Wednesday, November 23, 2022

கண்ணகி சபதம்

அறுசீர் விருத்தம்

ஊரிலே சிறப்பாய் வாழ்ந்து
           விதியினால் இழந்து யாவும்
ஊரவர் ஏசல் வெட்கி
           இருப்பிடம் துறந்து வேறோர்
ஊரிலே குடிபெ யர்ந்து
           வாழ்க்கையைத் துவங்கு வோர்போல்
பாரினில் அரசர் போல
           பொருள்வகை பெற்றி ருந்து

குறள்வெண்செந்துறை

யாவையும் இழந்து பின்னர்
           சிலம்பையே முதலாய் வைத்து
தேவையைப் பெறுவோ மென்று
           திடமுடன் நாடு விட்டு

சிறப்புடை கலித்தாழிசை

உறவினர் பல்லோர் இருந்தும்
உறவுகள் யாவும் நீக்கி
துறவறம் செல்வோர் போல
           தமியராய்ப் பிரிந்து சென்றார்


கலிவிருத்தம்

வானம் விழித்தெழும் வைகறைப் பொழுதினில்
கானம் பாடியே புள்ளினம் பறந்திட
கூனிக் குறுகியே விதிப்பயன் துரத்திட
மானம் காத்திட இல்லினை நீங்கினர்

சொல்லிச் செல்லுதல் ஊரவர்க் கின்மையால்
பல்லூர்க் கோவிலைக் காண்பவர் போலவே
சிலவே ஆடையை கைகளில் தாங்கியே
சிலம்போ டவர்களின் இல்லினை நீங்கினர்

நீண்ட நெடியதாய் அறைகளைக் கொண்டது
தீண்டும் இன்பமாய் கண்களுக் களிப்பது
வேண்டும் கலைகளைத் தன்னுளே தாங்கிய
காண்க வரில்லினை இருவரும் நீங்கினர்

சிறப்புடைக் கலித்தாழிசை

பூட்டா வீட்டை விட்டு வெளியே வந்தவர்
தோட்டம் துரவு எல்லாம் கடந்து மாலவன்
கோட்டம் சென்று வணங்கி புத்த விகாரமும்
சமணர்க் கோவில் கண்டு வேண்டிச் சென்றனர்