Friday, December 9, 2022

அவதார நாமமாலை



ஹயக்ரீவர் அவதாரம்

நான்முகன் பிரம்மச் சுவடி
தான்படைக்க எண்ணி பறித்து
பாதாள உலகில் மறைந்தனர்
நிலையுணர்ந்த நான்முகன் தந்தை
இடத்தில் மீட்டுத் தரவேண்டினார்
குதிரைமுகம் மனித உடல்கொண்டு
மதுகைடபன் அழித்து சுவடிமீட்டு
தன்தொழில்செய் பிரம்மாவிடம் தந்தார்

கற்றிடுவோர்

சரசுவதி யோடு குருவை
வணங்க ஞனம் பெறுவது திண்ணமே 01


படைப்புக் கடவுளான நான்முகனின் பிரம்மச் சுவடியை, தாங்கள் படைப்புக் கடவுளாக இருந்து படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று எண்ணிய மது மற்றம் கைடபன் என்ற அரக்கர்கள் எடுத்துச் சென்று பூமிக்கடியில் மறைத்து வைத்திருந்தனர். இதனை அறிந்த பிரம்மன் தன் தன்தையான திருமாலின் முறையிட்டு பெற்றத் தரும்படி வேண்டினார். மதுவும் கைடபனும் குதிரை முகம் கொண்ட அரக்கர்கள் என்பதால் திருமாலும் மனித உடலும் குதிரைமுகமும் கொண்டு பாதாள  உலகம் சென்று அவ்விரு அரக்கர்களை அழித்து பிரம்மச் சுவடியை மீட்டு பிரம்மாவிடம் கொடுத்து தன் படைப்புத் தொழிலை மேற்கொள்ளச் செய்தார். இத்தகைய குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் அவதாரம் கொண்ட திருமால் கல்விக் கடவுளாக விளங்குகிறார். ஆகவே, கல்வி கற்க எண்ணுவோர், சரசுவதியோடு அவரது குருவாய் விளங்கும் ஹயக்ரீவரையும் சேர்த்து வணங்கினால் கல்வி கற்று வாழ்வில் உயர்வது உறுதி.

தத்தாத்ரேயர் அவதாரம்

கற்பில் சிறந்த மங்கை
அத்திரி முனிவர் நங்கை
கற்புத் திறத்தைக் கண்டு
பொறாமை அவள்மேல் கொண்டு
தேவியர் மூவரும் தம்கணவர்
அனுப்பி சோதிக்க அனுசுயை
திரிமூர்த்தி குழந்தை யாக்கி
தன்குடில் வைத்துக் கொண்டாள்
தன்கணவர் வாரா நிலைகண்டு
கலங்கிநிற்க நாரதர் உண்மைநிலை 
செப்ப விரைந்து பணிந்து
வணங்கி கேட்க கற்பினள்
குழந்தையை முன்போ லாக்கினாள்
கடவுளர் மூவரும் காட்சிதந்து
பொற்புடை பெண்ணே சிலநாளில்
திருமால் மகனாய் அவதரிப்பார்
தத்தாத் ரேயர்எனும்அக்குழந்தை
எங்களின் சக்திகள் கொண்டு
மங்கள வடிவாய்திக ழுமெனென்றனர்
சொன்னது போலவே அனுசுயை
ஓர்ஆண் குழந்தையை பெற்றுடுத்தாள்
அக்குழந்தை சிரம்மூன்று கரமாறு
பெற்று சங்குசக்கரம் சூலம்
தாமரை சபமாலை கமண்டலம்
தாங்கி காளைகருடன் அன்ன
வாகனம் கொண்டி ருந்தது.

மக்களே

தத்தாத் ரேயரை வணங்கினால்
மும்மூர்த்தி அருளோடு மனதேக பலம்கிட்டும் 02

கற்பில் சிறந்தவளும் அத்திரி முனிவரின் மனைவியுமான அனுசுயாவின் கற்புத் திறத்தைச் சோதிக்க எண்ணிய சிவன், விட்ணு, பிரம்மன் ஆகிய மூவரின் மனைவியர், தம் கணவர்களை அனுப்பி வைத்தனர். இம்மும்மூர்த்திகளும் முனிவர்களைப்போல உருமாற்றிக் கொண்டு அனுசுயா குடிலுக்குச் சென்று உணவு தருமாறு கேட்டனர். அவளும் வந்துள்ள முனிவர்களுக்கு உணவு சமைத்தாள். மூவருக்கும் இலைபோட்டு உணவு பரிமாறத் தொடங்கினாள். அப்போது அம்முனிவர்கள் பிறந்த மேனியாக வந்து உணவு பரிமாறினால்தான் உணவருந்துவோம் என்ற ஒரு வினோத கோரிக்கையை வைத்தனர். கற்புக்கரசியான அனுசுயா வந்திருப்பது முனிவர்களாக இருக்கமுடியாது என்று உணர்ந்து அம்மூவரையும் குழந்தைகளாக்கி வளர்த்து வந்தாள்.

