வெண்டாழிசை
வெண்டளைகள் தழுவாது வேற்றுத்தளை விரவி ஒருபொருள் மேல் ஒன்றாகவும் இரண்டு இணைந்தும் மூன்றின் மிக்கும் மூன்றடுக்கி பொருள் வேறாயும் வெண்பாப்போல வருவது வெண்டாழிசையாகும்.
அச்சத் தோடு வாழ்ந்தி டாதே
அச்சம் உன்னை நஞ்சாய் மாய்க்கும்
அச்சம் நீக்கி வாழ் (பா. 15)
இது நேரொன்றிய ஆசிரியத்தளையால் வந்த வெண்டாழிசை
உரிமைஇல் பொருளினைக் கவர்ந்திட நினைப்பவர்
எரிகிற நெருப்பினைத் தலையிலே சுமப்பவர்
உருகிடும் மெழுகுதான் அவர். (பா.16)
இது நிரையொன்றிய ஆசிரியத்தளையால் வந்த வெண்டாழிசை
நிலவு மகளை நெருங்க நினைத்தேன் கனவில்
விலகும் இருளை பிடிக்க நினைத்தேன் ஒளியில்
நிலவாய் இருளாய் பணம் (பா. 17)
இது இயற்சீர் வெண்டளையால் வந்த வெண்டாழிசை
நெல்பசியைப் போக்கிவிடும் நம்தாகம் தீர்த்துவிடும் வாழுகின்ற
பல்லுயிர்கள் வாழ்ந்திடவே பெய்கின்ற மாமழைபோல் பூமியிலே
எல்லோரும் வாழ்ந்திடவே வாழ் (பா. 18)
இது வெண்சீர் வெண்டளையால் வந்த வெண்டாழிசை
கணுக்களிலே உயிர்வளர்க்கும் கடித்துண்டால் சுவைகொடுக்கும்
மண்ணுயிர்கள் இதைக்கண்டால் விரும்பிவரும் நலம்மிகுந்த
பணப்பயிராய் விளங்கிடுமே கரும்பு. (பா. 19)
இது கலித்தளையால் வந்த வெண்டாழிசை
மரம்அழிந்திட மழைகுறைந்திடும் குளிர்விளகியே வெயில்படர்ந்திடும்
சிரம்காத்திடும் குளிர்காற்றையும் புகைகக்கியே விடமாக்கிடும்
மரம்வளர்த்துநீ உயிர்காத்திட விரும்பு. (பா. 20)
இது ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த வெண்டாழிசை
கொய்யாக்கனி பூவாமலர் கேளாச்செவி தீராப்பசி
செய்யாத்தொழில் காணாக்கனா ஓயாஅலை பாடாஇசை
பெய்யாமழை உண்டோபயன் சொல். (பா. 21)
இது ஒன்றாத வஞ்சித்தளையால் வந்த வெண்டாழிசை