Sunday, January 1, 2023

திருவேங்கடவன் மும்மணிமாலை

காப்பு
கலிமண்டில விருத்தம்

சங்கொடு சக்கரம் கைகளில் தாங்கியோன்
சங்கரன் தங்கையை நெஞ்சினில் வைத்தவன்
பொங்கிடும் ஆழியில் பாம்பணை  தங்கியோன்
ஐங்கரன் மும்மணி மாலையைக் காக்கவே

சங்கு, சக்கரங்களைக் கரங்களில் தாங்கி இருப்பவன். சிவனின் தங்கையான இலக்குமியைத் தன் நெஞ்சினில் வைத்திருப்பவன். பொங்கி வரும் கடலில் ஆதிசேடனெனும் பாம்பின்மேல் அமர்ந்தவன். அத்திருவேங்கடவன் மீது பாடப்படும் இம்மும்மணி மாலையை, கரம் ஐந்துடைய விநாயகன்  காப்பானாக.

பூவுலவும் வண்டினங்கள் நற்புகழ் பாடிவரும்
காவுலவும் தென்றல் இருந்திடும் - கோவில்
திசைகாட்டும் வேங்கடவன் நல்லழகைக் கண்டு
அசையா விழிகொண்டேன் நான் 01


பூக்களில் உலவுகின்ற வண்டுக் கூட்டம் வேங்கடவனின் நல்ல புகழைப் பாடிக் கொண்டிருக்கும். சோலைகளில் உலவுகின்ற தென்றல் காற்று வேங்கடவன் கோவில் கொண்டுள்ள இருப்பிடத்தை நோக்கிச் சென்று வழிகாட்டும். அவன் நலம் தரும் அழகைக் கண்ட நான் விழி அசையாமல் பார்த்திருந்தேன்.
 
நான்என்ற ஆணவம் இல்லா அனுமன் சிறையிருந்த
சானகி தன்னுயிர் மாய்க்க நினைத்துத் துணிந்தநேரம்
தேனென ராமா எனும்சொல் செவிஊட்டி காத்ததனால்
வான்வளர் தொல்மரம் ஏறும் கொடிஇலை வாழ்த்தினளே 02

நான் என்ற ஆணவம் துளியும் இல்லாதவனான அனுமன், இலங்கை அசோக வனத்தில் இராவணனின் சிறையில் இருக்கும் சானகி, கணவனைக் காணாது வருந்தி துன்பம் தாங்காமல் தனது இனிய உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தபோது, தேன்போன்ற சொல்லான ‘ராமா’ எனும் சொல்லை அவளது செவிகளில் ஊட்டி, இறப்பில் இருந்து காத்ததனால், வான் நோக்கி வளரும் பெரிய மரத்தில் ஏறும் கொடியான வெற்றிலைக் கொலையின் இலைகளைப் பறித்து சிரஞ்சீவியாக வாழ் என வாழ்த்தினாள்.

தினம்தினம் பக்தர் வந்து 
          திருவுரு நேரில் கண்டு
மனம்மகிழ் ஆசை எல்லாம் 
          மகிழ்வுடன் மனதில் வேண்டும்
இனமொழி கடந்த மக்கள் 
          இறையருள் ஒன்றை நாடி
இனிதுடன் கூடும் வெற்பாய் 
          வேங்கடம் இருக்கக் காண்பீர் 03

ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வந்து, திருமாலின் திருவுருவத்தைக் கண்டு, தன்னுடைய மனம் மகிழ்ச்சி அடையும் ஆசைகளை உள்ளத்தில் வைத்து இறைவனிடம் வேண்டிக் கொள்வர். அத்தகைய வேங்கடமலை, இனம், மொழி பாராமல் இறையருள் பெறவேண்டும் என்ற ஒன்றை மட்டும் நெஞ்சில் நிறுத்தி, இனிமைபயக்கும் வகையில் கூடும் மலையாக இருக்கிறது.

