Sunday, December 25, 2022

மயிலம் முருகன் இரட்டை மணிமாலை

மயிலம் முருகன் இரட்டை மணிமாலை

காப்பு

கலிவிருத்தம்

ஏழு மலையான் மக்கள் இருவர்

வேழன் மகளாய் வேடன் மகளாய்

வேழ முகத்தான் தம்பி மணந்தார்

ஏழை புகழை பாடத் துணிந்தேன்

 

ஏழுமலையில் கோவில் கொண்டுள்ள திருவேங்கடவனின் மகள் (அமுத வல்லி, சுந்தர வல்லி) இருவர், இந்திரனின் மகளாகவும் வேடன் மகளாகவும் வளர்ந்து யானைமுகனின் தம்பி திருமுருகனை மணந்துகொண்டனர். இவர்களின் புகழை ஏழை அடியவனான யான் பாட விரும்பினேன்.

 

குன்று இருக்கும் இடமெல்லாம் தானிருந்து

தன்னைநாடி வந்தார்க் கருளும் – திண்தோள்

சரவணன் சங்குகண்ணர் வேண்டிகோள் ஏற்று

இருந்தார் மயிலம் மலை.                                                              01

 

வலிமையானத் தொள்களை உடைய முருகபெருமான், குன்றுகள், மலைகள் எங்கெல்லாம் உள்ளதோ, அந்த இடங்களில் எல்லாம் கோவில் கொண்டு, தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரியும் இயல்புடையவர். இவர் மயில மலையில் சங்குகண்ண பாலசித்தரின் கோரிக்கையை ஏற்று திருமணக் கோலத்துடன் காட்சி தந்தார்.

 

மதிசூடி நெற்றி நெருப்பு குழந்தை வடிவமாகி

நிதிகுள பூமேல் இருக்க குழந்தை அறுவரையும்

மதியுடை கார்த்திகை பெண்கள் எடுத்து வளர்த்துவர

சதியவள் பிள்ளை அறுவர் அணைக்க ஒருமுகனே                02

 

நிலவைச் சூடிக்கொள்பவனான சிவன் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட நெருப்பானது, பொற்றாமரைக் குளத்தில் உள்ள ஆறு தாமரை மலரில் விழ, அந்த நெருப்பு ஆறு குழந்தை வடிவம் பெற்றது. அக்குழந்தைகள் அறுவரையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்து வந்தனர்., பார்வதி தேவியானவள் அறுவரையும் சேர்த்தணைக்க ஒரு குழந்தையாக வடிவம் கொண்டு ஒருமுகமானார்.

 

ஆண்மயில் ஒன்று படுத்திருக்கும் தோற்றம்போல்

சேனா பதிவாழ் மயிலம் – காண்பவர்க்கு

தோற்றம் அளிக்கும் மலைமரம் எல்லாம்பைந்

தோகை விரித்த எழில்                                                                   03

 

சேனாதிபதியான முருகன் கோவில் கொண்டுள்ள மயிலம் மலை,  தூரத்தில் இருந்து காண்பவர்க்கு, ஒர் ஆண்மயில் தோகை சாய்த்து படுத்திருப்பதுபோல் காட்சிதரும். அம்மலைமேல் உள்ள மரங்கள் எல்லாம் தோகையில் உள்ள பசுமையாய் அழகூட்டும்.

 

எழிலுரு கொண்ட தமிழ்மகன் ஏறு எனஅசுரர்

அழித்தவன் கோடை வறுமையை ஓட்டும் பெருமழையன்

விழைவுடன் நாடி வணங்கிட இன்னல் களைந்திடுவான்

அழகிய மஞ்ஞை மலையுறை கந்தன் வணங்கவோமே         04

 

அழகின் உருவமாக விளங்கும் தமிழ்க்கடவுள். சிங்கமென நரிக்கூட்ட அசுரர்களை அழித்தவன், வறுமை என்னும் கோடையை விரட்டும் பெருமழைப் போன்றவன். விருப்பத்துடன் அவனை நாடி வணங்கினால் துன்பங்களைத் தீர்த்திடுவான். ஆகிவே, அழகிய மயிலம் மலையில் கோவில் கொண்டுள்ள கந்தனை வணங்கிடுவோம்.