மூன்று தேவியரும் தம் கணவர்கள் வராததைக் கண்டு பயந்து நாரதர் மூலம் செய்தியை அறிந்துகொண்டனர். பின்னர் அனுசுயாவிடம் சென்று நடந்ததற்காக மன்னிப்புக் கேட்க, கற்பில் சிறந்த அனுசுயா அக்குழந்தைகளைப் பழைய நிலைக்கு மாற்றினாள். உருமாறிய அம்மூவரும் தங்களின் உண்மை வடிவத்தைக் காட்டி, அத்திரி, அனுசுயாவிடம் இன்னும் சில மாதங்களில் விட்ணு உங்களின் மகனானப் பிறப்பார் எனவும் அக்குழந்தை எங்கள் மூவரின் அவதாரமாக எங்களின் சக்தியை உள்ளடக்கி தத்தாத்திரேயர் என்ற பெயருடன் விளங்கும் என்றும் கூறி மறைந்தனர்.

திரிமூர்த்திகள் கூறியபடியே சில மாதங்கள் ஆனதும் அத்திரி, அனுசுயைக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை மூன்று தலைகளையும் ஆறு கரங்களையும் கொண்டு, தம் கரங்களில் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, செபமாலை, கமண்டலம் தாங்கி, காளை, கருடன், அன்னம் வாகனங்களாகக் கொண்டிருந்தது. மனிதர்களே, தத்தாத்ரிரேயரை வணங்கினால் திரிமூர்த்திகளின் அருள் கிடைக்கப்பெற்று மன பலமும் உடல்பலமும் கொண்டு சிறப்புடன் வாழ்வீர்கள்.

தன்வந்திரி அவதாரம்

தேவர் அசுரர் போரிலே
தேவர் பலபேர் அழிந்தனர்
இதனைக் கண்ட இந்திரன்
இனத்தைக் காக்க எண்ணியே
பாற்கடல் கடையத் தொடங்கினர்
பாற்கடல் இருந்து பலபொருள்
தோன்றிய வண்ணமாய் இருந்தது
இறுதியில் அமிர்த கலசம்
தாங்கியே தன்வந்திரி தோன்றினார்.

மனிதர்காள்

மருத்துவக் கடவுள் தன்வந்
திரியை வணங்க உடல்நோய் போகுமே    03

தேவர்களும் அசுரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிட்டு தேவர்கள், அசுரர்கள்  ஆகிய இரண்டு பக்கமும் உயிர் இழப்பு ஏற்பட்டது. அசுரர் குருவாம் அக்கிராச்சாரியாரின் மந்திரத்தாள் அசுரர் உயிர்பித்து எழுந்தனர். தேவர்கள் இறந்தனர். இதனை அறிந்த இந்திரன் தன் தேவர் இனத்தைக் காப்பதற்காக திருமால் துணையுடன் பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து இலட்சுமி, சந்திரன் முதலான பொருட்கள் வெளிப்பட்டன. இறுதியில் திருமால் தன்வந்திரியாக அவதாரம் செய்து அமிழ்தக் கலசத்துடன் வெளிப்பட்டார். மனிதர்களே, அத்தகைய மருத்துவக் கடவுளான தன்வந்திரியை வணங்கினல் உடல்நோய் குணமாகும்.