காணும் இடமெல்லாம் பச்சை நிறைந்திருக்கும்
மேனி முழுவதுமாய்க் காற்றுதீண்டி - ஊனுடம்
பெல்லாம் குளிரூட்டும் மூங்கில் நிறைந்த
மலைபாவம் மாய்க்கும் இடம் 04

மூங்கில்கள் நிறைந்த மலையாகவும் பாவம் போக்கும் இடமாகவும் உள்ள திருவேங்கடம் மலையில், காணுகின்ற இடமெல்லாம் பசுமை நிறைந்திருக்கும். உடல் முழுவதும் குளிர்க்காற்று தீண்டி, உடல் உறுப்புகளை குளிரூட்டும்.

இடம்தேடி வந்த பகைவரைக் கொன்று அழித்தவனும்
குடக்கூத்து ஆடி பெயரன் அநிருத்தன் மீட்டவனும்
விடம்கொண்ட பாம்பின் தலையில் நடம்ஆடி மாய்த்தவனும்
வடவேங்க டம்மலை நின்று வரம்தந்து வாழ்த்துவனே 05

தன் இருப்பிடம் தேடிவந்த பகைவர்களை எல்லாம் கொன்று அழித்தவனும் குடக்கூத்து ஆடி தன்னுடைய பெயரனான அநிருத்தனை மிட்டவனும் விடம்கொண்ட பாம்பின் தலையில் ஏறி நடனம் ஆடி அப்பாம்பை மய்த்தவனுமாகிய வேங்கடவன், தமிழகத்தின் வடக்குப் பக்கத்தில் அமைந்த திருவேங்கட மலையில் நின்ற கோலத்துடன் தன்னை நாடி வந்தவர்களுக்கு வரங்கள் தந்து வாழ்த்துகிறான்.

வான்வழி யாகச் சென்று 
          இலங்கையை எரித்தான் வாயு
வானரக் கூட்டம் கொண்டு 
          ஆழியில் பாதை செய்து
கோனென இருந்தோன் மாய்த்து 
          தன்துணை மீட்டான் ராமன்
மான்விழி மங்கை தொட்டால் 
          மாயுமே யாவும் இங்கே 06

வானத்தின் வழியாகச் சென்று இலங்கையை தீயிட்டு எரித்தான் அனுமான். வானரக் கூட்டங்களைக் கொண்டு கடலின் நடுவே பாலம் கட்டி, இலங்கை அரசனான இராவணனை அழித்து தன்னுடைய துனையான சீதையை மீட்டான் இராமன். இவ்வாறு, மான்போன்ற விழிகளைக் கொண்ட பெண்களைத் துன்பப்படுத்தினால் நாடு, நகரம், மக்கள் என அனைவரும் தானாகவே அழிந்து போய்விடுவர்.

இங்குவரும் பக்தரெல்லாம் வேண்டுதல்நெஞ் சில்வைத்து
தங்களது கோரிக்கை வென்றபின் - சங்குகை
கொண்டான் பதிவந்து தன்னழகைக் காணிக்கை
தந்த வணங்கிடு வர் 07

சங்கைத் தன் கரங்களில் கொண்டிருக்கும் வேங்கடவன் உறையும் திருமலைக்கு வரும் பக்தர்கள் எல்லாம் தன்னுடைய வேண்டுதல்களை உள்ளத்தில் வைத்து, தங்களின் கோரிக்கைகள் வெற்றி அடைந்தபின்னர், தன்னுடைய அழகாய் இருக்கும் தலைமுடியைக் காணிக்கையாகத் தந்து வணங்குவர்.

வண்ணமலர்ப்பூ வெடுத்து அலங்கார மாலையாக்கி
திண்ண முடன்தா னனிந்த அணிமாலை சூட்டியவள்
எண்ணம் நிறைவே றிடவே துணையாக ஏற்றவனை
வேண்டி புகழ்பா டிநின்றால் நலம்யாவும் கிட்டிடுமே 08

வண்ணவண்ண மலர்களை எடுத்து அழகு மிகுந்த மாலையாய் ஆக்கி, திடமான மனத்துடன் தான் அணிந்து, அந்த மாலையை இறைவனுக்குச் சூட்டினாள் ஆண்டாள். அவளின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதற்காக தன்னுடைய துணையாக ஏற்றுக் கொண்ட திருமாலின் புகழைப் பாடுகின்றவர்களுக்கு உடல்நலம், மனநலம், பொருள்நலம் என அனைத்து நலங்களும் கிடைக்கப்பெறும்.