 

ஓமெனும் மந்திர நற்பொ ருளுணர்த்தி

சாமிநாதன் என்னும் பெயர்பெற்றோன் – பூமியைச்

சுற்றி வரமயில மர்ந்தோன் பிணிமுகன்

பெற்றோரின் செல்ல மகன்                                                          05

 

யானையை வாகனமாகக் கொண்ட முருகன், ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை தன் தந்தையாகிய சிவனுக்கு உரைத்தமையால் சுவாமிநாதன் என்னம் பெயரைப் பெற்றான். இவன், பூமியைச் சுற்றிவர மயில் மீது ஏறி அமர்ந்து சென்றவன். பெற்றோரின் செல்லப் பிள்ளையாக விளங்குபவன்.

 

மகாநடன் ஆடல் நிகழ்வினைக் கண்டு களித்தமாலின்

மகிழ்ச்சியால் கண்ணீர் பெருகிட நீரைத் திரட்டிதிரு

மகள்தன தாற்றல் திறத்தினால் பெண்கள் இருவராக்கி

மகளிரு வற்கும் அழகுபேர் வைத்து மகிழ்ந்தனரே                 06

 

சிவபெருமானின் ஆடல் நிகழ்வினைக் கண்டு மகிழ்ச்சியில் மூழ்கியதன் காரணமாகத் திருமாலின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்தக் கண்ணீரைத் திரட்டிய திருமகள் தனது அருளால் இரண்டு பெண்களாக்கினாள். திருமாலும் திருமகளும் அவ்விருவரையும் தம் மகளாக ஏற்று, அமுதவல்லி, சுந்தரவல்லி எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

 

தனம்மகள் மூத்த மகள்தேவ சேனா

மணமுடிக்க தேவரினம் மீட்க – தனயனாய்

தந்தை கொடுத்தவரம் காக்க நடந்ததே

கந்தன் நிகழ்த்திய போர்                                                              07

 

கந்தன் நிகழ்த்திய சூரபதுமனுடனாகப் போர், செல்வ மகளான திருமகளில் மூத்த மகள் தேவயாணையை மணமுடிக்கவும் தேவர்க் கூட்டத்தை அசுரர்களிடம் இருந்து மீட்கவும் ஒரு மகனாகத் தந்தை கொடுத்த வரத்தைக் காக்கவும் நடத்தப்பட்டது.

 

போரில் பகைவரை வெல்ல சிவசக்தி வேல்கொடுத்தாள்

சூரர் அழிந்ததால் தேவர் விடுதலை பெற்றனரே

சூரர் அழித்ததால் போகி மகளை மணமுடித்தான்

சூரர் அழிந்ததால் மண்ணுயிர் எல்லாம் மகிழ்ந்தனவே         08

 

போகி -  இந்திரன்

 

சூரபதுமனோடு போர் செய்ய எண்ணிய முருகன், வெற்றி பெறவேண்டும் என்று போர்செய்யும் ஆயுதமாக சிவசக்தி (பார்வதி) வேல் கொடுத்தாள். சூரர்களை அழித்து தேவர்களை விடுதலை செய்தான் தேவசேனாதிபதி. அந்த வெற்றிக்கான பரிசாக இந்திரன் தன் மகளான தெய்வயாணையை திருமணம் செய்துவைத்தான். சூரர்கள் அழிந்ததால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் துன்ப செய்பவர்கள் யாருமின்றி மகிழ்ந்தன.

 

மருளும் இயல்புடை மானின் குழந்தை

பருவம் அடைய நெருங்கி – முருகன்

தனது தமையன் துணையால் மணந்து

மயிலம் உறைந்தான் மகிழ்ந்து                                                    09       

 முருகன், மருண்டு ஓடும் இயல்பு கொண்ட மானின் வயிற்றில் பிறந்த வள்ளி, பருவம் அடைந்ததும் தனது அண்ணன் விநாயகனின் உதவியுடன் நெருங்கிப் பழகி, அவளின் உள்ளம் கவர்ந்து, திருமணம் செய்துகொண்டு மயிலத்தில் வந்து கோவில்கொண்டான்.

 

மகிழ்ச்சியில் உள்ளம் திளைக்க மனதில்இன் பம்பெருக

நெகிழ்ந்தவன் பேரை விளம்பி நயமுடன் வந்துகண்டு

தகத்தக மேனி அழகை தவத்தினால் கண்பருக

செகத்தினில் வந்த பயனை அடைந்திடல் சாத்தியமே          10

 

மனதில் இன்பம் பெருகி, மகிழ்ச்சியினால் அனுபவிக்க, உருகி கந்தனின் பெயரைச் சொல்லி, பணிந்து வணங்கி சென்று, ஒளிவிடும் மேனி அழகினை முன்வினைப் பயனால் கண்களால் பருகி அனுபவித்து, இந்த பூமிக்கு நாம் பிறந்தினாலான பயனை அடைதல் என்பது சாத்தியமாகும்.