நர - நாராயணர்

தவத்தின் மேன்மை உரைக்க
திருமாலின் இரட்டை அவதாரம்
தருமம் நிலைநாட்ட தருமதேவதை
மூர்த்தியின் இரட்டை மகன்கள்
முன்னொரு காலத்து அரக்கனொருவன்
பிரம்மனை நோக்கி தவம்செய்து
உடலோடு ஆயிரம் கவசங்கள்
ஒட்டி யிருக்கும் நிலையும் 
தவம்போர் இரண்டிலும் திறம்பெற்ற
ஒருவனால் மட்டுமே தனக்கு
அழிவுநேர வேண்டு மென்றும்
பன்னிரு ஆண்டுகள் தவம்செய்து
என்னோடு போர்செய்தால் ஒருகவசம்
அறுபட வேண்டும் இவ்வாறு
ஆயிரம் கவசங்கள் அறுபட்ட
பின்னரே நான்இறக்க வேண்டும்
வரங்கள் பெற்றான் இதனால்
தேவர் மனிதர் விலங்கென்று
பலவும் துன்புறுத்தினான் துன்பம்
கண்ட தேவர்கள் திருமாலிடம்
முறையிட நரன்நா ராயணனாய்
தரணிவந்து நரனாய் பன்னிரு
ஆண்டுகள் தவம்செய்து நாராயண
னோடிணைந்து போர்செய்ய ஆயிரம்
கவசனின் ஒருகவசம் அறுத்தது
இவ்வாறே தொள்ளா யிரத்து
தொண்ணூற் றொன்பதும் அறுந்தனர்
அவ்வரக்கன் மறுபிறப்பில் கர்ணனாய் 
பிறந்து துரியோதன னோடிருந்தானிப்
பிறப்பில் நரன்அர்ச்சுன னாகவும்
நாரணன் கிருட்டிணனா கவும்பிறந்தனர்
போரின் முடிவில் இவர்கள் 
இணைந்து கர்ணனை அழித்தனர்

மனிதர்காள்

நல்லோர் காத்த இவர்களைப்
பல்லோர் வணங்க நல்லது நடக்குமே    04

தவத்தின் மேன்மையை உரைக்க திருமால் எடுத்த இரட்டை அவராதமே நர-நாராயணர் அவதாரம். தருமம் நிலைநாட்ட தருமரின் மனைவியான மூர்த்தி என்பவள் பெற்றெடுத்த பிள்ளைகளே இவர்கள். முன்னொரு காலத்தில் அரக்கன் ஒருவன் பிரம்மதேவரை மனத்துள் நினைத்து கடுந்தவம் புரிந்து ஆயிரம் கவசங்கள் என் உடலோடு ஒட்டி இருக்கவேண்டும் என்றும் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்த ஒருவன் தன்னோடு போரிடும்போது ஒருகவசம் அறுபடவேண்டும். இவ்வாறு ஆயிரம் கவசங்களும் அறுபட்டபிறகே நான் இறக்கவேண்டும் என்றும் வரம் பெற்றிருந்தான். இதன் காரணமாக நரன் பன்னிரண்டாண்டுகள் போர்செய்து நாராயணனோடு சேர்ந்து போரிட்டு வென்றார். அப்போது ஆயிரம் கவசத்தானின் ஒரு கவசம் அறுபட்டு விழுந்தது. இவ்வாறே பல ஆண்டுகள் தவமிருந்து, போர்செய்து நரன் - நாராயனர் 999 கவசங்களையும் அறுபட செய்தனர். அவ்வரக்கன் வேறு பிறவியில் கர்ணனாகப் பிறந்து துரியோதனிடம் நட்பு கொண்டு வாழ்ந்து வந்தான். அவனோடு நரனாக அர்ச்சுனனும் நாராயணனாகக் கிருட்டிணனும் பிறந்திருந்தனர். மகாபாரதப் போரின் முடிவில் நர-நாராயணரான அர்ச்சுனனும் கிருட்டிணனும் சோர்ந்து கர்ணனை அழித்தனர். மனிதர்களே, நல்லவர்களைக் காத்த இவர்களை, நாம் பலரும் வணங்கினால் நல்லது நடக்கும்.

மோகினி அவதாரம்

தேவரும் அசுரரும் இணைந்தே
மேரு மலையின் துணையுடன்
பாற்கடல் கடையத் தொடங்கினர்
அமிழ்தக் கலசம் வந்ததும்
அசுரர் பிடிங்கிக் கொண்டனர்
செய்வ தறியா தேவர்கள்
அரியை வணங்கி நின்றனர்
ஆளை மயக்கும் அழகுடன்
யாவரும் விரும்பும் பெண்ணென
அசுரர் முன்னே தேன்றி
உசுப்பும் வார்த்தைகள் பேசி
அமுதக் கலசம் கவர்ந்து
தேவர்க் கருளினாள் மோகினி