மேகம் வந்து தங்குமிடம் 
          மேனி தென்றல் தீண்டுமிடம்
தாகம் பசி நீங்குமிடம் 
          தான தர்மம் சேருமிடம்
சோகம் எல்லாம் தீருமிடம்
          சொர்க்கம் நம்மில் கூடுமிடம்
ஏக நாத னாயிருக்கு 
          எங்கள் தெய்வம் வாழுமிடம் 09

காக்கும் ஒற்றைக் கடவுளாக இருக்கும் வேங்கடவன் வாழும் திருமலை, மேகம் வந்து உலவுகின்ற இடமாகவும், தென்றல் உடலினைத் தீண்டும் இடமாகவும் பசி, தாகம் போக்கும் இடமாகவும் தான, தருமங்கள் சேரும் இடமாகவும், நெஞ்சில் உள்ள சோகங்கள் தீரும் இடமாகவும் சொர்க்கம் நம்மில் கூடும் இடமாகவும் அமைகிறது.

இடம்தேடி வந்துஉயிர் காத்த தனயன்
உடல்கிழித்து நெஞ்சுறை காட்டும் - திடவான்
தலைவனாய் ஏற்றுபணி செய்ஏவ லன்காற்றின்
மைந்தன் வணங்கி மகிழ் 10

சீதை இருக்கும் இடம்தோடிச் சென்று அவள் உயிரைக் காத்த மகன். தன்னுடைய மார்பினைக் கிழித்து அதனுள் இருக்கும் இராமன் சீதையைக் காட்டிய திடம் பொருந்தியவன். இராமனைத் தலைவனாய் ஏற்று அவன் சொல்லும் செயலைச் செய்யும் ஏவலாளன். காற்றின் மகனான அனுமனை வணங்கி மகிழுங்கள்.

மகிழ்ந்து மலையேறி உன்நாமம் சொல்லி வந்திடும்உன்
பக்தர்போ தும்போதும் என்னு மளவிற் குணவளித்து
அகம்முகம் பூவாய் மலர்ந்து வழிகூட்டும் இல்லினர்போல்
அகம்குளிர் தென்றல் உலவும் இடம்மேவும் வேங்கடனே 11

உள்ளம் குளிரும் அளவிற்கு தென்றல் காற்று உலவும் பதியில் வாழும் வேங்கடவனே. இல்லத்தில் வாழும் நற்குடியாளனைப்போல, மகிழ்வாய் நீ இருக்கும் மலைமீது ஏறிவந்து உன்னுடைய பெயரை உச்சரிக்கும் உன்னுடைய பக்தருக்கு போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு உண்ண உணவளித்து, அகமும் முகமும் மலர்ந்து வழி கூட்டி அனுப்புவாய்.

கடந்தீர வேண்டு மென்றும் 
          கல்விகற்க வேண்டுமென்றும்
உடல்நோயைப் போக்கு என்றும் 
          ஊறுநீக்க வேண்டுமென்றும்
மடவேழம் உலவும் மூங்கில் 
          காடுமலை ஏறி வந்து
குடம்ஆடி மாற்றார் வென்ற 
          தேரோட்டி வேண்டி நிற்பர். 12

தன்னுடைய கடன் தீர வேண்டும் என்றும் தாம் நல்ல முறையில் கற்க வேண்டுமென்றும். தன்னுடைய உடல் நோயைப் போக்கவேண்டும் என்றும் வரும் துன்பங்களை நீக்க வேண்டும் என்றும் பலவாறாய், இளமையான யானை உலவுகின்ற மூங்கில் காடான ஏழுமலை மீது வந்து,  குடக்கூத்து ஆடி பகைவரை வெற்றிகொண்ட அர்ச்சுனனின் தேரோட்டியான கண்ணனை வேண்டுவர்.

