Saturday, December 10, 2022

யாகசேனி புகழ்ச்சி மாலை

காப்பு

நேரிசை வெண்பா

பாரதப் போர்கண்டு வெற்றிமாலை சூடிய
நாரணன் தங்கை புகழ்பாட - பாரத
ஏடெழுத வேண்டுமென் றெண்ணியே தன்ஒற்றைக்
கோடுகைக் கொண்டான் துணை

பாரதம் எழுதுவதற்காகத் தன்னுடைய ஒற்றைக் கொம்பைக் கையில் கொண்ட முதற்கடவுளாம் விநாயகனைத் துணைக்கொண்டு, பாரதப்போரில் வெற்றி மாலை சூடிய நாராயணனின் தங்கையான பாஞ்சாலியின் புகழைப் பாடுகிறேன்.

சிந்தடி வஞ்சிப்பா

தாமரைத் தடாகம் மூழ்கி
எழுந்திடும் பொற்சிலை போல
செந்தீயில் தோன்றி எழுந்திடும்
செங்கதிரோன் தங்கை இவளே
கார்மேனி சுருண்ட கூந்தல்
நீர்மேவும் பூவின் நயனம்
காண்பவர் கவர்ந்தி ழுக்கும்
மேனிஎழில் படைத்த நங்கை
துருபதன் யாகத் தீயில்
பருவப்பெண் போல வந்தாள்

அவளோ

முற்பிறவி வரம்வேண்டி தனது
எண்ணம் ஈடேற பிறவி கொண்டாள் 01

தாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்திடும் பொன் சிலைபோல சிவந்த, கொழுந்துவிட்டு எரியும் தீயில் தோன்றியவள். சூரியனாக விளங்கும் திருமாலின் தங்கையாவாள். கரிய நிறம்கொண்ட உடலும் சுருண்ட கூந்தலையும் காண்பவர்களின் மனங்களை கவர்ந்து இழுக்கின்ற உடலமைப்பையும் கொண்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் நடத்திய யாகத் தீயில் பருவ வயதுடைய பெண்ணாக வந்தாள். இவளோ, முற்பிறவியில் நல்ல கணவன் வேண்டும் என்ற வரங்கள் பெற்று, இப்பிறப்பு கொண்டாள்.

குளறடி வஞ்சிப்பா
 
கட்டுப் பாடில்லா
சிட்டுக் குருவிபோல
துள்ளித் திரிந்திடும்
புள்ளி மானென
அன்னைத் தந்தையின்
கொஞ்சல் மொழியிலும்
அண்ணன் தங்கையின்
அன்பு மழையிலும்
செல்லப் பிள்ளையாய்
அதிகாரம் செய்து
தோழிய ரோடு
ஓடி ஆடியும்
இன்பக் கடலில்
மூழ்கியும் திளைத்திருந்தாள்

தந்தை

பருவம் கண்டு மணமுடிக்க
சுயம்வர ஓலை அனுப்பி வைத்தார். 

கட்டுப்பாடு இல்லாத சிட்டுக்குருவிபோல, நினைத்த இடங்களில் துள்ளித் திரிந்திடும் புள்ளிமான் போல, தாய்த் தந்தையின் அரவணைப்பில் கொஞ்சல் மொழிகளிலும் அண்ணன் தங்கையின் அன்பு மழையிலும் நனைந்து, செல்லப் பிள்ளையாய் அதிகாரம் செய்துகொண்டு தோழிகளோடு ஆடிப்படியும் இன்பக்கடலில் மூழ்கித் திளைத்திருந்தாள் திரௌபதை. இவளின் திருமணப் பருவத்தைக் கண்ட தந்தை துருபதன் பல நாட்டு மன்னர்களுக்கு சுயம்வர  ஓலையை அனுப்பி வைத்தார்.

குளறடி வஞ்சிப்பா

மயில்தோகைப் பின்னலிட்டு
கயல்விழிக்கு மைபூசி
நிலவுமுகம் ஆடைபோர்த்தி
பேரழகே பெண்வடிவாய்
சேலைகட்டி வந்ததுபோல்
துருபதனின் மணிவிளக்கு
தோழியரின் கூட்டத்தில்

மாடத்திலே

தீட்டி வைத்த ஓவியமாய்
காண்பவர் வியக்கும் வண்ணம் நின்றாள் 03


மயில் தோகைபோன்ற கூந்தலைப் பின்னலிட்டு, கயல்மீன்கள் போன்ற கல்களுக்கு மை தீட்டி, நிலவு போன்ற முகத்தில் ஆடை போர்த்தி, பேரழகே பெண் வடிவம் கொண்டு சேலைகட்டி வந்ததுபோல, துருபதனின் குலவிலக்கான திரௌபதி தோழியர் கூட்டத்தோடு நின்றுகொண்டு, மாடத்தில் தீட்டி வைத்த ஓவியம்போல் காண்பவர்ர்கள் விளக்கும் வண்ணம் நின்றிருந்தாள்.