அவளே

திருமால் எடுத்தபெண் அவதாரம்
துன்ப நேரத்தில் தீர்த்திட எடுத்தது    05

தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்து அமிழ்தம் எடுக்க வேண்டும் என்பதற்காகவே இணைந்து மேருமலையின் துணையோடு பாற்கடலைக் கடையத் துவங்கினர். பாற்கடலில் இருந்து அமிழ்தக் கலசம் வெளிப்பட்டதும் அதனை தேவர்களிடம் இருந்து அசுரர்கள் கவர்ந்து சென்றுவிட்டனர்.  என்ன செய்வது என்று அறியாமல் விழித்த தேவர்கள் திருமாலை வணங்கினர். திருமாலும் ஆண்களை மயக்கும் அழகில் யாவரும் விரும்புகின்ற பெண்ணாக மோகினி வடிவம் எடுத்து, தேவர்களிடம் சென்று, அவர்களை மயக்கும் வார்த்தையில் பேசி அமுத கலசத்தைக் கவர்ந்து தேவர்கள் மட்டும் உண்ணும்படியாகச் செய்தார். திருமால் எடுத்த அவதாரங்களிலேயே பெண் அவதாரம் இது ஒன்றே. இவ்வாறு திருமால், தேவர்களைக் காப்பதற்காகவும் சிவனைக் காப்பதற்காகவும், அரவானை மணப்பதற்காகவும் பலமுறை மோகினி அவதாரம் எடுத்துள்ளார். இவை அனைத்தும் துன்பமான நேரத்தில் அத்துன்பத்தில் இருந்து காப்பதற்காகவே எடுத்ததாகும்.


கபிலர் அவதாரம்

கந்தர்மர் தேவாகுதி இணையருக்கு
மைந்தராய் கபிலர் அவதரித்து
ஐம்புல இன்பமே உண்மையென்று
தம்மனச் செயல்வழி நாட்டங்கொண்டு
ஆத்மாவை கட்டுக்கு வைத்துள்ளீர்
ஆத்மாவை விடுவித்து பக்திகொண்டு
புலனின்பம் துறந்து மனம்தெளிந்து
உள்ளத்தில் என்னை வைத்தால்
மோட்சம் அடைதல் சாத்தியமென்றார்

அன்பர்காள்

பகவானை உள்ளம் வைத்து
புகழ்பாடி துதித்து அருள்பெரு வோமே 06

பகவான், கந்தர்மர் தேவாகுதி இணையருக்கு பத்தாவது குழந்தையாக கபிலர் என்ற பெயரில் அவதரித்தார். மேலும் அவர், ஞான மார்க்கத்தின் மூலமாக மோட்சத்தை அடையலாம் என்பதை விளக்குவதற்காகவே நான் அவதரித்தேன் என்றும் மனிதர்கள், ஐம்புல இன்பமே சிறந்தது என்றும் அதுவே உண்மையென்றும் தன்னுடைய மனம் சொல்கின்ற வழியில் சென்று, ஐம்புல இன்பங்களை நுகர்ந்து, தம் ஆத்மாவை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். ஆத்மாவை மனக்கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து என்பால் பக்திகொண்டு, என்னிடத்தில் அன்பு வைத்தால் மோட்சம் அடைதல் எளிதாகும் என்றும் கூறினார். ஆகையால் அன்பர்களே, பகவானை உள்ளத்தில் வைத்து அவனது பெருமைகளைப் பாடி வணங்கி அவனருளைப் பெருவோமாக.