நின்ற மராமரம் ஏழை துளைத்தவன்
கொன்று குவித்திடும் காளைகள் - வென்றவன்
சென்று உறைந்திடும் பைப்பொழில் நீள்மரம்
கொண்டிரும் ஏழு மலை 13

வானுயரம் நின்ற ஏழு மராமரங்களை ஒரே அம்பில் துளைத்தவன். மக்களையும் ஆநிரைகளையும் கொன்று குவித்து வந்த ஏழு காளைகளை வெற்றிகொண்டு நப்பின்னையை மணந்தவன். அவன், பசுமையான பொழில்கள் நிறைந்த, நீண்டு உயர்ந்த மரங்களை உடைய ஏழுமலையில் வந்து உறைந்தான்.

ஏழு மலைமீ திருக்கும் எங்கள் குலதெய்வம்
ஏழு மலைஏ றிவந்தால் காட்சி தரும்தெய்வம்
ஏழை குடியா னவனும் வேண்டி வரும்தெய்வம்
ஏழு லகம்காத் துநின்று வெண்ணை உணும்தெய்வம் 14

ஏழுமலையில் கோவில் கெண்டிருக்கும் எங்கள் குலதெய்வம். ஏழுமலை மீது ஏறிவந்தால் காட்சி தரும் தெய்வம். ஏழ்மையானக் குடியைச் சார்ந்தவனும் வேண்டுகின்ற ஒரு தெய்வம். இந்த ஏழு உலகையும் காத்து நிற்கும் தெய்வம். அதுவே வெண்ணை உண்ணும் தெய்வம்.

தெய்வம் நம்மைக் காக்கும் என்று
          தேயம் உள்ளோர் பதிக்கு வந்து
மொய்க்கும் தேனி போல சூழ்ந்து
          மேனி அழகில் மூழ்கி நிற்பர்
வெய்யோன் கண்ட பரவ சத்தில்
          யாவும் மறந்து வெளியே வருவர்
தயவு கொண்டு நேரில் சொல்லா
          வேண்டு தல்கள் முடித்து வைப்பாய் 15

நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காக்கும் என்று பல பகுதிகளில் இருந்து உன் இருப்பிடம் வந்து தேனீயைப்போல சூழ்ந்து உன் மேனி அழகைக் கண்டு மகிழ்கின்றனர். உன்னைக் கண்ட பரவசத்தில் தாம் என்ன வேண்டுதலை வைக்க எண்ணினரோ அனைத்தையும் மறந்து கோவிலில் இருந்து வெளியே வருவர். அவர்கள் மீது தயவு கொண்டு நேரில் சொல்லாத வேண்டுதல்களையும் நல்முறையில் முடித்து வைப்பாயாக.

வையம்அளந்த மாலேநின் மார்பில் இலட்சுமி
பத்மா வலஇடப் பக்கமாய் - வைத்தாய்
அனுதினமும் உன்னை நினைந்து இருக்கும்
எனைஎங்கு வைத்தாய்நீ சொல் 16

உலகினை இரண்டடியால் அளந்த திருமாலே உன்னுடைய வலப்பக்க மார்பில் இலட்சுமியையும் இடப்பக்க மார்பில் பத்மாவதி தாயாரையும் வைத்துள்ளாய். ஒவ்வொரு நாளும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் என்னை எங்கு வைத்தாய் நீ சொல்வாயாக. 

சொல்லுதல் யார்க்கும் எளியதாம் சொல்வண்ணம் இல்லைபலர்
சொல்படி தேவர்க் கமுதம் படைத்திட்ட வேங்கடவா
பல்லோர் உனைவந்து கண்டு பலவுமாய் வேண்டிநிற்பர்
நல்மனம் நல்உடல் தந்தென்னை காத்திடு மாலவனே. 17

வேங்கடவா, சொல்லுதல் என்பது யாவருக்கும் எளிமையான செயலாகும். சொல்லிய வண்ணம் செய்தல் என்பது பலருக்கும் இல்லாத குணம். ஆனால்,  நீ சொன்னபடி தேவர்களுக்கு அமுதத்தைச் சரியான முறையில் பகிர்ந்தளித்தாய். மாலவனே, பலரும் உன்னை காண வந்து பல்வேறு வேண்டுதல்களை முன்வைப்பர். நானும் வேண்டுகின்றேன் நல்ல மனம், நல்ல உடல் தந்து என்னைக் காப்பாயாக. 

