குடும்பங்கள் உயர்வுக்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள்
மாமியார்களே! மருமகள்களே!
விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் இந்த நல்லதொரு பட்டிமன்ற நிகழ்வுக்கு நடுவராக இருந்து நல்லதொரு தீர்ப்பைக் கூற இருக்கும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் மற்றும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கங்களின் தலைவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும்,
பட்டிமன்ற விவாதத்தில் தோற்றுப் போய்விடுவோமோ என்ற அச்சத்தில் அமர்ந்திருக்கும் எங்கள் எதிர் அணியினருக்கும்,
வெற்றிக்கனியைப் பறித்து ருசிக்கக் காத்திருக்கும் எங்கள் அணியினருக்கும்,
பட்டிமன்ற நிகழ்வைக் கேட்டு, எங்களைக் கைத்தட்டி உற்சாகமூட்டக் காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு உறவுகளுக்கும், முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடுவர் அவர்களே!
இந்த ஊர் எனக்கு ஒரு சிறப்பான ஊர்.
இந்த ஊரில்தான் நான் முதன் முதலாக அரசுப் பணியைத் துவங்கினேன்.
இந்த ஊர்தான் எனக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தந்தது.
இந்த ஊர்தான் இன்று என்னை மேடை ஏற்றி இருக்கிறது.
நான் இந்த ஊர் மருமகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆதலால்தான் மருமகளே என்னும் தலைப்பில் பேச வந்துள்ளேன்.
நடுவர் அவர்களே!
குடும்பம் என்ற சொல்லுக்கான அர்த்தம் என்னன்னு தெரியுங்களா?
குடும்பம் என்பது ஓர் ஆணும் ஒரு பெண்ணும் முறைப்படி திருமணம் செய்துகொண்டு ஓர் உறைவிடத்தில் சேர்ந்து வாழ்வதாகும்.
நடுவர் அவர்களே!
பையனுக்கு கல்யாண வயசு வந்துட்டா வீட்டில் எல்லோரும் கூடி பேசி. ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணத்த முடித்து விடவேண்டும் என்று நினைத்து, தெரிஞ்சவங்க எல்லாருகிட்டயும் சொல்லி பொண்ணு எப்படி இருக்கனும்ன்ற ஒரு பெரிய பட்டியல சொல்லி வைப்பாங்க.
அவங்க சொன்ன பட்டியல்ல ஒன்னோ இரண்டோ இல்லாம பொண்ணு கிடைக்கும்.
அப்படி பொண்ணு பாக்க போகும்போது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட அந்தப் போண்ணப் பத்தி விலாவரியா சிபியை விசாரணை எல்லாம் செய்து பணத்திலும் குணத்திலும் இந்தப் பெண் நம்ம குடும்பத்துக் பொருத்தமானவள்தான் என்று முடிவு செய்து ஒரு நல்ல நாளில்,
மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
என்று தம்முடைய இல்லத்திற்கு அழைத்து திருமணத்தை நடத்தி வைப்பாங்க.
அப்போ போண்ணோட அப்பாவும் அம்மாவும் சொல்லி அனுப்புவாங்க.
அம்மா இனி எல்லாம் உன் புருஷன்தான் அவர் மனம் கோணாதபடி நடந்துக்கோ. சுதாரிச்சிக்கோ அப்படின்னு சொல்லி அனுப்புவாங்க.
நடுவர் அவர்களே!
இந்தப் பொண்ணுப் பெத்தவங்க இருக்கிறார்களே அவர்களை நான் என்னென்னு சொல்ல?
கடைக்குப் போனால் தெரிஞ்சவங்களோட போகனும்
பள்ளிக்குப் போனால் தெரிஞ்சவங்களோட போகனும்
திருவிழாவுக்குப் போனால் தெரிஞ்சவங்களோட போகனும்
இப்படி யார்கூட போனாலும் தெரிஞ்சவங்களோடதான் போகனும்
ஆனால்
கல்யாணம்னு வந்துட்டா முன்னப்பின்ன தெரியாத யாரோ ஒருவனோட அனுப்பி வைச்சிடுராங்களே
இது என்ன நியாயம்.