பிருகு அவதாரம்

எமதர்மன் மகளான சுனிதா
அங்கா என்பவன் அவள்கணவன்
இருவருக்கும் பிறந்த பிள்ளைவேனா
தருமத்தை அழிக்கும் அரக்கனாகி
தம்கீழ் வாழ்வோரை கொடுமைசெய்தான்
தானே கடவுள் தன்னையே
வணங்க வேண்டும் என்றும்
தனக்கே ஆகுதி தரவேண்டும்
என்றெல்லாம் கட்டளை யிட்டான்
மும்மூர்த்தியை இழிவாக பேசினான்
கொடுமை தாங்க முடிதாத
பூமாதேவி பசுவின் வடிவம்கொண்டு
இயற்கை வளங்களை தன்னுள்
ஒடுக்கி எங்கோ மறைந்தாள்
முனிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி
தர்பையெடுத்து மந்திரம் சொல்லி
வேனாவை அரக்கனை அழித்தனர்.
எனினும் வேந்தன் வேண்டுமென
எண்ணிய அவர்கள் வேனா
எலும்பைக் கடைந்த போது
அற்புத மனிதனாய் பகவான்
விட்ணு அவதாரம் செய்தார்.
முனிவர்கள் அவர்க்கு பிருகு
என்னும் பெயர்சூட்டி மகிழ்ந்தனர்.
மன்னன் பொறுபேற்ற பிருகு
மறைந்த இயற்கை வளங்களை
மறுபடியும் கொண்டுவர எண்ணி
பசுவடிவான பூமியை தேடி
இடங்கள் பலசென்றான் கிடைக்கவில்லை
முயற்சியைக் கைவிடாது இயற்கையைக்
காத்து மக்களைக் காக்கும்
எண்ணத்தில் முயன்று தேடினான்
இறுதியில் பிருகுமேல் இரக்கம்
கொண்டபூமா தேவி காட்சிதந்தாள்
தந்தைக் காக மண்ணிப்புகேட்டு
நாடுவளம் பெறவேண்டி நின்றான்.
கருணைகொண்ட பூமாதேவி
இயற்கை வளம்மீண்டும் அளித்தாள்

மக்களே

பசுவை வணங்க பூதேவி
அருளான் அனைத்து வளங்களும் பெருவீர்    07

எமதர்மனின் மகளான சுனிதா, அங்கா என்பவனை மணந்துகொண்டு வேனா என்பவனைப் பெற்றெடுத்தாள். எமதர்மனின் பெயரனான வேனா அரசனாகப் பதவி ஏற்றதும் தர்மத்தை மறந்து அதர்மங்களைச் செய்யத் தொடங்கினான். தமக்குக் கீழ் உள்ள மக்களைத் துன்புறுத்தினான். தன்னையே கடவுளாக வணங்கவேண்டும் என்றும் முனிவர்கள் செய்யக் கூடிய யாகங்களின் ஆகுதியை தனக்கே கொடுக்கவேண்டும் என்றும் கட்டளை இட்டான். பூமாதேவி இவனின் அரக்கத்தனங்களைத் தாங்க மாட்டாமல் பசுவடிவம் கொண்டு தன்னுடைய இயற்கை அனைத்தையும் தன்னுள் அடக்கி எங்கே ஓடி ஒளிந்துகொண்டாள்.

முனிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தர்ப்பைப் புல்லை எடுத்து அம்பாக்கி, மந்திரம் சொல்லி வேனாவின்மேல் ஏவினர். வேனாவும் இறந்தான். அதன்பின் நாட்டை ஆள்வதற்கு ஓர் அரசன் வேண்டும் என்று எண்ணிய முனிவர்கள் வேனாவின் எலும்பைக் கடைந்தபோது அழகிய, சக்திமிக்க மனிதனாக பகவான் விட்ணு அவதாரம் செய்தார். அவருக்கு முனிவர்கள் பிருகு என்று பெயரிட்டனர்.

மன்னன் பெறுப்பேற்ற பிருகு, மறைந்த நாட்டுவளங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நினைத்து, பசுவடிவான பூமாதேவியைத் தேடிச் செனிறான். பூமாதேவி எங்கும் கிடைக்கவில்லை. எனினும் பிருகு முயற்சியைக் கைவிடவில்லை. இதனைக் கண்ட பூமாதேவி மனம் இரங்கி, பிருகுவின்முன் காட்சிதந்தாள்.

பிருகு, தன் தந்தைக்காக மண்ணிப்புக் கேட்டு, பூமியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென வேண்டினான். பிருகுவின்மேல் கருணைகொண்ட பூமாதேவி மீண்டும் வளங்களை அளித்தாள். மக்களே பசுவினை வணங்கினால் பூமாதேவியின் அருளால் அனைத்து வளங்களையும் பெறுவீர்கள்.