மாலவன் விரும்பி மலையடைந்த
          காரணம் நன்கு நானறிவேன்
கால்துளை ஊதி ஒலியெழுப்பி
          ஆநிரைக் கூட்டம் ஓம்புகின்ற
கோலெனக் கையில் வைத்திருக்கும்
          வேய்ங்குழல் பலவும் செய்திடவே
மாலவன் மூங்கில் நிறைந்தமலை
          வேங்கடம் மலைக்கு வந்தனரே 18

திருமால் வேங்கட மலைக்கு விரும்பி வந்து அடைந்த காரணத்தை நான் நன்கு அறிவேன் ஆநிரைக் கூட்டத்தைப் பாதுகாக்க, கையில் கொம்புபோல் வைத்திருக்கும், காற்றினைத் துளையில் ஊதி ஒலி எழுப்பும் புல்லாங்குழல் பல செய்வதற்காக, மூங்கில் நிறைந்த வேங்கட மலைக்கு திருமால் வந்தார்.

வந்து அடிமூன்று மண்கேட்டு பெற்றானை
சொந்ததாய் மாமன் அழித்தானை - பிந்தும்நாண்
ஏற்றி மராமரம் சாய்த்தானைக் கல்கியைப்
போற்றி வணங்கிடு வோம் 19

மகாபலி சக்கரவர்த்தி நடத்தும் யாகசாலைக்கு வந்து மூன்றடி மண்கேட்டுப் பெற்றவன். சொந்த தாய் மாமனான கம்சனை அழித்தவன். பின்னால் இழுக்கும் இயல்பு கொண்ட வில்லின் நாணில் அம்பு ஏற்றி சுக்கிரிவனுக்காக மராமரங்களைத் துளைத்து அழித்தவன். அத்தகைய, கல்கி அவதாரம் எடுக்க உள்ள வேங்கடவனைப் போற்றி வணங்கிடுவோம்.

வணங்கிடும் தேவர் இனம்காக்க மண்ணில் அவதரித்தாய்
புண்ணிய பூமையை வல்கூர் எயிரால் சுமந்துவந்தாய்
மண்ணுண்ட வாயுள் அகிலம் அடக்கி இருந்தவனே
எண்ணிய மண்கேட் டெதற்காய் பலியிடம் வந்தனையோ? 20

வாமனா உன்னை வணங்குகின்ற தேவர்களைக் காப்பதற்காக மண்ணில் அவதாரங்களை மேற்கொண்டாய். இந்தப் புண்ணிய பூமியை தன்னுடைய வலிமையான கூர்மையான கொம்பினால் பாதளத்தில் இருந்து சுமந்து வந்தாய். மண்யை உண்ட வாய்க்குள் அகலம் முழுவதையும் அடக்கி வைத்தாய். அப்படி பூமியே உன்னிடத்திலும் உனக்குள்ளும் இருக்க, மகாபலியிடம் சென்று ஏன் மூன்றடி மண் கேட்டாய்.

வடமலையில் வீற்றி ருக்கும்
          வேங்கடவன் அழைத்த பின்பு
உடைமைகளை விட்டு விட்டு
          சுற்றமுடன் ஒன்று சேர்ந்து
கொடியஉரு அரக்கி மாய்த்தோன்
          கோபியரின் செல்லப் பிள்ளை
நெடியோனின் பதிக்கு வந்து
          திருமேணி அழகைக் கண்டோம். 21

வடமலை என்னும் வேங்கடமலையில் கோவில் கொண்டுள்ள, கொடிய உருவம் கொண்ட அரக்கியை அழித்தவனும் கோபியர்களின் சொல்லப் பிள்ளையுமான வேங்கடவன், தன் கோவிலுக்கு வா என்று அழைத்த பிறகு தன்னுடைய உடைமைகளை எல்லாம் வீட்டிலேயே விட்டுவிட்டு சுற்றங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, நெடியவன் இருக்கும் இடம் வந்து அவனுடைய திருமேனி அழகைக் கண்டோம்.