இப்படி இந்தப் பொண்ணும் கணவன் கண்கண்ட தெம்வம்னு அவன் பின்னாலேயே போறா.
அதன்பிறகு அந்தப் பொண்ணு படிப்படியாக யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று தெரிந்து கொண்டு குடும்பம் நடத்த ஆரம்பிப்பாள்.
நடுவர் அவர்களே!
கல்யாணம் ஆகி கொஞ்சம் நாளிலேயே கல்யாணம் பண்ண பையனுக்கு ஒரு டெஸ்ட் இருக்கு. அந்த டெஸ்ட்டை வைப்பவர்கள் அம்மாவும் மனைவியும்தான்.
பையன் யார் பேச்சக் கேட்கரது அப்படின்றதுதான் அது.
இவ்வளவு காலமாக வளர்ந்துப் படிக்கவைத்து ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்தவள் நான் ஆகையால் மகன் என்பேச்சைக் கேட்க வேண்டும் என்று அம்மாவும்,
மகனைத் திருமணம் செய்து கொண்டவள் நான் ஆகையான் என் பேச்சைத்தான் கேட்கவேண்டும் என்று மனைவியும்
ஈகோ பிரச்சனையால இந்த டெஸ்டை வைப்பாங்க. அந்த நேரத்துலதான் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி புது மாப்பிள்ள நிப்பாரு.
நடுவர் அவர்களே!
இப்படிப்பட்ட சூழல் வள்ளுவருக்கும் ஏற்பட்டிருக்கும் போல, அதனால்தான், இடுக்கண் வருங்கால் நகுக என்று தான் இயற்றிய திருக்குறளில் சொல்லியிருக்கிறார்.
நடுவர் அவர்களே!
இங்கு வள்ளுவர் சொல்லும் இடுக்கண் என்பதற்கு அர்த்தம் துன்பம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உரை ஆசிரியர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.
ஆனால், கண்ணதாசன் இடுக்கண் என்பதற்கான அர்த்தம் துன்பம் இல்லை என்பதற்கு ஒரு பாட்டு சொல்லாரு பாருங்க
துன்பம் வரும் வேளையில சிரிங்க
என்று சொல்லி வைத்தான் வள்ளுவனும் சரிங்க..
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உயிர் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு.
என்று பாடியிருக்கிறார். இப்படிப் பாம்பு வந்து கடிக்கும்போது யார் முகத்திலாவது சிரிப்பு வருமா?
நடுவர் அவர்களே!
உங்கள் வீட்டில் இடுக்கி இருக்கா?
அதோட வேலை என்னன்னு தெரியுங்களா?
இரண்டு பக்கத்திலிருந்தும் அழுத்தம் கொடுக்கும்.
இப்படி அம்மா ஒரு பக்கமும் மனைவி ஒரு பக்கமும் நெருக்கடியைக் கொடுக்கும்போது மகன் சிரித்தே மழுப்ப வேண்டும் என்ற ஆலோசனையைத்தான் திருவள்ளுவர் சொல்லியிருக்காரு. இதனை ஒவ்வொரு ஆண்மகனும் புரிந்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
நடுவர் அவர்களே!
கல்லூரிகளில் ரேகிங் ரேகிங் என்று சொல்வர்களே அத அனுபவித்திருக்கிறீர்களா?
புதுசா வந்த பையன, பொண்ணுங்கல, ஏற்கனவே, படிக்கிற பசங்க பண்ணுகிற சேட்டைதான் அது.
அந்த ரேகிங்கை குடும்பத்துல மாமியார் நடத்துவாங்க
அதாவது தன் மாமியார், அவள் மருமகளாக இருக்கும்போது எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தினார்களோ?
அந்தக் கொடுமைகளை எல்லாம் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல வந்திருக்கிற மருமகளிடம் காட்டுவார்கள்.
நடுவர் அவர்களே!
ஒரு பெண்ணுக்குத் தலையாக கடமை என்று ஒன்னு இருக்கு?
அதாங்க அந்தக் குடும்பத்துக்கு வாரிசைப் பெத்துக் கொடுக்கிறது.
பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
இன்றைக்கும் என்றைக்கும்
நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும்
என்னுள்ளம் சொர்க்கத்தில்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என்மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
இப்படி கணவன் கொடுத்த வித்தை முத்தாக்கிக் கொண்டு வருபவள் மருமகள்.
