வெள்ளொத்தாழிசை
வெண்டளை பெற்று வேற்றுத்தளை விரவாது வரும் சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வருவது வெள்ளொத்தாழிசையாகும்.
மரங்கள் வளர்க்க மனிதா விரும்பு
மரங்கள் உனது உயிரை வளர்க்கும்
வரமாய் நினைத்து நடு.
உரமாய் நிலத்தில் பயிரை வளர்க்கும்
சருகைக் கொடுத்து விளைச்சல் பெருகும்
வரமாய் நினைத்து நடு.
எரியும் நெருப்பாம் வெயிலைத் தணிக்கும்
பருகி குடித்து புகையைத் தடுக்கும்
வரமாய் நினைத்து நடு. (பா. 22)
இது இயற்சீர் வெண்டளையால் வந்த வெள்ளொத்தாழிசை.
ஏரோட்டி சோறுபோடும் பாட்டாளி வர்க்கத்தை
போராடி மாண்டுபோகும் ஏழைகளின் கூட்டத்தைப்
பார்க்காது நன்றிகெட்ட நாடு.
வீட்டுபொருள் அத்தனையும் விற்றுபயிர் காப்பவரை
மாட்டைநம்பி வாழுகின்ற மானமுள்ள கூட்டத்தை
தேடாது நன்றிகெட்ட நாடு
பெற்றபொருள் கொண்டுவந்து நல்லவிலை கேட்டுநிற்கும்
விற்றுவந்த காசுகொண்டு பாதிகடன் தீர்த்துவிடும்
மறந்துவிடும் நன்றிகெட்ட நாடு. (பா. 23)
இது வெண்சீர் வெண்டளையால் வந்த வெண்டாழிசை