கண்பட் டுவிடுமொ என்று யசோதைபிள்ளை
கன்னத்தில் மைவைத்தாள் மைக்கன்னம் - கண்டவர்கள்
கன்னக் குழியழகில் தான்மயங்கிக் கண்வைத்தார்
இன்றென்ன செய்வா ளவள் 22

யசோதை தன் குழந்தைக்குக் கண்ணேறு வந்துவிடும் என்பதற்காகக் கண்ணத்தில் மை வைத்தாள். அவ்வாறு மை வைத்தக் கண்ணத்தைக் கண்டவர்கள், கண்ணனின் கன்னத்தில் விழும் குழி அழகில் மயங்கிக் கண் வைத்தார்கள். இப்பொழுது யசோதை என்ன செய்வாள்.

அன்னையும் தந்தையும் நம்பி பிறந்திட வில்லையாயின்
அன்னையால் தந்தையால் வந்த விறந்து உழலுகின்றோம்
அன்னையும் தந்தையும் பிள்ளையைக் காக்கா விடின்அதனை
அன்னையாய் தந்தையாய் காப்பது நின்கடன் மாலவனே 23

தாய் தந்தையரை நம்பி நாம் பிறக்கவில்லை என்றாலும் தாயால் தந்தையால்தான் பிறந்துவந்து வாழ்வை அனுபவிக்கின்றோம். அன்னையும் தந்தையும் பிள்ளையைக் காக்கவில்லை என்றாலும் மாலவனே, அன்னையாய் தந்தையாய் காப்பது உன்னுடைய கடனே.

மாலு கின்ற பொழுதெல்லாம் 
          எவரின் பேச்சும் கேட்கமாட்டார்
நாலு காலு பாய்ச்சலிலே 
          நினைத்த தெல்லாம் செய்திடுவார்
காலு ரெண்டும் ஓய்ந்தபோது 
          தவறு மறந்து ஏசிடுவார்
மாலும் போதே புரியவைப்பாய் 
          மலையு றையும் வேங்கடனே 24

வேங்கடவனே, தன்னால் இயன்ற பொழுது எவருடைய பேச்சையும் கேட்காமல் முரட்டுக் காளையைப் போல அவர்கள் நினைப்பதையெல்லாம் செய்து முடிப்பார்கள். தன்னால் இயலாத போது, தான் செய்த தவறுகளை மறந்து மற்றவர்மேல் குறைசொல்லி திட்டிடுவர். இயலுகின்ற போதே அவர்களுக்கு உண்மையைப் புரியவைப்பாய்.

வேங்கடம் நின்றமாலே பல்வேறு நேரத்தில்
நேரும் செயல்முன் பறிந்து -  தீர்த்தநீ
மாரீசன் உண்மைஉரு காணாது ஏன்சென்றாய்
பாரியாள் மீதுகொண்ட அன்பு 25

வேங்கட மலைமேல் நின்ற மாலவனே, பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு நேரத்தில்  நிகழுகின்ற செயல்களை முன்பே அறிந்து அதனை தீர்த்து வைத்தாய். இராம அவதாரத்தில் மாரீசனின் உண்மையான உருவத்தை அறியாமல் அவன் பின்னே சென்றது ஏனோ? மனைவியின் மீது பாசமா?

அன்புக் கிரங்கி உறவினைக் காப்பார் குறைந்துவிட்டார்
அன்பு செலுத்தியும் காசு மறுத்தால் வெறுக்கின்றார்
அன்பாய் இருப்பதும் சேர்ந்துடன் வாழ்வதும் காசுகண்டே
அன்பு பகிர்ந்து அனுபவம் செல்ல வாஉறவே 26

அன்புக்காக இரங்கி உறவினர்களைக் காப்பவர்கள் இன்று குறைந்துவிட்டார். அன்பு செலுத்தினாலும் காசு இல்லை என்று கூறினால் அந்த உறவையும் வெறுக்கின்றார். உறவுகள் அன்பாய் இருப்பதும் சேர்ந்து உடன் வாழ்வதும் காசுக்காகவே. அன்பைப் பறிமாறி தன் அனுபவத்தைச் சொல்ல உறவான வேங்கடவனே வருவாயாக.