சிந்தடி வஞ்சிப்பா

வந்திருக்கும் இவர்களுள் யார்தான்
எனக்கு ஏற்றவர் அழகிலே 
அறிவிலே குணத்திலே பொறுப்பிலே
சிறந்தார் எவரென அறிகிலேன்
பொருத்தம் இலாதோர் மணந்திடின்
வாழ்க்கை என்ன ஆகுமோ?
மூத்தோர் சொல்லையும் மதிக்கணும்
வென்றார் வழியினில் நடக்கணும்
யாது செய்குவேன் குழம்பினேன்

இறைவா

உன்னை நினைத்து துதிக்கிறேன்
எனக்கு ஏற்ற நல்வழி காட்டுவாய்    04

சுயம்வரத்திற்கு வந்திருக்கும் இவர்களுள் யார்தான் எனக்கு ஏற்றவர்கள். அறிவினால், குணத்தினால், பொறுப்பினால் சிறந்தவர்கள் யார் என அறிய முடியாத நிலையில் உள்ளேன். பொருத்தம் இல்லாதவர்களை மணம் முடித்துக்கொண்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோ? வயதில் மூத்த தாய்தந்தை அண்ணனின் சொல்லையும் மதிக்கவேண்டும். போட்டியில் வெற்றிகொண்டவரையும் கணவனாக ஏற்கவேண்டும் என்ன செய்யப் போகிறேன் இறைவா குழப்பமாக உள்ளது. உன்னை நினைத்து வணங்குகிறேன். எனக்கேற்ற நல்ல வழியினைக் காட்டுவாயாக.


குறளடி வஞ்சிப்பா

சுயம்வரம் காண்பதற்கும்
சுயம்வரத்தில் கலந்துகொள்ளவும்
வந்திருந்த பெருமக்கள்
தங்களது இடம்அமர்ந்து
நடப்பவற்றைக் கண்ணுற்றார்
திட்டத்துய்மன் போட்டியின்
விதிமுறைகள் சொன்னகணமே
பதிலேதும் சொல்லாமல்
பதுங்கிய மன்னர்பலர்
முந்திவந்தோர் வில்லை
தோட்டும் தூக்கியும்
நாணேற்ற முயன்றும்
முடியாமல் தோற்றனர்
துரியனும் சோதரரும்
கர்ணனும் பிறரும்
தோல்வியைத் தழுவினர்
அந்தணர் வடிவிலே
வந்தவன் ஒருவனே
வெற்றியெனும் கனிபறித்தான்

யாகசேனி

வெற்றி மாலை வென்றவர்க்குச்
சூட்டி அவரொடு தானும் சென்றாள்    05

யாகசேனிக்கு நடக்கும் சுயம்வரத்தைக் காண்பதற்கும் சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்காகவும் வந்திருக்கும் அரசர்கள் அவர்களுக்கென்று ஒருக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து நடப்பவற்றைக் கண்டுகொண்டிருந்தனர்.  திட்டத்துய்மன் போட்டியின் விதிமுறைகள் சொன்னகணமே பல மன்னர்கள் பதிலேதும் சொல்லாமல் போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டனர்.  போட்டியில் கலந்துகொள்ள நினைத்த மன்னர்கள் வில்லின் அருகே வந்து வில்லை தோட்டும் தூக்கியும் நாணேற்ற முயன்றும் முடியாமல் தோற்றனர்.  துரியோதனனும் அவனது சகோதரர்களும் கர்ணனும் பிறரும் தோல்வியையே தழுவினர். அந்தணர் வடிவிலே வந்தவன் ஒருவனே வில்வளைத்து நாணேற்றி வெற்றி எனும் கனிபறித்தான். யாகசேனி வெற்றி மாலை வென்றவர்க்குச் சூட்டி அவரொடு தானும் பின் சென்றாள்.

