Sunday, January 15, 2023

தமிழ்நூல் பல தந்த பதிப்பு வேந்தர்

முதல்மாந்தன் நாவுதித்த மூத்தமொழி
          மண்ணுலக மொழிகளுக்கு அன்னைமொழி
கதைசொன்ன பாட்டிநாவில் உதித்தமொழி
          கலப்படங்கள் இல்லாத தூயமொழி
விதையாகி உலகெங்கும் சென்றமொழி
          விண்ணைமுட்டும் அளவிற்கு வளர்ந்தமொழி
இதமாக செவிபாயும் அமுதமொழி
          இன்னுயிராய் விளங்குமெங்கள் தமிழ்மொழி.

தமிழுக்குத் தொண்டுசெய்ய பலரும் வந்தார்
          இலக்கியமாய் இலக்கணமாய் பலவும் தந்தார்
தமிழ்மொழியில் பிறமொழிகள் கலந்த போது
          வெகுண்டெழுந்து குறைகளைந்து செம்மை செய்தார்
தமிழக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை
          தமிழ்த்தொண்டு செத்தநாளில் வாழ்வ தில்லை
தமிழ்த்தாயின் தலைமகனாம் வெங்கட் ராமன்
          தமிழ்த்தொண்டை சொல்லவந்தேன் கவிதை யாலே

கவிமிகுந்த சிற்றூராய் விளங்கு கின்ற
          உத்தமதா னபுரத்து மண்ணின் மைந்தர்
கவிமரபும் இசைமரபும் ஒருங்கே பெற்ற
          வேங்கடசுப் பையர்சரசு வதியின் பிள்ளை
புவிமகளின் மடிதவழ்ந்து வளர்ந்து வந்து
          மீனாட்சி சுந்தரனார் வைத்த நாமம்
சுவாமிநாதன் என்பதையே முன்னி ருத்தி
          வறுமையிலும் தமிழ்கற்க ஆர்வம் கொண்டார்.

கொண்டதொழில் எதுவாக இருந்த போதும்
          கொடுத்தபணி ஏற்றுசெய்யும் திறமை கொண்டார்
பண்டைதமிழ் நூலிருக்கும் இடத்தைச் சொல்லி
          வாழ்வதற்குப் பொருள்வழங்கி அரவ ணைத்து
கொண்டுவந்த நூல்களெல்லாம் பதிப்ப தற்கு
          துணைநின்ற இராமசாமி புகழும் வாழ்க
அண்ணலவர் வழிகாட்ட சாமி நாதர்
          முதன்முதலாய் சிந்தாம ணியைஅச் சிட்டார்.

அச்சேறி வந்தநூல்கள் ஆய்வு செய்து
          பலசுவடி ஒப்பிட்டு வடிவம் கொள்ளும்
மிச்சமுள்ள நூலனைத்தும் தேடத் தேட
          பல்வேறு இன்னல்கள் ஏற்கச் செய்யும்
தச்சனுளி தாங்குகின்ற சிற்பம் போல
          வலிதாங்கி நூல்செய்த பிரம்மா நீயே
இச்சகத்தில் வாழ்கின்ற தமிழ ரோடு
          தலைவணங்கி தொழுகின்றேன் உன்னை நானே.