உலக வாழ்வில் உயர்ந்திட வேண்டின்
           எண்ணும் எழுத்தும் கற்றிட வேண்டும்
உலையா முயற்சி ஊக்கமும் கொண்டு
           உலகைப் புரிந்து நடந்திட வேண்டும்
பலவாய்த் திறமை கொண்டவ ரிங்கே
           பஞ்ச மின்றி வாழ்ந்திட காணீர்
உலகை ஆளும் ஆண்டவன் அருளும்
           உளஉ றுதியும் கொண்டவர் வெல்வார். 27

வாழ்க்கையில்  உயர்வை அடைய வேண்டும் என்றால், நம் கண்களாக விளங்கும் எண்ணையும் எழுத்தையும் கற்க வேண்டும். அழியாத முயற்சியும் ஊக்கமும் உள்ளத்தில் கொண்டு உலகினைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும. பலவகையான திறமைகளைக் கொண்டவர்கள் வாழ்வின் பஞ்சம் இல்லாமல் வாழ்வதைக் காணலாம். இப்புவியை ஆளுகின்ற கடவுளின் அருளும் மன உறுதியும் கொண்டவர்கள் வெற்றி அடைவார்கள்.

வெல்லும்சொல் கோவிந்தா என்று விளித்து
மலையோன் உருகண்டு வந்தவரின் - நல்கா
ரியங்கள் நினைத்த பொழுதில் கைகூடும்
உளம்நினைந்து நாளும் வணங்கு 28

வெற்றிதரும் சொல்லாகிய கோவிந்த எனும் சொல்லை வாய்விட்டுச் சொல்லி, மலைமேல் உறைகின்ற வேங்கடவனின் அழகு வடிவினைக் கண்டு வந்தவர்களின் நல்ல காரியங்கள், அவர்கள் நினைத்த பொழுதிலேயே கைகூடும். ஆகவே மாலவனை உள்ளத்தில் நினைத்து ஒவ்வொரு நாளும் வணங்குவோம். 

குரங்கு துணைக்கொண்டு தன்துணை மீட்டார் அயோத்திராமன்
பரந்தப னோடு இணைந்து கவசம் அறுத்தகண்ணன்
பிரகலா தன்வழி தன்பகை வென்றார் நரஅரியே
திருமால் துணையால் விரும்பிடும் வாழ்வு கிடைத்திடுமே 29

அனுமனின் துணியோடு தனது துணையான சீதையை மீட்டார் அயோத்தி அரசர் இராமபிரான். அர்ச்சுனன் உடன் இணைந்து கர்ணனின் கவசக் குண்டலத்தை அறுத்தார் கிருஷ்ணர். தனது வகைவனான இரணியனை அழிக்க பிரகலாதனைத் துணையாகக் கொண்டார் நரசிம்மர். அதுபோல, திருமாலைத் துணையாகக் கொண்டால் நாம் நினைத்திடும் வாழ்வு கிடைத்திடும்.

கிடைத்தற் கரிய செல்வமாம் கிடந்தி ருந்து நின்றவன்
அடைந்து பதிவாழ் இறைவனை புகழ்ந்து பாடி வணங்குவோம்
அடைத்த சிறையில் பிறந்தவன் தாள்ப ணிந்து வாழ்பவர்
அடையாப் புகழும் செல்வமும் இல்லில் பெற்று மகிழ்வரே 30

கிடைத்தற்கு அரிய செல்வமாக விளங்கும் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் காட்சிதரும் இறைவன் உறையும் பதியை அடைந்து அவ்விறைவனைப் புகழ்ந்து பாடி வணங்கிடுவோம். அடைபட்ட சிறையில் பிறந்த இறைவனின் பாதம் பணிந்து வாழ்பவர்கள், பெற இயலாத செல்வங்களையும் புகழையும் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.