சிந்தடி வஞ்சிப்பா

கனவுகள் ஆயிரம் இருந்தபோதும்
தன்பெற்றோர் சொல்வழி நடந்து
கணவன் பின்னே செல்லும் 
பண்பினர் பெண்ணினம் அவ்வழி
சுயம்வரம் முடிந்ததும் கிருட்டிணை
தயங்காமல் பழகிய இல்லினை
வளர்த்த உறவினை தோழியை
செல்ல பிராணியை துறந்து
துறவியாய் வந்த வென்ற
வெற்றி யாளனோடு பின்நடந்தாள்
பல்லோர் தோற்றும் வென்றதால்
பலசாளி என்பதை அறிந்தாள்
செல்வச் செருக்குடன் வீரம்
படைபலம் கொண்ட அரசர்முன்
வந்துநின்றதால் தைரிய மறிந்தாள்
அவையோர் அனைவரும் போட்டிபோட்டு
முந்திவர இறுதியில் வந்ததால்
பொறுமையும் கட்டுப்பாடும் அறிந்தாள்
ஐவரின் இடையினர் போட்டிக்கு
வந்ததால் ஒற்றுமை அறிந்தாள்
மனையாளின் செல்வம் பலகண்டும்
துணையாக இவள்மட்டும் போதுமென்று
தன்மனை அழைத்துசென்ற திறம்கண்டு
எளிமையும் போதுமென்ற மனம்கண்டாள்
இவ்வாறே பலவாறு மனம்எண்ணி
செவ்வனே ஐவரின் பின்சென்றாள்

ஐவரும்

அன்னை இருக்கும் திசைகண்டு
கொண்டு வந்த சேதி சொன்னார் 06

தனக்குள்ளே ஆயிரம் கனவுகள் இருந்த போதும் தன் பெற்றோர் சொல்வழி கேட்டு, கணவன் பின்னே செல்லுதல் பெண்களின் பண்பாகும். ஆகையால், சுயம்வரம் முடிந்ததும் கிருட்டிணை தயங்காமல் பழகிய இல்லத்தினையும் வளர்த்த உறவுகளையும் தோழியையும் செல்ல பிராணிகளையும் விட்டுவிட்டு ஒரு துறவியைப்போல வெற்றிபெற்றவனோடு பின்நடந்தாள்.

பல்லோர் தோற்றும் இவன் மட்டும் வென்றதால் பலசாளி என்பதை அறிந்தாள். செல்வச் செருக்குடனும் வீரம்,  படைபலமும் கொண்ட அரசர்கள் முன் வந்து நின்றதால் அவனின் தைரியம் அறிந்தாள். அவையில் உள்ளோர் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு முன்வர இவன்மட்டும் இறுதியில் வந்ததால் அவனின் பொறுமையும் கட்டுப்பாடும் அறிந்தாள். வந்த ஐவருள் நடுவில் உள்ளவர் போட்டிக்கு வந்ததால் அவர்களின் ஒற்றுமை அறிந்தாள். மனைவியின் செல்வ நிலைபாட்டைக் கண்டும்  துணையாக இவள் மட்டும் போதும் என்று என்னை மட்டும் தன் இல்லத்திற்கு அழைத்து சென்றதால் இவர்களின் எளிமையும் எதற்கும் ஆசைப்படாத தன்மையைக் கண்டாள். இவ்வாறே பலவாறு மனதில் நினைத்துக் கொண்டு ஐவரின் பின்னால் சென்றாள் கிருட்டிணை. ஐவரும் அன்னை இருக்கும் இடத்திற்குச் சென்று வெற்றிபெற்று வந்த செய்தியை சொன்னார்கள்.

சிந்தடி வஞ்சிப்பா

கன்னி ஒருத்தி கொண்டு
வந்தோ மென்று பகர
கனியென்று நினைத்த அன்னை
பங்கிட்டு உண்என்றாள் பாராமல்
அன்னை சொல்லே மந்திரமென்
றெண்ணியோர் ஒப்புக் கொண்டார்
சொன்ன வார்த்தை ஏவுகனைபோல்
நெஞ்சில் பாய திகைத்தாள்
திக்குத் தெரியாமல் பின்வந்து
சிக்கலில் மாட்டிக் கொண்டோமென
எண்ணம் குழம்பி பின்தெளிந்து
முன்னோர் செல்வழி செல்வதே
பெண்களுக் கேற்ற செயலேன
உள்ளம் தேற்றிக் கொண்டாள்.

ஐவரின்

இல்லம் புகுந்து நல்லறம்
செய்யும் இல்லத் தரசி யானாளே 07

தம்முடைய இல்லத்திற்குச் சென்ற ஐவரும் தன்னுடைய அன்னையுடம் கன்னி ஒருத்தியைப் போட்டியில் வென்றிபெற்றுக் கொண்டு வந்தோம் என்று சொல்ல, கனியென்று நினைத்த அவர்களின் அன்னை, வந்திருக்கும் யாகசேனியைப் பாராமல் அனைவரும் பங்கிட்டு உண்ணுங்கள் என்றாள்.  அன்னையின் சொல்லே மந்திரம் என்று நினைத்து அனைவரும் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு சொன்ன வார்த்தை யாகசேனியின் உள்ளத்தில் ஏவுகனையைப்போல் பாய்ந்தது. அவள் திக்கத் தெரியாமல் திகைத்து நின்றாள். இவர்களை நம்பி வந்து சிக்கலில் மாட்டிக் கொண்டோமோ என்று எண்ணி மனம் குழம்பினாள். அதன் பின்னர், முன்னோர்கள் சொல்லுகின்ற வழியில் செல்வதே பெண்களுக்கு ஏற்ற செயல் என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டு, இல்லம் புகுந்து ஐவருக்கும் நல்ல மனைவியாக வாழ முற்பட்டாள். 

