கலிவிருத்தம்
(வாய்பாடு காய் காய் காய் காய்)
தெற்குதிசை வீசுகின்ற தேமதுர காற்றேநீ
நெற்கதிர்கள் தலைதடவி அசையவைத்து அழகுசெய்வாய்
முற்புதரில் நுழைந்தபோதும் கீறலின்றி வந்துநிற்பாய்
எறும்பூறும் வேகத்தில் வசந்தகாலம் அறிவிப்பாய் 01
தெற்கு திசையில் இருந்து வீசுகின்ற இனிமையான தென்றல் காற்றே. நீ, நெற்கதிர்களின் தலையைத் தடவி அதனை அசையவைத்து அழகு செய்கின்றாய். முள் புதர்களில் நுழைந்தால் கூட சிறு கீறல்களும் இல்லாமல் வெளியே வந்துவிடுகின்றாய். ஏனென்றால், அவ்வளவு மெதுவாக வருகின்றாய். எறும்புபோல மெதுவாக நகர்ந்து வசந்தகாலம் வந்துவிட்டது என்ற செய்தியை அறிவிக்கின்றாய்.
வசந்தகாலம் வந்துவிட்டால் குருவியினம் கூடுகட்டும்
வசந்தகாலம் வந்துவிட்டால் நீர்நிலையை பறவைசூழும்
வசந்தகாலம் வந்துவிட்டால் செடிகளெல்லாம் பூத்துநிற்கும்
வசந்தகாலம் வந்துவிட்டால் மரங்களிலே கொடியேறும் 02
வசந்த காலம் வந்துவிட்டால், குருவிகள் கூடுகட்டி முட்டையிட்டு தன் இனத்தை விருத்தி செய்யும். பறவைகள் நீர்நிலைகள் இருக்கும் இடம் தேடிச் சென்று இறை உண்ணும். செடிகொடிகள் செழித்துவளர்ந்து பூத்து குளுங்கும். மரங்களின்மேல் கொடிகள் ஏறிப் படரும்.
கொடிமுல்லைப் பூவோடு உறவாடிப் பிரிகின்றாய்
அடிமீது அடிவைத்து அசைந்தாடி வருகின்றாய்
உடல்மூடும் ஆடைக்குள் தெரியாமல் நுழைகின்றாய்
இடையாளின் தீண்டல்போல் எனைத்தீண்டிப் போகின்றாய் 03
தென்றலே, முல்லைக் கொடியோடு உறவாடி அதனைவிட்டுப் பிரிந்து வந்தாய். அடிமீது அடிவைத்து மெல்ல மெல்ல அசைந்து வருகின்றாய். உடலை மூடிய ஆடைக்குள்ளே யாருக்கும் தெரியாமல் நுழைகின்றாய். என்னவள் தீண்டும் இன்பம் போல, தீண்டி இன்பமுட்டிப் போகின்றாய்.
ஆய்திதியன் ஆளுகைக்கு உட்பட்ட மலைத்தோன்றி
வேயோடு சந்தனமும் செங்காந்தள் மலரோடும்
தாய்ப்பிள்ளை உறவாக தவழ்ந்துவிளை யாடிவந்து
காயத்தில் மெல்லுரசி குளிரூட்டி உணர்வுதந்தாய் 04
கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஆய் என்ற மன்னனும் ஐம்பெரும் வேளிருர்களுள் ஒருவனான திதியனும் ஆண்ட பொதிகை மலையில் தோன்றி, மூங்கில், சந்தனம் முதலான மரங்களோடும் செங்காந்தள் மலரோடும் தாய்ப் பிள்ளையாக பழகி தவழ்ந்து விளையாடி வந்து
தமிழுக்குத் தலைமகனாம் தமிழ்போற்றும் ஒருமகனாம்
உமைதலைவன் அமர்த்திவைத்த அகத்தியனார் வீற்றிருக்கும்
தமிழ்வளர்த்த பாண்டியனார் ஆண்டமலை மீதினிலே
தமிழ்த்தெய்வம் வளம்வந்து தரணியெங்கும் உலவுகின்றாய். 05
உலாப்போகும் ஒருபெண்ணாய் மெல்லமெல்ல நகர்ந்துவந்து
இலைமரங்கள் தலையசைத்து தன்வருகை உணர்த்துகின்றாய்
நிலவுவரும் இளவேனில் காலத்தில் புவிபடர்ந்து
பலருக்கும் வசந்தத்தை உண்டாக்கி போகின்றாய் 06
போதாகி மலர்கின்ற பூக்களிலே தேனடுத்து
பேதமின்றி ஓடிவரும் நீரலையில் குளிரெடுத்து
சேதமின்றி கொண்டுவந்து சேதிசொல்லி ஒன்றிணைத்து
நீதநிலைக் காதலர்கள் மனம்மகிழச் செய்திடுவாய் 07
மனம்மகிழும் காதலர்க்கு உண்தீண்டல் இன்பமூட்டும்
தனித்திருக்கும் காதலர்க்கு உண்தீண்டல் தீமூட்டும்
தனித்திருக்கும் காதலரை ஒருபோதும் தீண்டிடாதே
இன்பதுன்பம் உனக்குள்ளே இருப்பதைநான் இன்றறிந்தேன் 08
இன்பமான வாழ்வென்றால் உன்பேரைச் சொல்லிடுவர்
உன்னோடு ஒப்பிட்டு நிலவுபெண்பூ கவிபடைப்பர்
இன்முகமாய் இருக்கையிலே அவரோடு உறவாடு
உனக்கான பேரைமட்டும் ஒருபோதும் இழந்திடாதே 09
இன்றுந்தன் வருகைக்காய் காத்திருப்போர் ஏராளம்
கன்றிறந்து போனபின்னே கன்றுசெய்து வைப்பதுபோல்
உன்இன்பம் பெற்றிடவே குளிரூட்டி அமைகின்றார்
மனிதமூளை செய்வதெல்லாம் இயற்கைக்கு ஈடாமோ? 10