 

தியானம் தவம்செய்வோர் உள்ளத் திறையை

அருவமாய் காண்டு மகிழ்வர் - முருகன்

உறையும் மயிலமலை ஏறி திருமணக்

கோல எழிலுரு காண்                                                                     11

 

தியானம், தவம் செய்பவர்கள் உள்ளத்தில் இறைவனை அருவமாய்க் கண்டு மகிழ்வர். முருகன் கோவில் கொண்டுள்ள மயிலம் மலையேறி வந்தால் திருமணக்கோலத்தில் இருக்கும் அழகிய உருவம் காணலாம்.

 

காண்பவர் உள்ளம் கவரும் கனிசுவை பார்வையாளன்

ஆண்மகன் பெற்ற மகவாய் தரணியில் வந்தபிள்ளை

பேணினான் தேவர் இனத்தை அசுரரை வெற்றிகொண்டு

சாண்மா துரனை வணங்க பிறவிநோய் ஓடிடுமே                  12

 

சாண்மாதுரன்- ஆறு தாய்களை உடையவன்

 

காண்பவர்களின் உள்ளத்தைக் கவரும் கனியின் சுவை மிகுந்த பார்வை உடையவன். ஆண்மகன் பெற்றெடுத்த குழந்தையாக மண்ணில் வந்து பிறந்தவன். அசுரர்களை பெற்றிகொண்டு தேவரினத்தைப் பாதுகாப்பவன். ஆறுதாய்களை உடையவனை வணங்கினால் பிறவியாகிற நோய் நம்மைவிட்டு ஓடும்.

 

மேயாத மான்பிடிக்க வானுலகம் விட்டிறங்கி

ஓயாமல் வேடமிட்டு வள்ளிசேர்ந்த – சேயோன்

மயிலமலை மீதுதுணை யோடுவந்து றைந்தான்

மலையேறி வந்து வணங்கு                                                          13

 

மேயாத மானாகிய வள்ளியை திருமணம் செய்துகொள்ள வானுலகில் இருந்து மண்ணுலகம் வந்து, பற்பல வேடமிட்டு வள்ளியோடு இணைந்த சேயோன்,  மயிலத்தின் மலைமீது தன்னடைய துணைவியர்களுடன் கோவில்கொண்டுள்ளான். அவனை மலையேறி வந்து வணங்குங்கள்.

 

வணங்குவோர் காத்திடும் காக்கும் தொழில்செய் அரிமருகா

மண்ணிலும் விண்ணிலும் உள்ள மடந்தை மணமுடித்தோய்

எண்ணிய செய்கைகள் நல்ல முறையில் நடத்திவைப்பாய்

கண்ணிய மாகவே வாழ துணைபுரி வாய்அரசே                   14

 

காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலின் மருமகனே, தன்னை வணங்குகின்றவர்களைக் காக்கம் இயல்புடையவனே, மண்ணில் பிறந்த வள்ளியையும் தேவலோகத்தில் பிறந்த தெய்வையாணையையும் திருமணம் செய்துகொண்டவனே, நாங்கள் நினைத்த செயல்களை நல்ல முறையில் நடத்தி வைத்து, தன்னிலை மாறாமல் வாழ துணையாக இருக்கவேண்டும் அரசே.

 

அரசனாய் ஆண்டியாய் வேடனாய் வீரனாய்

இருந்து அடியவர் உள்ள – கருத்து

அறிந்து அருளாசி தந்தவர் காக்கும்

குறிஞ்சிவேந் தன்தாள் பணி                                                        15

 

அரசனாகவும் ஆண்டியாகவும் வேடனாகவும் வீரனாகவும் இருந்து அடியவர்களின் உள்ளக் கருத்தை அறிந்து அவர்களுக்கு அருளாசி வழங்கிக் காக்கும் குறிஞ்சிநிலத் தலைவனின் பாதம் பணிவோம்.