சிந்தடி வஞ்சிப்பா

கணவன் மட்டும் உறவாய்
கொண்டு புதிய வீட்டில்
பாதம் பதித்து உறவு
முறைகள் மெல்ல அறிந்து
உளம்நோகா மொழிகள் பகிர்ந்து
தனது பணிகள் கையில்எடுத்து
புதியவாழ்வை வாழத் தொடங்கினாள்

கிருட்டிணை

நடப்பது எல்லாம் புதுமையாக
விடைதெரியா விடுகதை யாக வாழ்ந்தாள் 08

யாகசேனி, திருமணம் ஆனவுடன் கணவனை மட்டும் உறவாய் கொண்டு புதிய வீட்டில் அடியெடுத்து வைத்து, உறவு முறைகளை மெல்ல அறிந்து, அவர்களின் உள்ளம் நோகாமல் இனிய மொழிகளைப் பேசி தனது பணிகளைக் கையில் எடுத்து புதிய வாழ்வை வாழத் தொடங்கினாள். அப்போது அங்கு நடப்பது எல்லாம் புதுமையாகவும் விடைதெரியா விடுகதையாகவும்  எண்ணி வாழ்ந்தாள்.

சிந்தடி வஞ்சிப்பா

வரைமுறை யாகவாழ்நாள் வகுத்து
திறத்தினில் மாறாமல் வாழ்ந்து
கொண்டவர் அன்றி பிறர்நோக்கா
கற்புடை மாதர் போலவே
பொற்புடை வாழ்வை மகிழ்வாய்
ஐவர் மனைவியாய் வாழ்ந்தனள்

பாஞ்சாலி

ஐவரை நெஞ்சில் சுமந்தும்
பேத மில்லா உளம்படைத் தனளே 09

ஐவரை மணந்த யாகசேனி, ஓராண்டுக்கு ஒருவர் என்ற வரையறையை வகுத்துக் கொண்ட ஐவருடன் இனிது வாழ்ந்தாள். அவ்வாறு வாழுகின்ற காலத்தில் தன்னுடைய கொள்கையில் இருந்த வழுவாமலும் பிறர் மனம் நோகாமலும் கற்புடைய பெண்களைப் போல பொறுப்புடன் வேறுபாடு காட்டாமல் வாழ்ந்து வந்தாள்.

சிந்தடி வஞ்சிப்பா

இல்லறம் நல்லற மாக்கி
பல்லோர் போற்றும் பெண்ணாய்
அன்பினில் பேதம் இன்றி
பண்பினால் உயர்ந்தவ ளாகி
கணவர் களுள்ளம் கவர்ந்து
தன்குடி விருத்தி கொள்ள
ஐவரைப் பெற்றெ டுத்தாள்
தனது கணவர் களோடு
தன்நாடு ஆட்சி செய்து
மக்களின் தேவை அறிந்து
தக்க தருணத்தில் வழங்கி
பல்திசை மக்கள் எல்லாம்
புகழ்ந்திட ஆட்சி செய்தனர்

மனிதர்காள்

பெண்குல நல்லாள் ஐவரின்
உற்ற துணையாள் போற்றிப் புகழ்வோமே    10

மனிதர்களே, இல்லறத்தை நல்லறமாக்கி பலரும் போற்றும் வகையில் யாவருக்கும் பேதம் இன்றி பண்பினால் உயர்ந்தவளாகி, கணவர்கள் உள்ளம் கவரும்படி வாழ்ந்த தான் புகுந்த குடி விருத்தி கொள்வதற்காக ஐந்து புதல்வர்களைப் பெற்றெடுத்தாள் யாகசேனி. மேலும், தனது கணவர்களோடு தன் நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்குத் தக்க தருணத்தில் வழங்கி பல திசைகளில் உள்ள மக்களும் புகழும் படியாக ஆட்சி செய்தனர். அத்தகைய, பெண்குலத்தின் நல்லாளாலும் ஐவரின் உற்ற துணையுமான யாகசேனியை போற்றி புகழ்வோமாக.