சேர்க்கும்
ஓமென்னும் மந்திரநல் ஒலியெ ழுப்பும்
ஏற்ற(ம்)தர வழிபாடு செய்வ தற்கும்
வெற்றியினை பறைசாற்றி வெல்வ தற்கும்
சோற்றுக்குப் பஞ்சமின்றி வாழ்வ தற்கும்
தீயசக்தி அண்டாமல் துணையாய் நிற்கும் 02
தேவர்களும் அசுரர்களும் அமிழ்தம் எடுப்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து பல்வேறு பொருட்கள் வெளிவந்தன. அவற்றுடன் திருமகளும் பாஞ்சசன்யம் என்ற சங்கும் வெளித் தோன்றியது. அதனைத் திருமால் தன்பின் இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். இந்தச் சங்கு எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் செல்வம் மிகுதியாக இருக்கும். அதனை ஊதுகின்றபோது ஓம் என்னும் பிரணவ ஒலியை எழுப்பும். வாழ்க்கை வளர்ச்சி அடைவதற்கும் வழிபாடு செய்வதற்கும் வெற்றியை தெரிவிப்பதற்கும் வெற்றி கொள்வதற்கும் பயன்படுகிறது. இச்சங்கை வைத்து வழிபாடு செய்பவர்களுக்குச் சோற்றுப் பஞ்சம் எந்நாளும் வருவதில்லை. தீய சக்திகளையும் வராமல் தடுக்கும்.
பிரம்மதேவர் மனம்நினைத்து தவமி ருந்த
கன்வமுனி தலைமுளைத்த மூங்கில் கொண்டு
பிரம்மதேவர் ஆக்கிதந்த வில்சா ரங்கம்
பரந்தாமன் ஆயுதமான திகழ்ந்து ஓங்கி
சரம்சரமாய் பொழிமழைபோல் பகைவர் நெஞ்சில்
கண்ணிமைக்கும் நேரத்தில் நெருங்கித் தாக்கும்
திருமாலின் கரத்திருக்கும் தூய வில்லை
வணங்குவோர்க்கு எந்நாளும் துன்ப மில்லை 03
படைக்கும் கடவுளான பிரம்மதேவரை மனதில் நினைத்து கன்வமுனிவர் தவமிருந்தார். அவ்வாறு அவர் ஆடாமல் அசையாமல் தவமிருந்ததால் அவரைச் சுற்றிப் புற்றுவைத்தது. அந்தப் புற்று மண்ணில் இருந்து மூங்கில் வளரத் தொடங்கியது. அந்த மூங்கிலில் இருந்து பிரம்மதேவர் செய்த வில்லே திருமால் கையில் உள்ள சாரங்கம் என்னும் வில். பரந்தாமனின் ஆயுதமாகத் திகழும் இந்த வில்லில் இருந்து வரும் அம்புகள் சர மழைபோல பாய்ந்து பகைவர் நெஞ்சைக் கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கும் தன்மைகொண்டது. இத்தகைய குணமுடைய திருமால் கரத்தில் இருக்கும் வில்லை வணங்குபவர்களுக்கு எந்நாளும் துன்பங்கள் வருவதில்லை.
வீமன்து ரியோதனர்க்குப் பயிற்சித் தந்தும்
மிகையாகத் தண்டென்னும் ஆயு தத்தை
திருமாலும் பயன்படுத்தி வெற்றி கண்டார்
பகைமாய்க்க அவதாரம் எடுக்கும் போதும்
தன்னுடைய பேருருவம் காட்டும் போதும்
தகைசான்ற அடையாளம் கொள்ளும் போதும்
கதையென்னும் கௌமோதகியைத் கரத்தில் கொள்வார். 04
அடுக்கடுக்கான பகைவர்கள் வந்து தன்னோடு மோதும் போதும் வீமனுக்கும் துரியோதனனுக்கும் கதைப் பயிற்சி கற்றுத்தரும் போதும், பெரிய ஆயுதமாம் தண்டு என்னும் ஆய்தத்தைத் திருமால் பயன்படுத்தி வெற்றி கண்டார். மேலும், பகையை மாய்ப்பதற்காக எடுத்த அவதாரங்களில் வராகம், நரசிம்மன், பலராமன், கிருட்டிணன் ஆகிய அவதாரங்களின் போதும் கர்ணன், அர்ச்சுனன் முதலானவர்களுக்கு தன்னடைய பெரிய உருவத்தைக் காட்டும் போதும் மதிப்புதரும் அடையாளமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் போதும் கௌமோதகி என்னும் கதையைத் திருமால் கரத்தில் தாங்கி நிற்பார்.
பொய்களவு ஏமாற்றம் நடக்கும் போதும்
தன்னைவிட பலம்குறைந்தார் அடக்கும் போதும்
தானென்ற ஆணவமிக் கெழுந்த போதும்
தன்பொருளாய் அனைத்தையும் சுரண்டும் போதும்
நம்பிக்கை துரோகத்தைச் செய்யும் போதும்
மன்னனைப்போல் தண்டனைகள் வழங்கு தற்கு
நாத்தகவாள் கைக்கொண்டு தோற்றம் கொள்வார் . 05
மனிதர்கள், தனிமனிதன் தன் ஒழுக்கத்தில் இருந்து எல்லையை மீறுகின்ற போதும், பொய் களவு ஏமாற்றம் நிகழ்கின்ற போதும், தன்னைவிட பலம் குறைந்த உயிர்களிடத்தில் அடக்குமுறை நிகழ்த்தும் போதும், தான் என்ற ஆணவம் மிகுதியாகும் போதும், பிறர்பொருட்களை தன்பொருளாக எண்ணிச் சுரண்டுகின்ற போதும், நம்பிக்கைத் துரோகம் செய்கின்றபோதும், தண்டனை வழங்குவதற்கு ஓர் அரசனைப்போல, நாத்தகம் என்னும் வாளை கையில் கொண்டு திருமால் தோன்றமளிப்பார்.