 

பணிந்தவர் காக்கும் அரசனாய் தன்னைப் எதிர்த்தவர்க்கு

பிணியாய் இருந்து மனவலி தந்து அழிக்கவல்லான்

அணைபுனல் சேர்க்க வயல்கள் பயிர்தலைச் சாய்த்துநிற்கும்

மணிவகை யுள்ள வயல்சூழ் மயிலம் உறைபவனே                16

 

அணை தண்ணீரைச் சேகரிக்க, அங்குள்ள வயல்களில் முற்றிய நெல்மணிகள் தலை சாய்த்து நிற்கும். அப்படிப்பட்ட நெல்வயல்கள் சூழ்ந்திருக்கும் மயிலத்தில் கோவில் கொண்டுள்ள இறைவன், தன்னைப் பணிந்தவரை அரசனாக இருந்து காக்கவும். பணியாதவர்களுக்கு நோயாக இருந்து மன நோயைத் தந்து அழிக்கவும் வல்லவன்.

 

உறைவாள் பிறர்க்கு கெடுதலைத் தாரா

அரிவாள் அதற்கு எதிர்நேர் – முருகன்

இருவாள் திறத்தினன் மாற்றார் எதிர்ப்பதும்

உற்றவர் காப்பதும் வேல்                                                             17

 

உறையில் இருக்கும் வாள் பிறருக்குக் கெடுதலைத் தருவதில்லை. அரிவாள் அதற்கு நேர் எதிராக அழிக்கும் குணம் கொண்டது. இவ்விரண்டு குணங்களையும் ஒருங்கே கொண்டது முருகனது வேல். எதிர்ப்பவரை அழித்தும் உரிமையானவர்களைக் காத்தும் நிற்கும்

 

வேலும் மயிலும் அழகன் அடையா ளமாயிருக்கும்

வேல்கண்டார் கந்தன் இருப்பதாய் எண்ணி வணங்கிடுவர்

கோல மயில்கண்டார் செந்தில் திருமால் நினைத்திடுவர்

மால்ஊர் புணைந்தோன் இருவிழி காட்சி ஒருபொருளே       18

 

வேலும் மயிலும் முருகனின் அடையாளமாக விளங்கும். வேலைத் தனியாகக் கண்டவர், அந்த வேலை முருகவே நினைத்து வணங்குவர். அழகிய மயிலைக் கண்டவர் முருகனையும் அவனது தாய்மாமன் திருமாலையும் நினைத்துக் கொள்வர். ஊர்பெயரையும் திருமால்பெயரையும் இணைத்துப் புணைப்பெயராகக் கொண்ட இரட்டணை நாராயணகவியாகிய நான், திருமாலையும் முருகனையும் இரண்டு கண்களாகவும் அவை காணும் காட்சிகளாக அவர்களின் அருளையும் கொள்வேன்.

 

பொருட்செல்வம் மானுட உள்ளத்தை வேறாக்கும்

அருட்செல்வம் காணும் இறையை – ஒருவடிவாய்

கண்டு வணங்கும் பிரிக்கும் பொருள்வேண்டாம்

இணைக்கும் அருளைப் பெறு                                                       19

 

பொருளாகிய செல்வம் மனிதர்களின் உள்ளத்தைப் பிரித்து வைக்கும். அருளாகிய செல்வம் இறைவன் பலரையும் ஒரு வடிவாகக் கண்டு வணங்கும். ஆகவே மனிதர்களைப் பிரித்துவைக்கும் பொருட்செல்வம் வேண்டாம். மனித மனங்களை இணைக்கும் அருளைப் பெறுதலே நன்று.


பெறுகிற பட்டம் பதவி ஒருநாள் கடந்துபோகும்

திறமையும் கற்ற அறிவும் இறப்பினும் கூடவரும்

இறைவனின் ஆசி இருந்தால் மறுமையில் சிறந்திடலாம்

குறிஞ்சிமன் பார்வை அருள்கிட் டியோர்நற் சிறப்பினரே    20

 

பெறுகிற பட்டமும் பதவியும் ஒருநாள் இல்லாமல் போகும். திறமையும் கற்ற கல்வியும் மறுபிறவியிலும் தொடர்ந்துவரும். இறைவனின் அருளாசி இருந்தால் அடுத்த பிறவியிலும் சிறப்புடன் வாழலாம். குறிஞ்சிக் கிழவனான குமரனின் அருட்பார்வை கிடைத்துவிட்டால் அவரே அனைத்துச் சிறப்புகளுக்கும் உரியவர்.