வேத வியாசர் அவதாரம்


பராசரர் சத்தியவதி இணையருக்கு
கங்கைகரை தன்னில் பிறந்த
கருமேனி கிருட்ண துவைபாயனர்
விட்ணுவின் அவதார மானஇவர்
பாகவதம் பகவத்கீதை எழுதியவர்
பதினெண் புராணம் மகாபாரதம்
இயற்றிய ஆசான் வேதங்களை 
தொகுத்ததால் வேத வியாசரானார்

அன்பர்காள்

இவரின் நூல்கள் கற்றால்
தவம்செய் பலன்கள் கிடைக்க பெறுமே    08

பராசரர், சத்தியவதிக்கு மகனாகக் கங்கைக்கரையில் பிறந்தவர். கருத்த மேனி கொண்டதனால் இவருக்கு கிருட்ண துவைபாயனர் என்ற பெயரும் உண்டு. விட்ணுவின் அவதாரமாகப் பிறந்தவர். பாகவதம், பகவத்கீதையைத் தொகுத்து எழுதியவர். பதினெண் புராணங்கள், மகாபாரதம் ஆகிய நூல்களின் ஆசிரியர். வேதங்களைத் தொகுத்ததால் வேதவியாசர் எனும் பெயர் பெற்றார். அன்பர்களே, இவரின் நூல்களை நன்கு கற்று வந்தால் தவம் செய்த பலன்கள் கிடைக்கும்.

சனகாதி முனிவர்கள்

திருமாலின் அம்சம் கொண்டு
தரணியில் மக்கட்தொகை பெருக்க
பிரமன் மனதால் படைத்தநால்வர்
பிரம்மன் விருப்பம் மீறி
பிரமச்சரிய வாழ்வுகொண்டு
ஆண்மீகம் பரப்புரை செய்தோர்
திருமால் மாளிகை நுழைந்து
அவதாரம் கொள்ளச் செய்தோர்

இவர்களின்

பிரம்மச் சரிய முறைகாத்து
இறைவன் அடையும் வழியைப்பின் பற்றுவோம்    09

பூமியில் மக்கட் தொகைப் பெருக்கத்திற்காகப் பிரம்மாவின் மனதால் படைக்கப்பட்ட நான்கு ஆண் குழந்தைகளே சனகர், சனாநந்தர், சனத்குமாரர் மற்றும் சனத்சுஜாதியர் என்னும் சனகாதி முனிவர்கள் ஆவர். இவர்கள் தங்களை படைத்த பிரம்மாவின் விருப்பத்தை மீறி, இல்லற வாழ்வில் புகாது, பிரம்மச்சர்ய ஆசிரம வாழ்வை மேற்கொண்டு அண்டம் முழுவதும் சுற்றி ஆன்மீகத்தை பரப்பி வந்தனர். இந்நால்வராலேயே வராக, நரசிம்ம, வாமன அவதாரங்கள் நடந்தேறின. இவர்களின் பிரப்பச்சரிய முறைகளைக் கடைபிடித்து இறைவனை அடையும் வழியைப் பின்பற்றுவோம்.


நாரத அவதாரம்

பிரம்மன் சரசுவதி புத்திரன்
திருமாலின் பரம பக்தர்
நாரணனை முழுநேரம் உச்சரிக்கும்
நாரதமுனி! வைணவத்தின் மாமுனி!
சாசுவத தந்திரம் எழுதியவர்
நினைத்த நேரத்தில் நினைத்தவிடம்
இடம்செல்லும் வரங்கள் பெற்றோர்
கலகப் பிரியர் அவரின்
கலகமும் நன்மையிலேயே முடியும்
திருமாலின் அவதார மானஇவர்
கருத்து பரிமாற்றத்தின் அடையாளம்
மூவுலகும் செல்லும் தன்மையர்

மனிதர்காள்

திருமாலின் அருளை வேண்டுவோர்
நாரதர் வணங்கினால் போது மானதே 10


பிரம்மன் சரசுவதி புத்திரனாகவும் திருமாலின் பரம பக்தராகவும் விளங்குபவர் நாரதர். நாராயணனை முழுநேரமும் உச்சரிக்கும் தன்மையுடைய இவரை, வைணவத்தின் மாமுனி என்றும் போற்றப்படுகிறார். சாசுவத தந்திரம் எழுதியவர் தாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் வரங்கள் பெற்றுள்ளார். கலகப் பிரியர், இவரின் கலகமும் நன்மையிலேயே முடியும். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் இவர், கருத்து பரிமாற்றத்தின் அடையாளமாகவும் மூவுலகும் செல்லும் தன்மையவராகவும் விளங்குகிறார். மனிதர்களே, திருமாலின் அருளைப் பெற நினைத்தால் இவரை வணங்கினாலே போதும்.