அப்படிக் குழந்தைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அந்த வீட்ல இருக்கிறவர்கள் போடுவார்கள் பாருங்க நரு நாட்டுவெடி,
இது என் மகனப்போல இல்லையே அப்படீன்னு ....
இது ஒரு பக்கம் இருக்க.
இன்னொரு பக்கம், ஆம்பள பிள்ளைய பெத்து கொடுக்கலன்னு குடும்பமே கலவரம் பண்ணும்.
நடுவர் அவர்களே
ஆம்பிள பிள்ளையைப் பெத்துக்கிறதும் பொம்பளப் பிள்ளைய பெத்துக்கிறதும் பொண்ணுங்கக்கிட்டயா இருக்கு.
பொண்ணு என்ன முருக்கு பிழியுற மிஷினா?
எந்த அச்சு முருக்கு வேணுமோ அதைக் கொடுப்பதற்கு....
இதைப் புரிந்து கொள்ளாத மக்களை என்னன்னு சொல்றது.
இப்படி குழந்தைப் பிறந்த பிறகு கணவனை ஒரு கண்ணாவும் பிள்ளையை ஒரு கண்ணாகவும் கவனித்துக்கொள்பவள் மருமகள்.
நடுவர் அவர்களே
இந்தப் பொண்ணு படிக்காம கூட இருக்கும் ஆனால் தன் மகனை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கனும்னு நினைப்பாள்.
அந்தப் பிள்ளை கஷ்டப்படக் கூடாது என்று தன் வாயையையும் வயிற்றையும் கட்டி, நல்ல துனிமணி வாங்கி கொடுத்து நக, நட்டு போட்டு அழகு பார்ப்பது மட்டுமல்லாமல், மேற்படிப்புப் படிக்கவைத்து நல்ல வேலைக்கும் அனுப்புபவள் மருமகள்.
இறுதியாக ஒன்றைச் சொல்லி என் உரையை முடிக்கிறேன்.
மருமகள் என்றால் தன்னோட பொருளையும் தன் கணவர் சம்மபாதிக்கிற பொருளையும் யாருக்கும் தரமட்டாங்க அப்படீன்னு எல்லோரும் நினைப்பாங்க.
நடுவர் அவர்களே
என் குடும்பத்துல நடந்த ஒரு நிகழ்ச்சிய உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என் தங்கைச்சிக்கு மாப்பிளைப் பாக்கனும்னு ஒரு பையன பாத்து கல்யாண தேதியெல்லாம் முடிவு பண்ணோம்.
அந்த மாப்பிளை வீட்டுல பொண்ணுக்கு 25 பவுண் போடனும்னு சொல்லிட்டாங்க. என்ன பன்னலாம் என்று கூடி முடிவு பன்னும்போது.
என் மனைவி எங்கிட்ட கேட்டாங்க. ஏங்க நாம லோன் போடமுடியுமா? அப்படின்னு. ஆசிரியர்கள் கூட்டுறவு வங்கியில லோன் போடலாம்னு சொன்னேன்.
அப்போ லோன் போடுங்க என்று சொன்னாங்க. அப்போதைய என் சம்பளத்துக்கு 175000 ரூபாய்தான் கொடுத்தாங்க கல்யாண செலவுக்குப் போக 19 பவுன்தான் எடுக்க முடிந்தது.
மீதிக்கு என்ன பன்னலாம்னு யோசிக்கும்போது என் மனைவி உள்ளே சென்று 6 பவுன் நகையை எடுத்து வந்து கொடுத்து கல்யாணத்தைப் பன்ன சொன்னாங்க
அப்படி, குடும்பத்துக்குள்ள வந்து, குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்த்து படிக்க வைத்து, நல்ல இடத்துல கல்யாணம் செய்து வைப்பது மட்டுமல்லாமல், தன் குடும்பத்தில் உள்ளவங்களுக்கான தேவைகளையும் நிறைவேற்றி, தன் குடும்பத்தைக் கட்டிக் காப்பவள்தான் மருமகள்.
அப்படிப் பட்ட மருமகளே குடும்பங்கள் உயர்வுக்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் என்ற தீர்ப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.